செவ்வாய், 6 ஜனவரி, 2015

சங்கீத சங்கதிகள் - 45

பெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 1
உ.வே.சாமிநாதய்யர்

[ ஓவியம்: W.A.மேனன் ]

caஉca
உ.வே.சாமிநாதய்யர் வாழ்ந்த காலத்தில் சங்கீத வையகம் ‘ சர்வம் வைத்தியநாத மய’மாய் இருந்திருக்கிறது! ஆம், வைத்தியநாத ஐயர் என்ற பெயரில் பல நல்ல வித்வான்கள் இருந்திருக்கின்றனர்.

அவர்களுள் நமக்கு அதிகம் தெரியாத ஒரு ‘வைத்தியநாதய்ய’ரைப் பற்றியது இக்கட்டுரை. 

டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் இயற்றமிழுக்குச் செய்த தொண்டுகளைப் பற்றிப் பலர் அறிவர்.  அவர் தமிழிசைக்கும் பல தொண்டுகள் ஆற்றியுள்ளார்.  அந்தக் காலச் சங்கீத வித்வான்களைப் பற்றி விவரமாகக் கட்டுரைகள் எழுதியது அவற்றுள் ஒன்று. உ.வே.சா வின் தகவல்கள் சேகரிக்கும் திறனும், அவற்றைக் கோத்துக் கட்டுரையாக வழங்கும் அழகும் படித்து மகிழவேண்டியவை. 

அக் கட்டுரைகளில்  இதோ ஒன்று. 

பெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 1


உ.வே.சாமிநாதய்யர்


வாழ்க்கை வரலாறு

பழைய சங்கீத வித்துவான்களுள் வைத்தியநாதையரென்ற பெயர் கொண்டவர்கள் பலர். பெரிய வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர், மகா வைத்தியநாதையர், வீணை வைத்தியநாதையர், பிரம்மாண்ட வைத்தியநாதையர், ஆனை வைத்தியநாதையர், அறந்தாங்கி வைத்தியநாதையர், ஆவூர் வைத்தியநாதையரென இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களில் ஒவ்வொருவரும் அக்காலத்தில் ஒவ்வொரு வகையிலே சிறந்த வித்துவானாக இருந்தனர்.

பெரிய வைத்தியநாதையரென்பவர் சோழ நாட்டிலுள்ள தேவூரென்னும் கிராமத்திற் பிறந்தவரென்பர். இவர் வடம வகுப்பினர். சிவகங்கைச் சமஸ்தான வித்துவானாக முதலில் இவர் விளங்கினார். அதனால் சிவகங்கை வைத்தியநாதையரென்றும் இவரை வழங்குவார்கள். இவருக்குத் தம்பி முறையுள்ள மற்றொரு சங்கீத வித்வானுக்கும் வைத்தியநாதயைரென்னும் பெயர் அமைந் திருந்தது. அதனால் இவரை பெரிய வைத்தியநாதைய ரென்றும், மற்றவரைச் சின்ன வைத்தியநாதையரென்றும் யாவரும் சொல்லி வந்தனர்.

பெரிய வைத்தியநாதையருக்குச் சங்கீதம் கற்பித்தவர் இன்னாரென்று இப்பொழுது விளங்கவில்லை. இவருடைய சங்கீதத் திறமை மிக்க வன்மையுடையது. இவருக்குக் கனத்த சாரீரம் அமைந்திருந்தது. அது மூன்று ஸ்தாயியிலும் தடையின்றிச் செல்லும். பாடும் போது அவ்வொலி கால் மைல் தூரம் கேட்கும்.

பழக்கம்

புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவனந்தபுரம் முதலிய சமஸ்தானங்களிலும், திருநெல்வேலி ஜில்லா விலுள்ள ஜமீன்களிலும் தளவாய் முதலியார், வட மலையப்பப் பிள்ளையன் முதலியவர்கள் பரம்பரையில் உதித்த பிரபுக்களிடத்திலும் இவர் பழக்கமுடையவராக இருந்தார். அங்கங்கே இவர் பாடிப்பெற்ற பரிசில்கள் பல.

கனத்த சாரீரம்

இவருடைய கனத்த சாரீர விசேஷத்தால் இவருடைய பாட்டை ஒரே சமயத்தில் பலர் கேட்டு அனுபவித்து வந்தனர். இவருடைய சங்கீதம் நடைபெறும் இடங்களில் அளவற்ற ஜனங்கள் கூடுவார்கள். சில சம யங்களில் இடம் போதாதிருந்தால் அருகிலுள்ள மரங்களின் மேலும் வீட்டுக் கூரைகளின் மேலும் ஏறியிருந்து ஜனங்கள் ஆவலுடன் கேட்டு இன்புறுவார்கள். பல வருஷங்களுக்குமுன்பு வைத்தீசுவரன் கோயிலிற் கும்பாபிஷேகம் நடந்தபோது அத்தலத்திலுள்ள சித்தாமிர்தத் தீர்த்தக்கரை மண்டபத்தில் இவர் பாடினார்; அக் காலத்தில் பலர் அத்தீர்த்தத்திலே கழுத்தளவு ஜலத்தில் இருந்து கேட்டு இன்புற்றார்களாம்! அருகில் வந்திருந்து கேட்க வேண்டுமென்பது இவர் திறத்தில் இல்லை.

அங்க சேஷ்டைகள்

பாடும்போது பலவகையான அங்க சேஷ்டைகள் செய்வது இவருக்கு இயல்பு. எத்தனை விதமாகச் சரீரத்தை வளைத்து ஆட்டி முறுக்கிக் குலுக்கிக் காட்டலாமோ அத்தனை விதங்களையும் இவர் செய்வார்; ஊக்கம் மிகுதியாக ஆக அந்தச் சேஷ்டைகளும் அதிகரிக்கும். நீண்ட குடுமியை யுடையவராதலின் இவர் பாடும்போது குடுமி அவிழ்ந்துவிடும்; தலையைப் பலவிதமாக ஆட்டி அசைத்துப் பாடுகையில் அந்தக் குடுமி மேலும் கீழும் பக்கத்திலும் விரிந்து சுழலும். இவர் அதை எடுத்துச் செருகிக் கொள்வார்; அடுத்த கணத்திலேயே அது மீண்டும் அவிழ்ந்துவிடும். கழுத்து வீங்குதல், கண்கள் பிதுங்குதல், முகம் கோணுதல், கைகளை உயர்த்தல் முதலிய செயல்கள் இவருடைய உத்ஸாகத்தின் அறிகுறிகள். வாயைத் திறந்தபடியே சிறிது நேரம் இருப்பார்; ஒருவரைப் பார்த்து விழித்துக் கொண்டே முத்தாய்த்துச் சந்தோஷிப்பார். ஸ்வரம் பாடும்போதும், மத்தியம காலம் பாடும்போதும் இவருக்குச் சந்தோஷம் வந்துவிட்டால், அருகில் யாரேனும் இருப்பாராயின் அவர் துடையிலும், முதுகிலும் ஓங்கி அடித்துத் தாளம் போடுவார். இப்படி ஆடி ஆடிப் பாடுவதோடு நில்லாமல் முழங்காலைக் கீழே ஊன்றி எழும்பி எழும்பி நகர்ந்து கொண்டே செல்வார். பாட்டு ஆரம் பித்த காலத்தில் இவர் இருந்த இடத்திற்கும், அது முடிந்த பிறகு இருக்கும் இடத்திற்கும் இடையில் உள்ள தூரத்தைக் கொண்டே இவருக்கு இருந்த உத்ஸாகத்தின் அளவை மதிப்பிடலாம். இவர் பாடும்போது தாம் நகர்ந்து செல்வதல்லாமல் தம்முடைய கையடிக்கும், மயிர் வீச்சிற்கும் மற்றவர்கள் அகப்படாமல் இருக்கும் வண்ணம் அடிக்கடி அவர்களையும் நகர்ந்து செல்லும்படி செய்வார். இவருக்குப் பொடிபோடும் வழக்கம் உண்டு. பாடிக்கொண்டே வருகையில் இவருடன் இருப்பவர் இடையிடையே பொடி டப்பியை எடுத்துத் திறந்து நீட்டுவார். இவர் இரண்டு விரல்களால் நிறைய எடுத்துக் கொண்டு போடுவார்; பின்பு கையை உதறுவார்; அப்பொடி அருகிலுள்ளவர்கள் கண்களிலும் வாய்களிலும் விழும். இந்தக் காரணங்களாலும் இவருக்கு அருகில் இருந்து கேட்கவேண்டுமென்ற அவா ஜனங்களுக்கு உண்டாவதில்லை. அவர்கள் எவ்வளவுக் கெவ்வளவு தூரத்திலிருந்து கேட்கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு நன்றாகவும், அமைதியாகவும் இவருடைய பாட்டின் இனிமையை அனுபவித்து வருவார்கள்.

சங்கீதச் சிறப்பு

இவ்வளவு குறைபாடுகள் இவர்பால் அமைந்திருந்தாலும், இவருடைய சாரீர பலமும் சங்கீதச் சிறப்பும் அவற்றை மறைத்தன. இவருக்கு இணையாக இருந்து பாடுவோரே அக்காலத்தில் தென்னாட்டில் இல்லை. மற்ற வித்துவான்களைக் கண்டு பொறாமை கொள்ளும் இயல்பு இவர்பால் இராது. தமக்கு முன்பு யார் பாடினாலும் சந்தோஷமாகக் கேட்டுப் பாராட்டும் தன்மை இவர்பால் விளங்கிற்று. ஆயினும், வேறு எவரும் இவருக்குமுன் பாடத் துணிவதில்லை. "அந்த அசுரனுக்கு முன்பு யார் ஐயா அச்சமில்லாமல் பாடுவார்கள்?" என்று வித்துவான்கள் சொல்லுவார்களாம்.

இவர் ரக்தி ராகங்களையே பெரும்பாலும் பாடுவார். பெரியோர்கள் இயற்றிய பல கீர்த்தனங்கள் இவருக்குத் தெரியும். சிந்து, தெம்மாங்கு முதலிய உருப்படிகளில் இவருக்கு மிக்க பயிற்சி உண்டு. இவர் எங்கே பாடினாலும் ஒரு தெம்மாங்காவது பாடக் கேளாவிட்டால் சபையோருக்குத் திருப்தி உண்டாகாது. தெம்மாங்கை இனிமையாகப் பாடும் திறமையால் இவரைத் தெம்மாங்கு வைத்திய நாதையரென்றும் கூறுவதுண்டு. பல்லவி பாடுதலிலும் இவர் சமர்த்தர். இவரிடம் பக்க வாத்தியம் வாசித்தவர்களுள் கடவித்துவான் போலகம் சிதம்பரையரென்பவரும், கிஞ்சிரா ராதாகிருஷ்ணைய ரென்பவரும் என் ஞாபகத்தில் உள்ளார்.

பாஷாஞானக் குறைவு

வைத்தியநாதையருடைய சங்கீதஞானம் மிக உயர்ந்தது; ஆயினும் தமிழிலோ வடமொழியிலோ இவருக்கு ஞானம் இல்லை; அதனை இவர் விரும்பவுமில்லை. கீர்த்தனங்களையும், பிற உருப்படிகளையும் வைத்துக்கொண்டு தான் சங்கீதத் திறமையைக் காட்ட வேண்டுமென்ற அவசியம் இவருக்கு இல்லை; இவருடைய சங்கீதமானது சாகித்யத்தைத் தன் மனம்போனபடி இழுத்துக் கொண்டே செல்லும். சாகித்யத்தினால் ஒரு பயனுமில்லையென்பது இவருடைய கொள்கை.

பல்லவி பாடத் தொடங்கும்போது இவருடைய மனத்துக்குத் தோற்றியவை யெல்லாம் சாகித்யமாக அமைந்துவிடும். இவர் இவ்வாறு பாடும் பல்லவிகளுள் சில வருமாறு:-

"தாவரப் பத்தியில் நாலு தூண் இருக்குது!" 
"கொல்லா!- குறடிறுகப் பிடி கொல்லா!" 
"இடியிடிக்குது மழை குமுறுது எப்படிநான் போய்வருவேன்!"

இவருடைய அங்க சேஷ்டைகளையோ சாகித்யத்திலுள்ள பிழைகளையோ யாரேனும் எடுத்துச் சொன்னால், "உங்களுக்கு வேண்டியது சங்கீதந்தானே? மற்றவை எப்படி இருந்தால் என்ன? நீங்கள் என்னைத் திருத்தவேண்டிய அவசியமே இல்லை" என்று தைரியமாகக் கூறிவிடுவார். இவருக்கு இருந்த சங்கீதத் திறமையும், சென்ற இடங்களில் இவருக்கு உண்டான பெரு மதிப்பும் அந்தத் தைரியத்தை இவருக்கு அளித்தன.

சுகவாழ்வு

மனிதனாகப் பிறந்தால் சுகமாக வாழவேண்டுமென்பது இவருடைய நோக்கம். பலவகையான சுகங்களையும் குறைவின்றி அனுபவிப்பதைவிட இவ்வாழ்க்கையில் வேறு பிரயோசனமில்லையென்றே இவர் எண்ணியிருந்தார். அழகிய உருவமுடையவராதலின் அந்த உருவத்துக் கேற்றபடி அலங்காரம் செய்து கொள்வார். மீசையை நன்றாக முறுக்கி அழகு படுத்திக் கொள்வார். விலை யுயர்ந்த மோதிரங்கள், கடுக்கன், தோடா, ரத்னஹாரம் முதலியவற்றை அணிந்திருப்பார். உடை வகையிலும் உணவு வகைகளிலும் குறைவில்லாதபடி அமைத்துக் கொள்வார். எப்பொழுதும் ஐயம்பேட்டை இரட்டை உருமாலை இவர் மேலே இருக்கும்.

சொக்கம்பட்டி ஜமீன்தாரால் அளிக்கப்பட்ட பெட்டி வண்டி ஒன்று இவரிடம் இருந்தது. அதில் பூட்டுவதற்குரிய சிறந்த காளைகள் இரண்டின் கழுத்தில், நெடுந் தூரம் கேட்கும் ஒலியையுடைய சலங்கைகள் கட்டப்பட் டிருக்கும். அந்த வண்டியில் இவர் திண்டு முதலிய ஆடம்பரங்களுடன் போவதைப் பார்ப்பவர்கள் இவரை ஒரு பெரிய ஜமீன்தார் என்றே எண்ணுவார்கள். நெடுந் தூரத்தில் வண்டி வரும் போதே காளைகளின் சலங்கை யொலி இவருடைய வரவைத் தெரிவிக்கும்.

ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் பழக்கம்

ஒரு சமயம் பெரிய வைத்தியநாதையர், திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சில ஜமீன்களுக்குப் போய்வந்தார். அக்காலத்தில் திருவாவடுதுறையாதீனத்தில் சின்னப்பட்டத்தில் இருந்த மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் கல்லிடைக்குறிச்சி மடத்தில் இருந்து வந்தார். அவர் சங்கீதத்திலும், தமிழிலும், வடமொழியிலும் தக்க பயிற்சியும், பேரன்பும் உடையவர். வித்துவான்களின் அருமையை யறிந்து ஆதரிக்கும் வள்ளல். பெரிய வைத்தியநாதையருடைய இசைப் பெருமையை அவர் கேள்வியுற்று இவருடைய பாட்டைக் கேட்கவேண்டு மென்று விரும்பியிருந்தனர். இவரும் தேசிகருடைய சிறந்த இயல்புகளையும், வித்துவான்களின் தரம் அறிந்து பாராட்டி ஆதரிக்கும் தன்மையையும் உணர்ந்து கல்லிடைக்குறிச்சி சென்றார். தேசிகர் இவரை நல்வரவு கூறி உபசரித்தனர்; இவருடைய சங்கீதத்தையும் கேட்டு மகிழ்ந்தார். சங்கீத உலகத்தில் அவ்வப்போது தோன்றுகின்ற அரிய வித்துவான்களுள் இவர் ஒருவரென்பதை அவர் உணர்ந்து கொண்டார். இவருடைய சங்கீத ஆற்றலைக் கொண்டாடி தக்க சம்மானங்களைச் செய்து அனுப்பினார். அதுமுதல் இவ்விருவருக்கும் பழக்கம் அதிகமாயிற்று. வைத்தியநாதையர் சம்மானங்களை எதிர்பாராமல் தாமே கல்லிடைக்குறிச்சிக்கு அடிக்கடி வலிய வந்து தம்முடைய இசை விருந்தால் தேசிகரை மகிழ்விப்பார். இடமறிந்து சந்தோஷிக்கும் ரஸிகர்களிடத்தில் வித்துவான்களுக்குத் தனியான அபிமானம் இருப்பது இயல்பன்றோ?

(தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்;
உ.வே.சா 
என் சரித்திரம்: உ.வே.சா

கம்பனைப் பாடப் புதிய ராகம்: உ.வே.சா

மற்ற சங்கீத சங்கதிக் கட்டுரைகள்

1 கருத்து:

vaiyah.blogspot சொன்னது…

ஹாஸ்யத்துடன் கூடிய என்ன அருமையான நடை!
மூன்று வைத்தாக்களைப் பற்றி என் முன்னோர்கள் கூற கேட்டிருக்கிறேன்
(என் ஊர் கல்லிடைக்குறிச்சி)
வி. அய்யா