சனி, 7 ஜூலை, 2018

1111. காந்தி - 34

28. கோட்டை தகர்ந்தது!
கல்கி


கல்கி’யின்  ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ (தொகுதி 2 )என்ற நூலில்  28-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
நவம்பர் மாதம் 17-ஆம் தேதி காலையில் வேல்ஸ் இளவரசர் 'இந்தியாவின் வாசல்' என்று சொல்லப்படும் பம்பாய்க் கடற் கரை மண்டபத்தில் வந்து இறங்கினார். அதிகார வர்க்கத்தார் பிரமாத வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஏற்பாடுகள் குறிப்பிட்ட திட்டத்தின்படி நடைபெற்றன. பம்பாய்ப் பொதுமக்களில் மிகப் பெரும்பாலோர் அந்த வைபவங்களில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஒரு சாரார் கலந்துகொண்டனர். பம்பாய் மிகப்பெரிய நகரம். பார்ஸிகளும், ஆங்கிலோ இந்தியர்களும், கிறிஸ்துவர்களும் லட்சக்கணக்காக அந் நகரில் வசித்தனர். பம்பாயில் இருந்த சாராயக் கடைகள் பெரும்பாலும் பார்ஸிகளால் நடத்தப் பட்டன. மேலும் பார்ஸி வகுப்பினர் ஐரோப்பிய நாகரிகத்தில் மூழ்கியவர்கள். ஆகையால் சில மகத்தான தேசீயத் தலைவர்கள் பார்ஸி வகுப்பினராயிருந்த போதிலும், அவர்களில் பெரும்பாலோர் மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற இரு வகுப்பாரிலும் எப்போதும் அரசாங்க பக்தர்கள் அதிகம்.

எனவே, இளவரசர் விஜயத்தைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இட்டிருந்த கட்டளையை மீறிப் பம்பாயிலிருந்த பார்ஸிகளும் ஆங்கிலோ இந்தியர்களும் கிறிஸ்துவர்களும் வரவேற்பு வைபவங்களில் கலந்துகொண்டார்கள். வேல்ஸ் இளவரசரை வரவேற்று விட்டுத் திரும்பி வந்தவர்களும் அதே சமயத்தில் பம்பாய் நகரின் மற்றொரு மூலையில் நடந்த மகாத்மாவின் பொதுக்கூட்டத்திலிருந்து திரும்பியவர்களும் சாலைகளில் பல விடங்களில் எதிரிட்டுக்கொள்ள நேர்ந்தது. அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டது.

இளவரசரை வரவேற்றுவிட்டு வந்த பார்ஸிகளின் தலைகளிலிருந்த விதேசிக் குல்லாய்களையும் அவர்களுடைய உடம்பின் மீதிருந்த விதேசித் துணிகளையும் சிலர் பலவந்தமாக நீக்கித் தீயிலே போட்டார்கள். அதற்கு எதிர்ப்புச் செய்தவர்களை மக்கள் அடிக்கவும் செய்தார்கள். சாலைகளில் போன மோட்டார் வண்டிகளின்மீது கற்கள் எறியப்பட்டன. பொதுவாக, மோட்டாரில் வருகிறவர்கள் எல்லாரும் இளவரசர் வரவேற்பிலிருந்து திரும்புகிறார்கள் என்ற எண்ணத்தின் பேரில் மக்கள் மோட்டார்களைத் தாக்கினார்கள். முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இத்தகைய சம்பவங்கள் வரவரக் கடுமையாகின. ஆத்திரங்கொண்டிருந்த ஜனங்களைச் சில விஷமிகள் தூண்டிவிடவும் ஆரம்பித்தார்கள். சாராயக் கடைகளுக்கும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தீ வைத்தார்கள். மோட்டார்களும் டிராம்களும் எரிக்கப்பட்டன. சில பார்ஸி பெண்மணிகளும் தாக்கப் பட்டனர்.

இம்மாதிரி செய்திகளைக் கேள்விப்பட்டதும் மகாத்மாவின் மனம் துடிதுடித்தது. தாம் எடுத்துக்கொண்ட ஜாக்கிரதை யெல்லாம் வீணாகி விட்டதே. செய்த எச்சரிக்கையெல்லாம் பயனின்றிப் போய்விட்டதே என்று அவர் உள்ளம் பதைத்தது. உடனே மோட்டாரில் வெளிக்கிளம்பினார். பலாத்காரச் செயல்கள் நடப்பதாகத் தெரிந்த இடங்களுக்கெல்லாம் பறந்து சென்றார். அங்கங்கே ஜனக்கூட்டத்தைக் கலைந்து போகும்படி சொன்னார். இப்படி நகரைச் சுற்றிக்கொண்டு வருகையில் ஓரிடத்தில் ஆறு போலீஸ்காரர்கள் தடியால் அடிபட்டுத் தரையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார். உடனே காரை நிறுத்திவிட்டு அருகில் போய்ப் பார்த்தார். நாலுபேர் செத்துக் கிடந்தார்கள். இரண்டு பேர் குற்றுயிராய்க் கிடந்தார்கள். இந்தக் காட்சியைக் கண்டதும் மகாத்மாவின் இருதயம் பிளந்து விடும்போலாகி விட்டது. அந்தச் சமயத்தில் சுற்றிலும் நின்ற ஜனங்கள் வந்திருப்பவர் மகாத்மா என்று அறிந்ததும் "மகாத்மா காந்திக்கு ஜே!" என்று கோஷமிட்டார்கள். மகாத்மாவுக்கு அந்தக் கோஷம் கர்ணகடூரமாயிருந்தது! அஹிம்சையைப் பற்றித் தாம் மக்களுக்குச் செய்த உபதேசமெல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதின கதையாகி விட்டதே என்று எண்ணி வேதனைப் பட்டார். கோஷம் செய்தவர்களைக் கடும் சொற்களால் கண்டித்தார். குற்றுயிராயிருந்த இரண்டு போலீஸ் காரர்களையும் எடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்.

இவ்விதம் பல இடங்களிலும் சுற்றி ஜனங்களைக் கலைந்து போகச் சொல்லி விட்டு இரவு வீடு திரும்பினார். ஆனால் பம்பாய் நகரமெங்கும் கலகமும் கொலையும் தீ வைத்தலும் நடப்பதாக மேலும் மேலும் செய்திகள் வந்துகொண்டே யிருந்தன. காந்தி மகான் பக்கத்திலிருந்த துணைவர்களிடம் "நான் கட்டிய ஆக்யக் கோட்டை யெல்லாம் தகர்ந்துவிட்டதே!" என்று வாய்விட்டுப் புலம்பினார். மேலும், மகாத்மா கூறியதாவது:--
"நான் பம்பாய்க்கு இச்சமயம் வந்து சேர்ந்ததும் கடவுளுடைய ஏற்பாடுதான். பம்பாய்க்கு வருவதற்கு எனக்குக் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை. பர்தோலிக்கு நேரே போக விரும்பினேன். பம்பாய் நண்பர்கள் வற்புறுத்தியபடியால் வந்தேன். அப்படி வந்து இதையெல்லாம் நேரில் பார்த்திராவிட்டால் ஜனங்கள் இவ்வளவு பயங்கரமாக நடந்துகொள்வார்கள் என்று நம்பியிருக்கமாட்டேன். எல்லாம் போலீஸாரின் பொய் அறிக்கைகள் என்று எண்ணியிருப்பேன். அந்த மட்டும் கடவுள் என்னைக் காப்பாற்றினார். நல்ல சமயத்தில் எனக்கு எச்சரிக்கை செய்தார். பொது மக்கள் இன்னும் அஹிம்சையை நன்றாக உணரவில்லையென்பதையும் ஆகையால் பொது ஜனச் சட்ட மறுப்புக்கு அவர்கள் தயாராகவில்லையென்பதையும் எனக்குக் கண்முன்னே கடவுள் காட்டிவிட்டார்!"

இவ்வாறு சொல்லி மகாத்மா காந்தி தமது புதல்வர் ஸ்ரீ தேவதாஸ் காந்தியை உடனே சூரத்துக்குப் புறப்பட்டுப்போகச் சொன்னார். பம்பாயில் இப்படிப்பட்ட விபத்து நேர்ந்து விட்டபடியால் தமது பர்தோலி பிரயாணத்தை ஒத்திப்போட்டிருப்ப தாகவும், பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதற்குரிய ஆயத்தங்களை யெல்லாம் நிறுத்தி வைக்கும்படியும் ஸ்ரீ தேவதாஸிடம் சொல்லி அனுப்பினார். அன்றிரவெல்லாம் மகாத்மா காந்தியும் அவருடைய துணைவர்களும் ஒரு கண நேரங்கூடக் கண்ணயரவில்லை.
-- --
- மறுநாள் 18ம் பொழுது விடிந்தது. முதல் நாள் இரவு 11 மணிக்குப் பிறகு பலாத்கார சம்பவங்கள் நிகழவில்லையென்று செய்தி வந்தது. அன்று காலை 10 மணி வரைக்குங்கூட பம்பாய் நகரமெங்கும் அமைதி நிலவி வருவதாகப் பல இடங்களிலிருந்தும் செய்தி வந்து கொண்டிருந்தது. மகாத்மா காந்தி, முதல் நாள் சம்பவங்களைபப்பற்றி "எங் இந்தியா" வுக்குக் கட்டுரை எழுத ஆரம்பித்தார். "ஒரு பெருங் கறை" என்பதாக அக்கட்டுரைக்குத் தலைப்புக் கொடுத்தார். பம்பாய்ச் சம்பவங்கள் தமது மனதைப் புண்படுத்திவிட்டது பற்றியும் அவை காரணமாகப் பொதஜனச் சட்ட மறுப்பை ஒத்திப் போடவேண்டி நேர்ந்தது பற்றியும் எழுதினார். இந்தக் கட்டுரையைப் பாதி எழுதிக்கொண்டிருக்கையில் பரேல் என்னுமிடத்திலிருந்து அவசர டெலிபோன் செய்தி ஒன்று வந்தது. அங்கேயுள்ள ஆலைத் தொழிலாளர்கள் அக்கம் பக்கத்திலுள்ள பார்ஸி சமூகத்தாரைத் தாக்குவதற்கு ஆயத்தம் செய்து வருவதாகவும் மகாத்மா உடனே வந்து அவர்களைத் தடுக்கவேண்டும் என்றும் சொன்னார்கள். மகாத்மா தாம் எழுத ஆதம்பித்த கட்டுரையை முடித்து விட்டுக் கிளம்ப எண்ணி, முதலில் மௌலானா ஆஸாத் ஸோபானியையும், மௌலானா முகம்மது அலியின் மைத்துனரான ஜனாப் மோஸம் அலியையும் பரேலுக்குப் போகும்படி சொன்னார்.

பரேல் தொழிலாளர்கள் அன்றைக்குப் பார்ஸிகளைத் தாக்கயத்தனித்ததற்குக் காரணம் ஒன்று இருந்தது. அன்று காலையில் பம்பாயில் அமைதி குடிகொண்டிருந்ததல்லவா? அது புயலுக்கு முந்தைய அமைதியைப் போன்றதேயாகும். சற்று நேரத்துக்கெல்லாம் ஆங்காங்கு கலகங்கள் ஆரம்பித்தன. இந்தத் தடவை ஆரம்பித்தவர்கள் பார்ஸிகளும் ஆங்கிலோ இந்தியர்களுமாவர். முதல் நாள் அவர்களைத் திடீரென்று ஹிந்து-முஸ்லிம்கள் தாக்கினார்கள். ஆனால் இராத்திரிக்கு இராத்திரியே அவர்கள் மறுநாள் பழி வாங்குவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து கொண்டார்கள். துப்பாக்கி வைத்துக் கொள்ளவும் உபயோகிக்கவும் சர்க்காரிடம் அநுமதி பெற்றுக் கொண்டார்கள். அவ்வளவுதான்; காலை ஒன்பது மணிக்கு மேலே பார்ஸிகளும் ஆங்கிலோ இந்தியர்களும் கும்பல் கும்பலாகக் கிளம்பி ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் தாக்குவதற்கு ஆரம்பித்தார்கள். ஹிந்து முஸ்லிம்களில் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன.


இதை யறிந்ததும் ஹிந்து முஸ்லிம்கள் பழையபடி தடிகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பினார்கள். கண்ட இடங்களிலெல்லாம் பார்ஸிகளைத் தாக்க ஆரம்பித்தார்கள். பார்ஸிகள் வசிக்கும் இடங்களைத் தேடிப் போகவும் தொடங்கினார்கள். "அடியைப் பிடியடா பாரத பட்டா!" என்று நேற்று நடந்த பயங்கரமான சம்பவங்கள் இன்றும் ஆரம்பமாயின.

மௌலானா ஆஸாத் ஸோபானியும் ஜனாப் மோஸம் அலியும் காந்திஜியின் விருப்பத்தின்படி பரேல் பகுதிக்கு மக்களைச் சமாதானப் படுத்துவதற்காகச் சென்றார்கள் அல்லவா? அவர்களில் ஜனாப் மோஸம் அலியும் அவருடன் சென்றவர்களில் இருவரும் அரைமணி நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்தார்கள். அவர்கள் உடம்பெல்லாம் காயமாகி இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தங்களுக்கு நேர்ந்த கதியைப் பற்றி அவர்கள் மகாத்மாவிடம் சொன்னார்கள். பார்ஸிகளும் ஆங்கிலோ-இந்தியர்களும் யூதர்களும் அடங்கிய ஒரு கூட்டத்தார் அவர்களை வழியில் வளைத்துக் கொண்டு தாக்கினார்களாம். அவர்கள் ஏறிச் சென்ற மோட்டார் வண்டி சுக்கு நூறாகி விட்டதாம்! உயிரோடு திரும்பி வருவதே பெரிய காரியம் ஆகிவிட்டதாம்! மௌலானா ஆஸாத் ஸோபானி வேறொரு வண்டியில் போனபடியால் அவருடைய கதி என்ன ஆயிற்று என்று தங்களுக்குத் தெரியாது என்று சொன்னார்கள். அடுத்தாற்போல் இன்னும் சில கிலாபத் இயக்கத் தொண்டர்கள் அதேமாதிரி அடிபட்டு மேலெல்லாம் இரத்தம் ஒழுகத் திரும்பி வந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு மண்டையில் பட்ட அடியினால் மூளை கலங்கிப் போயிருந்தது. "நாங்களும் எங்கள் இரத்தத்தைக் கொடுத்தோம்!" "நாங்களும் எங்கள் இரத்தத்தைக் கொடுத்தோம்" என்று அவர் இடைவிடாமல் கூச்சல் போட்டார்.

மகாத்மா அச்சமயம் "ஒரு பெருங்கறை" என்ற கட்டுரையை "எங் இந்தியா" வுக்கு எழுதிக் கொண்டிருந்தார். பின்வருமாறு அவர் எழுதினார்:-

”இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே ஆறு ஹிந்து முஸ்லிம் தொண்டர்கள் மண்டைஉடைபட்டு இரத்தக் காயங்களுடன் திரும்பி வந்திருக்கிறார்கள். ஒருவர் மூக்கு எலும்பு உடைந்து உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலையில் வந்திருக்கிறார். இவர்கள் பரேலில் தொழிலாளிகளின் டிராம் வண்டிகளைத் தடை செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களைச் சாந்தப்படுத்துவதற்காகச் சென்றார்கள். ஆனால் பரேலுக்கு அவர்களால் போய்ச்சேர முடியவில்லை; அவர்களுக்கு நேர்ந்தது என்ன வென்பதை அவர்களுடைய காயங்களே சொல்லுகின்றன.

“ஆகவே, பொதுஜனச்சட்டமறுப்பை ஆரம்பிக்கலாம் என்னும் என் நம்பிக்கை மண்ணோடு மண்ணாகி விட்டது. சட்டமறுப்புக்கு வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை, அத்தகைய நிலைமை பர்தோலியில் குடிகொண்டிருப்பது மட்டும் போதாது. பம்பாயில் பலாத்காரம் தலை விரித்தாடும்போது பர்தோலியையும் பம்பாயையும் தனித் தனிப் பிரிவுகளாகக் கருதமுடியாது.

“ஒத்துழையாமைத் தலைவர்கள் பம்பாய்ச் சம்பவங்களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். அவர்கள் நகரத்தில் பல பகுதிகளிலும் சென்று ஜனங்களைச் சாந்தப்படுத்த முயற்சி செய்தது உண்மைதான்; பல உயிர்களைக் காப்பாற்றி யிருப்பதும் உண்மைதான். ஆனால் இதைக்கொண்டு நாம் திருப்தியடைவதற் கில்லை. இதைக் காரணமாய்ச் சொல்லி வேறிடத்தில் சட்ட மறுப்பை நடத்தவும் முடியாது. நேற்று நமக்கு ஒரு சோதனை நாள். அந்த சோதனையில் நாம் தவறி விட்டோம். வேல்ஸ் இளவரசருக்கு எந்த விதமான தீங்கும் நேராமல் பாதுகாப்பதாக நாம் சபதம் செய்தோம். இளவரசரை வரவேற்பதற்காகப் போயிருந்த ஒரு தனி மனிதருக்கு அவமானமோ, பலாத்காரமோ நேர்ந்தாலும், நம்முடைய சபததில் நாம் தவறியதேயாகும். இளவரசரின் வரவேற்புக்கு போகாமலிருக்க நமக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அவ்வளவு உரிமை வரவேற்புக்குப் போக மற்றவர்களுக்கு உண்டு.மற்றவர்களின் உரிமைக்குப் பங்கம் செய்தது நம்முடைய விரத பங்கமே யாகும். என்னுடைய சொந்தப் பொறுப்பையும் நான் தட்டிக் கழிக்க முடியாது. புரட்சி ஆவேசத்தை உண்டாக்கியதில் மற்றவர்களைக் காட்டிலும் நான் அதிகமாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். அந்த ஆவேசத்தை நான் கட்டுக்குள் நிலை நிறுத்திவைக்க இயலாதவனாகி விட்டேன். அதற்கு நான் பிராயச் சித்தம் செய்தாக வேண்டும். இந்தப் போராட்டத்தைத் தார்மீக அடிப்படையிலேயே நான் தொடங்கி யிருக்கிறேன். உபவாச விரத்திலும் பிரார்த்தனையிலும் நான் பூரண நம்பிக்கை உள்ளவன். ஆகவே, இனிமேல் சுயராஜ்யம் சித்தியாகும் வரையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இருபத்திநாலு மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பது என்று சங்கல்பம் செய்து கொள்கிறேன்.

"பம்பாய்ச் சம்பவங்களினால் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் காங்கிரஸ் காரியக் கமிட்டியார் சீர்தூக்கிப் பார்த்து பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்கலாமா என்று முடிவு செய்யவேண்டும். பொது மக்களிடையில் பரிபூரண அஹிம்சை நிலவினாலன்றி என்னால் சட்ட மறுப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்னும் முடிவு எனக்கு மிக்க வருத்தமளிக்கிறது. இது என்னுடைய சக்தியின்மைக்கு அத்தாட்சிதான். ஆனால் நாளைக்கு என்னை ஆளும் இறைவன் முன்னால் நிற்கும்போது, என்னுடைய உண்மையான யோக்யதையுடன் நிற்க விரும்புகிறேனே யல்லாமல் உள்ளதைக் காட்டிலும் அதிக சக்திமானாக வேஷம் போட்டுக்கொண்டு நிற்க விரும்பவில்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாடான பலாத்காரத்தை நான் எதிர்ப்பது போலவேபொது மக்களின் கட்டுப்பாடற்ற பலாத்காரத்தையும் எதிர்க்கிறேன். இந்த இருவகை பலாத்காரங்களுக்கு மிடையில் நசுக்கப்பட்டு உயிர் துறக்க நேர்ந்தால் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை!"

மேற்கண்டவாறு மகாத்மா காந்தி எழுதிய கட்டுரையில் வாரா வாரம் அவர் திங்கட்கிழமை உபவாசம் இருக்க நேர்ந்த காரணம் இன்னதென்பதைக் காணலாம். ஆனால் இவ்விதம் வாரத்துக்கு ஒரு நாள் உபவாச விரதம் மகாத்மாவின் ஆத்ம சோதனைக்கு மட்டுமே பயன்படுவதாயிற்று. மக்களைத் தூய்மைப் படுத்துவதற்காக அவர் இன்னும் நீண்டகால உபவாச விரதங்கள் இருக்கும்படி நேர்ந்தது. ஏன்? பம்பாய் நிலைமை காரணமாகவே அவர் நீடித்த உண்ணாவிரதம் இருக்கும்படி ஆயிற்று. அதைப்பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: