சனி, 14 ஜூலை, 2018

1118. காந்தி -35

29. "என் மதம்"
கல்கி

கல்கி’ யின்‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( தொகுதி 2 ) என்ற நூலில்   29-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. ]
===
மகாத்மா காந்தி "எங் இந்தியா"வுக்குக் கட்டுரை எழுதி முடித்துச் சிறிது நேரத்துக்கெல்லாம் மௌலானா ஆஸாத் ஸோபானி திரும்பி வந்து சேர்ந்தார். தாம் காந்தி குல்லா அணியாததால் விபத்து ஒன்றுமில்லாமல் தப்பிப் பிழைத்து வந்ததாக அவர் சொன்னார். பார்ஸிகளும் கிறிஸ்துவர்களும் காந்தி குல்லா அணிந்தவர்களைக் குறிப்பிட்டுத் தாக்கி அடிப்பதாகத் தெரிவித்தார்.

மற்றொரு பக்கத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு பார்ஸிகளையும் கிறிஸ்துவர்களையும் தாக்குவதாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. கிறிஸ்தவர்களும் பார்ஸிகளும் சர்க்காருடைய அநுமதி பெற்றுத் துப்பாக்கிகளும் ரிவால்வர்களும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். ஹிந்துக்கள்-முஸ்லிம்களிடம் தடிகள்தான் ஆயுதங்களாக இருந்தன. ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக யிருந்தனர். இவ்விதமாக இருதரப்பிலும் பலாத்காரச் செயல்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிகமாகி வந்தன.

சில பார்ஸி இளைஞர்கள் துப்பாக்கி சகிதமாக ஸ்ரீ கோவிந்த வஸந்த் என்னும் மிட்டாய்க் கடைக்காரரின் வீட்டுக்குள் பலாத்காரமாகப் புகுந்து அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் செய்தி மகாத்மாவின் ஜாகையை எட்டியபோது அந்த ஜாகையில் வசித்த மகாத்மாவின் சகாக்கள் பெருங் கவலையில் ஆழ்ந்தார்கள். அந்த மாதிரி முரட்டுப் பார்ஸி இளைஞர்கள் சிலர் மகாத்மாவின் ஜாகைக்குள்ளும் புகுந்து அவரைத் துன்புறுத்த முற்பட்டால் என்ன செய்கிறது? மகாத்மாவுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் பிறகு பம்பாயில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதில் சந்தேகமில்லை. ஹிந்து-முஸ்லிம்கள் அப்போது பார்ஸிகளின்மீது பழிவாங்கத் தொடங்குவதை யாராலும் நிறுத்த முடியாது.

இப்படிக் காந்தியின் சகாக்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் மகாத்மாவோ தன்னைப் பற்றிச் சிந்திக்கவே யில்லை. இந்தப் பலாத்காரப் பிசாசின் தாண்டவத்தை நிறுத்துவது எப்படி என்பதைப் பற்றியே சிந்தனை செய்தார். அவர் வெளியேறிச் சென்று ஜனங்களுக்கு நற்போதனை செய்வதால் பலன் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றவில்லை. முதல் நாள் அவ்விதம் செய்து பார்த்ததில் பலன் ஏற்படவில்லையல்லவா?

மகாத்மாவின் அநுதாபமெல்லாம் பார்ஸிகள் பக்கத்திலேயே இருந்தது. ஏனெனில் முதலில் அவர்களைப் பலாத்காரமாகத் தாக்கத் தொடங்கியவர்கள் ஹிந்து-முஸ்லிம்கள்தான். முதலில் தாக்கியது மட்டும் அல்ல; செய்யத் தகாத மதத் துவேஷக் காரியம் ஒன்றையும் செய்து விட்டார்கள். பார்ஸிகள் தங்களுடைய மதத்தைத் தொந்தரவின்றிக் கடைப்பிடிப்பதற்காக ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் இந்தியாவைத் தேடி வந்தவர்கள். அராபிய முஸ்லிம்கள் பாரஸீகத்தை வென்றபோது, முஸ்லிம் ஆட்சியில் மத சுதந்திரம் இராது என்று இந்தியாவுக்கு அவர்கள் வந்தார்கள். இந்தியாவில் அவர்கள் கோரிய மத சுதந்திரம் கிடைத்தது. பார்ஸிகள் அக்னி தேவனைக் கடவுள்என்று பூஜிப்பவர்கள். ஆகையால் என்றும் அணையாத தீயை அவர்கள் தங்கள் கோயிலில் வைத்து வளர்த்துப் பூஜித்து வந்தார்கள். வேல்ஸ் இளவரசர் விஜயத்தன்று நடந்த களேபரத்தில் ஹிந்து முஸ்லிம்கள் அந்தப் பார்ஸிக் கோயிலில் புகுந்து அணையா நெருப்பை அணைத்து விட்டார்கள். இதுதான் பார்ஸி சமூகத்தினருக்கு என்றுமில்லாத ஆத்திரத்தை மூட்டிவிட்டது. தங்கள் மத சுதந்திரத்துக்குப் பங்கம் நேரிடுவதைப் பொறுப்பதைக் காட்டிலும், பம்பாயிலுள்ள பார்ஸிகள் அனைவரும் உயிரை இழக்கத் தயாராகக் கிளம்பி விட்டார்கள். இந்த விவரங்களை அறிந்த காந்திஜி பார்ஸிகள்மீது குற்றம் இருப்பதாக எண்ணவில்லை. இந்த நிலைமைக்குக் காரணம் ஹிந்து-முஸ்லிம்கள் என்றே கருதினார்.

அன்று இரவு வெகு நேரம் வரையில் பம்பாய்ப் பிரமுகர் அடிக்கடி வந்து மகாத்மாவிடம் கலவர நிலைமையைப் பற்றிச் சொல்லி வந்தார்கள். இரவு வந்த பிறகும் கலவரங்கள் அடங்கின வென்று தெரியவில்லை. பார்ஸி-கிறிஸ்துவ சமூகத்தினரிடமிருந்து மகாத்மாவுக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அவரால் தங்கள் சமூகத்துக்கு நேர்ந்த இன்னல்களைப் பற்றி அக்கடிதங்களில் எழுதியிருந்ததுடன் மகாத்மாவை வெகுவாக நொந்திருந்தார்கள். சிலர் வசைமாரியும் பொழிந்திருந்தார்கள். சொத்துக்களைப் பறிகொடுத்தவர்களும் அடிபட்டவர்களும் உறவினர்களை இழந்தவர்களும் வேதனைப்பட்டு எழுதியிருந்தார்கள். இதெல்லாம் மகாத்மாவின் மனவேதனையை அதிகமாக்கி விட்டன.

அன்றிரவு கடைசியாக வந்த ஸ்ரீ ஜம்னாதாஸ் துவாரகாதாஸ் காந்திஜியிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனார். இரவு பத்தரை மணிக்கு மகாத்மா படுத்தார். ஆனால் அவர் தூங்கவில்லை. தூக்கம் எப்படி வரும்? அதே அறையில் மகாத்மாவின் காரியதரிசியான ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவரும் படுத்திருந்தார். அவர் சற்று நேரத்துக் கெல்லாம் தூங்கிப் போனார்.


இரவு மணி 3-30 இருக்கும். மகாத்மா எழுந்து மின்சார விளக்கைப் போட்டார். உடனே ஸ்ரீ கிருஷ்ணதாஸும் விழித்துக் கொண்டார். "பென்ஸிலும் காகிதமும் கொண்டு வாரும்!" என்றார் மகாத்மா. உடனே ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கொண்டு வந்தார். மகாத்மா விரைவாக ஏதோ எழுதினார். பிறகு ஸ்ரீ கிருஷ்ணதாஸிடம் கொடுத்து அதன் பிரதிகள் மூன்று எடுக்கச் சொன்னார். மகாத்மா எழுதியது பம்பாய் வாசிகளுக்கு ஒரு விண்ணப்பம். அதில் மிகக் கடுமையான ஒரு விரதத்தைத் தாம் எடுத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார். பம்பாயில் கலவரம் நிற்கும் வரையில் தாம் உணவருந்தா விரதம் எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். விண்ணப்பத்தின் முழு விவரம் பின்வருமாறு:-

"பம்பாய் நகரின் ஆடவர்களே! பெண்மணிகளே! சென்ற இரண்டு தினங்களாக என் மனம் படும் வேதனையை நான் வார்த்தைகளால் உங்களுக்கு விவரிக்க முடியாது. இரவு 3-30-க்கு அமைதியான மன நிலையில் நான் இதை எழுதுகிறேன். இரண்டு மணி நேரம் தியானமும் பிரார்த்தனையும் செய்த பிறகு நான் ஒரு முக்கியமான முடிவுக்கு வந்திருக்கிறேன். அதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

பம்பாயில் உள்ள ஹிந்து-முஸ்லிம்கள் பார்ஸிகளுடனும் கிறிஸ்துவர்களுடனும் சமாதானம் செய்து கொள்ளுகிற வரையில் நான் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் உட்கொள்ளப் போவதில்லை.

சென்ற இரண்டு தினங்களில் பம்பாயில் நான் பார்த்த சுயராஜ்யம் நாற்றம் எடுத்து என் மூக்கைத் துளைக்கிறது. பம்பாயில் கிறிஸ்தவர்கள், பார்ஸிகள்-யூதர்கள் சிறு தொகையினர். பெரும்பாலானோரான ஹிந்து முஸ்லிம்களின் ஒற்றுமை மேற் கண்டவர்களுக்குப் பெரும் அபாயமாய் முடிந்திருக்கிறது. ஒத்துழையாதாரின் அஹிம்சையைவிட மோசமாகிவிட்டது. அஹிம்சை என்று வாயால் சொல்லிக்கொண்டு நம்முடன் மாறுபட்டவர்களை நாம் துன்புறுத்தி யிருக்கிறோம். இது கடவுளுக்குத் துரோகமாகும். கடவுள் ஒருவரே. சிலர் வேதத்தின் வாயிலாகவும் சிலர் குர்-ஆன் மூலமாகவும் வேறு சிலர் (பார்ஸிகள்) ஸெண்டவஸ்தா மூலமாகவும் கடவுளை அறியப் பார்க்கிறார்கள். ஆனால் எல்லாரும் அறியப் பார்க்கும் கடவுள் ஒருவரேதான். அவர் சத்தியத்தின் வடிவம்; அன்பின் உருவம். இந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கவே நான் உயிர் வாழ்கிறேன். இல்லாவிட்டால் உயிர் வாழ்வதிலேயே எனக்கு விருப்பமில்லை. நான் எந்த இங்கிலீஷ்காரனையும் வெறுக்க முடியாது; வேறு எந்த மனிதனையும் வெறுக்க முடியாது. இங்கிலீஷ்காரன் இந்தியாவில் அமைத்திருக்கும் ஸ்தாபனங்களை எதிர்த்து நான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால் அமைப்பை நான் கண்டிக்கும்போது அந்த அமைப்பை நடத்தும் மனிதர்களை வெறுக்கிறேனென்று தப்பாக நீங்கள் உணரக்கூடாது. நான் என்னை நேசிப்பது போலவே இங்கிலீஷ்காரனையும் நேசிக்கிறேன். இதுதான் என் மதம். இதை நான் இந்தச் சமயத்தில் நிரூபிக்கா விட்டால் கடவுளுக்குத் துரோகம் செய்தவனாவேன்.

பார்ஸிகளைப் பற்றி நான் என்ன சொல்ல? பார்ஸிகளின் கௌரவத்தையும் உயிர்களையும் ஹிந்து-முஸ்லிம்கள் பாதுகாக்கா விடில், சுதந்திரத்துக்குச் சிறிதும் தகுதியற்றவர்களாவோம். சமீபத்திலேதான் அவர்கள் தங்களுடைய தாராள குணத்தையும் சிநேகப் பான்மையையும் நிரூபித்தார்கள். பார்ஸிகளுக்கு முஸ்லிம்கள் முக்கியமாகக் கடமைப் பட்டிருக்கிறார்கள். கிலாபத் நிதிக்குப் பார்ஸிகள் ஏராளமாய்ப் பணம் உதவியிருக்கிறார்கள். ஆகையால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு பூரண பச்சாதாபம் காட்டினாலன்றி பார்ஸிகளின் முகத்தில் என்னால் விழிக்க முடியாது. இந்தியக் கிறிஸ்துவர்கள் அடைந்த கஷ்டங்களுக்குப் பரிகாரம் செய்தாலன்றி கிழக்காப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும் ஸ்ரீ ஆண்ட்ரூஸின் முகத்தை என்னால் பார்க்க முடியாது. கிறிஸ்தவர்களும் பார்ஸிகளும் தற்காப்புக்காகவோ, பழிவாங்குவதற்காகவோ செய்திருக்கும் காரியங்களை நாம் பொருட்படுத்தக் கூடாது.

என் நிமித்தமாகவே பம்பாயிலுள்ள இந்தச் சிறுபான்மைச் சகோதர சகோதரிகளுக்கு இப்படிப்பட்ட கஷ்டங்கள் நேர்ந்து விட்டன. அவர்களுக்குப் பூரண பரிகாரம் செய்து கொடுப்பது என் கடமை. ஒவ்வொரு ஹிந்து முஸ்லிமின் கடமையும் ஆகும். ஆனால் என்னைப் பின்பற்றி வேறு யாரும் பட்டினி விரதம் தொடங்க வேண்டாம். இதய பூர்வமான பிரார்த்தனையின் காரணமாக உபவாசம் இருக்கத் தோன்றினால்தான் உபவாசம் இருக்கலாம். அதற்கு அந்தராத்மாவின் தூண்டுதல் அவசியம். ஆகையால் ஹிந்து முஸ்லிம்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டாம். அவரவர்கள் வீட்டிலிருந்து கடவுளிடம் மன்னிப்புக் கேட்கட்டும்.

என்னுடைய சகாக்கள் என்பேரில் அனுதாபப்பட வேண்டிய அவசியமில்லை. அது வீண்வேலை. அதற்குப் பதிலாக நகரெங்கும் சென்று கலகம் செய்பவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முயலவேண்டும். நம்முடைய போராட்டத்தில் நாம் முன்னேறி வெற்றி பெற வேண்டுமானால் முதலில் நம்முடைய இருதயங்களைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

என் முஸ்லிம் சகோதரர்களுக்கு விசே ஷமாக ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். நான் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பரிபூரணமாகப் பாடுபட்டு வருகிறேன். கிலாபத் இயக்கத்தை ஒரு பரிசுத்த இயக்கமாகக் கருதி அதில் ஈடுபட்டிருக்கிறேன். அலி சகோதரர்களிடம் என்னைப் பூரணமாக ஒப்புவித்திருக்கிறேன். பம்பாயில் நடந்த இந்த நாள் இரத்தக்களரியில் முஸ்லிம்கள் அதிகப் பங்கு எடுத்திருப்பதாக அறிந்து என் மனம் வருந்துகிறது. ஒவ்வொரு முஸ்லிமையும் நான் மன்றாடி வேண்டிக்கொள்கிறேன். இந்த இரத்தக் களரியைத் தடுத்து நிறுத்த அவர்கள் முழு முயற்சியும் செய்யவேண்டும்.

கடவுள் நமக்கு நல்லறிவையும் நல்ல காரியத்தைச் செய்வதற்கு வேண்டிய தைரியத்தையும் அளிப்பாராக.
இங்ஙனம், உங்கள் ஊழியன், 'எம். கே. காந்தி'
மேற்கண்ட விண்ணப்பத்தை மகாத்மா காந்தி எழுதிக்கொடுத்தார். அதை இங்கிலீஷ், குஜராத்தி, மராத்தி. உருது ஆகிய நாலு பாஷைகளிலும் அச்சிட்டுப் பம்பாய் நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விநியோகித்தார்கள். இந்த முயற்சிக்கு ஒரு நாள் முழுதும் ஆகி விட்டது. பலன் இன்னும் தெரிந்தபாடில்லை. மகாத்மாவோ தண்ணீரைத் தவிர வேறொன்றும் அருந்த வில்லை. ஒரு நிமிடங்கூடச் சும்மா இருக்கவும் இல்லை. ஊழியர்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தார்கள். தாங்கள் செய்த காரியங்களைச் சொல்லி விட்டு, செய்ய வேண்டியதற்கு யோசனை கேட்டுக் கொண்டு போனார்கள். "உண்ணா விரதம் இருக்க ஆரம்பித்ததிலிருந்து என் மனம் அமைதி யடைந்திருக்கிறது. களைப்பே தெரியயவில்லை!" என்று மகாத்மா அடிக்கடி தம் சகாக்களிடம் உண்ணாவிரதம் ஆரம்பித்ததோடு மகாத்மா நிற்கவில்லை. ஸ்ரீ தேவதாஸ் காந்திக்குத் தந்தி கொடுத்து வரவழைத்தார். தம்முடைய உண்ணாவிரதத்தினாலும் பம்பாய்க் கலகம் நிற்காமற் போனால் அஹிம்சையை நிலை நாட்டுவதற்காகத் தமது குமாரனைப் பலியாக அனுப்பப் போவதாகச் சொன்னார்.

இதைக் கேட்ட மகாத்மாவின் சகாக்கள் பெரிதும் வருத்த மடைந்தார்கள். அமைதியை நிலை நாட்டுவதற்காகப் பிரம்மப் பிரயத்தனம் செய்தார்கள். ஸ்ரீமதி சரோஜினி நாயுடு, மௌலானா ஆஸாத் ஸோபானி, ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீ பரூச்சா ஆகியவர்கள் பம்பாய் நகரமெல்லாம் பம்பரம் போலச் சுழன்றார்கள். ஜனங்களின் பலாத்காரம் காரணமாக மகாத்மா பட்டினி கிடப்பதை எடுத்துரைத்தார்கள். எங்கேயாவது கலகம் நடக்கும் போலிருப்பதாகச் செய்தி வந்தால் அந்த இடத்துக்குப் பறந்து ஓடினார்கள். ஜனங்களிடம் பேசிக் கலகம் நேராமல் தடுத்து அமைதியை நிலை நாட்டினார்கள்.

மறுநாள் 20-ஆம் தேதி மகாத்மாவின் ஜாகையில் பம்பாய்ப் பிரமுகர்களின் கூட்டம் ஒன்று நடந்தது. ஹிந்து, முஸ்லிம், பார்ஸி பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அமைதி நிலைநாட்டும் வழிகளைப் பற்றி விவாதங்கள் நடந்தன. பார்ஸிகள் சிறு பான்மையாரானபடியாலும், முதலில் தாக்கப்பட்டவர்களான படியாலும், சமாதானத்துக்குப் பார்ஸிகள் சொல்லும் நிபந்தனை களை மற்ற வகுப்பார் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று காந்திஜி சொன்னார். அதை முதலில் மற்றவர்கள் மறுத்தார்கள். மகாத்மா வற்புறுத்தியதால் இணங்கினார்கள். பார்ஸிகளிடம் சமாதானம் ஏற்படுத்தும் பொறுப்பை ஒப்புவித்ததும் அவர்களும் நியாயமான நிபந்தனைகளையே சொன்னார்கள். மற்றவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

அன்று சாயங்காலம் மோட்டார் லாரிகளில் ஹிந்து- முஸ்லிம்-பார்ஸி பிரமுகர்கள் கோஷ்டி கோஷ்டியாக ஏறிக்கொண்டு நகரெங்கும் சுற்றினார்கள். சமூகங்களுக்குள் நல்லபடியான சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்துக் கொண்டே போனார்கள். இவ்விதம் எல்லாப் பிரமுகர்களும் தீவிர முயற்சி செய்ததின் பயனாக, இரண்டு நாளில் பம்பாய் நகரமெங்கும் பூரண அமைதி ஏற்பட்டு விட்டது.

21-ஆம் தேதி இரவு பம்பாயில் பலாத்கார நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவில்லை என்று தெரியவந்தது. 22-ஆம் தேதி காலையில் மகாத்மாவின் ஜாகையில் மறுபடியும் எல்லா சமூகப் பிரதிநிதிகளும்கூடி மகாத்மாவை உணவு அருந்தும்படி கேட்டுக் கொண்டார்கள்.

"இந்த அமைதி நீடித்திருப்பதற்குப் பிரயத்தனம் செய்வதாக நீங்கள் அனைவரும் சேர்ந்து வாக்குறுதி கொடுத்தால் என் விரதத்தை முடிவு செய்கிறேன்" என்று மகாத்மா கூறினார். அவ்வாறே பிரமுகர்கள் வாக்குறுதி அளித்தார்கள். அதன் பேரில் சில திராட்சைப் பழங்களையும் ஒரு ஆரஞ்சுப் பழத்தையும் அருந்தி மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தை முடிவுசெய்தார்! பம்பாய் மக்கள் அனைவரும் அந்தச் சந்தோஷச் செய்தியைக் கேட்டுப் பெருமூச்சு விட்டு மகிழ்ந்தார்கள்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: