வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

2021. சின்ன அண்ணாமலை - 9

தமிழிசை மாநாடு

சின்ன அண்ணாமலை


 தமிழிசை இயக்கம் தோன்றிய நேரம். சிதம்பரத்தில் முதல் தமிழிசை மாநாடு நடைபெற்று பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இயற்கையாகவே தமிழ் உணர்ச்சி அதிகமுள்ள எனக்கு, அச் செய்திகள் எனது உள்ளத்தில் ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிற்று. சிதம்பரத்தில் நடந்தது போல ஒரு பெரிய மாநாடு சொந்த ஊரான தேவகோட்டையில் நடத்த வேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. இரவு பகல் அதே கனவு. கண்டவர்களிடமெல்லாம் தமிழ் இசை மாநாட்டைப் பற்றியே பேச்சு. இதில் எனக்கு மிகுந்த உற்சாகமூட்டியவர் என் அருமை நண்பர் திரு. டி.ஆர். அருணாசலம் அவர்கள். ஆகவே அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். இருவரும் கையிலிருந்து செலவு செய்து சில நோட்டீஸ்கள் அச்சடித்து தமிழிசை மாநாடு நடைபெறப் போவதாக விளம்பரம் செய்தோம். ஊரில் பரவலாகக் கொஞ்சம் ஆதரவு கிடைக்கும் போலிருந்தது. சங்கீத வித்வான்கள் அனைவருக்கும் கடிதம் போட்டோம். இலக்கியப் புலவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பினோம். அனைவரின் பதில்களும் உற்சாகமூட்டக் கூடிய வகைகளாக இருந்தன. அடுத்தது மாநாட்டிற்காக நிதி வசூல் தொடங்கினோம். வீடு வீடாகச் செல்லும்போதுதான் தமிழிசையைப் பற்றி பலருக்கு புரியவில்லை என்று தெரிந்தது. இத்தனைக்கும் அந்த ஊரில் மாதம் தவறாமல் நடைபெறும் பல கல்யாணங்களில் சங்கீத கச்சேரிகள் நடைபெற்று கொண்டிருந்தன.

 "எதுக்குத் தமிழில் பாடவேண்டும்?'', "இதற்கு ஏன் மாநாடு?'', "தமிழில் பாட முடியுமா?'' , "தமிழில் பாட பாட்டுக்கு எங்கே போவது?'', "இசையில் ஏன் பாஷை விவகாரம்?'' என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்டுப் பலர் எங்களை அதைரியப்படுத்தினார்கள். ஆனால் எங்களுடைய தமிழுணர்ச்சி அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கவிடவில்லை.

 திட்டங்கள் பிரமாண்டமானதாகப் போடப்பட்டன. ஆனால் நிதி வசூல் எப்படிச் செய்வதென்று தெரியவில்லை. பல பேர் மாநாட்டை கைவிடும்படி உபதேசம் வேறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். என்ன வந்தாலும் சரி, எடுத்த காரியத்தை முடிக்காமல் விடுவதில்லை என்று உறுதி பூண்டோம். சுமார் பத்தாயிரம் ரூபாய் வசூலானால் மாநாடு சிறப்பாக நடைபெறும் என்று திட்டம் போடப்பட்டது. ரூபாய் பத்தாயிரத்துக்கு எங்கே போவது? இந்நிலையில் மாநாட்டுக் காரியங்களில் தானாக வந்து உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்டு அல்லும் பகலும் எங்களுடன் பணிபுரிந்து வந்த அன்பர் ஒருவர், "இராஜா. சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களிடம் சென்று முயற்சிக்கலாமே'' என்றார்.

 நானும் திரு. டி.ஆர். அருணாசலம் அவர்களும் தீவிர காங்கிரஸ்காரர்கள். பலமுறை ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களை மேடையில் தாக்கிப் பேசி இருக்கிறோம். ஆகவே காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள், ராஜா சர் அவர்கள் வாசற்படி ஏறுவதே தவறு என்பதாக நினைப்பவர்கள். அப்படியிருக்க, அவரிடம் எப்படிப் போவது? ஆயினும் அந்த அன்பர் விடவில்லை. "இது காங்கிரஸ் விஷயம் இல்லையே; தமிழ் சம்பந்தப்பட்டதுதானே, தமிழுக்காகச் செல்லலாமே'' என்றெல்லாம் நியாயங்களை எடுத்துரைத்து, எங்களை ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களிடம் கூட்டிச் சென்றார்.

 ராஜா சர் அவர்கள் எங்கள் இருவரையும் வெகு அன்பாக வரவேற்று, எங்கள் தோள்மேல் கைபோட்டு மாநாட்டைப் பற்றிய விவரமெல்லாம் கேட்டார். நாங்கள் நிதி வேண்டுமென்று கேட்கவில்லை. ஏனோ கேட்பதற்கு எங்கள் மனம் துணியவில்லை.

 காபி சாப்பிட்டதும் நாங்கள் போய் வருகிறோம் என்று கிளம்பினோம். ராஜா சர் எங்களிடம் ஒரு கவரைக் கொடுத்து "இதில் எனது அன்பளிப்பு இருக்கிறது; மாநாட்டைச் சிறப்பாக நடத்துங்கள்'' என்று சொன்னார்கள். விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.

 கவரைப் பிரித்துப் பார்த்தோம். அப்படியே திகைத்துக் கல்லாய் சமைந்து நின்றோம்.

 சொன்னால் நம்ப மாட்டீர்கள், அதில் இருந்தது ரூபாய் பத்தாயிரம்.

 ஆயிரம் ரூபாய் பரிசு

 தமிழிசை இயக்கம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். தேவகோட்டையில் ஒரு கல்யாண வீட்டில் அரியக்குடி ராமனுஜ ஐயங்கார் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 வெகுநேரம் அரியக்குடி தெலுங்கிலேயே பாடிக் கொண்டிருந்தார். நான் தமிழிசை இயக்கத்தின் காரியதரிசி. ஆகவே அரியக்குடியிடம், "தயவு செய்து தமிழில் பாடவும்'', என்று சீட்டு எழுதிக் கொடுத்தேன். அரியக்குடி சீட்டை வாங்கிப் பார்த்து விட்டுப் புன்முறுவல் பூத்தார். பாடுவதாகச் சைகை செய்தார். நான் வெற்றிப் பெருமிதத்துடன் அவர் பாடப்போகும் தமிழ்ப்பாட்டை எதிர்பார்த்திருந்தேன். பாட ஆரம்பித்தார் அரியக்குடி. அதுவும் என்னைப் பார்த்தே பாட ஆரம்பித்தார்,

 ""யாரடா குரங்கு நீ--இங்கே வந்த

 யாரடா குரங்கு நீ''.

 அருணாசலக் கவிராயர் கீர்த்தனைதான். நான் அரியக்குடியை முறைத்துப் பார்த்தேன்.

 "இது தமிழ் பாட்டுதானே?'' என்று சொல்லிவிட்டு அதைப் பாடி முடித்தார். அந்தப் பாட்டு முடிந்ததும் என்னை அருகில் வரும்படி அரியக்குடி கூப்பிட்டார். சென்றேன். ""கோபப்படாதீர்கள் சும்மா தமாஷ் செய்தேன். இனி பூராவும் தமிழ்ப் பாட்டுத்தான்'' என்று சொல்லி சுமார் இரண்டு மணி நேரம் தமிழிசையை முழக்கிச் சபையை மெய்மறக்கச் செய்தார்.

 கச்சேரி முடிந்ததும் நான் அவர் அருகில் சென்று நன்றி சொன்னேன். அரியக்குடி என்னைப் பார்த்து, "இசைக்கு மொழி அவசியமா?'' என்று கேட்டார். "அவசியம்தான்,'' என்றேன்.

 "எதனால்?'' என்றார்.

 "நம் முன்னோர்கள் இசையில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களே,'' என்றேன். "எப்படி'' என்றார்.

 "இசைதான் முக்கியம் என்றால் நம் முன்னோர்கள் வாய்ப்பாட்டுக்காரர்களை நடுவில் வைப்பார்களா? ஒரு சாதாரண வித்வான் பாடினாலும் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு மணி போன்ற பெரியவர்கள் பக்கவாத்தியமாகத்தானே உட்காருகிறார்கள்? இசைதான் முக்கியம்; மொழி முக்கியம் இல்லை என்றால் ராஜமாணிக்கம் பிள்ளையைத்தானே நடுவில் வைக்க வேண்டும். இதிலிருந்தே மொழி முக்கியமென்று தெரியவில்லையா'' என்றேன்.

 அரியக்குடி அன்றிலிருந்து தமிழ்ப் பாட்டு நிறையப் பாட ஆரம்பித்தார். இந்தச் சம்பவத்தை ஒரு சபையில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களிடம் அரியக்குடியே சொன்னார். உடனே ராஜா சர் அகமகிழ்ந்து அப்போதே எனக்கு ஆயிரம் ரூபாய் பரிசளித்தார்.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: