செவ்வாய், 24 அக்டோபர், 2017

879. எஸ்.வி.வி. -3

ஆகும் ஸார், ஆகும்
எஸ்.வி.வி.


''வாயால் சொல்லலாமேயொழிய, எங்கே ஸார் முடிகிறது? எல்லோரும் என்ன சொல்லுகிறார்கள் தெரியுமோ? 'மாதம் இருநூறு ரூபாய் சம்பாதிக்கிறானே, என்ன செலவு?' என்கிறார்கள். 'வீட்டிலே இருக்கிறது நான்கு பேர்கள். அவன், அவனுடைய சம்சாரம், ஒரு பிள்ளை, ஒரு பெண். விழுந்து விழுந்து செலவழித்தாலும் நூறு ரூபாய் இருந்தால் தலைக்குமேல் வெள்ளம். மற்ற நூறு ரூபாயை  அப்படியே மீக்க வேண்டியது தானே? எப்பொழுதும் பணமில்லை பணமில்லை என்று அடித்துக் கொள்ளுகிறானே. பணமெல்லாம் எங்கே போய்விடும்?' என்கிறார்கள். இருக்கிற ஸ்திதி என்ன தெரியுமோ? அந்த இருநூறு ரூபாயும் போய் மாதம் ஐம்பது ரூபாய் கடனாகிறது.''

''நானுந்தான் கேட்கிறேன். எப்படிப் போதாமல் போய்விடும்?''

''ஏன் ஸார், பாருங்களேன். முதலில் வீட்டு வாடகை எடுத்துக் கொள்ளுங்கள். முப்பத்தைந்து ரூபாய் ஆச்சா?''

''வீட்டு வாடகை முப்பத்தைந்தா? ரொம்ப அதிகம். இருநூறு ரூபாய் சம்பாதிக்கிறவன் இருபது ரூபாய் தான் வாடகை கொடுக்கலாம். வருமானத்தில் நூற்றுக்குப் பத்து ரூபாய் தான் வாடகைக்கு என்று கணக்கு. முப்பத்தைந்து என்பது, ஆனாலும் ரொம்ப அதிகம்.''

''அதிகந்தான், ஸார். மாதா மாதம் கொடுக்கும் பொழுது கஷ்டமாய்த் தானிருக்கிறது. என்ன செய்கிறது? முப்பத்தைந்துக்குக் குறைந்து நல்ல வீடு எங்கே அகப்படுகிறது? வீடு படைத்தவர்கள் நான்கு மாதங்கள் ஆறு மாதங்கள் காலியாய் வீட்டைப் பூட்டி வைத்துக்கொண்டிருந்தாலும் இருப்பார்களே தவிர வாடகையை எங்கே குறைக்கிறேன் என்கிறார்கள். இதற்கு முன் இருபத்தைந்து ரூபாய்க்கு ஒரு வீட்டில் இருந்தேன். காற்று என்பது கொஞ்சங்கூடக் கிடையாது. வீடு ஓதம் வேறு. எல்லோருக்கும் ஜலதோஷமும் தலைவலியுமாய் வந்து விட்டது. டாக்டருக்குக் கொடுப்பதை வீட்டு வாடகையாய்க் கொடுக்கலாம் என்று அப்புறம் முப்பது ரூபாயில் ஒரு வீட்டில் இருந்தேன். அதுவும் சரிப்படவில்லை. அந்த வீட்டில் விளக்குக் கிடையாது. போதாததற்கு எதிர்வீடு ஒரு தட்டான் வீடு. இரவு இரண்டு மணி வரையில் லொட்டு லொட்டு என்று அடித்துக்கொண்டிருப்பார். இந்தச் சத்தத்தில் தூக்கம் எப்படி வரும்? அதோடு அந்த வீட்டுக்காரனை ஏதாவது ரிப்பேர் பண்ணடா என்றால் பண்ணுகிறதில்லை. வருஷத்தில் ஒருதரம் வெள்ளையாவது அடிக்க வேண்டுமோ இல்லையோ? அதைக்கூடச் செய்கிறதில்லை. அந்த வீட்டில் இன்னொரு கஷ்டம் என்னவென்றால் ராத்திரி மூலை மூலையாய்ப் பெருச்சாளி தோண்டிவிடும். காலையில் எழுந்திருந்தால் ஒவ்வொரு மூலையிலும் ஒரு கூடை மண். பெருச்சாளி வரவொட்டாமல் ஜலதாரைகளுக்கெல்லாம் இரும்புக் கம்பியாவது போடுடா என்றால் காதில் போட்டுக் கொள்ளுகிறதில்லை.



” வாடகைக்கு என்ன தெரியுமோ? முதல் தேதி காலையில் வந்துவிடுவான். சாயந்தரம் பணம் வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கிறதற்குள் இருபது தரம் வந்து விடுவான். ஒருதரம் எனக்குக் கோபம் வந்துவிட்டது. வாயில் வந்த படி திட்டிவிட்டு வேறு வீடு பார்த்துக்கொண்டுவிட்டேன். முப்பது ரூபாய்க்கு மேல் ஓட்டக் கூடாது என்று எங்கெல்லாமோ திரிந்து பார்த்தேன்; ஒன்று செளகரியமாயிருந்தால் அதில் பத்து அசெளகரியங்கள். கடைசியில் இந்த வீட்டைப் பிடித்தேன். முப்பத்திரண்டுக்காவது குறைத்துக் கொள்ளும்படிப் பேரம் பண்ணினேன். முப்பத்தைந்துக்குக் குறைந்து முடியாது என்று சொல்லி விட்டான்.''

''இந்த மாதிரிக் கூடாது, ஸார். நீங்கள் ஒரு வீடு வாங்கிக் கட்டிவிட வேண்டும். சென்னப்பட்டிணத்தில்தான் இருக்கிறது என்று ஏற்பட்டு விட்டதே. உங்களுக்கு என்று ஒரு வீடு வேண்டியதுதான். இந்தமாதிரி வாடகை கொடுத்துக் கட்டுமா? அறுநூறு எழுநூறு ரூபாய்க்கு நல்ல மனை அகப்படும். இரண்டாயிரம் ரூபாய் போட்டு முதலில் சின்ன வீடாய்க் கட்டிக் கொள்ளுகிறது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெரிதாய்க் கட்டிக் கொண்டால் போச்சு. நமக்கு என்று ஒரு வீடு இருக்கிறதற்குச் சமானம் இல்லை. ஊர்ப்பட்ட வாடகையும் கொடுத்து, கஷ்டமும் பட்டுக் கொண்டு...''

''எல்லாம் சரிதான், ஸார். நான் இதுவரையில் கொடுத்திருக்கும் வாடகையில் இருபது வீடுகள் கட்டியிருக்கலாம். என்ன செய்கிறது ஸார்? இங்கேதான் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே.''

''சரி, அப்புறம் சொல்லுங்கள். வாடகை முப்பத்தைந்து ஆச்சா.''

''வாடகை முப்பத்தைந்து ஆச்சா? எலெக்டிரிக் சார்ஜ் ஏழெட்டு ரூபாய் கூட்டிக் கொள்ளுங்கள்.''

''ஏழாவது எட்டாவது, ஸார்? என் வீட்டில் நான்கு விளக்குகள் இரவு பகலாய் எரிந்துகொண்டிருக்கின்றன. இரண்டரை ரூபாய்க்குமேல் ஒரு மாதங்கூட ஆனதில்லை.''

''எலெக்டிரிக் விசிறி இருக்கிறதோ இல்லையோ! மூன்று விசிறிகள் இருபத்து நான்கு மணி நேரங்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன. நம் அறையில் ஒரு விசிறி. பிள்ளை அறையில் ஒன்று. பெண் அறையில் ஒன்று. 'சீலிங் பான்' ஒன்று இருக்கிறது. அதை நான் உபயோகிக்கிறதில்லை. அது மானவாரியாயிழுக்குமென்று மூன்று மேஜை விசிறிகள் வாங்கி வைத்திருக்கிறேன். அப்புறம் விளக்கு, பிள்ளை அறையில் பன்னிரண்டு மணிவரையில் எரியும். பெண் அறையிலும் அப்படியே. நம் அறையில்தான் கேட்க வேண்டியதில்லை. நமக்குத்தான் இரவு இரண்டு மணிவரைக்கும் எழுதுகிறது, கிழிக்கிறது என்று இருக்கிறதே. அப்புறம் தெரு விளக்கு ஒன்று இருக்கிறது. சமையலுள்ளில் இரண்டு விளக்குகள், பத்து மணி வரைக்கும் எரியும். என்ன ஆச்சுதென்று பார்த்துக் கொள்ளுங்களேன். ஆறு ரூபாய்க்குக் குறைந்து இதுவரைக்கும் நான் கட்டினதில்லை. விளக்குக்கு ஏழு ரூபாய் சராசரி வைத்துக் கொள்ளுங்கள்.''


''முப்பத்தைந்தும் ஏழும் நாற்பத்திரண்டு.''

''நாற்பத்திரண்டு ஆச்சா? பெருக்குகிறவளுக்கு மூன்று ரூபாய்; நாற்பத்தைந்து. அப்புறம் என்ன? அவ்வளவுதான். வீட்டு வாடகை வகைச் செலவு நாற்பத்தைந்து என்று வைத்துக் கொள்ளலாம். அப்புறம் தயிர், பால். பால் காலையில் ஒரு படி, சாயந்தரம் ஒரு படி.''

''இருக்கிறது நான்கு பேர்கள் தானே? என்னத்திற்கு ஸார் அவ்வளவு.''

''ஆகிறதே! வீட்டிற்கு யாராவது வந்துவிட்டால் இன்றும் நித்தியம் கால்படி கூட ஆகும். அறுபது படிக்கு என்ன ஆச்சு? ரூபாய்க்கு இரண்டரைப்படி; அறுபது படிக்கு, இருபத்திரண்டு நாற்பது, இருபது அரை பத்து. இருபது ரூபாய்க்கு ஐம்பது படியாச்சு அப்புறம் பத்து படி இருக்கிறது. அது ஒரு நான்கு ரூபாய். மொத்தம் பால் இருபத்து நான்கு ரூபாய் ஆகிறது, குறைத்து இருபது என்றே போட்டுக் கொள்ளுங்களேன். என்ன ஆச்சு மொத்தம்? நாற்பத்தைந்தும் இருபதும்...... அறுபத்தைந்து.''

''அறுபத்தைந்து ஆயிற்று.''

''அதற்கப்புறம் ஒரு பெரிய அயிடம் நெய். நான் கடையில் நெய் வாங்கிச் சாப்பிடுகிறதில்லை. நெய்யில் கொஞ்சம் வாசனை வந்தால்கூட வீட்டில் யாரும் தொட மாட்டார்கள். எப்பொழுதும் வெண்ணெயாய் வாங்கித்தான் காய்ச்சிக் கொள்ளுகிறது. அதுவும் மொத்தமாய் வாங்குகிறதில்லை. அவ்வப்பொழுது அரை வீசை ஒரு வீசை வெண்ணெய் வாங்கிக் காய்ச்சிக் கொள்ளுகிறது. நெய் 'அயிடம்' பதினாறு பதினேழு ரூபாய் ஆகிறது, ஸார்.''

''ஐயோ ஐயோ! என்ன ஸார்? நித்தியம் நாலு பலம் நெய் வைத்தால்கூட மாதம் மூன்று வீசைதானே ஸார், ஆகிறது?''

''பட்சணம்? நித்தியம் ஏதாவது ஒரு பட்சணம் பண்ணினாலொழிய குழந்தைகள் சும்மா விடமாட்டார்கள், ஸார். எண்ணெயில் பண்ணினால் கையால் கூடத் தொட மாட்டார்கள். பொய்யாகவா சொல்லுகிறேன்? நெய்யில் பதினைந்து ரூபாய்க்கு ஒரு காசு குறைக்க முடியாது.''

''சரி, நெய்யைச் சேர்த்து எண்பது ரூபாயாச்சு.''

''எண்பதாச்சா? அப்புறம் காபிக்கொட்டை, சர்க்கரை, உப்பு, புளி இல்லையா, கடை சாமான்கள்? அது ஒரு முப்பது ரூபாயாவது ஆகும்.''

''முப்பது என்னத்திற்கு ஸார்? நெய் பாலெல்லாம் தான் போச்சே? உப்புப் புளி மிளகாய் தானே? பத்துப் பன்னிரண்டு ரூபாய்க்கு வாங்கினால் உதைத்துக்கொண்டு கிடக்கும்.''

''அப்படியே இருக்கட்டும். அதற்கு இருபது ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள். இதெல்லாமாகச் சேர்ந்து நூறு ரூபாய் என்று வைத்துக் கொள்ளுவோமே.''

''சரி, நூறு ரூபாய்.''


''ஷாப்பு பில் மாதம் இருபத்தைந்து முப்பது ஆய் விடுகிறது, ஸார்.''

''ஷாப்பு பில் என்றால்?''

''இந்த ஓவல்டின், துணி, சோப்பு, டுத்பேஸ்டு, டாயிலெட்டு சோப்பு, ஸெனாடஜன், ஹேர் ஆயில், லைம்ஜுஸ், க்ளிஸரின் இல்லையா கன்னாபின்னா வென்று, எல்லாம் சேர்ந்து என்ன ஆச்சு?''

''நூற்றிருபத்தைந்து.''

''எல்லாவற்றையும்விடப் பெரிய அயிடம் பிள்ளைக்கும் பெண்ணுக்கும் காலேஜ் ஸ்கூல் சம்பளம், புஸ்தகம், பேனா இவைகளுக் கெல்லாம் நாற்பது ரூபாய்.''

''நூற்று அறுபத்தைந்து.''

''அப்புறம் இன்ஷூரென்ஸ். ஆறு மாதத்திற்குத் தொண்ணூறு ரூபாய் கட்டுகிறேன். அது என்ன கணக்காச்சு? மாதம் பதினைந்து ஆகவில்லையா?''

''நூற்று எண்பது. மெள்ள மெள்ள இரு நூறுக்குக் கணக்கைக் கொண்டு வந்து விட்டீர்களே?''

''நான் கணக்கைக் கொண்டு வந்து விடுகிறதாவது? இப்படித்தான் ஸார் செலவாய்க் கொண்டு வருகிறது.''

''இன்னும் பிள்ளைக்கு டிராம் சார்ஜு முதலியவைகளை யெல்லாம் எங்கே கூட்டினீர்கள்?''

''அவைகளையெல்லாம் சேர்த்தால் இரு நூறு ரூபாய் சரியாய்ப் போய்விட்டது.''

''அப்புறம், ஒரு சினிமாவுக்குப் போக வேண்டுமென்று குழந்தைகள் ஆசைப்பட்டன; ஒரு சர்க்கஸ், ஒரு 'பார்க்குபேர்' இல்லையா? ஒரு நாளைக்கு ஒரு பழம் வாங்கி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டன; இதற்கெல்லாம் எங்கே பணம்?''

''அதற்கெல்லாம் இல்லைதான்.''


''ஒரு பெரிய அயிட்டம் விட்டு விட்டோமே. துணிமணிகளைக் கணக்குப் போடவில்லையே! வருஷத்தில் துணிமணி என்ன ஆகிறது என்று நினைக்கிறீர்கள்? இந்தக் காலத்தில் பெண்டுகள்தாம் ஒரு ரவிக்கைக்கு இரண்டு ரவிக்கைகளாய்ப் போடுகிறார்கள். முன் காலத்தில் நாற்பது நாற்பது கொடுத்து இரண்டு புடவைகளை வாங்கினால், பதினைந்து இருபது கொடுத்துப் பத்துப் புடவைகள் இப்பொழுது வாங்குகிறார்கள். நம் வீட்டில் இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். அப்புறம் பிள்ளைக்கு ஷர்ட்டு, கோட்டு, காலர், நெக்டை, டிராயர்ஸ்-- டிராயர்ஸ் இல்லாமல்தான் இந்தக் காலத்தில் இல்லையே-- அப்புறம் நமக்கு ஷர்ட்டு, கோட்டு துணி, இவைகளுக்கெல்லாம் தையற்கூலி, சலவைக் கூலி எல்லாம் என்ன ஆகும்?''

''ஆகும் ஸார், ஆகும்; வேண்டியவரைக்கும் ஆகும்.''

''தையற்காரனுக்கு மாதம் பத்து ரூபாய்க்குக் குறைகிறதில்லை. சலவையாளருக்கு நூற்றுக்கு நான்கு ரூபாய் என்று கணக்கு; பெண்பிள்ளைகள் புடவை ஜாக்கெட்டு இவைகளேதான் நூறு விழுகிறதே?''

''ஆகும் ஸார், ஆகும்.''

''இதெல்லாம் கணக்குப் போட்டோமே. டாக்டர் பீஸ் கணக்கப் போட்டோமா?''

''இல்லையே! நீங்கள் சொல்லுவதைப்போல் அது வேறு இருக்கிறதே?''

''வெளியார் சொல்லுவதற்கென்ன ஸார்? அவர்கள் வாய்க்குப் பூட்டா, சாவியா? எதைக் கண்டார்கள்? நான் சொல்லுகிறேன் கேளுங்கள். வாஸ்தவமாய், இரு நூறு ரூபாய் போதாமல் மாதம் ஐம்பது ரூபாயாவது கடனாகிறது ஸார்.''

''ஆகும் என்கிறேனே, ஆகும்! கணக்குத்தான் சொல்லுகிறதே!''
======
[ நன்றி : appusami.com ] 

தொடர்புள்ள பதிவுகள்:
எஸ்.வி.வி. 

கருத்துகள் இல்லை: