சனி, 6 ஆகஸ்ட், 2022

2200. சங்கீத சங்கதிகள் - 322

கோட்டையைத் தகர்த்தார் ராஜமாணிக்கம் பிள்ளை !

எல்லார்வி

[ Photo by: "Mali" ]

ஆகஸ்ட் 5. சங்கீத கலாநிதி கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் பிறந்த தினம். 

[ Picture-Courtesy: Valliyappan Ramanathan]

1935-இல் நடந்த ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறார் 'எல்லார்வி'

------

 திருவிசைநல்லூர் ஐயா அவர்களின் உற்சவ நிதி வசூலுக்காகக் கும்பகோணம் வாணி விலாச சபையில் செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரின் கச்சேரி. கும்பகோண வாசிகளுக்கு மைசூர் சௌடையாவின் வயலின் வாசிப்பைக் கேட்க வேண்டுமென்று நெடுநாளைய அவா. அதை அறிந்திருந்த சபையின் கன்வீனரான ராஜமாணிக்கம் ஸ்ரீநிவாச ஐயருக்குப் பக்க வாத்தியமாகச் சௌடையாவை ஏற்பாடு செய்தார்.

கச்சேரி தினத்தன்று பகல் இரண்டு மணி வரையில் சௌடையா வந்து சேரவில்லை. ஏராளமான டிக்கட்டுகள் விற்பனையாகி விட்டன. பலர் முன்னதாகவே ரிசர்வ்' செய்து கொண்டிருந்தனர். இரண்டு மணியிலிருந்தே ரசிகர்கள் இடம் பிடித்து அமரலாயினர்.

மணி மூன்று. நிர்வாகிகளின் கவலை வரவர அதிகரித்தது. மணி நாலு ஆகிவிட்டதும் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். ஸ்ரீநிவாச ஐயருக்கு அப்போதெல்லாம் அதிக மாக வாசித்து வந்த ராஜமாணிக்கமே அன்றும் வாசிப்பது என்ற முடிவுடன் செயலில் இறங்கினர்.

வித்துவான்கள் மேடைக்கு வந்தனர். சௌடையாவை எதிர்பார்த்த இடத்திலே ராஜமாணிக்கத்தைக் கண்டதும் வான் அதிரக் கரகோஷம் எழுந்தது. உடனே ராஜ மாணிக்கம் மேடைமீது நின்று கை அமர்த்திப் பேசினார்.

"தவறாமல் வருகிறேன் என்று நேற்றுக்கூடத் தந்தி வந்தது சௌடையா அவர்களிடமிருந்து. மனித யத்தனத்தை முன்னிட்டுக்கொண்டு அவர் கொடுத்த தந்தி அது. அதற்கும் மேற்பட்ட தெய்வயத்தனம் ஒன்று இருக்கிறது என்பதை இந்த இடத்திலே நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அவருக்கு எதிர்பாராதபடி என்ன அசந்தர்ப்பமோ ! இது சகஜம் தானே? பண்பில் சிறந்த தமிழர் நாம். பண்பை மறந்து வீண் குழப்பத்தை உண்டாக்கிக்கொள்ளலாமா? நம் நாகரிகத்திற்கு அது அழகா? அதனால் பலன் என்ன? மனக் கஷ்டமும் கால நஷ்டமும்தான் மிச்சம். ஸ்ரீநிவாச ஐயர் அவர்கள் தேன் மதுர இசை பொழியக் காத்திருக்கிறார்கள். வீண் குழப்பத்தினால் இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் இழப்பதா? உங்களுக்கு இன்று சௌடையா அவர்களின் வாசிப்பைக் கேட்க இயலாது போயிற்றே என்ற வருத்தமே தவிர, என் வாசிப்பைக் கேட்பதில் ஆட்சேபம் இருக்காது என்று எதிர் பார்க்கிறேன். இப்போதைக்கு அவர் ஸ்தானத்தில் அமர்ந்து வாசிக்கிறேன். கச்சேரி நடக்கட்டும். கேட்டு இன்புறுங்கள். கூடிய சீக்கிரம் சௌடையா அவர்களின் வாசிப்பைக் கேட்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும்; நானே கிட்டச் செய்கிறேன்."

மீண்டும் பரபரவென்று கரகோஷம். முன்னதற்கும் பின்னதற்கும் எவ்வளவோ வித்தியாசம்.

ராஜமாணிக்கத்திடம் எங்கும் எவருக்கும் உயர்ந்த அன்பும் சிறந்த மதிப்பும் உண்டு. அவருடைய சொற் பொழிவு அங்கிருந்த சூழ்நிலையை உடனே மாற்றிவிட்டது. எங்கும் அமைதி . கச்சேரி 'ஜம்' மென்று ஆரம்பமாகி விட்டது .

சுமார் ஒரு மணி நேரம் சென்றிருக்கும். ஒருவர் வந்து பிள்ளையிடம் என்னவோ சொன்னார். பிள்ளை பதில் சொல்லி அனுப்பினார். பிறகு வழக்கமான மந்தகாசம் மேலும் அதிகரிக்க, வாசித்துக்கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் சௌடையா சபையில் பிரவேசித் தார். உடனே சபையில் ஏக ஆரவாரம் ! பிள்ளை எழுந்து கைலாகு கொடுத்து அவரை மேடைக்கு அழைத்து மாலை சூட்டி மரியாதை செய்தார். பிறகு சபையோரை நோக்கிக் கூறினார்: "கூடிய சீக்கிரம் சௌடையா அவர்களின் வாசிப்பை நீங்கள் கேட்கலாம்; நானே கேட்கும்படி செய் கிறேன் என்றேன். ஆம், இதோ செய்துவிட்டேன். மேடையிலே கச்சேரி நடுவிலே தாம் புரிகிற செயலிலே இன்னொருவருக்கு இடம் தரலாகாது என்பது மூடக் கொள்கை. அந்தச் சம்பிரதாயக் கோட்டையை இன்று நான் தகர்க்கிறேன்!" - என்றார்.

பிறகு செம்மங்குடியின் கீதவர்ஷமும் சௌடையா வின் வாத்திய வர்ஷமும் சபையை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தன.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


கருத்துகள் இல்லை: