புதன், 13 மே, 2015

ஆர்.கே.நாராயணன் -1

அமெரிக்காவில் நான் 
ஆர்.கே.நாராயணன்

மே 13. பிரபல ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் நினைவு தினம்.

அவருடைய நாவல் மொழிபெயர்ப்புகள் ஆனந்த விகடன்  வாசகர்களுக்குப் புதியவை அல்ல. அவருடைய ‘சுவாமியும் சிநேகிதர்களும்’ விகடனில் 1937-இல் வந்திருக்கிறது. 40-இல் ‘இருட்டறை’யும் வெளியாகியுள்ளது.  அவர் எழுதிய “ தேதி குறிக்காத என் டயரி” ( My Dateless Diary )யின் பல பகுதிகளைப் பரணீதரன் மொழிபெயர்த்து விகடனில் 1963-இல் வழங்கினார். [ பரணீதரன் ( மெரினா, ஸ்ரீதர்)  நாராயணனின் தாய்மாமன் ‘கலாநிலையம்’  சேஷாசலம் அவர்களின் புதல்வர்.]

அந்தக் கட்டுரைத் தொடரில் பல புகைப்படங்களும்,  நாராயணனின் சோதரர், பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் வரைந்த கோட்டுப் படங்களும் விகடனில் வந்தன. அந்தத் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி இதோ :ஸ்டேஷன் பூராவும் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒருவராவது சரியான தகவல் கொடுப்பதாகத் தெரியவில்லை. அருகில் இருக்கும் ஆல்பனியைப் பற்றிக்கூட விவரம் தெரியாமலிருக்கிறார்களே என்பதை நினைத்தபோது, ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஏதோ கடல் கடந்து செல்லும் ஒரு பிரயாணத்திற்கு நான் வழி கேட்டுவிட்டது போல் எல்லோரும் விழித்தார்கள்!


ஏதாவது ஒரு வண்டியைப் பிடித்துப் போய்விடலாம் என்ற எண்ணத்தில் நடந்துகொண்டிருந்தேன். மனித நடமாட்டமேயில்லாத ஒரு மூலையில் அந்த இரண்டு ஆசாமிகள் மறுபடியும் என்னை வழிமறித்தார்கள். இம்முறையும் என் டிக்கெட்டை நான் இழக்கத் தயாராக இல்லை. ஆகவே, அதை உள் பாக்கெட்டில் வைத்துப் பத்திரப்படுத்தினேன்.அவர்களில் ஒருவன், என் கோட்டு காலரைப் பற்றிக்கொண்டு, "உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும்" என்றான். மற்றொருவனோ, சற்றுத் தொலைவில் போய் நின்று கொண்டு, யாராவது வருகிறார்களா என்று கழுத்தை நீட்டி அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தான்.
என்னருகில் இருந்தவன், "இதோ பாரு, வீண் சிரமம் கொடுக்காதே! நான் சொல்வதை மரியாதையாகக் கேளு" என்று சொல்லியபடி தன் கையை உயர்த்திப் பயமுறுத்தி னான். "உன் பல்லை உடைத்து விடுவேன், ஜாக்கிரதை! என்ன புரிகிறதா?" என்றான்.

அதன் அர்த்தம் எனக்கு மிக நன்றாகப் புரிந்தது. அவன் உருவத் தைப் பார்த்ததுமே, சொல்வதை உடனே செய்யக்கூடியவன் என்று தெளிவாகத் தெரிந்தது. எனக்கு உடலெல்லாம் நடுங்கிற்று. 'குப்' பென்று வியர்த்துவிட்டது. அடுத்த நாள் பத்திரிகையில் வெளியாகப் போகும் ஒரு தலைப்பு, என் மனக் கண் முன்னால் மின்னல் போல் பளிச்சிட்டது.

'கீ ஸ்டேஷன் அருகில் இந்திய நாவலாசிரியர் படுகொலை!'

"உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டேன் நிதானமாக.

தெரு முனையில் காவல் புரிந்து கொண்டிருந்தவன், உள்ளூர் மொழியில் ஏதோ சொன்னான். உடனே, என் காலரைப் பற்றிக் கொண்டிருந்தவன் தன் நிஜார் பாக்கெட்டில் கையைவிட்டான். 'அவன் துப்பாக்கியை எடுக்கப் போகிறான்' என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

 [ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

I do not remember he ever used the name Naryan. It should be Narayanan. Government of India Hindiized his name in the stamp !

phantom363 சொன்னது…

I think he always addressed himself as R.K.Narayan.

https://en.wikipedia.org/wiki/R._K._Narayan

rajamani

கருத்துரையிடுக