வியாழன், 29 செப்டம்பர், 2016

அரங்க. சீனிவாசன்

"காந்தி காதை பாடிய கவிக்கடல்" அரங்க.சீனிவாசன்
புலவர் இரா.இராமமூர்த்தி


                                       




செப்டம்பர் 29. கவிஞர் அரங்க. சீனிவாசனின் பிறந்த தினம்.


20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் தலைசிறந்த கவிஞராகத் திகழ்ந்தவர் "கவித்தென்றல்" அரங்க.சீனிவாசன். 

பர்மா நாட்டில் "பெகு" மாவட்டத்தின் "சுவண்டி" என்ற சிற்றூரில் 1920ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்தார்.

தந்தை அரங்கசாமி நாயுடு; தாய் மங்கம்மாள்.

மங்கம்மாள், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி இராணி படைப்பிரிவில் போர் வீராங்கனையாகத் துப்பாக்கி ஏந்திப் போரிட்டவர். 

தேசபக்தி, தெய்வபக்தி, கவிதையாற்றல் மூன்றையும் கருவிலேயே திருவாகப் பெற்றுப் பிறந்தவர் அரங்க.சீனிவாசன்.

தாய் ஏந்திய துப்பாக்கி முனையைவிட இவர் ஏந்திய பேனா முனை சாதனை பல புரிந்ததை இவருடைய வரலாறு நமக்குக் காட்டுகிறது. 

அரங்க.சீனிவாசன் பத்தாம் வயதிலேயே பற்பல கவிதைகள் எழுதினார்.

அவை "சுதேச பரிபாலினி", "பர்மா நாடு", "பால பர்மர்", "சுதந்திரன்", "ஊழியன்", என்ற இதழ்களில் வெளிவந்தன.

தம் 14ஆம் வயதில் தேசிய கீதம், சரஸ்வதி துதி முதலிய சிறு நூல்களை இயற்றினார்.

15ஆம் வயதில், வடமலை சீனிவாச மாலை, மணவாள சதகம் முதலான பல பிரபந்தங்களை இயற்றினார். 

பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பழனி மாம்பழக் கவிராயரின் தலை மாணாக்கரான பழனி பக்கிரிசாமிப் பிள்ளை என்ற பரிபூரணானந்த சுவாமிகளின் திருவடிகளின் கீழ் அமர்ந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பல்லாண்டு பயின்றார்.

திண்டுக்கல் "தோப்புச்சாமிகள்" என்ற பி.எஸ்.இராமாநுஜ தாசரிடம் வைணவ நூல்களின் விளக்கங்களைக் கேட்டு அறிந்துகொண்டார். 

1942இல் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்தபோது பர்மாவிலிருந்து கால்நடைப் பயணமாகவே, பாரதநாடு நோக்கி வந்தார். வழியில் பற்பல இடையூறுகள் குறுக்கிட்டன. குண்டர்களின் தாக்குதலால், கெளஹாத்தி மருத்துவமனையில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். 

கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்க உறுப்பினராகவும், தமிழ் எழுத்தாளர் சங்க நிறுவனராகவும் பணிபுரிந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பட்டப்படிப்பு மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்தினார். அங்கிருந்து வெளிவந்த "ஜோதி" மாத இதழிலும், திருச்சி "தொழிலரசு" இதழிலும் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். 

தமிழகத்துக்கு வந்து முதன் முதலாக "சங்கரன்கோவில் கோமதி நான்மணிமாலை" என்ற நூலை இயற்றி, அரங்கேற்றிப் பரிசும் பணமும் பெற்றார். தமிழ், இந்தி, சம்ஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். 

இவர் எழுதிய "தியாக தீபம்" என்ற வரலாற்றுப் புதினத்துக்கு அணிந்துரை எழுதிய நாரண.துரைக்கண்ணன், 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி இரவில், சென்னை வானொலி நிலையத்தில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். 

"எனக்கு ஓர் ஆசை. நம்ம மகாத்மா காந்தியை வைத்து இராமாயணம் போல ஒரு காவியம் பாடினீர்களானால், வருங்காலச் சந்ததிகள் அம்மகானைப் புரிந்துகொண்டு அவர் விரும்புகிறபடி நல்ல பிரஜைகளாக விளங்குவார்கள்''

என்று மாநில முதல்வராக இருந்த ஓமந்தூரார் கேட்டுக்கொண்டார்.

கவிஞர் அரங்க.சீனிவாசன் இந்த நிகழ்ச்சியை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், 1979ஆம் ஆண்டில் அரங்க.சீனிவாசன் இயற்றிய "மனித தெய்வம் காந்தி காதை" அரங்கேறியபோது, ஓமந்தூரார் வாக்குப் பலித்தது. 


"காந்தி காதை" திருச்சிராப்பள்ளி திருக்குறள் கழகத்தின் தலைவர் ஆ.சுப்புராயலு செட்டியாரின் ஆதரவில் எழுதப்பட்டது. அந்தக் காவியத்தை எழுதுவதற்காக, கவிஞர் அரங்க.சீனிவாசனை பாரத நாடெங்கும் காந்தியடிகளின் வரலாற்றுப் பதிவு பெற்ற ஊர்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றார். 

"மனித தெய்வம் காந்தி காதை" ஐந்து காண்டங்களில், எழுபத்தேழு படலங்களையும், 5,183 பாடல்களையும் கொண்ட சிறந்த காவியம். 

மனித தெய்வம் காந்தி காதை, பாரதிய வித்யா பவனின் இராஜாஜி நினைவுப் பரிசும், பத்தாயிரம் ரூபாயும் பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்கம், கோவை இராமகிருஷ்ணா வித்யாலயம் ஆகிய நிறுவனங்கள் வழங்கிய பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றது. 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிப் பட்டப் படிப்புக்கும், பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டப் படிப்புக்கும், தன்னாட்சிக் கல்லூரிகள் சிலவற்றின் பட்டப் படிப்புக்கும், காந்தி காதை பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

தமிழகப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் காந்தி காதைப் படலம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 

அரங்க.சீனிவாசன் இயற்றிய "காவடிச் சிந்தும், கவிஞன் வரலாறும்" என்ற ஆய்வு நூல், தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. வங்கதேசப் போரைப் பற்றிய இவரது "வங்கத்துப் பரணி" என்ற நூல், பட்டப்படிப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 

இவரது எழுத்துப் பணிகளைப் பாராட்டி, அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால், "அருட்கவி" என்ற விருதும், ம.பொ.சி. தலைமையில் இயங்கிய நாமக்கல் கவிஞர் நினைவுக் குழுவினரால், "கவித்தென்றல்" என்ற பட்டமும் பரிசும் கேடயமும், பொள்ளாச்சி மகாலிங்கத்திடமிருந்து பாராட்டும் பெருந்தொகையும் கேடயமும் பெற்றுள்ளார்.

வாகீச கலாநிதி கி.வா.ஜ. இவருக்குக் "கம்பன் வழிக் கவிஞர்" என்ற பட்டத்தை வழங்கிப் பாராட்டியுள்ளார். சென்னைத் தமிழ் வளர்ச்சி மன்றம் "கவிதைச் செம்மல்" என்ற விருதளித்துள்ளது. திருச்சி கலைப்பண்ணை "கவிக்கடல்" என்ற பட்டமும், உலகப் பல்கலைக்கழகம் "டாக்டர்" பட்டமும் அளித்து கெளரவித்துள்ளது. 

இராஜா சர் முத்தையா செட்டியார் நிறுவிய தமிழ் - சம்ஸ்கிருத ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் ஆராய்ச்சி முனைவராகப் பணிபுரிந்தார். பல ஆண்டு மலர்களுக்கும், நினைவு மலர்களுக்கும், பற்பல சிறந்த தமிழ் நூல்களுக்கும் பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழக அரசு தொல்பொருள் துறையின் "வானர வீர மதுரைப் புராணம்" என்ற நூலைத் திருத்திப் பதிப்பித்தார். 

அரங்க.சீனிவாசன், "தினமணி" இதழில் பலநூறு கட்டுரைகளையும், நூல் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். "தினமணி"யில் இவர் எழுதிய "சங்க நூல் ஆராய்ச்சி"க் கட்டுரைகளை வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது. "சங்க இலக்கியங்களில் தேசியம்" என்ற இவரது நூலை தேசிய சிந்தனைக் கழகம் வெளியிட்டது. 

சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புப் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார். தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் நிறுவிய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகி, "தமிழ்க் கலைக் களஞ்சியம்" உருவாக ஒத்துழைத்தார். 

"தேசிய கீதம்" முதலாக "நீலிப்பேயின் நீதிக்கதைகள்" ஈறாக இவர் படைத்த நூல்கள் இருபத்தொன்பது. "மண்ணியல் சிறுதேர்" முதலாக "அண்ணாமலையார் நினைவு மலர்" ஈறாக இவர் பதிப்பித்த நூல்கள் பன்னிரண்டு.

பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது, அண்ணாமலை ரெட்டியார் கவிதைகள், கூடற் கலம்பகம் ஆகிய பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். 

இவர் இயற்றிய வைணவத் தத்துவ அடிப்படைகள், அருள் விளக்கு அரிவையர், அறிய வேண்டிய ஐம்பொருள், திருவரங்கத் திருநூல் ஆகியவை வைணவத்தில் இவருக்கிருந்த ஆழங்காற்பட்ட ஈடுபாட்டை உணர்த்தும்.

வள்ளலார்பால் கொண்ட ஈடுபாட்டை இவரது "வான்சுடர்" என்ற நூல் புலப்படுத்தும்.

ஆசுகவி, சித்ரகவி, மதுரகவி, வித்தாரக்கவி ஆகிய நாற்கவியும் புனைய வல்லவர் அரங்க.சீனிவாசன். 

தீவிர தேசபக்தி, இலக்கிய ஈடுபாடு, பன்மொழி இலக்கிய நாட்டம், காந்தியத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். எளிமையின் திருவுருவாக, அடக்கத்தின் உறைவிடமாக அனைவரின் அன்பையும் பெற்று வாழ்ந்தவர், 1996ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி காலமானார்.



[ நன்றி:- தினமணி ]

தொடர்புள்ள  பதிவுகள்;


1 கருத்து:

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

நல்ல தகவல், பகிர்வுக்கு நன்றி