வியாழன், 16 ஜூலை, 2009

போ! வேகமாகவே போ! : மாலை மாற்று

போ! வேகமாகவே  போ!
பசுபதி




கீழ்க்கண்ட வெண்பாக்களின் ஈற்றடிகளில் ஒரு மாலைமாற்றை வைத்துப் பல தெய்வங்களைப் போற்றியுள்ளேன். ( 'அம்மன் தரிசனம்' இதழில் 2002-இல் வந்த கவிதை) 

                                 நேரிசை வெண்பாக்கள்


இம்மையில் நேரும் இடர்கள் தகர்ப்பானை,
நம்பிக்கைக் குன்றனைய நம்பனை -- மும்மதனை,
நால்வாய் விநாயகனை நாடியோர் கோவிலுக்குப்
போ!வேக மாகவே போ! (1)


[ நம்பன் = கடவுள்; நால் -தொங்கும் ; நால்வாய் = யானை  ]

                             
[ மூலம்: மணியம் ; நான் 1955-இல் வரைந்த  நகல் ]

                             


தரமிக்க கல்விபல தாரணியில் பெற்று
வரம்பிலாச் செல்வங்கள் வாய்க்க -- பிரமனின்
நாவேறும் வாணியை நாடியோர் கோவிலுக்குப்
போ!வேக மாகவே போ! (2)

[ நா +ஏறும் = நாவேறும்.]

முந்தை வினைதீர்த்து முக்தி நெறிகாட்டச்
செந்தமிழ்த் தேவனருள் தேவையே -- கந்தனை,
தேவானை காந்தனைத் தேடியோர் கோவிலுக்குப்
போ!வேக மாகவே போ! (3)

மங்களம் பொங்கிநம் வாழ்க்கை வளம்பெற
அங்கணனைப் போற்றுவோம் அன்றாடம் --
சங்கரனை,
சேவேறும் ஈசனைத் தேடியோர் கோவிலுக்குப்
போ!வேக மாகவே போ! (4)

[ சே (= எருது ) + ஏறும் = சேவேறும் ]

அல்லல் அகற்றிடும் அம்மையை, வெம்பகையை
வெல்லும் வழிசொல் விமலையை -- வல்லரி
மாவேறும் சக்தியை வந்திக்கக் கோவிலுக்குப்
போ!வேக மாகவே போ! (5)

[ வல் அரிமா= வலிய ஆண்சிங்கம் ]

கண்ணிமை போல்நமைக் காக்கும் கரியவனை,
மண்ணில் அவதரித்த மாயவனை -- கண்ணனை,
காவேரி ரங்கனைக் காணவோர் கோவிலுக்குப்
போ!வேக மாகவே போ! (6)

சண்டையின்றி ஷண்மதமும் சாற்றும் வெளிப்படை
உண்மை இறைவன்நம் உள்ளொளி ! -- பண்டைய
நால்வேத ஞானமே ! எம்மனக் கோவிலுக்குள்
வா!வேக மாகவே வா! (7)

                                   
                  
                 ---- பசுபதி -----

****
பின்குறிப்பு: 





'




   போ! வேகமாகவே போ!' என்பது ஒரு மாலைமாற்று; 
( palindrome) ; கடைசி வெண்பாவில் வரும் 'வா! வேகமாகவே வா!' என்பதும் ஒரு மாலைமாற்றுச் சொற்றொடர் . இது 'அம்மன் தரிசனம்' 2002 தீபாவளி மலரில் வந்த கவிதை .
=======
மாலை மாற்று’ என்பது ஒரு மிகப் பழைய தமிழ்ச் சொல்.
ஆங்கிலத்தில்  உள்ள ‘பாலிண்ட்ரோம்’ ( Palindrome) என்பது இதன் பொருள்களில் ஒன்று.  ஒரு சொற்றொடரையோ அல்லது செய்யுளையோ முதலிலிருந்து கடைசி வரையோ அல்லது கடைசியிலிருந்து முதல் எழுத்து வரை  வாசித்தாலோ அதே சொற்றொடரோ அல்லது செய்யுளே வந்தால், அது மாலை மாற்று எனப்படும். முன்காலத்தில் , இந்தப் பெயரைச் செய்யுளுக்குத் தான்  பயன்படுத்தினர். மாலையை எந்தப் பக்கம் திருப்பினும் ஒரே மாதிரி இருக்கும் அல்லவா? அதனால், இத்தகைய செய்யுளுக்கு ‘மாலைமாற்று’ என்று பெயர் வைத்தனர்.

இக்காலத்தில், கற்க, குடகு, விரவி, மேகமே, விகடகவி, மாயமான் மாயமா, ராமகுமரா, தேளு மீளுதே, மாறுமா, மேளதாளமே  போன்ற சொற்றொடர்களையும் மாலை மாற்றுகள் என்று சொல்லலாம்.

’மாலை மாற்று’ க்கு ஓர் உதாரணம் பார்ப்போம்.

தண்டியலங்காரம்’ என்ற அணி இலக்கண
நூலில் கொடுக்கப்பட்ட ஒரு ‘மாலைமாற்று’க் குறள் வெண்பா :


நீவாத மாதவா தாமோக ராகமோ
தாவாத மாதவா நீ.


இதற்குப் பொருள் சொல்வது எளிதன்று!
சான்றோர் சொல்லும் பொருள் :

நீவாத = நீங்காத, மா தவா =  பெரிய தவத்தையுடையாய்!, தா மோக ராகமோ தாவாது = மிக்க மயக்க வேட்கை கெடாது; (ஆதலால்) அ மாது = அழகிய மாதினுடைய, அவா = ஆசையை, நீ =  நீக்குவாயாக .

தாவாது + அ = தாவாத மாது + அவா = மாதவா என்று ஆகிவிடும் )


****


தொடர்புள்ள சில பதிவுகள் :

‘திருமால் -மாருதி’: மாலை மாற்று

கவிதைகள்