திங்கள், 26 நவம்பர், 2012

'சாவி - 7 : ‘அநுமார்' சாமியார்

’அநுமார்' சாமியார்
 சாவி

                                       ஆலம் விழுதுபோல் சடை சடையாகத் தொங்கும் பரட்டைத் தலைமயிர். கையிலே ஒரு பை; இடுப்பிலே காவி வேட்டி. தாடியும் புருவமும் போக நெற்றியிலே உள்ள இடைவெளி முழுதையும் பட்டை நாமம் மூடி மறைத்துக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட ஓர் ஆசாமியை எங்கோ பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அவர்தான் அநுமார் சாமியார்!

அவருக்கு என்ன வயசோ, எந்த ஊரோ, என்ன பேரோ, எங்கே பிறந்து எங்கு வளர்ந்தவரோ?--யாருக்குமே எந்த விவரமுமே தெரியாது.

[ அசல்: கோபுலு, நகல்: சு.ரவி ] 

                                  

அவர் தெருவில் நடந்து சென்றால், ''டேய், அநுமார் சாமியாருடா!'' என்று பத்துப் பிள்ளைகளாவது அவர் பின்னோடு நடந்து செல்வார்கள்.

அநுமார் சாமியார் பாட்டு பாடிக்கொண்டே நடப்பார். ஆனால், பிச்சை எடுக்கமாட்டார். பார்ப்பதற்குப் பைத்தியக்காரரைப்போல் காணப்படுவார். ஆனால், அவர் பைத்தியக்காரர் அல்ல.

ஊர் ஊராகப் போய், சுவர் சுவராக அநுமார் படம் எழுதுவதுதான் அவருடைய வேலை, லட்சியம் எல்லாம். அவருடைய பையில் என்னென்னவோ இருக்கும். காவிக் கற்கள், உற்சவ நோட்டீசுகள், ஒரு பித்தளைச் செம்பு, கிழிசல் கம்பளி, வேர்க்கடலை, நாமக்கட்டி --இவைதான் அவருடைய ஆஸ்தி. பகலெல்லாம் சுற்றிவிட்டு இரவில் ஏதாவது ஒரு மரத்தின் கீழோ, சத்திரத்துத் திண்ணையிலோ போய்ப் படுத்துக்கொள்வார். அதுவும் இஷ்டமிருந்தால்தான். இல்லையென்றால் அதுவும் இல்லைதான். இந்த உலகத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் 'தாமரை இலைத் தண்ணீர்போல்' வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு துறவி அவர்.


[ ஓவியம்: நடனம் ]


பொழுது விடியும் முன்பே ஆற்றிலோ, குளத்திலோ இறங்கித் தலை முழுகிவிட்டு அந்த நாலுமுழக் காவித் துண்டையும் துவைத்து உலர்த்திக் கட்டிக்கொண்டு பரந்த நெற்றி முழுதும் பட்டை நாமத்தைக் குழைத்துப் போட்டுக் கொள்வார்.

பிறகு, ஊருக்குள் சென்று ஏதாவது ஒரு கிளப்புக்குள் நுழைந்து, ''ஆண்டவனே, இந்தக் கட்டைக்கு என்ன கொடுக்கிறீங்க?'' என்று கேட்பார். இரண்டு இட்டிலியும் ஒரு கப் டீயும்தான் அவருடைய காலை ஆகாரம் என்பது கிளப்புக்காரர்களுக்குத் தெரியும்.

ஆகாரம் முடிந்ததும் அதற்குண்டான காசைக் கொடுத்துவிட்டு, கடைத்தெருப் பக்கம் கிளம்பிவிடுவார் சாமியார். போகும்போதே காலிச் சுவர் கண்ணில் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டுதான் போவார்.

பள்ளிக்கூடச் சுவர், கோயில் மதில் சுவர், முனிசிபாலிடிச் சுவர் இப்படி எத்தனை சுவர்கள் இல்லை? ஏதாவது ஒன்று அவருக்கு அகப்பட்டுவிடும். அவ்வளவுதான், பையிலுள்ள காவிக் கட்டிகளை எடுத்துத் தண்ணீரில் குழைத்துக் குச்சி மட்டையைக் கொண்டு சுவரில் அநுமார் சித்திரம் எழுத ஆரம்பித்துவிடுவார். அநுமார் சித்திரம் என்றால் அதில் எத்தனை எத்தனையோ வகை!

சஞ்சீவி பர்வதத்துடன் பறக்கும் அநுமார்!

விசுவ ரூப தரிசன அநுமார்.

சீதைக்குச் சூடாமணி அளிக்கும் அநுமார்.

இராவணனுக்கு எதிரில் வாலைக் கோட்டையாகக் கட்டி அதன்மீது உட்கார்ந்திருக்கும் அநுமார்.

இராம பட்டாபிஷேகத்தில் பயபக்தியுடன் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கும் அநுமார்.

சில சுவர்களில் காவிக் கட்டிகளால் சித்திரிப்பார். சில சுவர்களில் சிவப்பு வர்ணத்தைக் கொண்டே எழுதுவார்.

பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும், தெருவில் திரியும் சோம்பேறிச் சிறுவர்களும் அவர் எழுதும் அநுமார்  சித்திரத்தைக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படி, பகல் முழுதும் எழுதுவார். சில சமயங்களில் இரவில்கூட எழுதிக்கொண்டிருப்பார்.

இன்றைக்குத் திருப்பதி, நாளைக்கு நாமக்கல், அதற்கு மறுநாள் பழநி என்று மந்திரிகளைப்போல் வருஷம் முழுவதும் சுற்றுப்பயணந்தான் அநுமார் சாமிக்கு.

நடக்க முடியாவிட்டால்தான் பஸ்ஸில் ஏறுவார். பணம் கொடுத்து டிக்கெட்டு வாங்கிக்கொண்ட பிறகே பஸ்ஸுக்குள் ஏறுவார்.

''சாமியாரே, உங்களுக்கு எதுக்கு டிக்கட்?'' என்று கண்டக்டர் சொன்னபோதிலும் கேட்கமாட்டார்.

''அப்பனே! இந்தக் கட்டை யாருக்குப் பணம் சேர்த்து வைக்க வேணும்?''

''சாமியார் எதுவரைக்கும் போகணும்?'' என்றுதான் பக்தியோடு கேட்பார்கள். அவருக்கு எந்த இடத்திலும் உபசாரந்தான். கோடைக்காலம் வந்தால்தான் அவர் ஓரிடத்தில் தங்குவார்.

       நாலு சாலைகள் கூடும் சந்திப்பிலோ, சந்தைகள் கூடுமிடத்திலோ, உற்சவம் நடைபெறும் இடங்களிலோ, அநுமார் சாமியார் 'தண்ணீர்ப் பந்தல்' போட்டுவிடுவார். பந்தலுக்கு முன்னால் 'அநுமார் தர்ம கைங்கரியம்' என்று எழுதியிருக்கும்.

ஒரு சிறு தென்னங்கீற்றுப் பந்தல், அதற்குள்ளே நீர்மோர், பானகம் இரண்டையும் பானைகளில் நிரப்பி வைத்துக் கொண்டு, ஏழை எளியோருக்கு வழங்குவார்.

தர்ம கைங்கரியத்துக்கு வேண்டிய பொருளுக்கும் பணத்துக்கும் அவர் யாரையும் தேடிச் செல்லமாட்டார். அவ்வளவும் அவரைத் தேடியே வரும்.

பைக்குள் செப்பு அநுமார் கவசங்கள் நிறைய வைத்திருப்பார். சிறு குழந்தைகளைக் கண்டால் அந்தக் கவசத்தில் ஒன்றை எடுத்து அரைஞாணில் கட்டிவிடுவார்.

அந்த நேரங்களில் குழந்தைகள் அவரைப் பூச்சாண்டி என நினைத்து அலறும்.

''அப்பனே, ஆண்டவா, அழாதே'' என்று அன்போடு கூறுவார் சாமியார்.

கோயில்களில் கிடைக்கும் பிரசாதந்தான் அவருக்கு ஆகாரம்.

ஊருக்கு ஓர் அநுமார் கோயில் கட்டிவிடவேண்டுமென்பது அவர் ஆசை.

சாமியார், அநுமார் சித்திரம் போட்டுக்கொண்டிருக்கும் போது சாலை வழியே போகும் படித்த அறிவாளிகளில் சிலர், ''இது ஒரு மாதிரிப் பைத்தியம். எந்தச் சுவரைக் கண்டாலும் அநுமார் படம் எழுதிக்கொண்டிருக்கும்'' என்பார்கள். அவர்களிலேயே வேறு சிலர், ''கண்ட கண்ட ஆபாச வார்த்தைகளை எழுதிச் சுவர்களைப் பாழாக்கும் பைத்தியங்களைக் காட்டிலும் இந்தப் பைத்தியம் எவ்வளவோமேல்'' என்று அதற்குப் பதில் கூறுவார்கள்.

 [நன்றி : ‘சாவி’யின் ‘கேரக்டர்’ நூல்  ]

பி.கு.

ஆசுகவி சிவசூரியின் மறுமொழி:

அநுமார் சாமியார்

சாவியின் எழுத்தினை எடுத்ததும் -ஒரு
   சாமி யாரினைப் படித்ததும்
ஆவியை என்னவோ செய்ததும் - ஒரு
   ஆனந்தம் என்னுளே பெய்ததும் -நான்
கூவி அலறிட வேண்டினும் -அதைக்
   கொட்டிடக் கவிமகள் தூண்டினும் - ஒரு
ஓவியம் போலதைத் தீட்டினும் - பிறர்
   உணர்த்திட வழியது காட்டுமோ.


நாடெங்கும் நடந்ததைச் பேசுவார் - அவர்
   நாமத்தைப் பெரிதாய்ப் பூசுவார்
வீடெங்கும் அவர்க்கென நாட்டுவார் -அந்த
   வைகறைக் குளியலைக் காட்டுவார்
காடெனத் தொங்கிடும் சடையுடன் -அவர்
   காவி நிறமொளிர் உடையுடன்
கோடுகள் கிறுக்கிடும் போதிலே - அங்கு
   குடிகொள்ளும் இறைசுவர் மீதிலே.

ஆண்டியைப் போலொரு தோற்றமும் - நல்ல
   அரசனைப் போலொரு ஏற்றமும்
நீண்டு வளர்ந்ததோர் தாடியும் -பாதி
   மேனியை மறைத்தது மூடியும்
கூண்டைத் துறந்ததோர் பறவையென -ஒரு
   கோல முகத்துடைப் பிறவியென
யாண்டும் இருந்திடும் சாமியிவர் - இவர்
   யாரென அறியார் பூமியிலே.

கோடையில் விழியெதிர் பார்த்திட - அந்தக்
   குடிபடை உடல்மிக வேர்த்திட
ஓடையாய் தாகம் தீர்த்திட - இவர்
   உவப்புடன் நீர்மோர் வார்த்திட
ஆடையில் அரைத்துணி போர்த்திட -ஒரு
   ஆண்டவன் எனப்புவி ஆர்த்திட
வாடை மிகுமலர் தோற்றிடத் - திகழ்
   வடிவினை எப்படிப் போற்றிட!


சிவ சூரியநாராயணன்.


தொடர்புள்ள பதிவுகள்: 

சாவியின் படைப்புகள்


3 கருத்துகள்:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

வாசகர் பலர் விரும்பிய நூல். பாத்திரம். இல்ல நூலத்துள்ளது.

Siva Suryanarayanan சொன்னது…

அநுமார் சாமியார்

சாவியின் எழுத்தினை எடுத்ததும் -ஒரு
சாமி யாரினைப் படித்ததும்
ஆவியை என்னவோ செய்ததும் - ஒரு
ஆனந்தம் என்னுளே பெய்ததும் -நான்
கூவி அலறிட வேண்டினும் -அதைக்
கொட்டிடக் கவிமகள் தூண்டினும் - ஒரு
ஓவியம் போலதைத் தீட்டினும் - பிறர்
உணர்த்திட வழியது காட்டுமோ.


நாடெங்கும் நடந்ததைச் பேசுவார் - அவர்
நாமத்தைப் பெரிதாய்ப் பூசுவார்
வீடெங்கும் அவர்க்கென நாட்டுவார் -அந்த
வைகறைக் குளியலைக் காட்டுவார்
காடெனத் தொங்கிடும் சடையுடன் -அவர்
காவி நிறமொளிர் உடையுடன்
கோடுகள் கிறுக்கிடும் போதிலே - அங்கு
குடிகொள்ளும் இறைசுவர் மீதிலே.

ஆண்டியைப் போலொரு தோற்றமும் - நல்ல
அரசனைப் போலொரு ஏற்றமும்
நீண்டு வளர்ந்ததோர் தாடியும் -பாதி
மேனியை மறைத்தது மூடியும்
கூண்டைத் துறந்ததோர் பறவையென -ஒரு
கோல முகத்துடைப் பிறவியென
யாண்டும் இருந்திடும் சாமியிவர் - இவர்
யாரென அறியார் பூமியிலே.

கோடையில் விழியெதிர் பார்த்திட - அந்தக்
குடிபடை உடல்மிக வேர்த்திட
ஓடையாய் தாகம் தீர்த்திட - இவர்
உவப்புடன் நீர்மோர் வார்த்திட
ஆடையில் அரைத்துணி போர்த்திட -ஒரு
ஆண்டவன் எனப்புவி ஆர்த்திட
வாடை மிகுமலர் தோற்றிடத் - திகழ்
வடிவினை எப்படிப் போற்றிட!


சிவ சூரியநாராயணன்.


இன்னம்பூரான் சொன்னது…

எங்கள் பாக்கியம், சாவியின் கீ, கோபுலுவின் கைவண்ணம், கற்பனை, சு.ர. வின் அசல் போன்ற நகல்,சி.சூ. வின் கவிதை எல்லாம் அளிக்குறீர்கள், திரு.பசுபதி.
இன்னம்பூரான்