வள்ளலாரும் பாரதியாரும்
ஊரன் அடிகள்
அக்டோபர் 5. வள்ளலாரின் பிறந்த தினம்.
====
வள்ளலாரும் பாரதியாரும் பிறவிக் கவிஞர்கள். விளையாடும் பிள்ளைப் பருவத்திலேயே கவிபாடும்
ஆற்றல் பெற்றிருந்தனர். பாரதியாருக்குத் தொழிலே கவிதை. நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்
என்ற அவர் வாக்கை எண்ணிப் பார்க்க வேண்டும்.
வள்ளலாரின் கவிக்கொடை திருவருட்பா.
பாரதியாரின் கவிக்கொடை பாரதியார் கவிதைகள்.
இருபெருங் கொடைகளும் உலகம் உள்ள அளவும் நிலைத்திருக்கும்.
பாரதியார் வள்ளலாரைப் போற்றி
எழுதியது
சுதேசமித்திரன் இதழில் தமிழ்நாட்டில் விழிப்பு என்ற தலைப்பில் பாரதியார் இருவேறு
சமயங்களில் எழுதிய இரண்டு கட்டுரைகளில் வள்ளலாரைக் குறிப்பிட்டுப் போற்றி எழுதியுள்ளார்.
ராமலிங்க சுவாமிகளும், 'சுதேசமித்திரன் சுப்பிரமணிய
அய்யரும் இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக
விளங்கினார். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார்.
அவரை தமிழ்நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகுதான், வங்கம் மஹாராஷ்டிரம் முதலிய ஹிந்து தேசத்து மாகாணங்கள் அவருடைய
பெருமையை உணர்ந்தன.
※ ※ ※ ※ ※
அடுத்த விஷயம் மத பேதங்களைக் குறித்தது. இதில் பாரத தேசம் முக்கியமாகத் தமிழ்நாடு
- இன்று புதிதாக அன்று, நெடுங்காலமாக தலைமையொளி
வீசிவருவதால் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ராமானுஜர் தமிழ்நாட்டில் பிறந்தவர் அன்றோ? ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதாரம் புரிந்தது தமிழ்நாட்டிலன்றோ? பறையனைக் கடவுளுக்கு நிகரான நாயனாராக்கிக் கோயில் வைத்தது தமிழ் நாட்டிலன்றோ? சிதம்பரம் போயிலுக்குள்ளே நடராஜாவுக்கு ஒரு சந்நதி, பெருமாளுக்கு ஒரு சந்நதி, ஸ்ரீரங்கத்திலே, பெருமாளுக்கு ஒரு துலுக்கப்பெண்ணைத் தேவியாக்கித் துலுக்க நாச்சியார்
என்று பெயர் கூறி வணங்குகிறார்கள். "எம்மதமும் சம்மதம்" என்றார் ராமலிங்க
சுவாமி.
உலகத்திலுள்ள மதபேதங்களையெல்லாம் வேருடன் களைந்து ஸர்வ ஸமய ஸமரஸக் கொள்கையை நிலைநாட்ட
வேண்டுமானால், அதற்குத் தமிழ்நாடே சரியான
களம். உலக முழுவதும் மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மஹான்கள் இப்போது தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறார்கள்.
அது பற்றியே பூமண்டலதில் புதிய விழிப்பு தமிழகத்தே தொடங்குமென்கிறோம்.
"எம்மதமும் சம்மதம் என்றார் ராமலிங்க
சுவாமி" என்று பாரதியார் எழுதுகிறார்.
அக்காலம் அருட்பா மருட்பா வாதங்கள் நாட்டில் பரவலாக நிகழ்ந்து
ஓய்ந்திருந்த காலம். எங்கும் வள்ளலாரைப் பற்றிய பேச்சாக இருந்தது. திருவருட்பாப் புத்தகங்கள்
மூன்று பதிப்புகள் வெளிவந்து பரவியிருந்தன. பத்திரிகையாசிரியரும் அறிஞரும் கவிஞருமான
பாரதியார் வள்ளலாரைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். திருவருட்பாப் பாடல்களையும் படித்திருந்தார்.
பாரதியாருக்கு வள்ளலாரைத் தெரிந்திருந்தது என்பதற்கு அவர் வள்ளலாரைக் குறிப்பிட்டுப்
பாராட்டி எழுதியிருப்பதே போதுமான சான்று. எம்மதமும் சம்மதம் என்றார் இராமலிங்க ஸ்வாமி
என்று பாரதியார் எழுதுவதற்குப் பின்வரும் திருவருட்பாப் பாடல் ஆதாராமாகலாம்.
எம்மத நிலையும் நின்னருள் நிலையில்
இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்
தனித்துவே றெண்ணிய துண்டோ
செம்மலுன் பாதம் அறியநான் அறியேன்
சிறிதும் இங் கினித்துயர் ஆற்றேன்
இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள
தியற்றுவ துன்கடன் எந்தாய்.
- திருஅருட்பா - 3639
"உலகத்திலுள்ள மதபேதங்களையெல்லாம் வேருடன்
களைந்து சர்வசமய சமரசக் கொள்கையை நிலை நாட்ட வேண்டுமானால் அதற்குத் தமிழ்நாடே சரியான
களம்" என்கிறார் பாரதியார். சர்வ சமய சமரசக் கொள்கையை உருவாக்கி களத்தைச் செப்பனிட்டு
வைத்தவர் வள்ளலாரே.
"உலக முழுவதும் மதவிரோதங்களில்லாமல்
ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படிச் செய்யவல்ல மகான்கள் இப்போது தமிழ்நாட்டில்
தோன்றியிருக்கிறார்கள்" என்று பாரதியார் எழுதுவது வள்ளலாரை முதலாகக் கொண்டுதான்.
"ராமலிங்க சுவாமிகளும், சுதேசமித்திரன் சுப்பிரமணிய அய்யரும் இவர்களைப் போன்ற வேறு சிலமகான்களும் தமிழ்நாட்டின்
புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர்" என்று பாரதியார் எழுதுகிறார்.
தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்கள் என்று பாரதியார் குறிப்பிடுவதில்
வள்ளலாரையே முதலிற் குறிப்பிடுகிறார். வள்ளலாரின் தாக்கம் பாரதியாரிடம் நிரம்ப உண்டு
என்பதற்குப் பாரதியாரின் இவ்வெழுத்துகள், வள்ளலாரைப் பெயர் குறிப்பிட்டு எழுதும்
இவை, நேர் ஆதாரங்களாகும். வள்ளலார் பாரதியார் கருத்தொத்த இடங்களைப்
பாரதியார் கவிதைகளில் பல இடங்களிற் காண்கிறோம்.
வள்ளலாரின் திருவருட்பாப்பாடலொன்றைப்
பாரதியார் திரித்துப் பாடியது
பிரிட்டிஷ் ஆட்சியில் வைஸ்ராய் (கவர்னர் ஜெனரல்) கவர்னர்
ஆகிய பெரும் பதவிகளில் இருந்தவர்கள் இந்திய மக்களுக்கு நல்லது செய்வது போல நடித்துப்
பல கெடுதல்களைச் செய்தார்கள். மார்லி என்பவர் (லார்டுமார்லி) பிரிட்டனில் இந்திய மந்திரியாக
இருந்தார். கர்சன் (லார்டு கர்சன்) இங்கு டெல்லியில் கவர்னர் ஜெனரலாக இருந்தார். வங்காளப்
பிரிவினையையும் புதிய கல்வித் திட்டத்தையும் கொண்டு வந்தார். இந்திய மக்களுக்கு நன்மை
பயக்காத இத்திட்டங்களுக்கு லண்டன் இந்திய மந்திரி மார்லி உடந்தையாக இருந்தார்.
மார்லி, கர்சன் சீர்திருத்தங்களுக்கு இந்திய
தேசிய காங்கிரசின் எதிர்ப்பு எழுந்தது. பாரதியார் கர்சனையும் மார்லியையும் கண்டித்துக்
கட்டுரைகள் எழுதினார். ஒரு பாடலும் புனைய எண்ணினார். வள்ளலாரின் திருவருட்பாப் பாடல்
ஒன்று அவருக்குக் கைகொடுத்தது. திருவருட்பாப் பாடலைத் திரித்து, சில இடங்களில் சில சொற்களை மட்டும் மாற்றி கர்சனுக்கும் மார்லிக்கும் பொருந்துமாறு
அப்பாடலை அமைத்துவிட்டார். பாரதியார் கவிதைகளில் காணப்படும்.
களக்கமுறும் மார்லிநடம் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ?
வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ?
வளர்த்தபழம் கர்சன் என்ற குரங்கு கவர்ந் திடுமோ?
மற்றிங்ஙண் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ?
துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ, அல்லால்
தொண்டை விக்கு மோஏதும் சொல்லரிய தாமோ?
என்ற பாடல் "களக்கமறப் பொதுநடம் நான் கண்டு கொண்ட
தருணம்” என்ற திருவருட்பாப் பாடலைத் திரித்துப் பாடியதாகும். திருவருட்பாப்
பாடலைத் திரித்துப் பாடியது என்றொரு குறிப்பும் பாரதியார் கவிதையில் கொடுக்கப்பெற்றுள்ளது.
வள்ளலாரின் மூலப்பாடல் வருமாறு.
களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிரிந் திடுமோ
வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
ஜோதிதிரு வுளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
- திருவருட்பா - 3380
வள்ளலாரின் ஆன்மீகப் பாடலை, பாரதியார் அரசியற்பாடலாகச் சிறிது மாற்றித், திரித்து, அமைத்துக் கொண்டார்.
வள்ளலாரின் தாக்கம் பாரதியாரிடம் உண்டு என்பதற்கு இது
வலுவான ஆதாரமல்லவா?
பாரதியார் அடிக்கடி பாடும் திருஅருட்பாப்
பாடல்
"நான் படும்பாடு" என்ற திருவருட்பாப்
பாடலைப் பாரதியார் அடிக்கடி பாடுவார் என்று பாரதியாரின் திருமகளார் சகுந்தலா பாரதி
எழுதிய பாரதி - என் தந்தை என்ற நூலிற் கூறியுள்ளார்.
"நான்படும்பாடு" என்ற ராமலிங்க
ஸ்வாமிகளின் பாடலைக் கேதார கெளளராகத்தில் அவர் அடிக்கடி பாடுவதைக் கேட்டிருக்கிறேன்.
குளிக்கும் போதும் சாப்பிடும்போதும் எப்பொழுதும் பாடிக்கொண்டேயிருப்பார். அவர் பாடக்கூடிய
பாட்டுகள் எந்த பாஷையாக இருந்தபோதிலும் அந்த பாஷைக்குரிய, அந்தப் பாட்டுக்குரிய அர்த்தம், பாவம் இவை ததும்பி நிற்கும்."
"பாரதி - என் தந்தை " - சகுந்தலாபாரதி
பழனியப்பா பிரதர்ஸ், இரண்டாம்பதிப்பு 2003, ப. 21
திருவருட்பா மூன்றாம் திருமுறையில் திருவருள் முறையீடு
என்ற தலைப்பில் வள்ளலார் 232 பாடல்களை ஒரு தொடராகப் பாடியுள்ளார்.
எல்லாப் பாடல்களுமே கட்டளைக் கலித்துறை. அதில் ஒன்பதாவது பாடல் "நான் படும் பாடு"
என்று தொடங்கும் பாடல்.
நான்படும் பாடு சிவனே உலகர் நவிலும்பஞ்சு
தான்படு மோசொல்லத் தான்படு மோஎண்ணத் தான்படுமோ
கான்படு கண்ணியின் மான்படு மாறு கலங்கிநின்றேன்
ஏன்படுகின்றனை
என்றிரங் காய்என்னில் என்செய்வனே.
- திருவருட்பா-2179
நான்படும்பாடு பஞ்சுதான்படுமோ, சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ என்று வள்ளலார் கேட்கிறார். பஞ்சு துணியாக
ஆவதற்குள் படுபாடுபடுகிறது. பஞ்சுதான் படுமோ என்ற அடுக்குத் தொடர்கள், அவ்விளமைக் காலத்தில் வள்ளலார் இறைவன் அருளைப் பெறுவதற்காகப் பட்டபாட்டை உருக்கமாகக்
கூறுகின்றன. காட்டில் வேடர்களின் கண்ணியில் அகப்பட்டுக் கொண்ட மான் படும் பாட்டைப்
போன்று (கான்படு கண்ணியின் மான்படுமாறு) தான்கலங்கி நிற்பதாகப் படுகின்றார்.
அருள் பெறுவதற்காகப் பெருமான் அரும்பாடு பட்டார். படாதபாடுபட்டார்.
ஒன்பதாம் அகவையில் இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற பெருமான் பன்னிரண்டாம் அகவை முதல் மிகுதியும்
பாடுபடத்தொடங்கினார். ஐம்பத்தோராம் அகவையில் ஞான சித்திபெறும்வரை முப்பத்தொன்பதாண்டு
காலம் தனக்காகவும் பிறருக்காகவும் பெரும்பாடு பட்டார். பட்ட பாட்டையெல்லாம் தம் பாடல்களில், திருஅருட்பா ஆறாம் திருமுறையில் உருக்கமாகக்கூறுகின்றார்.
இப்பாடு பட எனக்கு முடியாது துரையே - 3033
படமுடியா திணித்துயரம் படிமுடியா தரசே பட்ட தெல்லாம் போதும்
- 3802
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச் சம்மதமோ
இதுதகுமோ இதுமுறையோ
இதுதருமந்தானோ - 3803
உன்னருள் அடைய நான் இங்கே
படாத பாடலாம் பட்டனன் அந்தப்
பாடெலாம் நீ அறியாயோ - 3846
பனிரண்டாண்டு தொடங்கி இற்றைப்
பகலின் வரையுமே
படியிற் பட்ட பாட்டை நினைக்கில்
மலையுங் கரையுமே. -5041
ஈராறாண்டு தொடங்கி இற்றைப்
பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில்
இரும்புங் கரையுமே. -5042
இவ்ஆறாம் திருமுறைப் பாடல்களையும் பாரதியார் படித்திருக்கக்
கூடும். எனினும் "நான்படும் பாடு சிவனே. பஞ்சுதான் படுமோ” என்ற திருவருட்பா மூன்றாம் திருமுறைப் பாடல் அவர் உள்ளத்தில் நன்றாகப் படிந்துவிட்டது.
வறுமைக் கொடுமையால் பலகாலும் படாதபாடுபட்ட பாரதியாருக்கு, வள்ளலாரின் இத்திருவருட்பாப் பாடலை
அவ்வப்போது பாடி, இறையருளை நினைவது, ஒருவகை ஆறுதலாக இருந்திருக்கக்கூடும்.
2 கருத்துகள்:
Excellent article. Well written.
அருமை ஐயா. அற்புதமாக தொகுத்து உள்ளீர்கள்
கருத்துரையிடுக