சனி, 2 ஏப்ரல், 2016

வ.வே.சு.ஐயர் - 1

தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர்
 பெ.சு.மணி

ஏப்ரல் 2. வ.வே.சு. ஐயரின் பிறந்த தினம்.

தமிழறிஞர் பெ.சு.மணி தினமணியில் அவரைப் பற்றி  2009-இல் எழுதிய கட்டுரை இதோ:
================

வரகனேரி வேங்கடேச சுப்பிரமண்ய ஐயர் எனும் பெயரின் சுருக்கமான வ.வே.சு.ஐயர், கரூர் அருகில் உள்ள சின்னாளப்பட்டி என்ற கிராமத்தில் 1881-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி, வேங்கடேச ஐயர்-காமாட்சி தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

  ஐயரின் தொடக்கக் கல்வி முதல் பட்டப் படிப்பு வரையில் திருச்சிராப்பள்ளியில் நிகழ்ந்தது. 1895-இல் "மெட்ரிகுலேஷன்' தேர்வில், மாநிலத்தில் ஐந்தாவது மாணவராகத் தேறினார்.

  1897-இல் அவருடைய அத்தைமகள் பாக்கியலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு புதல்விகளும், ஒரு புதல்வரும் பிறந்தனர்.

  1899-இல் வரலாறு, பொருளாதாரம், லத்தீன் ஆகிய பாடங்களை எடுத்து பி.ஏ., பட்டம் பெற்றார். லத்தீன் மொழியில் முதன்மைச் சிறப்பும் பெற்றார். 1902-இல் "பிளீடர்' என்னும் வக்கீல் தேர்வில் தேறினார். திருச்சியில் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாகத் தொழில் நடத்தினார்.

  வ.வே.சு.ஐயர், 1906-இல் பர்மா, ரங்கூனில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1907-இல் லண்டனில் "பாரிஸ்டர்' பட்ட மேற்படிப்பில் சேர்ந்தார். லண்டனில் அப்போது, ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா எனும் தேசபக்தர், இந்திய இளைஞர்களுக்காக நடத்தி வந்த "இந்தியா ஹவுஸ்' எனும் விடுதியில் சேர்ந்தார். அங்கு புரட்சி வீரர், வீரசாவர்க்காரைச் சந்தித்தார். இந்திய தேசியப் புரட்சி வீரரானார். சாவர்க்காரின் வலக்கரமாகப் புகழ்பெற்றார். ராஜவிசுவாச வாழ்த்துப் பாட மறுத்து, பாரிஸ்டர் பட்டத்தையும் துறந்தார். லண்டன், பாரீஸ், பெர்லினில் இயங்கிய இந்திய தேசிய புரட்சி வீரர்கள் குழுவில் இணைந்தார். புரட்சித்தாய் காமா அம்மையாரின் நட்புறவைப் பெற்றார்.

  லண்டனில் முப்பது மாதங்கள் வாழ்ந்த காலத்தில் வ.வே.சு.ஐயரின் அரசியல் இலக்கியத் தொண்டுகள் மலர்ச்சியுற்றன. 1908-இல் லண்டன் ஹைகேட் யூனிடேரியன் சர்ச்சில் முதன்முதலாக கம்பராமாயணச் சொற்பொழிவாற்றினார். இந்த ஆங்கிலச் சொற்பொழிவு, லண்டனில் இருந்து வெளிவந்த "ஸ்வராஜ்' (ஆசிரியர் பிபின் சந்திரபால்) பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

  தமிழில் அவருடைய எழுத்தும் பணியும் லண்டனில் தொடங்கியது. 1909-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி, புதுச்சேரியில் இருந்து வெளிவந்த "இந்தியா' (ஆசிரியர் பாரதியார்) இதழில், ஜுúஸ கரிபால்டி சரித்திரம் என்ற கட்டுரைத் தொடரை எழுதினார் வ.வே.சு.ஐயர்.

  இதைத்தொடர்ந்து 1909 ஜூன் 5-ஆம் தேதி இந்தியா இதழில், ""ழான் ழாக் ரூசோ எழுதிய ஜனசமூக ஒப்பந்தம்'' எனும் தலைப்பில் எழுதப்பட்ட வ.வே.சு.ஐயரின் தமிழாக்கக் கட்டுரைத்தொடர் வெளிவரத் தொடங்கியது. இக்கட்டுரை வ.வே.சு.ஐயரை மொழிபெயர்ப்பாளராக முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.

  வ.வே.சு.ஐயரின் எழுத்துலகப் பயணம் பாரதியாரின் "இந்தியா'வில் மேலும் தொடர்ந்தது. "இந்தியா'வில் 1908 நவம்பர் 28 முதல் வ.வே.சு.ஐயர் எழுதிய "லண்டன் கடிதங்கள்' வெளிவரத்தொடங்கின.

  1910-இல் ஐயர் புதுவையில் வசிக்கத் தொடங்கினார். புதுச்சேரி வாழ்க்கையில் அவருடைய அரசியல், இலக்கியப் பணிகள் தொடர்ந்தன. 1919-இல் இந்திய தேசிய அரசியலில் காந்தியுகம் தோன்றியதும், அதன் ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டு வன்முறைப் புரட்சி அரசியலைக் கைவிட்டு, காந்தியத்தைத் தழுவி, காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றார்.

  வ.வே.சு.ஐயரின் தொடக்க கால எழுத்துப் பணியில் லண்டன் கடிதங்கள் குறிப்பிடத்தக்கன. பெரும்பாலும் "பாரதப்பிரியன்' எனும் பெயரில் எழுதி வந்தார். தேசிய-சர்வதேசிய அரசியல் நடப்புகள், சமூகம், வரலாற்றுக் குறிப்புகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, தமிழக தேசிய மாவீரர்கள் பற்றிய செய்திகள் லண்டன் கடிதங்களில் வெளிவந்தன. "இந்தியா'வில் மட்டுமல்லாமல், புதுச்சேரி "சூரியோதயம்', "விஜயா' இதழ்களிலும் வ.வே.சு.ஐயரின் லண்டன் கடிதங்கள் வெளிவந்தன. பின்னாளில் அவர் 1924 அக்டோபரில் தொடங்கிய "பாலபாரதி' எனும் அருமையான இலக்கிய மாத இதழில், "ராஜகோபாலன் கடிதங்கள்' எனும் தலைப்பில் எழுதிய கடிதங்களும் பன்முகப்பார்வை கொண்டவை. ""அவர் எழுதிய "ராஜகோபாலன் கடிதங்கள்' என்பனவற்றிலும் அபூர்வமான கதைகள் உண்டு'' என்று நவ இலக்கிய மேதை புதுமைப்பித்தன் பாராட்டியுள்ளார்.

  சங்க இலக்கியம் முதல் பாரதி இலக்கியம் வரை கற்று, தமது இலக்கிய வாழ்க்கை மூலமாகத் தமிழ் மரபு செழிப்பதற்குப் பெரும் பங்களித்தார் ஐயர் அவர்கள். பழந்தமிழையும், நவீனத் தமிழையும் இணைத்தார்.

  பாரதியார், வ.உ.சி. ஆகியோரைக் காட்டிலும் தமது படைப்புகளில் சங்க இலக்கியத்தை ஐயரே பெருமளவில் ஆண்டுள்ளார்.

  வ.வே.சு.ஐயர், தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் (1920), ""குறுந்தொகையிலும், கலித்தொகையிலும் சில செய்யுள்கள் தெரிந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாக'' குறிப்பிட்டுள்ளார்.

  1918-இல் வெளிவந்த "கவிதை' எனும் கட்டுரைதான் கவிதை பற்றிய விமர்சனத்துறைக்கு ஓர் ஆரம்பம் செய்து வைத்திருக்கிறது என்பதை திறனாய்வாளர் சி.சு.செல்லப்பா சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரிய ஒப்பியல் ஆய்வில் வ.வே.சு.ஐயர் சங்க இலக்கியமான "மலைபடுகடாம்' கவிதையை பிரெஞ்சு எழுத்தாளர் சேனாங்கூர், தாகூர், வேர்ட்ஸ்வர்த் ஆகியோரின் படைப்புகளுடன் ஒப்பிட்டு ஒப்பாய்வு செய்துள்ளார்.

  தொல்காப்பியம், சங்க இலக்கியம் கண்ட மூவேந்தர் மரபை, பாரதியார் போன்று வ.வே.சு.ஐயரும் நெஞ்சாரப் புகழ்ந்துள்ளார். வ.வே.சு.ஐயர் 1909 நவம்பர் 6-இல் "இந்தியா' இதழில் பாரத நாட்டின் பெருமைகளை விதந்தோதுமிடத்தில், ""சேரன், சோழன், பாண்டியன் புரந்தளித்த தாய்த் திருநாடு'' என்று சாற்றியுள்ளார். "மறுமலர்ச்சி' எனும் கட்டுரையில், ""சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலும் தமிழறிவானது, லெüகீக விஷயங்களாகட்டும், ஆத்யாத்ம விஷயங்களாகட்டும் கம்பீரமான வேலைகள் செய்திருக்கிறது''. தமிழ் தேசியமும், திராவிட தேசியமும் மூவேந்தர் மரபைப் போற்றிப் புகழ்வதற்கு முன்னோடியாக வ.வே.சு.ஐயர் திகழ்ந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.

  ""திருவள்ளுவரையும், கம்பரையும் வ.வே.சு.ஐயர் தமது வழிபடு தெய்வங்களாகவே கொண்டாடி வந்தாரென்று கொள்ளலாம்'' என்று ஐயருடன், தேசபக்தன் இதழில் பணியாற்றி, நெருங்கிப் பழகிய வெ.சாமிநாதசர்மா குறிப்பிட்டுள்ளார். குறள் நெறி பரப்பிய பணியில் வ.வே.சு.ஐயரின் மகத்தான சாதனை, அவர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்ததும், அதில் எழுதிய மிக நீண்ட ஆய்வு முன்னுரையும் ஆகும்.

  அதேபோல் முதல் பதிப்பு 1916-இல் வெளிவந்தது. சுப்பிரமணிய சிவா, பதிப்பாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது பதிப்பு 1925-இல் வெளிவந்தது. தமது நூல்களில் இடமறிந்து குறட்பாக்களை ஆள்வதில் பேரார்வம் செலுத்தியுள்ளார் வ.வே.சு.ஐயர்.

  1916-இல் புதுச்சேரியில் பதிப்பகம் ஒற்றை மண்டயம் எஸ்.சீனிவாசாசாரியாருடன் இணைந்து தோற்றுவித்தபொழுது, அதற்கு "கம்ப நிலையம்' என்று பெயரிட்டார். வ.வே.சு.ஐயர் கம்ப நிலையம் வெளியீடுகளில் ஒன்றாக 1917-இல் வெளிவந்த "கம்பராமாயணம் (சுருக்கம்) பாலகாண்டம்' எனும் பதிப்பு நூல், வ.வே.சு.ஐயரின் கம்பராமாயணத் தவத்தில் வெளிவந்த முதல் சாதனை நூலாகும். பாலகாண்டத்தின் 1399 பாடல்களில் 545 பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்தார் வ.வே.சு.ஐயர்.

  கம்ப நிலையம் சார்பில் வெளியிடப்பெற்ற வ.வே.சு.ஐயருடைய "மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்' எனும் நூல், வ.வே.சு.ஐயரை நவீன படைப்பிலக்கியம்-குறிப்பாக சிறுகதை இலக்கிய முன்னோடி என்று நிறுவியுள்ளது.

  1917-இல் வெளிவந்த முதற் பதிப்பில், "மங்கையர்க்கரசியின் காதல், காங்கேயன், கமல விஜயம், ழேன் ழக்கே, குளத்தங்கரை அரசமரம் ஆகிய ஐந்து சிறுகதைகள் உள்ளன. வ.வே.சு.ஐயர் மறைவுக்குப்பிறகு, லைலாமஜ்னுன், எதிரொலியாள், அனார்கலி எனும் மூன்று சிறுகதைகள் சேர்க்கப்பட்ட இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. வ.வே.சு.ஐயரின் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் சார்பாக "சுதந்திர சங்கு' ஆசிரியர் சங்கு எஸ்.கணேசன் மூலம் அது வெளியிடப்பட்டது. ""இக்கதைகளை ஒருவன் படித்துப் புத்தகத்தைக் கீழே வைக்கும் காலத்தில் அவன் மனதில் பரிசுத்தமான உணர்ச்சிகளும், உன்னதமான எண்ணங்களும் ததும்பும்'' என்று ராஜாஜி 1927-இல் வெளிவந்த பதிப்பிற்கு அளித்த முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

[ நன்றி: தினமணி ] 

தொடர்புள்ள பதிவுகள்:


கருத்துகள் இல்லை: