ஞாயிறு, 9 ஜூலை, 2017

765. அருணகிரி : ஒரு பா ஒரு பஃது : கவிதை

அருணகிரி : ஒரு பா ஒரு பஃது
( வெண்பா, அந்தாதி மாலை)
பசுபதி 

ஆனி மூலம். பௌர்ணமி.  அருணகிரிநாதர் குருபூஜை தினமாகப் பலவிடங்களில் கொண்டாடப் படும்.
===

வாக்குக் கருணகிரி என்றுமக்கள் வாழ்த்தினர்;
தாக்கம் தருமவர் சந்தமலி -- ஆக்கங்கள்
சேவற் கொடியானின் சீர்பரவி , பற்பல
பாவினங்கள் ஈந்தன பார்.                       (1)

பாரத நாட்டுப் பரம்பரைச் சொத்தான
ஆரணபு ராணங்கள் யாவையும் -- ஆரியம்
வண்டமிழ் சேர்த்து வடித்தளித்த பாமலர்கள்
செண்டாய்த் திகழும் திரு.                        (2)

திருவருளைப் பெற்றுத் திருப்புகழ் யாத்துக்
குருவென் றழைத்தார் குகனை -- இருப்பவல் 
என்றபுகழ்ப் பாக்கள் இசைத்தால்நம் வாழ்வினில்
வென்றிகள் கிட்டுவது மெய்.                      (3)

மெய்யுரைத்த ஐயன் விளம்பும் அவிரோதம்
வையத்திற் கேற்ற வழியன்றோ? -- செய்யோனை
ஏத்தி இசைப்புலமைக் கேற்ற நவமணிகள் 
கோத்தளித்தார் பாவலர் கோ.                          (4)

கோலமயில் விந்துவை, குக்குட நாதத்தை
வேலென்ற ஞானத்தை மெச்சிப்பின்-- மாலின்
மருகோனைப் போற்றிடும் மந்திரங்கள் சொன்ன
கருணைக் குருநாதன் காண்.                       (5)

காணவொணாச் சக்தியைக் கந்தனென்ற வோருருவில்
பேணிப் புகழ்ந்து பிரபஞ்சத் -- தோணியை
ஓட்டுகின்ற மாலுமியை ஓங்கார ரூபனாய்க்
காட்டினார் சந்தக் கவி.                             (6)

கவிவகைகள் நான்கில் கைதேர்ந்து தூய
அவிரோதம் போதித்த ஐயன் -- அவதரித்த
ஆளுடைப் பிள்ளையை ஆசானாய் ஏற்றந்த
வேளைப் புகழ்ந்தார் விதந்து.                         (7)

விதம்விதமாய் வண்ணம் விளையாட்டாய்ப் பாடிப்
புதியபா யாப்பைப் புகுத்தி -- கதிபெறப்
பெம்மானைப் போற்றியவர் பெற்றவோர் மந்திரம்
சும்மா இருவென்ற சொல்.                            (8)

சொல்லும் பொருளும் சுவைபடப் பாடினவர்
சொல்லறு மௌனமும் சுட்டினார் -- உல்லாசன்
ஈராறு கையனை இந்துமதப் பாலமாய்ப்
பாராட்டிப் பாடினார் பார்.                             (9)

பாரெங்கும் காணாத பன்னரும் தாளங்கள்
வாரி வழங்கினார் ஓசைமுனி -- தாரணியைச்
சூழ்ந்த பலவகை துன்பங்கள் நீக்கிநம்
வாழ்விற் குதவுமவர் வாக்கு.                            (10)

=========

1.  வாக்குக் கருணகிரி வாதவூரார் கனிவில்
தாக்கில் திருஞான சம்பந்தர் - நோக்கிற்கு
நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்
சொற்குறுதி அப்ப ரெனச் சொல்." - பழம் வெண்பா

 2. ஆரணம் - வேதம்

 3. 'இருப்பவல் திருப்புகழ்' -- திருப்புகழ்

 4. ஐயா அருணகிரி அப்பா உனைப்போல
  மெய்யாக ஓர்சொல் விளம்பினர்யார்  - தாயுமானார்

நவமணிகள் - திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், திருவகுப்பு, வேல், மயில், சேவல் விருத்தங்கள், திருவெழுக்கூற்றிருக்கை

 5. 'நாத விந்து கலாதீ' -- திருப்புகழ்

7. கவிவகைகள் நான்கு - ஆசு, வித்தாரம், சித்ரம், மதுரம்
   ஆளுடைப் பிள்ளை, சம்பந்தர் முருகனின் ’அவதாரம்’ என்பது
    அருணகிரியின் கொள்கை.

8. புதியபா யாப்பு -- திருப்புகழ் பாவகைக்கு அருணகிரியே ஆதிகர்த்தா

9. உல்லாச நிராகுல - கந்தர் அனுபூதி

10. 'ஓசைமுனி ' -- பாம்பன் சுவாமிகளின் வாக்கு


தொடர்புள்ள பதிவுகள்:

1 கருத்து:

P Jawahar சொன்னது…

மிகவும் உயர்வாய் இருக்கிற

கருத்துரையிடுக