வியாழன், 30 அக்டோபர், 2014

கவிதை எனக்கோர் ஆனந்தம் ! :

கவிதை எனக்கோர் ஆனந்தம் !
பசுபதி 

கோபுர தரிசனம் 2014 தீபாவளி மலரில் வந்த கவிதை .உண்மை ஒளிர வேண்டுமென்ற
   உறுதி யுடன்தான் உட்கார்வேன்;
வண்ணப் புனைவும் உணர்ச்சியையும்
   மண்டை முழுதும் தேடிடுவேன்;
எண்ணப் பரியோ சண்டிசெய்தும்
   என்னைத் தள்ளிப் பரிகசித்தும்
கண்ணா மூச்சி ஆடினுமே
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (1)

வேலன் மீதோர் படைதொடங்கி
   மேலும் சங்கம் ஈந்தனபோல்
மாலைப் போற்றி ராமகதை
   மாலை தொடுத்த கம்பனைப்போல்
பாலில் மூன்றும் சிலம்புமெனப்
   பாடி மகிழ்ந்த பாரதிபோல்
கால வெள்ளம் கரைக்காத
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (2)

சந்தம் என்னும் பொக்கிடத்தைத்
   தந்து தமிழ்க்கு வளம்சேர்த்த
எந்தை அருண கிரிநாதர்
   எடுத்து ரைத்த அவிரோதம்
சிந்தை தன்னை அவ்வழியில்
   தினமும் சுண்டி இழுப்பதனால்
கந்தன் புகழைப் பாடுமந்தக்
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (3)

சின்னஞ் சிறிய வயதுமுதல்
   சிறந்த பாடல் பலவற்றை
இன்னி சையாய்க் கேட்பதுதான்
   இன்பம் என்று நினைத்தாலும்
கன்னல் தமிழைக் கந்தலெனக்
   கன்னா பின்னா எனக்குதறிக்
கன்னம் குழியப் பேரன்சொல்
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (4)

பசப்புச் சொல்பச் சோந்தியெனப்
   பதவி பெற்ற பின்தேசம்
நசித்துப் போகும் வழிதனிலே
   நாளும் நடத்தும் அரசினர்மேல்,
நிசத்தை மறைத்து முழுங்காமல்
   நேர்மை யுடனே பயமின்றிக்
கசையைச் சொடுக்கிச் சிலர்தீட்டும்
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (5)

மனதின் ஆழ்ந்த தடாகத்தில்
   மறைந்து கிடக்கும் நிழலொன்று
தனிமை என்னும் கல்லடியால்
   தருணம் பார்த்துத் தலைதூக்கும்;
புனைவும் உணர்வும் இசைபாடும்;
   புதிய மயக்கம் ஆழ்த்திடுமக்
கனவின் விளிம்பில் உதிக்குமொரு
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !     (6)


===== 
தொடர்புள்ள பதிவுகள்:
வியாழன், 23 அக்டோபர், 2014

சங்கீத சங்கதிகள் - 40

சிவனின் தீபாவளிப் பாடல்கள்  

பழைய சுதேசமித்திரன் தீபாவளி மலர்களில் ஒவ்வொரு ஆண்டும் பாபநாசம் சிவன் ஒரு ‘தீபாவளி’ப் பாடல் இடுவார் என்பது என் நினைவு. இதைப்பற்றி  முன்பே  எழுதியிருக்கிறேன்,

இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் நடந்த இசைக் கச்சேரிகளில்  சிலர் 67- சுதேசமித்திரன் மலரில் முதலில் வெளியான சிவனின் “ கண்ணா காத்தருள் மேக வண்ணா” என்ற மத்யாமவதி ராகக் கிருதியைப் பாடுவதைக் கேட்டேன். நன்றாய்த்தான் இருந்தாலும், அவருடைய வேறு தீபாவளிப் பாடல்களையும் வித்வான்கள் அவ்வப்போது பாடலாமே என்று தோன்றியது.

இதோ பாபநாசம் சிவனின் வேறு இரண்டு பாடல்கள்.

”தயை புரிந்தருள்” என்ற விருத்தம் சுதேசமித்திரன் 1959-ஆம் ஆண்டு மலரில் வந்தது; ”தீபாவளிப் பண்டிகை” என்ற ஹிந்துஸ்தான் காபி ராகப் பாடல் 1961-ஆம்   ஆண்டு தீபாவளி மலரில் வந்தது.அடுத்த ஆண்டில் இவற்றைக் கச்சேரி மேடைகளில் கேட்போமா?

[ நன்றி : சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள முந்தைய பதிவு :
திருநாளுக்கேற்ற இரு பாடல்கள்
சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்
தீபாவளி மலர்

வெள்ளி, 17 அக்டோபர், 2014

தென்னாட்டுச் செல்வங்கள் - 16

தென்னாட்டுச் செல்வங்கள் - 16
கங்கை கொண்ட சோழபுரம் -6 

கங்கை கொண்ட சோழபுரச் சிற்பத் தொடரில் இதுவே ‘சில்பி’ நமக்களித்த கடைசிக் கட்டுரை.  


இரு மனைவியருடன் இருக்கும் பிரும்மனைச் சிற்ப வடிவில் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? கூடவே, கால சம்ஹார மூர்த்தி, காம தகன மூர்த்தி போன்றவரையும் இங்கே ’சில்பி’யின் கைவண்ணத்தில் தரிசிக்கலாம். மன்மதனை அணைத்தபடி ரதி காமதகன மூர்த்தியிடம் முறையிடும் சிறு சிற்பத்தையும் மறக்கவில்லை ‘சில்பி’. நீங்களும் அதைப் பார்க்க மறக்காதீர்கள்! கூடவே, “பசுவைக் கொன்று செருப்புத் தானம் “ செய்திருக்கும் வெள்ளையரைப் பற்றி “தேவன்” எழுதி இருப்பதையும் படியுங்கள்!
[ நன்றி: விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்: