ஞாயிறு, 19 மே, 2013

திருப்புகழ் - 5

குராவடிக் குமரன் 
குருஜி ஏ.எஸ்.ராகவன் 


அண்மையில் ( 17 மே, 2013) காலமான குருஜி ஏ.எஸ்.ராகவன் அவர்களுக்கு நினைவஞ்சலியாக அவர் ‘கல்கி’ யில் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன். 2002-இல் அவர் ‘தலந்தோறும் தமிழ்க்கடவுள்’ என்ற தொடரைக் ‘கல்கி’யில் எழுதினார்; அத்தொடரில் வந்த ஒரு கட்டுரை இது. 

குருஜி ராகவன் கனடாவிற்கு 1988-இல் வந்தபோது  அவருக்கு டொராண்டோ திருப்புகழ் அன்பர்கள் கொடுத்த வரவேற்பில் நான் படித்த ஒரு கவிதை ( சில சிறு மாற்றங்களுடன்) :

திருப்புகழுக் கிசைசேர்த்த மாசாதகன்
  திருச்செந்தூர் தீரனே கதியென்பவன்
முருகனது புகழ்பரப்பும் பணியேற்றவன்
  மனமுருகப் பண்ணிசைக்கும் குணக்குன்றவன்
திருப்புகழ் அன்பர்களுக் குயிரானவன் 
  திருமுருக பக்தியே சாறானவன் 
அறுமுகன் புகழ்பாட அசராதவன் 
  ஆறுமுக மங்கலத்து ஸ்ரீராகவன்  

இதோ அவர் எழுதிய ஒரு கட்டுரை.


 மருக்கு லாவிய மலரணை கொதியாதே
   வளர்த்த தாய்தமர் வசையது பொழியாதே
  கருக்கு லாவிய அயலவர் பழியாதே
   கடப்ப மாலையை யினிவர விடவேணும்
  தருக்கு லாவிய கொடியிடை மணவாளா
   சமர்த்த னேமணி மரகத மயில்வீரா
  திருக்கு ராவடி நிழல்தனி லுறைவோனே
   திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே

  அருணகிரிநாதர் திருவிடைக்கழி முருகனைக் குறித்துப் பாடிய எட்டு திருப்புகழ் பாடல்களுள் மிகப் பரவலாக அறியப்படுவது மேற்படி பாடல்தான்.

  காமாக்கினிக்கு வசப்படாமல், பழிச் சொல்லுக்காளாகாமல், தாய் தந்தையரைத் தூற்றாமல்வாழ்ந்து சிறக்க திருமுருகனின் கருணையை வேண்டி நிற்கிறார் அருணகிரி நாதர்.

  கற்பகவிருக்ஷமான தேவ தருவின் நிழலில் வளர்ந்த கொடியிடையாளம் தேவசேனையின் மணாளனே!

  போர் புரிவதிலும் அதில் வெற்றி கண்டு தேவமங்கையின் கரம்பற்றுவதிலும் சமர்த்தனாயிருப்பவனே! மணி நிறத்தவனே! மரகத வண்ணமான பச்சைநீல மயில் மீது ஆரோகணித்து வரும் வீரனே! திருக்கு ராமரத்தின் நிழலில் உறைபவனே! திருக்கரத்தில் வேலாயுதம் தாங்கியவனே! என்று அழைத்து அழைத்து அருணகிரிநாதர் கேட்பது என்ன...?

  கடப்ப மாலையை யினிவர விடவேணும்!

 - இந்த வரியில்தான் இருக்கிறது திருவிடைக்கழி முருகனின் வரலாறு; இந்த வரியிலும் திருக்குராவடி நிழலிலும் ஒய்யாரமாய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு முருகன் கதை:

  சிவபெருமானுடைய சக்தி வெளிப்பாடுதான் முருகப் பெருமான் என்பது நாம் அறிவோம்.

  ஜோதி பிழம்பாக நின்ற சிவபரம் பொருள், தன்னிடமிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தது. அந்த ஆறு பொறிகள்தான் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்ட கந்தனாக உருவாகின.
இதைத்தான் கந்தபுராணம் சொல்கிறது.

  அருவமும் உருவும் ஆகி
     அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
  பிரமமாய் நின்ற சோதிப் 
   பிழம்பதோர் மேனியாகக்
  கருணை கூர் முகங்களாறும்
     கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
  ஒருதிருமுருகன் வந்தாங்
   குதித்தனன் உலகமுய்ய


  ஆகவே, சிவன் வேறு முருகன் வேறு அன்று. அருணகிரிநாதரும் இவ்விருவரிடையே வேறுபாடு கொள்ளாமல் வழிபட்டார்.

  சிவபெருமானே முருகனைக் குறித்து பார்வதியிடம் சிலாகிப்பதாகச் சொல்கிறது கந்தபுராணம்:

  ‘‘நமது சக்தி ஆறுமுகன்’’ என்று எடுத்துச் சொல்லி, ‘‘ஏதமில் குழவி போல்வான், யாவையும் உணர்ந்தான், சீரும் போதமும் அழிவில் வீடும், போற்றினர்க் கருளவல்லான்’’ என்று உறுதியளிக்கிறார்.

  முருகப் பெருமான் இவ்வாறு சிவனால் அருளப்பெற்றவன் என்பதையும் சிவ ஸ்வரூபமே அவன் என்பதையும் உணர்த்துகிற திருத்தலம் திருவிடைக்கழி.

  சூரபத்மனின் மகனான இரண்யாசுரனை திருவிடைக்கழியில்தான் சம்ஹாரம் செய்தான் முருகன். அந்த சம்ஹார தோஷம் நீங்குவதற்காக, இத்தலத்திலுள்ள குராமரத்தின் நிழலில் சிவபெருமானுக்கு ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டான். சிவபெருமானும் அவனுடைய தோஷத்தை நீக்கி ஆட்கொண்டதோடுஅவ்விடத்தில் முருகன் தன்னுடைய ஸ்வரூபத்தையே பெற்று விளங்கும்படிச் செய்தாராம்! சிவஸ்வரூபமாக முருகனே இருக்கையில் தமக்கு அங்கு வேலை இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டாராம்!

  அதனால்தான் இந்த ஊரின் முருகன் கோயில் சிவாலய அமைப்பிலேயே இருக்கிறது. பிராகார அமைப்புகளைக் கவனித்துப் பார்த்தால் சோமாஸ்கந்தமூர்த்தி இருக்க வேண்டிய இடத்தில் வள்ளி-தேவசேனா சமேதராக முருகனே இருக்கிறார்! நடராஜர் சன்னிதி இருக்க வேண்டிய இடத்தில் _ சபா மண்டபத்தில் _ குமரப் பெருமான் இடது கையில் வில்லும் வலக் கரத்தில் வேலும் ஏந்தி நிற்கிறான்!

  இத்தலத்தில் திருக்குராவடி நிழலில் சிவலிங்கத்தை பூஜித்தபடி காணக்கிடைக்கிறான் முருகன். சம்ஹாரமூர்த்தியாயிருந்தபோது அணிந்த கடப்ப மாலையைக் களைந்து, குரா மலர்களாலான மாலையை முருகன் அணிந்த தலம் இது (கடப்ப மாலையை இனி விட வரவேணும்)

  பிரதான மூர்த்தியாக கருவறையில் குமார சிவமாக, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறான் பாலசுப்ரமணியன். அவனுக்கு முன்னே ஸ்படிக லிங்க வடிவிலும் பின் புறத்தில் லிங்க உருவமாகவும் பாபநாசப் பெருமான் என்ற பெயருடன் சிவபெருமான் கோலோச்சுகிறார்!

  நாகை மாவட்டம் திருக்கடவூர் அருகே தில்லையாடி என்ற ஊர் இருக்கிறது. சுதந்தரப் போராட்ட வீராங்கனை வள்ளியம்மையின் ஊர்தான்! இந்த ஊருக்கு வெகு அருகில் இருக்கிறது திருவிடைக்கழி.
மகிழாரண்யம், மகிழ்வளங்குடி என்ற மங்களமான பெயர்களும் திருவிடைக்கழிக்கு உண்டு. நாகதலம் என்பது மற்றும் ஒரு பெயர்! சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற குராப்பள்ளி என்ற ஊர் இவ்வூர்தான்.

  தொன்மைச் சிறப்புடைய இவ்வூரில் திருமால், பிரும்மா வசிஷ்டர் தவிர முசுகுந்த சக்கரவர்த்தியும் வழிபட்டிருக்கிறார். சுமார் ஆயிரத்திருநூறு ஆண்டுகளுக்கு முன் முசுகுந்த மன்னர் பல திருப்பணிகளை இங்கு நடத்திக் காட்டியிருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் பிராகாரத்தில் கல்வெட்டில் காணக் கிடைக்கின்றன.

  கிழக்கு நோக்கிய ஆலயம் அதை எதிர்நோக்கி ஐந்நூற்று வினாயகர் என்ற பிள்ளையார் கோயில் இருக்கிறது.

  வெளிப்பிராகாரத்தில் திருகாமேஸ்வரர்என்ற பெயருடன் சிவன் இருக்கிறார்.


  மூலஸ்தானத்தில் சிவ வடிவமாக நின்று அருள் செய்யும் பாலசுப்ரமண்யன் அழகுக்கு இலக்கணமாய் அமைந்து நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறான். நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய ஒரு முகம், இரு கரங்கள். வலது கரம் அபயமருளும் முத்திரை காட்ட, இடது கை இடுப்பில் பொருந்தியிருக்கிறது. திருப்பாதங்களில் வீரக் கழல்கள் மின்ன, விபூதி காப்பணிந்த எளிய அலங்காரமாயினும் சரி, விதவித ஆபரணங்கள் பூட்டிய ராஜ அலங்காரமாயினும் சரி... முருகனின் மறு பெயர் அழகுஎன்று நினைவூட்டி நிற்கிறான்.

  பதினோரு பாடல்கள் கொண்ட திருவிசைப்பா என்னும் பதிகத்தில் சேந்தனார் என்ற புலவர், இந்த பால முருகனை திருக்குரா நிழற்கீழ் நின்ற எழுங்கதிர்என்று உதய சூரியனின் பொலிவுடையவனாகப் பாடியிருக்கிறார்! பன்னிரு திருமுறைகளிலும் பாடப் பெற்றுள்ள தலம் திருவிடைக்கழி.

  வெளிப்பிராகாரத்தில் தெற்கு நோக்கிய மண்டபத்துக்கு வருவோம். இங்கே அந்த முருகனின் க்ரியாசக்தி அம்சமான தெய்வயானை, அவன் அழகில் மயங்கி நாணத்துடன் சற்று வலப்புறம் தலை சாய்த்து அவன் திருவுருவைக் கடைக்கண்ணால் நோக்கும் பாவனையில் நிற்கிறாள்.

  வசிஷ்டர் பூஜித்த வசிஷ்ட லிங்கம், சிவ சண்டேஸ்வரர், குஹ சண்டேஸ்வரர் என்று இரு சண்டேஸ்வரர் சன்னிதிகள் ஆகியவை இக் கோயிலின் தனிச் சிறப்புகள்.

  குராமர நிழலில் உள்ள பலிபீடத்துக்குத் தினமும் அர்த்த ஜாம ஆராதனை நடைபெறுகிறது.

  அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறையில் பேராசிரியராக இருந்தவர் திருமங்கலமுடையார். இவர் தம்மைத் திருவிடைக்கழி முருகனிடம் அர்ப்பணித்து இத்தலத்தின் பெருமை திசையெங்கும் பரவுவதற்கு நிறைய உழைத்தார். முன்னின்று நிதி திரட்டி ஏழு நிலை ராஜ கோபுரம் அமைத்தார்.

இன்றும் அடியார்கள் பலரை தன் அழகிலும் அருளிலும் கட்டிப்போட்டுக் கொண்டுதான் இருக்கிறான் முருகன். அந்த கருணையில் கட்டுண்டு எழில் தோற்றத்தில் மயங்கி நாம் அவனிடம் எதுவும் கேட்க மறந்து நிற்போம் என்பதை அறிந்துதானோ என்னவோ, அருணகிரிநாதர் என்னென்ன கேட்கலாம் என்பதை அன்றே வரிசைப் படுத்திவிட்டுப் போயிருக்கிறார்:

  பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
   பயனு மெப்படிப்    பலவாழ்வும்
  பழைய முத்தியிற் பதமு நட்புறப்
   பரவு கற்பகத்     தருவாழ்வும்
  புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
   பொலியும் அற்புதப்  பெருவாழ்வும்
  புலன கற்றிடப் பலவி தத்தினைப்
   புகழ்ப லத்தினைத்  தரவேணும்

  அற்புதப் பெருவாழ்வை வேண்டுகிறவர், தவப் பயனைத் தா என்று கேட்கிறவர் முத்தமிழின் பொருளும் வரமருளக் கேட்கிறார் என்றால் அந்தத் தமிழின் உயர்வை நாம் எத்தகையதாகக் கொள்வது! முக்தி நிலைக்கு நிகராக மொழிச் சிறப்பைச் சொல்லியிருப்பது அம் மொழியை ஆன்ம சிந்தனையின் வாகனமாக அவர் கருதுவதையே காட்டுகிறது. தமிழ்க் கடவுளுக்கும் தமிழ் மொழிக்கும் திருவிடைக்கழியில் அருணகிரிநாதர் செய்த சிறப்பை எண்ணி வியந்தபடி அந்த அழகு முருகனை வலம் வருவோம்.

4 கருத்துகள்:

Umashankari Venkataraman சொன்னது…

So beautiful...and so appropriate when we remember Guruji. Thank you.

Ramamoorthy Ramachandran சொன்னது…

திருப்புகழ் ராகவனார் மறைவுச் செய்தி அடியேன் மனத்தில் இடியாய் இறங்கியது. தில்லி உத்திர சுவாமிமலையில் பஜனைகேட்டுக் கண்ணீர் ததும்ப அடியேனும் புலவர்கீரனும் நெகிழ்ந்த நினைவு நிழலாடுகிறது.
முருகனை எண்ணி எண்ணி முறையாகப் பாடிப்பாடி
குருவென அடியார் நெஞ்சில் குடிகொண்ட ராகவன்ஜி
திருவடி யடைந்தார்! அங்கே, சிவனுமை மடியில் அய்யன்
மருவியே பாடல்கேட்டு மகிழ்கிறான் மனத்தில் காண்பீர்!

மயிலின்மே லேறும் தேவன் வள்ளியோ டிணைந்து வந்தே
பயிலும்தன் புகழைப் பாடும் ''பக்தர்கள் திலகம்'' எங்கள்
உயிரெனும் குருஜிமேனி உதிரவே அவரை வாரிக்
கயிலைக்கே அழைத்துச்செல்லக் கடைக்கணித் தருளினானே!

மூவிரு முகத்தான் சீரை மொழிந்திடும் குருஜிதம்மைத்
தாவடி மயிலில் வந்தே, தகுந்திருப் புகழைக் கேட்டே
தேவர்க்கும் வழங்க எண்ணிச் சீக்கிரம் அழைத்துக் கொண்டான்
ஆவலில் அவரும் சேவ லாகியே கூவு கின்றார்!

ஆழ் மனத்து அஞ்சலிகள் இழந்துவாடும் அன்பர்களுக்கு இறைவனே ஆறுதல் தர வேணும் -புலவர் இராமமூர்த்தி

Pas Pasupathy சொன்னது…

உருக்கமான கவிதைக்கு நன்றி, புலவரே!

Senthil Kumar சொன்னது…

Thank u

கருத்துரையிடுக