சனி, 23 ஜனவரி, 2016

சங்கீத சங்கதிகள் - 67

அய்யங்காரின் பிளேட் 
‘கல்கி’  
ஜனவரி 23. அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் நினைவு தினம்.

அந்த நினைவில் ‘கல்கி’ விகடனில் அய்யங்காரின் இசைத்தட்டைப் பற்றி ( 30 -களில் ) எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையை இங்கிடுகிறேன்.
=====

தென்னிந்தியாவிலுள்ள தற் கால வித்வான்களில் சிலர் இசைத்தட்டுகளின் மூலம் தங்கள் புகழைப் பெருக்கிக் கொண்டார்கள். வேறு சிலரோ, இசைத்தட்டுக் கொடுத்த பின்னர், தங்களுக்கு ஏற்கனவே இருந்த பெயரையும் இழந்து விட்டார்கள். இன்னும் சிலருடைய கீர்த்தி இசைத்தட்டுகளினால் அதிகமும் ஆகவில்லை; குறைவு படவுமில்லை.

அரியக்குடி இராமனுஜ அய்யங்கார் இவற்றுள் மூன்றாவது கோஷ்டியைச் சேர்ந்தவர். அவர் கிராமபோன் பிளேட் கொடுப்பதற்கு முன்னாலேயே சங்கீத உலகில் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்துவிட்டார். அதற்கு மேல் உயர்வதற்கு இடமேயிருக்கவில்லை. ஏறக்குறைய பதினைந்து வருஷ காலமாக அவருடைய புகழ் மங்காமல் இருந்து வருகிறது. அந்தப் புகழை அவருடைய இசைத்தட்டுகள் அதிகமாக்கவுமில்லை; குறைவு படுத்தவுமில்லை. ஆனால் நிலைபெறுத்தி யிருக்கின்றன.

[ ஓவியம்: மாலி ]

அரசியல் வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் சென்ற பதினைந்து வருஷத்தில் அநேக தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால் சங்கீதத்தில் மட்டும் அய்யங்காரின் தலைமை இன்னும் நீடித்திருப்பதின் இரகசியம் என்ன? பண்டிதர்கள், பாமரர்கள் எல்லாரையும் ரஞ்சிப்பிக்கக்கூடிய சில அம்சங்கள் அய்யங்காரின் பாட்டில் அமைந்திருப்பதுதான்.

அய்யங்காருக்கு முந்திய காலத்தில் சங்கீதக் கச்சேரிகளுக்கு வந்து ரஸித்தவர்கள் பெர்ம்பாலும் அந்த வித்தையின் நுட்பங்களை அறிந்த சிலரேயாவர். மற்ற சாதாரண ஜனங்கள் சங்கீதம் அநுபவிப்பதற்கு நாடக மேடையை நாடி வந்தார்கள். சங்கீத நுட்பங்களை அறியாத சாதாரண ஜனங்களும் ரஸித்து அனுபவிக்கும்படியாகக் கச்சேரி பந்தாவை அமைத்தவர் அய்யங்கார் என்றே சொல்லவேண்டும். சின்னச் சின்னக் கீர்த்தனைகளாக உருப்படிகள் அதிகமாகப் பாட ஆரம்பித்தவர் அவரே. கச்சேரியில், வித்தைத் திறமையே பிரதான அம்சமாகவுடைய பகுதிக்குக் காலத்தைக் குறைத்து, எல்லாரும் அநுபவிக்கக் கூடிய பகுதியை அவர் நீட்டிவிட்டார். கச்சேரியின் கடைசியில், துக்கடாக்கள்  அதிகமாகப் பாடினார். கீர்த்தனைகளையும், ராகங்களையும் ஒரே சிட்டையாகப் பாடிவந்தபடியால், கொஞ்சநஞ்சம் சங்கீத ஞானமுள்ளவர்கள் எல்லோரும் அவரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கினார்கள். ஏகலைவன் துரோணாச்சாரியாரிடம் சிஷ்யனாயிருந்தது போல், அவருடைய கச்சேரிகளைக் கேட்பதின் மூலமாகவே அவருக்கு ஆயிரக் கணக்கான சிஷ்யர்கள் ஏற்பட்டனர்.

சங்கீத வித்தையில் ஆழ்ந்த தேர்ச்சியில்லாதவர் யாராவது இப்படிப்பட்ட புரட்சி செய்ய முயற்சித்திருந்தால் பண்டிதர்கள் சண்டைக்கு வந்திருப்பார்கள். “போச்சு! குடிமுழுகிப் போச்சு! “ என்பார்கள். ஆனால் அய்யங்காரிடம் அவர்கள் ஜபம் ஒன்றும் சாயவில்லை  

தென்னாட்டில் நமது காலத்தில் உயர்ந்த சங்கீத ஞானம் விஸ்தாரமாகப் பரவுவதற்குக் காரண புருஷர்களாயிருந்தவர்களில் தலை சிறந்தவர் யார் என்று கேட்டால், ‘அய்யங்கார் தான்’ என்று திட்டமாகச் சொல்லலாம்.

ஆனால், கச்சேரிகளில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய அம்சங்கள் எல்லாம் ஒருவரிடம் இருந்தாலும், இசைத் தட்டுகளில் அவர் பாட்டு சோபிக்காமல் போகலாம். இசைத்தட்டில் வெற்றி பெறுவதற்குச் சில தனி அம்சங்கள் இருக்கவேண்டும். முக்கியமானது சாரீரம். கச்சேரிகளில் வெகு நன்றாய்ச் சோபிக்கும் சாரீரம் சில சமயம் பிளேட்டில் சுகப்படுவதில்லை. அடுத்தபடியாக, உச்சரிப்பு. கசேரிகளில் பாடகர் சில சமயம் வார்த்தைகளை விழுங்கிவிட்டால் நாம் அதைப் பிரமாதப் படுத்துவதில்லை.பக்க வாத்தியங்களின் முழக்கம், குழந்தைகளின் அழுகைச் சத்தம் இவைகளுக்கிடையே  அநேகமாய்ப் பாட்டின் வார்த்தைகள் தான் நம் காதில் விழுவதேயில்லையே? சங்கீதக் கச்சேரியில் ஸ்வரங்கள் ஆகட்டும், வார்த்தைகள் ஆகட்டும்  காதில் விழாத இடங்களில் எல்லாம், நம்முடைய மனோ பாவத்தினால்   இட்டு நிரப்பிக் கொள்ள நாம் தயாராயிருக்கிறோம்.

ஆனால் இசைத் தட்டுகளில் அப்படியில்லை. எந்தப் பிளேட்டில்  வார்த்தைகளும் ஸ்வரங்களும் சுத்தமாய்க் காதில் விழுந்து, அந்தப் பிளேட்டிலிருந்தே பாட்டைக் கற்றுக் கொள்ளும்படியிருக்கிறதோ அத்தகைய பிளேட்டுகளைத்தான் ஜனங்கள் விரும்பி வாங்குவார்கள்.

மேலும், சாரீரத்திலும் ஸாஹித்யத்திலும் உள்ள குறைபாடுகள் எல்லாம் கச்சேரியில் பாடும்போதை விடப் பிளேட்டில் நன்றாக எடுத்துக் காட்டப்படுகின்றன. உதாரணமாக, அய்யங்காரிடம் எத்தனையோ தடவை

“ சிதம்பரம் என மனங்கனிந்திட” 

என்னும் பாட்டைக் கேட்டிருக்கிறேன். அதில் விரஸம் ஒன்றும் புலப்பட்டதில்லை.பிளேட்டில் அதே பாட்டைப் பாடுகையில்,

அடைக்கலமென் -றடியேன் உனை நம்பி
அலறுவதும் செவி புகவிலையோ - அடிமை” 

என்னும் அநுபல்லவியில் ( ** )  “றடியேன்”  என்று அய்யங்கார் இரண்டு தடவை சொல்லுபோது கஷ்டமாய்த்தானிருக்கிறது.

இந்த இடத்தை ஒரு விதிவிலக்கு என்றே சொல்லலாம். பொதுவாக அய்யங்காரின் சங்கீதம் இந்த இசைத்தட்டு சோதனையில் வெற்றியடைந்திருக்கிறது. அவருடைய கச்சேரிகளில் நாம் அநுபவிக்கும் நல்ல அம்சங்களையெல்லாம் அவருடைய பிளேட்டுகளில் காண்கிறோம். உண்மையில், அய்யங்காரின் உயர்த்ரக் கச்சேரி ஒன்றை ராகம் பல்லவி மட்டும் இல்லாமல் கேட்க விரும்பினோமானால், அவருடைய பிளேட் ஸெட் ஒன்றை வாங்கிக் கொண்டால் போதும். தெலுங்கிலும், தமிழிலும், அவர் வழக்கமாகப் பாடும் சிறந்த கீர்த்தனங்களும், ஜாவளி, ஹிந்துஸ்தானி, துக்கடாக்களும் அவருடைய பிளேட்டுகளில் அடங்கியிருக்கின்றன.

பின்வரும் ஒன்பது பிளேட்டுகள், கிராமபோன் வைத்திருக்கும்  சங்கீத ரஸிகர்  ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டுமென்று நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

A.122 எடு நம்மினா ஸாவேரி 
        கமலாம்பாம் பஜரே  கல்யாணி
A.120 பரிதான மிச்சிதே   பிலஹரி
A.124 பரம பாவன ராம பூரி கல்யாணி 
A.109 கார்த்திகேய காங்கேய  தோடி
A.114 அலகலல்ல  மத்யமாவதி 
        அனுபமகுணாம்புதி  அடாணா 
A.111  சிதம்பரம்  என கல்யாணி 
        கடைக்கண் நோக்கி தோடி 
A.107  ராட்டினமே காந்தி       காபி
A.119  அவனன்றி ஓரணுவும்  ராகமாலிகை 
A.126 வைஷ்ணவ ஜனதோ   ஸிந்துபைரவி  

மேற்சொன்ன பிளேட்டுகளில் சில நன்றாயிருக்கின்றன. சில ரொம்ப நன்றாயிருக்கின்றன. “அசாத்தியமாய் நன்றாயிருக்கிறது” என்று சொல்லக் கூடிய அய்யங்காரின் பிளேட் இனித்தான் வெளியாகவேண்டும் , கூடிய சீக்கிரம் வெளியாகுமென்று எதிர்பார்க்கிறேன்.

மேற் குறிப்பிட்ட இசைத்தட்டுகளில் ஒன்று மட்டும் அய்யங்காரின் புகழ் என்றைக்கும் அழியாமல் இருக்கச் செய்யக் கூடியதாகும். அதுதான் “வைஷ்ணவ ஜனதோ”  என்ற பாட்டு. மகாத்மா காந்தியின் மனதுக்கு உகந்த கீதம் என்பதாக, தேசத் தொண்டர்களால் தேசிய பஜனைகளில் அடிக்கடி அது பாடப்படுவதுண்டு. அநேகமாக அபஸ்வர களஞ்சியமாய்த்தான் இருக்கும். அந்த கீதத்தை சங்கீத மேன்மை பொருந்தியதாகச் செய்து வெகு அழகாய்ப் பாடியிருக்கிறார் அய்யங்கார். முதலில் ஆலாபனமே மிக நன்றாயமைந்திருக்கிறது. பிறகு பல கண்ணிகள் அமைந்த அந்தப் பாட்டைக் கேட்பவர்களுக்குத் துளிக்கூட அலுப்புத் தோன்றா வண்ணம் வித விதமான வேலைப்பாடுகளுடன் பாடியிருக்கிறார். மகாத்மாவுக்குப் பிரியமான பாட்டு, ஒருவருடைய சங்கீதக் காதுக்கும் பிரியமளிப்பது என்றால் வேறு என்ன வேண்டும்?  ஆகவே, அய்யங்காரின் இசைத் தட்டுகளுக்குள்  “வைஷ்ணவ ஜனதோ “ வுக்குத்தான், இப்போதைக்கு, நான் முதன்மை ஸ்தானம் அளித்திருக்கிறேன்.

[ நன்றி : ஆனந்தவிகடன் ; கல்கி களஞ்சியம் ( வானதி ) ]

பி.கு.
( ** )  ஒரு நண்பர் குறிப்பிட்டபடி, இந்த அனுபல்லவி  “ கடைக்கண் நோக்கி” என்ற பாடலில் உள்ளது. ( “ சிதம்பரம் “ என்ற பாட்டில் அல்ல.)

தொடர்புள்ள பதிவுகள் 

அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி! 

சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்

1 கருத்து:

இன்னம்பூரான் சொன்னது…

அரியக்குடின்னா அரியக்குடி தான்! {அவர் என் தாத்தாவோட நண்பர்.}

கல்கின்னா கல்கி தான் ( அவர் என் மருமகளின் ஆசிரியை ஆனந்தியின் அப்பா.}

பசுபதின்னா பசுபதி தான் { நான் அவரின் விசிறி}\

இன்னம்பூரான்ன்னா இன்னம்பூரான் தான்!!{ ஆனால் அய்யங்காரிடம் அவர்கள் ஜபம் [ஜம்பம்] ஒன்றும் சாயவில்லை.] அந்த ஜம்பம் இதோ!!!!

கருத்துரையிடுக