திங்கள், 7 மார்ச், 2016

சுத்தானந்த பாரதியார் -1

எப்படிப் பாடினேன்

கவியோகி சுத்தானந்த பாரதியார் 




மார்ச் 7. சுத்தானந்த பாரதியாரின் ( 1897 -1990 ) நினைவு தினம்.

சுத்தானந்தரின் “எப்படிப் பாடினரோ?” ( கர்நாடக தேவகாந்தாரி) என்ற பாடலை இசைரசிகர்கள்  பலரும் கேட்டிருப்பார்கள். ஆனால், “எப்படிப் பாடினேன்” என்று அவர் இயற்றிய கவிதையைப்  பலரும் படித்திருக்க மாட்டார்கள்! :-)

இதோ அந்தக் கவிதை!


வீட்டில் இனிய பாட்டின் முழக்கம்
இப்புறம் வேதம்; அப்புறம் கீதம் எதிரே 
கோவிலில் இசையின் அலைகள்
சிவகங்கை யெங்கும் திருவிழாக் கோலம்
பாடகர், பண்டிதர், பாவலர், நாவலர் 
பாகவதர்கள், பஜனை மடங்கள்
மல்கிய சூழலில் வளர்ந்ததென் வாக்கே.
கேட்டுக் கேட்டுப் பாட்டுக் கற்றுப்
பாமாலை சூட்டிப் பரமனைத் தொழுதேன்.
பாடு பாடென்றார் பாவலர் சிலரே.
பன்னிரண்டாண்டுகள் பாடிய பாடலைத் 
தீயிட்டெறிந்தான் சிறுமனத் தொருவன்.
உயிரையுருக்கி யுரமிட்டு வளர் 
பயிரைச் சுற்றித் துயரப் புயலோ 
கண்ணீர் தந்த கவிதைகளெல்லாம் 
கீர்த்தனாஞ்சலியாய்க் கிளர்ந்து பரவின.
நடனாஞ்சலியாய் நர்த்தனஞ் செய்தன;
பாரத சக்தியாய்ப் பரவின வுலகில் 
வீர விளக்கு வ.வே.சு. ஐயரே 
ஈர நெஞ்சுடன் என்னைப் போற்றினார்.
“உலக மகாகவி யுள்ளத் துடிப்பை
யோக மகாகவி யுணர்ச்சியிற் கண்டேன்” 
என்றார் , அந்த இணையறு தோழர்.
இருபத்தைந்தாண் டிருந்தவா றிருந்தே 
மௌனத் தவத்தால் மாண்புற மீண்டும்
கலைப்பணி தாங்கியெக் காலமும் விளங்க
இதய வீணையில் இசைஊற் றெழுந்தது. 


அவருடைய பல பாடல்களை இன்றும் இசை மேடைகளில் கேட்கலாம்.

அவற்றுள் சில பிரபலமான பாடல்கள் ( இவற்றுள் சில வேறு ராகங்களிலும் பாடப் படுகின்றன.)

அருள் புரிவாய் ( ஹம்ஸத்வனி ) , இல்லை என்பான் ( மோகனம்) , வருவானோ வனக்குயிலே ( பிலஹரி), தூக்கிய திருவடி  ( சங்கராபரணம்), 
கண்ணெடுத்தாகிலும் ( சிம்மேந்த்ரமத்யமம்), சகலகலா வாணியே ( கேதாரம்), ஜங்கார ஸ்ருதி ( பூர்விகல்யாணி), ஆசைகொண்டேன் ( கோபிகாதிலகம்) . . .


1980-இல் நடந்த தமிழ் மாநாட்டில் அவர்  பாடிய பாடல் :


காதொளிரும் குண்டலமும், கைக்குவளை
. . யாபதியும், கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
. . மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
. . ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
. . தாங்கு தமிழ் நீடு வாழ்க !

நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
. . மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
. . திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
. . குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
. . கனிபெருகக் கண்டி லோமோ !

[ நன்றி : http://maraboorjc.blogspot.ca/2006/03/blog-post_28.html ]


 ”பொன்வயல்” திரைப்படத்தில் அவர் எழுதி, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய  “சிரிப்புத்தான் வருகுதய்யே ” வும் மிகப் பிரசித்தம்!

தொடர்புள்ள பதிவுகள்:

சுத்தானந்த பாரதியார்

3 கருத்துகள்:

Raveenthiran சொன்னது…

அடடா! என்ன இனிமை என்ன இனிமை

அவனிவன் சொன்னது…

பசுபதி சார்! உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை!

Pas S. Pasupathy சொன்னது…

ரசித்தமைக்கு நன்றி.