வியாழன், 7 நவம்பர், 2013

ராமன் விளைவு : கவிதை

சி.வி.ராமன் : ஒரு நினைவுச் சுடர்


நவம்பர் 7. ஸர் சி .வி. ராமனின் 125-ஆம் பிறந்த நாள். 
அவரைப் பற்றிய ஒரு சிறிய நினைவைப் பகிர்ந்து கொள்கிறேன். 
1966-ஆம் ஆண்டு, ஜூலை 30. ஐ.ஐ.டி(மதராஸ்) பட்டமளிப்பு விழாவிற்கு அவர்தான் தலைமை. இந்தியா எப்படித் தன் முயற்சியாலேயே உலக அரங்கில் வலம் வரவேண்டும், வரமுடியும்  என்பதைப் பற்றி  அற்புதமாய்ப் பேசினார். பிறகு மாணவர் பலருக்குப் பரிசு வழங்கினார். என்னையும் சேர்த்துத்தான்.

எனக்குப் பரிசு கொடுக்கும் போது, “என்ன, இது மிகவும் கனமாய் இருக்கிறதே ? “ என்றார். அவர் என்னிடம் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை! ஒரு விநாடி தடுமாறிப் பின், “ அறிவு தானே...கனமே இல்லையே? “ என்பது போல் ஏதோ உளறி , அவர் கையிலிருந்து அந்தப் புத்தகக் கட்டு அடங்கிய பரிசைப் பெற்றுக் கொண்டேன். ஆனால், என் மனத்தில் ஒரு குறுகுறுப்பு. அந்தக் கட்டுக்குள் இருந்தவற்றை எப்படி “அறிவு” என்பது?


விஷயம் இதுதான். எனக்குப் பரிசு என்று தெரிந்தவுடனேயே, ஐ.ஐ.டி நிர்வாகத்தினர் என்னைக் கூப்பிட்டு, பரிசுத் தொகை இவ்வளவு, அதற்குள் அடங்கும்படி சில நூல்களை நானே வாங்கி, அவர்களிடம் பில்லையும், நூல்கட்டையும் சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தனர். உடனே நான் ஹிக்கின்பாதம்ஸுக்கு விரைந்து, நான் சில வாரங்களாகக் குறி வைத்திருந்த இரு ஆங்கில நாவல் தொகுப்புகளை வாங்கினேன். ஒன்று: ‘ஸேப்பர் ‘ ( Sapper) எழுதிய ‘ புல்டாக் ட்ரம்மண்ட்’
Bulldog Drummondஎன்ற சாகசக்காரனைப் பற்றிய புதினத் தொகுப்பு; ( இதை ‘வேட்டைநாய் தாமோதரன்’ என்ற பெயரில் ஆரணி குப்புசாமி முதலியாரோ, வேறொருவரோ மொழிபெயர்த்த நினைவு!) இன்னொன்று ,

 ‘பாரனெஸ் ஆர்ஸி’ ( Baroness Orczy) எழுதிய ’ஸ்கார்லெட் பிம்பெர்னல்’

The Scarlet Pimpernelஎன்ற புனைபெயரில் பல பிரெஞ்சுப் பிரபுக்களை மரணத்திலிருந்து  காப்பாற்றிய ஓர் ஆங்கிலப் பிரபு பற்றிய ‘த்ரில்லர்’ நாவல்களின் தொகுப்பு! இவற்றை ஐ.ஐ.டியிடம் கொடுத்தபின், எனக்குத் ‘திக் திக்’ கென்றே இருந்தது! யாராவது, கட்டைப் பிரித்துப் பார்த்துவிட்டால்? நல்ல வேளையாய், யாரும் அப்படிச் செய்யவில்லை! இப்படி, ஒரு நிம்மதியுடன் நான் சி.வி.ராமன் முன்னிலையில் அந்த நூல்கட்டை வாங்கும்போது, திடீரென்று அவர் ஒரு கேள்வி கேட்டவுடன், எனக்குத் தடுமாறி விட்டது! அதே சமயம், அவரிடம் உண்மையை மறைத்த ஒரு குற்ற உணர்வும் என்னுள்ளே நிரந்தரமாய்க் குடி கொண்டது. “சரி, என்றாவது இதற்கு ஒரு பரிகாரம் செய்வேன்” என்று உறுதியுடன் இருந்தேன்.

காலம் கழிந்தது. நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட ராமன் அவர்களைப் பற்றி ஒரு துணுக்கைப் படித்தேன். அதை ஒரு கவிதையாக வடித்தேன்.

ராமன் என்னை மன்னிப்பாராக! 
ராமன் விளைவு
பசுபதி
பார்புகழ் நோபல் பரிசுவென்று, பாரதத்தில்
பேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்.
விருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்;
அருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும்.
மதுக்கிண்ணம் பார்த்ததுமே மறுத்துவிட்டார் ராமன் !
'இதற்கென்ன காரணம்?' என்றவர்க்(கு) உரைத்தார்:
"ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்;
ஸோமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று!"
ராமன் விளைவு= Raman Effect 

பின்குறிப்பு:

1)
இந்தப் படத்தில் என்னை  அந்த விழாவில் அறிமுகம் செய்பவர் பேராசிரியர் சம்பத்.  எங்கள் மின்னியல் துறையின் தலைவர். பிறகு ஐ.ஐ.டி ( மதராஸ், கான்பூர்) டைரக்டராகவும் பணிபுரிந்தவர். அண்மையில் அவருடைய மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலரும் பணம் சேகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சியால்,   அவர் பெயரில் ஒரு பேராசிரியர் ஐ.ஐ.டி -யில் விரைவில் நியமிக்கப் படுவார். இப்படி எங்களுக்கு ஆசிரியர்களாய்ப் பணி புரிந்த பேராசிரியர் பலரையும் கௌரவிக்க வேண்டும் என்பது எங்கள் அவா. 


2) தற்செயலாய்,  நவம்பர் 1, 2016 “ நியூ இண்டியன் எக்ஸ்ப்ரெஸ்’ இதழ் இந்தப் பட்டமளிப்பு விழாவைப் பற்றி எழுதி , நான் பரிசு வாங்கும் படத்தையும் வெளியிட்டிருக்கிறது !. 

2 கருத்துகள்:

Sundaresa Venkatraman சொன்னது…

Avar Engo Naan Engo
Engalukkul Otrumai Peyarodu Mudigiradu
Aanmaavodu Ondraagiradu
Iduvandri Veraedum Ariyaen Paraaparamae!

Unknown சொன்னது…

நன்றி அய்யா பேராசிரியர் அவர்களே

இராமன் எத்தகை இராமனடி
இராமன் சூரிய வமசம்
இராமன் விளைவும் சூரியனே
இளைஞர் இவரை மறந்துவிட
விளைவு தெரியாமல் ஆளுகிறார்
விளைவு இராமன் திரையிலே