புதன், 6 ஏப்ரல், 2016

மீனாட்சிசுந்தரம் பிள்ளை -1

சாலப் பெரிய ஆசிரியர் பிரான்!
ம.வே. பசுபதி


ஏப்ரல் 6. இன்று மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் 201-ஆவது பிறந்த நாள்.


தமிழறிஞர் ம.வே.பசுபதி தினமணியில் ஏப்ரல் 2015 -இல் எழுதிய கட்டுரை இதோ! 
========

அழகோ அழகு; அவ்வளவு பேரழகு, தான் பெற்றெடுத்த தகத்தகாயத் தங்கக் குழந்தைகள்! அந்தக் குழந்தைகளைச் சற்றும் தயக்கமின்றி முழு மனதுடன், பெற்றெடுத்த பெருமகனாரே தானமாகக் கொடுத்துவிட்டாரென்றால் அந்த அதிசய மனிதரைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

கற்பனைகள், வர்ணனைகள், நீதிகள், நியதிகள் என அனைத்தும் கருக்கொண்டு, சொற்கட்கு இலக்கண அமைதிகளுடன் உருக்கொண்டு, ஓர் இலக்கியம் வெளிப்படுவது மகப்பேற்றுக்கு ஒப்பானது. சொல்லணி, பொருளணிகளை அணிவித்துத் தன் படைப்பைக் காணும் கவிஞனின் நிலை, நல்ல தாய் அடையும் மகிழ்ச்சியைக் காட்டிலும் நல்லதாய் அமையும்.

காரணம் தாய் பெறும் குழந்தை பிரம்மப் படைப்பு; அதற்கு ஆயுள் வரையறை உண்டு. கவிஞனின் இலக்கியக் குழந்தை கலைமகள் படைப்பு; அதற்கு ஆயுள் வரையறை இல்லை; அழிவதில்லை. "மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வதுபோல் மாயா; புகழ் கொண்டு மற்றுஇவர் செய்யும் உடம்பு' - என்பது குமரகுருபரரின் திருவாக்கு.

குசேலோபாக்கியானம், சூதசம்ஹிதை என்னும் மொழிபெயர்ப்பு இலக்கியப் படைப்புகளை உருவாக்கி, "இவற்றை உங்கள் பெயரில் வெளியிட்டுக் கொள்ளுங்கள்' என்று வல்லூர் தேவராசப் பிள்ளைக்குக் கொடுத்தவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. வல்லூரார் "வேண்டாம்' என மறுத்தார். மகாவித்துவான் வற்புறுத்தித் திணித்தார்.

மகாவித்துவான் எப்பொழுது இந்த இலக்கியக் கொடை கொடுத்தார் என்பதிலும் ஒரு நுட்பம் இருக்கிறது. வல்லூர் தேவராசப் பிள்ளையின் அழைப்பின்பேரில் மகாவித்துவான் பெங்களூருக்குச் சென்று சில காலம் தங்கியிருந்து அவருக்கும் பிறருக்கும் சில நூல்களைப் பாடம் சொன்னார்.

பின்னர் திருச்சிக்கு மீள் பயணம் மேற்கொண்ட நாளில், மகாவித்துவானைப் பிரிய மனமின்றித் தவித்த தேவராசர், மரியாதை நிமித்தமாக ஐயாயிரம் ரூபாய் காணிக்கை செய்தார். அன்றைய ஐயாயிரம் இன்றைய கோடிக்குச் சமமென்றே சொல்லலாம்.

நமக்கு இவ்வளவு அதிகமான செல்வமா என மகாவித்துவானின் மனம் மறுதலித்தது. "காணிக்கை' என்று சொல்லிக் கொடுத்துவிட்டதால் மறுக்க முடியவில்லை! அதனினும் மேலான குருவின் வாழ்த்தளிப்பாக, இலக்கியங்களை வழங்கினார். மகாவித்துவானே வென்றார்.

தமிழில் 11,661 செய்யுள்கள் செய்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பரே. அவற்றில் 1,293 பாடல்களை "மிகைப்பாடல்கள்' என்று தனிமைப்படுத்துவதும் உண்டு. அப்படி ஒதுக்கினாலும் 10,368 பாடல்கள் கம்பர் இயற்றியவையே என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

தமிழில் நூறாயிரம் செய்யுள்கள் செய்தவர் மகாவித்துவான். இதனால் இவரைப் பத்துக் கம்பர் என்று குறிப்பிடலாம். இதுவரை அச்சில் வெளிவந்துள்ள மகாவித்துவானின் பிரபந்தங்கள், புராணங்கள், சரித்திரச் செய்யுள் நூல்கள் முதலியன மொத்தம் 75.

மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு நேரம் காலமே கிடையாது. எந்த நேரத்திலும் எந்தப் பணியின் ஊடேயும் பாட போதனை நடைபெறும். நள்ளிரவில் மாணவர்களை அழைத்து "திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி'யைப் பாடம் சொன்ன வரலாறும் உண்டு.

வெளியூர்களில் இருக்கும்போது மாலை, இரவு நேரங்களில் அரங்கேற்றம் செய்வார். அன்றைய நாள் காலையில் இயற்றிய கவிதைகளை அவையினர் முன்னே சொல்லி நயங்களுடன் விளக்குவார். மகாவித்துவான் பத்துப் பதினைந்து நாள்கள் ஓர் ஊரில் தங்கினாரென்றால் ஆயிரம் பாடல்களுக்கு மேற்பட்டதான ஒரு தலபுராணம் உருவாகியிருக்கும். அல்லது சில சிற்றிலக்கியங்கள் உருவாகியிருக்கும்.

அவர், கவிதைகளை அதிவேகமாகவும் சொல்வதுண்டு. பல மணி நேரம் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பாடல்களைச் சொல்வதும் உண்டு. சொல்லச் சொல்ல எழுதுவதையே தொழிலாகக் கொண்ட சிலர் அக்காலத்தில் இருந்தனர். அவர்களை ஏடெழுதுவோர் அல்லது கையேட்டுப் பிள்ளை என்பர்.

ஓர் அவசரத் தேவைக்காக மகாவித்துவான் சொல்லும் பாடல்களை ஏட்டில் எழுத ஒருவர் நியமிக்கப்பட்டார். தன் தொழில் திறமையின் பேரில் அளவுக்கதிகமான நம்பிக்கை கொண்டவர் அவர். அதனால் அவரிடம் ஆணவப் பேச்சும் உண்டு.

"என் கை வலிக்கும்படி விரைவாகவும் அதிகமாகவும் கவிதை சொன்னவர் எவரும் இலர்' என்று ஒருநாள் அதிகாலையில் மகாவித்துவானின் மாணவர்களிடம் அவர் கூறினார்.

அன்று காலை ஏழு மணிக்கு மகாவித்துவான், நாகைக் காரோணப் புராணம் சுந்தர விடங்கப் படலக் கவிதைகள் சொல்லத் தொடங்கினார். கற்பனைச் சூறாவளிகளுடன் கவிமழை கனமழையாகப் பொழிந்தது. பகல் பத்து மணிக்குள் நீராடிப் பூசைக்குப் போவதை வழக்கமாகக் கொண்ட அவர், அன்றைக்குக் கவிதையில் ஒன்றிக் காலத்தை மறந்தார்.

பதினொரு மணியளவில், ஏடெழுதுபவரின் வலக்கரத்தில் ரத்தம் கட்டிவிட்டது. வலியைத் தன் மனவலிமையால் தாங்கிக் கொண்டு தவித்தபடியே எழுதினார். பன்னிரண்டு மணி ஆயிற்று. மகாவித்துவான் கவி சொல்வதை நிறுத்தவில்லை. ஏடெழுதுவோரின் தாங்கும் சக்தி விடைபெற்றுக் கொண்டது. எழுத்தாணியைக் கீழே வைத்தார். ஓலைகளை அடுக்கிக் கட்டி வைத்தார். மகாவித்துவானின் திருவடிகளில் விழுந்து வணங்கி "இனி என்னால் ஆகாது; என் ஆணவம் அடங்கிப் போயிற்று' என்று அலறினார்.

இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட கவிஞர்களும் தமிழறிஞர்களும், "கவி சொல்ல வல்ல நல்வித்தை' என்னும் சகலகலாவல்லிமாலையின் தொடருக்கு மகாவித்துவானே உரிய உதாரணம் என்று கைகூப்பித் தொழுதனர்.

பணம் பெற்றுக்கொண்டு பாடம் சொல்லிக்கொடுக்கும் பழக்கம் இவரிடமில்லை. தன்னிடம் தமிழ்ப் படிக்க வந்த ஏழைகளுக்கு உணவு, உறைவிடம் அளித்து நுண்ணறிவுத் தமிழ்ப் புலமை கொடுத்த தனிப்பெரும் புலமைக் கொடையாளி இவரே. கவிதைகள் பாடிச் சன்மானமாகப் பெற்ற செல்வங்களைச் சேகரித்து வைத்து மயிலாடுதுறையில் தொள்ளாயிரம் ரூபாயில் இரண்டுகட்டு வீடு வாங்கி, மாணவர்கள் தங்கிப் படிக்க வசதி செய்து கொடுத்த கருணையாளர் இவர்.

அக்காலப் புலவர்களுக்கே உரிய வறுமையை ருசிக்கவும் செய்தார்; தமக்குக் கிட்டிய வளங்களைத் தமிழார்வலர்களுக்குச் செலவழித்து ரசிக்கவும் செய்தார்.

ஊடக வெளிச்சங்கள் இல்லாத அந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் "மகாவித்துவான், இந்தியா' என்று மட்டும் முகவரி எழுதி லண்டனில் அஞ்சல் செய்யப்பட்ட கடிதம் மயிலாடுதுறையில் இருந்த இவரிடம் வந்து சேர்ந்ததென்றால், "இவரின் மிகுபெரும் புலமைத் தென்றல் உலகின் பல பாகங்களிலிருந்தோர்க்கும் இதமளித்தது' என்பதுதானே பொருள்?

திருவாவடுதுறை ஆதீனம் இளைய பட்டம் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் நல்லாதரவு காரணமாகத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகரால் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக நியமிக்கப்பட்டவர் இவர். இவரின் அளப்பரும் கவியாற்றலுக்கும் தமிழ் கற்பிக்கும் தனிப்பெரும் திறனுக்குமாக இவருக்கு மேற்படி சன்னிதானம் "மகாவித்துவான்' என்னும் உச்சமான விருதை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

தக்கவருக்குத் தக்க காரணங்களால், தக்கதொரு பெரு நிறுவனம், தக்கதொரு பட்டத்தை வழங்கினால் மட்டுமே, அது அவரின் இயற்பெயரையும் தேவையற்றதாக்கி, என்றும் நிலைபெறும் என்பதற்கு மகாவித்துவானே சான்றானார். மகாவித்துவான் என்ற பட்டத்தைச் சொன்னால், திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்ற அவரின் திருப்பெயர் சொல்ல வேண்டிய தேவை எழுவதில்லையல்லவா?

மகாவித்துவான் படைப்புகளில் தமிழ்த் தொண்டுக்காகவே உருவாக்கிய பெருங்காப்பியப் படைப்பொன்றுண்டு. அப்படைப்பின் பெயர்தான் உ.வே.சா. தமிழ் இலக்கண, புராண, இதிகாச, சாத்திர, தோத்திர, கவித்துவம் ஆகிய அனைத்தியல்களிலும் நுண்மாண் நுழைபுலம் எய்துமாறு உத்தமதான புரத்து உத்தமரை உருவாக்கியவர் இவரே.

"மூலையிலே இருந்தாரை முன்றிற்

கழைப்பவரே

சாலப் பெரியரென் றுந்தீபற'

என்பதற்கேற்பச் சூரிய மூலையிலே உதித்த சுடர்க் கொழுந்தை, குன்றேறி ஒளிவிட வழிசெய்த "போதனைப் புனிதர்' மகாவித்துவானே ஆவார்.

தம் குருநாதரின் சரித்திரத்தை விரிவாக எழுதி வெளியிட்டும், அவரின் நாற்பத்திரண்டு கவிதைப் படைப்புகளை இரு தொகுதிகளாக வெளியிட்டும் அவருக்குப் புகழஞ்சலி செய்த நன்மாணாக்கரும் உ.வே.சா.வே.

உ.வே.சாமிநாதய்யருக்கு மிகப் பிடித்த பேச்சு என்றால் மகாவித்துவானைப் புகழ்வதே. உ.வே.சா. பெற்ற புகழில் பெரும் பங்கு இந்த ஆசிரியப் பிரானின் திருவடிகட்கே உரியன.

இன்று நாம் மகாவித்துவானைப் பற்றிப் பேசுகிறோம், தெரிந்து வைத்திருக்கிறோம் என்று சொன்னால் அதற்குக் காரணமும் அவரது மாணாக்கர் உ.வே.சா தான். "தமிழ்த் தாத்தா' தனது குருநாதர் "மகாவித்துவான்' மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம் எழுதிப் பதிவு செய்திருக்காவிட்டால், நாம் அந்த மாமேதையைப் பற்றித் தெரிந்திருப்போமா என்பதே சந்தேகம்தான்.

ஆசிரியர்களால் மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் உருவாக்கும் மாணவர்களால்தான் ஆசிரியர்கள் அறியப்படுகிறார்கள். இதற்கு மகாவித்துவானும் அவர் உருவாக்கிய மாணவரும்தான் எடுத்துக்காட்டு!
( கட்டுரையாளர்: முன்னாள் முதல்வர், திருப்பனந்தாள் தமிழ்க் கலைக் கல்லூரி.) 

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக