திங்கள், 7 பிப்ரவரி, 2022

2024. கதம்பம் - 71

ஸர் பி.எஸ்.சிவசுவாமி ஐயர்


பிப்ரவரி 7. ஸர் பி.எஸ்.சிவசுவாமி ஐயரின் பிறந்த தினம்

====

சர் பழமானேரி சுந்தரம் சிவசாமி ஐயர் பொதுவாழ்விலும், மிதவாத காங்கிரஸ் இயக்கத்திலும், சட்டத்துறையிலும், கல்வித் துறையிலும் பெரும் புகழ் பெற்றவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள பழமானேரி கிராமத்தில் 1864 பிப்ரவரி 7ஆம் தேதி பிறந்தவர். தான் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் இவர் தன் அறிவுத் திறமையால் ஒரு ஸ்டேட்ஸ்மென் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர். சட்டத் துறையில் இவரது உச்ச கட்டம் 1907 முதல் 1911இல் இவர் சென்னை மாகாண அட்வகேட் ஜெனரலாக பணியாற்றிய காலமாகும்.

இவருடைய இளம் வயதுக் கல்வி பழமானேரி கிராமத்திலும், பட்டப் படிப்பு சென்னை ராஜதானிக் கல்லூரி (மானிலக் கல்லூரி) யிலும் நடந்தது. வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு மிகத் திறமையுள்ளவராகத் திகழ்ந்ததால் இவர் மா நிலத்தின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப் பட்டு திறம்பட செயல்பட்டார்.

அவருடைய காலத்தில் இப்போது போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெகுஜன ஜன நாயக அமைப்புகள், சட்டசபைகள் கிடையாது. மா நில கவர்னருக்கு ஆலோசனை சொல்வதற்கான ஒரு சபை மட்டும் இருந்தது. அந்த சபைக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப் படுவார்கள். மக்கள் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இல்லை. அப்படி கவர்னரின் ஆலோசனை சபையில் இவர் அங்கம் வகித்தார். இவர் தனது 82ஆம் வயதில் 1946 நவம்பர் 5ஆம் தேதி காலமானார்.

அப்போது உருவெடுத்து இந்தியர்களின் கவனத்தை ஈர்த்து வந்த காங்கிரஸ் இயக்கம் உருவாக்கிய சுதந்திர எழுச்சி இவரிடமும் உருவான காரணத்தால் இவரும் இந்திய சுதந்திர தாகத்தோடு செயல்பட்டார். இப்போது உள்ள ஐக்கிய நாடுகள் சபை இரண்டாம் உலகப்போருக்குப் பிறகுதான் ஏற்பட்டது. அதற்கு முன்பு லீக் ஆஃப் நேஷன்ஸ் எனும் பன்னாட்டு அமைப்பு செயல்பட்டு வந்தது. அந்த அமைப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சென்ற சிவசாமி ஐயர் இந்தியா சுதந்திரம் அடைய வேன்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மக்கள் கல்வி அறிவு பெற நூல்களைப் படிக்கும் அவசியத்தை உணர்ந்து, நூலகங்கள் உருவாக வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து நடவடிக்கைகள் எடுத்தார்.

பழமானேரி என்பது திருக்காட்டுப் பள்ளி அருகே, கல்லணை செல்லும் பாதையில் உள்ள சிறு கிராமம். இவ்வூரில் வாழ்ந்தவர் சுந்தரம் ஐயர் என்பவர். இங்கு வாழ்ந்த பிராமணர்களில் பெரும்பாலோர் பிரகசர்ணம் எனும் பிரிவைச் சேர்ந்தவர்கள். சுந்தரம் ஐயரும் அப்படியே. இவர்களுக்கு பிரகசர்ணம் எனும் பெயர் வரக் காரணமொன்று சொல்கிறார்கள். அதாவது மாமன்னன் இராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு பல நாடுகளை வெற்றி கொண்ட மன்னனாக ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழன் விளங்கினார். அவருடைய படைத் தளபதியாக விளங்கியவர் கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர் என்பவர். இவருடைய வாரிசுகள் பிரகசர்ணம் எனும் பிரிவினராகக் கருதப் படுகின்றனர்.

சர் சிவசாமி ஐயர் தன்னுடைய கல்லூரி படிப்பை 1882இல் முடித்தார், அதாவது மகாகவி பாரதியார் பிறந்த ஆண்டு அது. இவர் கல்லூரியில் எடுத்துக் கொண்ட பிரிவு வரலாறு. சம்ஸ்கிருதத்திலும் நல்ல புலமை உடையவர் இவர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்து முடித்த இவர் வக்கீலாகப் பதிவு செய்து கொண்ட ஆண்டு 1885, காங்கிரஸ் இயக்கம் முதன்முதலாக உருவான ஆண்டு.

புகழ்பெற்ற வக்கீலாக பிராக்டீஸ் செய்து வந்த இவரை கவர்னரின் ஆலோசனை சபைக்கு நியமனம் செய்தது 1904 மே மாதம் 12ஆம் தேதி. கவர்னர் ஆலோசனை சபையில் அட்வகேட் ஜெனரலாக நியமனம் ஆன நாளான 1907அக்டோபர் 25ஆம் தேதி வரை பணியாற்றினார்.

சென்னை பல்கலைக் கழகம் மிகப் புகழ்பெற்றது. அதன் செனட் உறுப்பினராக இவர் 1898இல் நியமனமானார். சென்னை பல்கலைக் கழக துணை வேந்தராக இவர் 1916 முதல் 1918 வரையிலும் இருந்தார். அதன் பின்னர் காசி இந்து சர்வகலாசாலையின் துணை வேந்தராக நியமனமாகி காசிக்குச் சென்றார்.

இவருடைய அரசியல் வாழ்க்கை 1912இல்தான் தொடங்கியது. அப்போது செய்து கொள்ளப்பட்ட மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் விளைவாக இவர் கவர்னர் நிர்வாக கவுன்சில் உறுப்பினரானார். இந்தப் பதவியில் இவர் 1912 முதல் 1917 வரை நீடித்தார். 1914இல் முதல் உலக யுத்தம் ஐரோப்பாவில் ஆரம்பமானது. அப்போது இந்திய தொண்டர்கள் யுத்த சேவைக்குத் தேவைப் பட்டனர். அவர்களைத் தயாரித்து அனுப்பும் பணியிலும் சிவசாமி ஐயர் ஈடுபட்டார்.

இவர் ஒரு மிதவாதி என்பதை முன்பே பார்த்தோம். இவர் ஆங்கில அரசோடு ஒத்துப் போவதையும், அன்னிபெசண்ட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும் முடிவை கவர்னர் கவுன்சில் எடுத்தபோது இவர் எதிர்க்காததோடு ஆதரவாக நடந்து கொண்டதும், தேசிய வாதிகள் மத்தியில் கசப்புணர்வையும், எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்தியது. இதற்கு அந்த காலகட்டத்தில் இருந்த மிதவாத காங்கிரசார் ஆங்கில அதிகாரிகள் நிர்வாகம் இவற்றுக்கு எதிரான கருத்து சொல்லவோ, நடவடிக்கை எடுக்கவோ தயங்கிய காலம். இருந்தாலும் 1919இல் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாகில் மக்கள் கொடுமையாகச் சுட்டுக் கொல்லப்பட்ட பொது இவர் வெகுண்டெழுந்தார். ஜெனரல் டையரின் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார்.

1922இல் லீக் ஆஃப் நேஷன்ஸில் தென்னாப்பிரிக்க சர்வாதிகாரியாக இருந்த ஜெனரல் ஸ்மட்ஸின் நிறவெறிக் கொள்கைகளுக்கு எதிராக இவர் அவரைக் கண்டித்து உரையாற்றினார். பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு எந்தவித சலுகைகளைக் கொடுக்கலாம் என்பதைக் கண்டறிய ஜான் சைமன் தலைமையில் ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்பிய போது அதனை இந்திய தேசிய வாதிகள் கடுமையாக எதிர்த்தனர். பல இடங்களில் போலீஸ் தடியடி அராஜகம் நடந்தேறியது. பஞ்சாபில் லாலா லஜபதி ராய் தடியடியில் உயிரிழந்தார். அலகாபாத்தில் ஜவஹர்லால் நேரு உட்பட கோவிந்த் வல்லப் பந்த் போன்றோர் தடியடியில் காயமடைந்தனர். அந்த சைமன் கமிஷன் இந்தியாவுக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் சிவசாமி ஐயர்.

1931இல் இந்திய ராணுவ கல்லூரிகளுக்கான குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார். அவருடைய மூத்த வயதில் இந்தியா மத அடிப்படையில் பிளவுபட இருப்பதறிந்து வேதனையுற்று இந்தியாவைத் துண்டாடுவதை எதிர்த்துக் குரல் கொடுத்தார். கல்வித் துறையில் ஆர்வம் காரணமாக சென்னை திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் உயர் நிலைப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார். அவை இன்று வரை சிறப்பான கல்விக் கூடங்களாக விளங்குகின்றன.

சுதந்திரப் போராட்டம் மகாத்மா காந்தியடிகளின் வரவுக்குப் பிறகு உத்வேகம் பெற்று பற்பல தியாகிகளை உருவாக்கியது. ஆனால் காந்தி, திலகர் காலத்துக்கு முன்னர் மிதவாத காங்கிரஸ் வாதியாகவும், அதே நேரம் நல்ல தேசிய வாதியாகவும் திகழ்ந்தவர் சர் சிவசாமி ஐயர். வாழ்க அவர் புகழ்!

[நன்றி: பி.எஸ்.சிவசாமி ஐயர் ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி. எஸ். சிவசுவாமி ஐயர்: விக்கி

P. S. Sivaswami Iyer: Wiki

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


6 கருத்துகள்:

வைத்யா சொன்னது…

நன்றி. மிக நல்ல பதிவு. Sir PS High School, திருக்காட்டுப்பள்ளி, முன்னாள் மாணவன். இந்த பள்ளிக்கூடத்தின் இணைந்தது 'கல்யாணி ஹாஸ்டல்' ; கல்யாணி அவர் மனைவி. இந்த ஹாஸ்டலில் தங்கி ஏராளமான வெளியூர் மாணவர்கள், குறிப்பாக செட்டிநாட்டை சேர்ந்தவர்கள் படித்தார்கள். பள்ளிக்கூடத்தின் வடக்குப்புறம் உள்ள சப் ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ் மற்றும் local fund hospital என்று அந் நாட்களில் அறியப்பட்ட அரசாங்க ஆஸ்பத்திரி எல்லாம் Sir PS அவர்கள் donate செய்தவை. இதைத்தவிர, சென்னை மைலாப்பூரில் lady Sivaswany Iyer high school இவரால் கட்டப்பட்டதாகும்.
(பிரகசரணம் என்பது பிரம்மராயர் வம்சம் என்று அர்த்தமில்லை. பிரம்மராயர் என்கிற வார்த்தை பிராமணனை குறிக்கும் சொல். ராயர் என்பது மரியாதைக்குரிய அடைமொழி; பிரகசரணம் என்கிற brahmin subsect , அகண்ட காவிரி ப்ரசேதம் எனப்படும் முசிறி யில் தோன்றிய தீவிர வைதீகப்பிரிவு என்று ஸ்ரீகாஞ்சி மஹான் விளக்கி இருக்கிறார்).

வைத்யா சொன்னது…

நல்ல பதிவு அந்தப்பகுதியில் முன்னாள் மாணவன்.

வைத்யா சொன்னது…

ப்ரகசரணம் என்பது ப்ரம்மராயர் வம்சத்தை. சோழ மன்னரின் மந்திரி அன்பில் அனிருத்த ப்ரம்மராயர். பிரம்மராயர் என்பது பிராமணனைக்குறிக்கும் சொல். ராயர் என்பது மரியாதைக்குரிய சொல். அகண்டகாவிரி பிரதேசம் எனப்படும் முசிறி சுற்றுவட்டாரத்தில் ப்ரகசரணம் என்கிற தீவிர வைதீகப்பிரிவு தோன்றியதாக காஞ்சிமஹான் விளக்கியிருக்கிறார்.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, வைத்யா. 'ப்ரகசரணம்' என்பது 'பிருஹத்சரணம்' ( broad feet) என்பதன் திரிபு. இந்தப் பிரிவினர் பூர்வீகத்தில் தொலைதூரம் நடந்து தமிழ்நாட்டை அடைந்ததால், அவர்களுக்கு இந்தப் பெயர் வந்தது என்றும் நான் எங்கோ படித்துள்ளேன்.

RSR சொன்னது…

excellent article. Is the transllation done by you? very nice and informative. Thank you. is there some provision to type directly in thamizh here? some newspapers like dinamalar have that facility. .something lie google input tools.

Pas S. Pasupathy சொன்னது…

No. The article is from the link I had given below the article. There are too many ways to type in Tamil for me to enumerate here. Everyone chooses his or her own method.