புதன், 31 டிசம்பர், 2014

சங்கீத சங்கதிகள் -44

சங்கீத நினைவுகள் -2
சுப்புடு 

"இசை விமரிசனம் படிக்க இசையைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லாவிட்டாலும், படித்துச் சிரித்து அனுபவிக்க ரஸனை இருந்தால் போதும் என்று அறிமுகம் செய்தவர் சுப்புடு. “ 
                                          எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் 
டொராண்டோவில் ( 1994)  ஒரு திருப்புகழ் இசை வழிபாட்டில் எலெக்ட்ரானிக் ஆர்கன் வாசிக்கும் சுப்புடு வயலின் வித்வான் கரூர் சின்னஸ்வாமி அய்யர் மிகவும் கறார்ப் பேர்வழி. ராமகிருஷ்ண மடத்துக்காக நிதி திரட்ட முசிரி சுப்ரமண்ய அய்யர் இவரையும், தஞ்சாவூர் வைத்யநாதய்யர் அவர்களையும் தமக்குப் பக்கவாத்தியமாக அமைத்துக்கொண்டு பல கச்சேரிகள் செய்தார். அப்போதெல்லாம் மைக் கிடையாது. முசிரி அப்போதெல்லாம் மூன்று கட்டை சுருதியில் அலட்சியமாகப் பாடுவார். ரங்கூன் ஜூபிலி ஹாலில் எள்ளுப் போட்டால் விழாத கூட்டம். ஒருநாள் காம்போதி ராக ஆலாபனை பல்லவி விஸ்தாரத்துக்கு அமைந்தது. கந்தர்வ கானம் தான் போங்கள்! பல்லவிக்கு ‘நமக்கினி பயமேது, ஸ்ரீ ஷண்முகநாதன் துணையிருக்கும்போது’ எடுப்பு. அப்போதெல்லாம் பக்க வாத்யம் பக்க வாதமாகவோ பக்கா வாத்யமாகவோ இல்லாமல் உண்மையில் பக்க வாத்யமாகவே இருந்தது. துளி இடைஞ்சல் கிடையாது. கரூரார் அபரிமிதமான அனுசரணையுடன் வாசித்தார். மணி ஒன்பதரை ஆகிவிட்டது. நாலரை மணிக்கு ஆரம்பித்த கச்சேரி.


சீட்டுகள் அட்சதை மாதிரி குவிந்து கிடந்தன. உதார குணத்துக்கும் ரசிகர்களின் ஆதரவுக்கும் பெரு மதிப்பு கொடுக்கும் முசிரி சீட்டுகளை ஒன்றொன்றாய் எடுத்து நோக்க ஆரம்பித்தார். கறார் கரூரார் தம் தொங்கின பையிலிருந்து கடிகாரத்தை எடுத்துப் பார்த்தார்.

முன்வரிசையில் உட்கார்ந்திருந்த புதுப்பணக்காரர் ஒருவர், “ஸ்வாமி, ரசிகாள் விரும்பறா! நீங்கள் மணியைப் பார்க்கக் கூடாது” என்றார் அலட்சியமாக. சபையும் சற்றே சலசலப்பு கண்டது.

கட்டை விரலில் ஆள்காட்டி விரலை வைத்துச் சுண்டி, “நீங்களும் மணி ( Money ) யைப் பார்க்கக் கூடாது ! “ என்றார் கரூரார். இரவு “தேயிலைத் தோட்டத்திலே” போய்ச் சேரும்போது மணி பதினொன்று.


[ நன்றி: தினமணி கதிர் ]

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக