சனி, 12 ஜனவரி, 2019

1215. சங்கீத சங்கதிகள் - 175

நினைவுத் திரையில்
"ஆஸ்திக சமாஜம்' நரசிம்மன்

...தினமணி-2012


மாலியை சந்தித்து ஒரு கச்சேரி ஏற்பாடு செய்ய சென்றிருந்தோம். அப்போது மந்தைவெளி பகுதியில் ஓஷியானிக் என்றொரு ஹோட்டல் இருந்தது. மாலி அங்குதான் தங்குவார். நாங்கள் சென்றபோது ஒரு உடைந்த புல்லாங்குழலை நூலால் கட்டிக்கொண்டு இருந்தார். "என்ன இது? ஃப்ளூட்டை நூலால் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு மாலியிடம்  இருந்து வந்த பதில்- "சாயங்காலம் ஒரு கச்சேரி இருக்கு.'

கூட வந்தவர் கேட்டார், "என்னையா இது! உடைந்த புல்லாங்குழலை வைத்துக்கொண்டு சர்வசாதாரணமாக சாயங்காலம் கச்சேரி இருக்கிறது என்று சொல்கிறாரே இவர். எப்படி வாசிக்கப் போகிறார்?' 



நான் சொன்னேன், "சாயங்காலம் கச்சேரிக்குப் போவோம், அவர் எப்படி வாசிக்கப் போகிறார் என்பதை நேரில் கேட்டுத் தெரிந்துகொள்.'

சாயங்காலம் நூலால் கட்டப்பட்ட உடைந்த புல்லாங்குழலை வைத்துக்கொண்டு ஒரு கச்சேரி வாசித்திருக்கிறார். இந்த ஜென்மாவில் அப்படி ஒரு சங்கீதத்தை இனிமேல் கேட்க முடியாது. அப்போதுதான் தெரிந்தது, சங்கீதத்தின் மகிமை வாத்தியத்தில் இல்லை. வாசிப்பவர்களிடம்தான் என்பது.

ஒரு முறை பாலக்காடு மணி அய்யரை பார்க்கப் போயிருந்தேன். பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு எங்களுடைய பேச்சு மாலியைப் பற்றி திரும்பியது. அவர் சொன்னார்- "லயத்திலே புலி அவன். மாலி மாதிரி இன்னொரு வித்வான் கிடையாது!'
÷
அப்போது ராம நாம யக்ஞ மண்டலி என்றொரு அமைப்பை டாஃபே மகாதேவன் நடத்திக் கொண்டிருந்தார். அந்த அமைப்பின் சார்பில் நாகேஸ்வர ராவ் பார்க் அருகில் மாலியின் கச்சேரி. டாஃபே மகாதேவன் மாலிக்கு நெருங்கிய நண்பர் என்பதால் நிச்சயமாக மாலி கச்சேரிக்கு வருவார் என்கிற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. அதனால் கூட்டமோ கூட்டம். எட்டு மணி வரை மாலியை காணோம். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் டாஃபே மகாதேவனும் ரசிகர்களும் மாலி வந்துவிடுவார் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். எட்டேகால் மணிக்கு மாலி வந்து சேர்ந்தார். எட்டரை மணிக்கு மேலேதான் மேடையில் போய் அமர்ந்தார்.

புல்லாங்குழலை எடுத்து "கமாஸ்' ராகத்தில் "சுஜன ஜீவனா' வாசிக்கத் தொடங்கினார் பாருங்கள் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது. அடுத்த நான்கு மணி நேரம் தேவகானம் பொழிந்தார் மாலி. என் வாழ்நாளில் மறக்க முடியாத கச்சேரி அது.

தஞ்சாவூர் ஆனந்தா லாட்ஜில் தங்கியிருந்தார் ஃப்ளூட் மாலி. அவருக்கு எப்போது மூடு வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஒரு நாள் காலை சுமார் 6 மணி இருக்கும். புல்லாங்குழலை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டார். ரயில் நிலையத்தை சுற்றியிருக்கும் தெருவெல்லாம் ஸ்தம்பித்துவிட்டது. கூட்டமான கூட்டம். ரயில் ஏறுவதற்காக வந்தவர்களும் ரயிலில் வந்து இறங்கியவர்களும் உள்ளூர்காரர்களும் மாலியின் புல்லாங்குழல் கேட்டு மகுடி மயங்கிய பாம்பாக ஆனந்தா லாட்ஜை சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள். இப்படி நூற்றுக்கணக்கான பேர் கேட்டுக் கொண்டிருப்பது தெரியாமல் மாலி புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய மாலியின் வாசிப்பைக் கேட்ட ரிக்ஷாக்காரர்கள்கூட அதற்குப் பிறகு பல வருடங்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

தொ.மு.பாஸ்கர தொண்டைமான் கலெக்டராக இருந்தபோது தஞ்சாவூரில் கலைவிழா ஒன்றை நடத்தினார். அதில் பிரபலமான எல்லா கலைஞர்களும் கலந்துகொண்டனர். மாலியின் கச்சேரியும் இருந்தது. மாலி வருவாரா வரமாட்டாரா என்று தஞ்சாவூர் ஜில்லாவில் பந்தயம் கட்டியவர்கள் கூட உண்டு. அன்றைக்கு என்னவோ தெரியவில்லை. மாலி சொன்னது சொன்னாற்போல கச்சேரிக்கு வந்துவிட்டார். லால்குடி வயலின். அந்தக் கச்சேரி அமைந்ததுபோல இன்னொரு கச்சேரி தஞ்சாவூரில் அமையவில்லை. நேரம் போனது தெரியாமல் மாலியும் வாசித்துக் கொண்டிருந்தார். ரசிகர்களும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஜகந்நாதன் என்று எனக்கு ஒரு நண்பர். ஜகந்நாதனை அவருடைய அப்பா ஒரு கச்சேரிக்கு கூட்டிக்கொண்டு போனார். கச்சேரி சுமாராகத்தான் இருந்தது. ஜகந்நாதன் அப்பா சொன்னாராம்- "இன்னிக்கு நமக்கு பிராப்தம் இல்லைடா!' என்று. அடுத்த வாரம் கோனேரிராஜபுரத்தில் அதே பாகவதரின் இன்னொரு கச்சேரி. அதற்கும் தனது மகனை அழைத்துக்கொண்டு போயிருந்தார் அவர். கச்சேரி "ஓஹோ' என்று இருந்ததாம். ஜகந்நாதனிடம் அவருடைய அப்பா சொன்னாராம்- "கலைஞர்களுக்கு அன்னிக்கு எப்படி மூடு இருக்கு என்பதைப் பொறுத்துத்தான் கச்சேரி அமையும். ஒரு கச்சேரி நன்றாக அமையாவிட்டால் கலைஞர்களைத் தப்பு சொல்லக் கூடாது. அன்றைக்கு நமக்கு பிராப்தம் இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.'   




ஆலத்தூர் சகோதரர்கள் என்று சொன்னாலே கணக்கு விவகாரங்களில் புலி என்பது பரவலாக சங்கீத உலகத்தில் பேசப்படும் விஷயம். கணக்கு விவகாரம் என்று சொன்னால், என்னவோ ஏதோ என்று நினைத்து விடாதீர்கள். காலபிரமாணத்தில் செய்யப்படும் விதவிதமான தாள நுணுக்கங்களுக்குத்தான் சங்கீத மேடையில் கணக்கு விவகாரம் என்று பெயர். ஒரு கச்சேரிக்கு வரும்போதே மிகவும் நுணுக்கமான, கஷ்டமான தாளத்தில் பல்லவியை அமைத்துக்கொண்டு பக்கவாத்தியக்காரர்களைத் திணறடிப்பதில் ஆலத்தூர் சகோதரர்கள் சமர்த்தர்கள். சங்கீதம் நன்றாக தெரிந்தவர்களுக்கு ஆலத்தூர் சங்கீதம் என்று சொன்னால் விரும்பிக் கேட்பார்கள். பக்கவாத்தியக்காரர்கள் திறமைசாலிகளாக இல்லாவிட்டால் அவமானப்பட வேண்டியதுதான்.

ஒரு கச்சேரியில் திருவாலங்காடு சுந்தரேச அய்யர் ஆலத்தூர் சகோதரர்களுக்குப் பக்கவாத்தியம். கச்சேரி தொடங்குவதற்கு முன்னால் கேட்டாராம்- "இனிக்கு எப்படி சிவிலா, கிரிமினலா? என்று. அவர் கேட்டவுடன் ஆலத்தூர் சகோதரர்கள் சிரித்து விட்டார்களாம்.

ஆலத்தூர் சகோதரர்களுக்கு லால்குடி ஜெயராமன் நிறைய கச்சேரிகள் வாசித்திருக்கிறார். அவர்களுடைய கணக்கு விவகாரங்களை லால்குடி ஜெயராமனும் பாலக்காடு மணி அய்யரும் சர்வசாதாரணமாக ஊதித் தள்ளிவிடுவார்கள். அதனாலேயே இந்த காம்பினேஷனில் அமையும் கச்சேரிகள் அசாத்தியமாக இருக்கும். லால்குடி ஜெயராமனைப் பற்றி ஆலத்தூர் சுப்பய்யர் ஒருமுறை சொன்ன கருத்து- "லயத்திலே லால்குடி பிரம்மா. அவருடன் கச்சேரி செய்யும்போது ஏதோ கூட இருந்து பிரக்டீஸ் பண்ணினா மாதிரி இருக்கும். எப்படிப்பட்ட விவகாரமாக இருந்தாலும் அதை அவர் சர்வ சாதாரணமாக கையாண்டு விடுவார்'.

[ நன்றி : https://www.rasikas.org/forums/viewtopic.php?t=26658 ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

1 கருத்து:

Unknown சொன்னது…

Pasupathy avargale, flute Mali arpudamaga carrom vilayaduvar endru En thagappanar solliyadu ninaivukku varugiradhu. Oru thadavai katcheri iruppadhai marandhu an thagappanarin ondru vitta sahodaran kooda Bombay Indian Gymkhana endra idathil vilayadi kondirundar endru ketturikkiren.