வெள்ளி, 6 ஜூலை, 2012

‘தேவன்’: மிஸ்டர் ராஜாமணி -5

‘கல்கி’ தேவனைப் பற்றி 29.4.1934 விகடன் இதழில் எழுதியது:

“ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில் தமிழ் நாடெங்கும் பிரசித்தியாகி விட்டவர். அல்லது, அவருடைய மருமான் ‘மிஸ்டர் ராஜாமணி’ அவரை பிரசித்திபடுத்தி விட்டான்  “ ....

தேவன்  ” மிஸ்டர் ராஜாமணி”  எழுதி, விகடனில் வேலைக்குச் சேர்ந்த முழுக் கதையையும்  தேவன்: நினைவுகள் -2   என்ற பதிவில் படிக்கலாம். பிறகு தேவன் பல ’ராஜாமணி’க் கட்டுரைகள் எழுதினார் என்பது தெரிகிறது.
(எத்தனை எழுதினார்? போன்ற விவரங்கள் தெரியவில்லை.)  நூலாக வரவேண்டிய ஒரு சுவையான தொடர் இது.

இப்போது இன்னொரு ‘ராஜாமணிக்’ கட்டுரை.
மிஸ்டர் ராஜாமணி -5
 தேவன்              

என் மருமான் மிஸ்டர் ராஜாமணிக்கு வயது இப்பொழுதுதான் 4 ஆகிறது. எல்லாப் பேச்சும் தடங்கலில்லாமல் பேசுவான். கல்வியில் கரை கடந்துவிட்டதாகத்தான் அவன் எண்ணம். ''யில் ஆரம்பித்து 'ஸட்' வரும் வரையில் சுமார் 24 தப்புக்குமேல் விழாது. ''இனிமேல் என்ன வாசிக்கிறது!'' என்று வெகு அலட்சியமாய்க் கேட்பான். ''நீ யாருடா?'' என்று கேட்டால், ''நான்தான் எல். வி. இராஜாமணி எஸ்க்வயர்., எம்.ஏ., பீஹெச் டீ., ஐ.ஸி.எஸ்., ஸீ.ஐ.ஈ., எம்.எல்.ஏ.'' என்று ஒப்பிப்பான். விஷமம் செய்கிறானேயென்று மெதுவாய்த் தட்டிவிட்டால் அடங்காத ரோஷம் வந்துவிடும். ''நான் கோந்தையாச்சேணு வெருட்ராப்லேயிருக்கு. உன் காலேஜ் வாத்யாருட்டே சொல்லி...... பிரம்பாலே...... பாரு சொல்றேன்'' என்ற சிறு விரலை ஆட்டும்போது பார்த்தால் வெகு வேடிக்கையாயிருக்கும். முதன்முதல் நான் அவனைப் பார்க்கும்போது அவனுக்கு வயது 2 1/2; ஊரிலிருந்து வந்தவுடன் குடுகுடென்று உள்ளே ஓடிவந்து என்னைப் பார்த்தான். நான் யாரென்று அவன் தாயாரைக் கேட்டான். நான் என் அக்காளுக்கு ஒரே தம்பி ஆதலால் என்னை எல்லோரும் தம்பியென்று கூப்பிட்டு வருகிறார்கள். ''அம்பி மாமாடா'' என்று அவன் தாயார் பதில் சொன்னாள். உடனே பின்னால் கையைக் கட்டிக்கொண்டு அங்கே வைத்திருந்த ஸைகிளைக் குனிந்து நிமிர்ந்து ஏதோ விலை பேசுகிறவன்போல் பார்த்தான். ''என்னடா பார்க்கிறாய்?'' என்றதற்கு, ''ஓஹோ! அம்பி மாமாவுக்குக்கூட 'பைஸிகிள்' இருக்காப்லேருக்கே'' என்றான்.

நாளாக நாளாக அவனுக்கு என்னிடம் அபிமானமும் ஒட்டுதலும் ஏற்பட்டன. அவனுடைய போக்கும் பெருமையுமே அலாதி. பெரிய மனுஷர்கள் ஷர்ட்டு, கோட்டு, அங்க வஸ்திரம், தலைப்பாகை, வாகிங் ஸ்டிக் முதலியவைகளை வைத்துக்கொண்டு வெளிக் கிளம்புவதுபோல் ராஜாமணிக்கும் சில அதிகாரச் சின்னங்கள் உண்டு. அவை ஒரு தலை போன மரப்பாச்சி, ஒட்டடைக் கொட்டாங்கச்சி, தும்புக் கயிறு, ஓர் ஆணியில்லாத பம்பரம், உதிர்ந்த பாசி மணிகள் முதலிய விலையுயர்ந்த சாமான்கள். இவைகளில்லாமல் அவன் திக்விஜயத்திற்குக் கிளம்பமாட்டான். அவனுடைய உத்தரவில்லாமல் அவன் சாமான் எதிலாவது விரலை வைத்துவிட்டால் போய்விட்டது. கன்னத்துச் சதையில் ஓர் அங்குல நகத்தை ஏற்றிவிடுவான். வேறு சிநேகிதர்கள் எவரும் அகப்படாவிட்டால் என் முதுகில் ஏறிக்கொண்டு ''டுர்ரீ ருர்ரீ'' என்று மாடோட்டுவான். இல்லாவிட்டால் திண்ணையிலிருக்கும் தூண்களையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு பள்ளிக்கூடம் போட்டு, மூங்கில் கழியால் ஆத்திரந்தீர அவைகளை வெளுத்து வாங்கிவிடுவான்.
அவனுக்கிருக்கும் போக்கிரித்தனமோ சொல்ல முடியாது. பொய் சொல்ல அஞ்சவே மாட்டான். தன் பொய் அதிக நேரம் நிற்காதென்று அறிந்துகொண்டே தன் பொய்யைச் செலுத்தி ஒரு கை பார்த்துவிடுவான். அவன் வந்து சுமார் 4 நாளாவதற்குள் எனக்கு இவ்வூரில் 4 வருஷமாய்த் தெரிந்த சிநேகிதர்கள் அனைவருடனும் அவனுக்கும் சிநேகம். ஒரு நாள் மத்தியான்னம் கடுமையான வெயிலில் மிகக் களைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான். அப்பொ¡து அவன் விளையாடிக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன் ஓட்ட ஓட்டமாய் ஓடிவந்து, ''ஆர். எம். ஸுப்ரம்மணியம், எம்.ஏ.'' என்றான்.
   
''அவருக்கு என்னடா?'' என்று கேட்டேன்.
''ஒண்ணுமில்லை, வந்து தேடினாப்லேருந்தது.''
உடனே ஸைகிளைத் திருப்பிக்கொண்டு மேற்சொன்ன நண்பரிடம் சென்று வரலாமென்று கிளம்பினேன். குழந்தையைப் பார்த்துவிட்டுச் செல்வோமென்று கடைசித் தடவையாய்த் திண்ணைப்புறம் திரும்பினேன். அந்தப் போக்கிரி என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். ஒரு வேளை பொய் ஏதாவது சொல்லியிருப்பானோ என்று சந்தேகம் தோன்றிற்று.
''என்னடா, கழுதை சிரிக்கிறாய்?'' என்று அதட்டினேன்.
''ஒண்ணுமில்லே, மாமா! வந்து தேடிணாண்ணு சொன்னா நீ போவியோன்னு பார்த்தேன்'' என்று இழுத்து இழுத்துச் சொன்னான்.

நான் எப்பொழுது வெளியில் போனாலும் என்னுடன் கூடவே கிளம்பி விடுவான். ஸைக்கிளில் முன்னால் வைத்துக் கொண்டு போனால் ஸைக்கிள் தன்னால்தான் ஓடுகிறதாக நினைத்துக் கொண்டிருப்பான். தினப்படி நான்கு தடவையாவது டிரஸ் செய்துகொள்ளுவான். வண்ணான் வந்த தினமாக இருந்தால் எத்தனை சொக்காய்களுண்டோ அத்தனையையும் ஒரு தரமாவது போட்டுப் பார்த்துவிடுவான்.

ஒரு நாள் சாயந்தரம் 'லஞ்ச் ஹோமு'க்கு அவனை அழைத்துக்கொண்டு போயிருந்தேன். அவ்விடம் எல்லாம் பிளேட்டில் கொண்டுவந்து வைத்தார்கள். ஒரு வேளை குழந்தை வீட்டில் வந்து மாமா எச்சலாக்கினானென்னு சொல்லிவிடப் போகிறதே யென்று பயந்து முன்னாலேயே, ''ராசாமணி சமத்தோன்னோ'' என்றேன்.
குழந்தை என்னையே உற்றுப் பார்த்தான்.           

''அம்மாகிட்டே நாம் சாப்பிட்டோம் என்று சொல்ல மாட்டியாம்'' என்று தட்டிக் கொடுத்துக் கொஞ்சினேன். குழந்தை தலையாட்டினான். பாவம்! வெகு சாது. குழந்தைக்கு அன்பான முத்தம் ஒன்று அளித்தேன். நாங்களிருவரும் லஞ்ச் செய்தோம். குழந்தையைத் திருப்தி செய்வதே என் தொழிலாதலால், அவன் சந்தோஷமாய் மலர்ந்த முகத்துடனிருப்பதைக் காண என் மனம் பூரிப்படைந்தது. பிறகு நாங்கள் டென்னிஸ் கிரவுண்டில் சற்றுநேரம் உட்கார்ந்துவிட்டு வீடுபோய்ச் சேர்ந்தோம். அன்றிரவு ராஜாமணி கடித்தான்.
''சீச்சீ! எச்சலாக்காதே'' என்றார் என் தகப்பனார்.
''அம்பி மாமா, அத்தனை பெரியவன், எச்சலாக்கலாமோ? நாங்கோந்தைதானே?'' என்றான் அவன்.

''கோந்தையாவது, குட்டியாவது? அம்பி மாமா எப்படா எச்சலாக்கினான்?'' என்று விளையாட்டாய்க் கேட்டார் அப்பா.

ராஜாமணி என்னைப் பார்த்தான். ''சொல்லிப்பிடுவேன்'' என்று மெதுவாய்ச் சொன்னான். நான் கோபமாயிருப்பதாய் ஜாடை செய்தேன். அதையெல்லாம் லக்ஷ்யம் செய்கிறவனா அவன்?

''நானும் அம்பி மாமாவும் லஞ்ச் ஓட்டல்லே எச்சிலாக்கினோமே, மாமாகூட நக்கி நக்கித் தின்னாளே, பிளேட்டிலே போட்டுண்டு--''

''அதென்ன எழவு? வெள்ளைக்காரன் திங்கற எடம்னா அது?'' என்ற என்னை நோக்கினாள் என் தாயார். எனக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை. என் அக்காள் ராஜா மணியைத் தூக்கிக்கொண்டு, ''கோழிமுட்டை தின்னியோன்னோ?'' என்று கேட்டாள். இந்தச் சின்னத் தடியனுக்குக் கோழிமுட்டை என்றால் இன்னதென்று தெரியாது. கறுப்பா சிவப்பா என்பது சந்தேகம்.
''ஆமாம், ஆமாம். மாமா தின்னான்'' என்று சொன்னான்.
எனக்குக் கோபம் வந்துவிட்டது. ''நாயே! எப்படா தின்னோம்?'' என்று அதட்டினேன். தாயார் மடியில் இருக்கிறதனால் அடி விழாது என்கிற தைரியம் அவனுக்கு.

''வெள்ளையாய் நீ ஒண்ணு திண்ணலை? அதுதான்'' என்றான்.
உண்மையில் நான் 2 இட்லியில் பாதி அவனுக்கு விண்டு வைத்துவிட்டுப் பாக்கியைச் சாப்பிட்டிருந்தேன்.         

''கழுதை! நீயும் தின்னியே, அது கோழி முட்டையா?''
''நான் இட்லீன்னா தின்னேன்.''

''நானும் அதுதான் சாப்பிட்டேன்.''

''உம்ம்ம். சொள்ளுவியே நண்ணா?'' என்றான்.

அதுமுதல் அவனை வெளியில் அழைத்துச் செல்வதென்றால் எனக்குச் சற்றுப் பயம்தான். ஒரு நாள் என் நண்பர், ஆர்.எம்.ஸுப்ரமணியம் வீட்டுக்குப் போயிருந்தேன். ராஜாமணியும் கூடவே இருந்தான். தற்கால நாகரிகப்படி மேஜை மீது ஸெல்ப் ஷேவிங் ஸெட் இருந்தது. அங்கிருந்த நிலைக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொண்டதும் 'ஷேவ்' செய்துகொண்டு நான்கு தினங்களாயிருந்தது ஞாபகம் வந்தது. நான் வீட்டில் ஒரு ஸெட் வைத்திருந்தேன். 'ஷேவ்' செய்துகொண்டால் வீட்டில் எல்லோரும் வைது, என் தலையில் ஜலத்தை விடுவதுடன், சீப்பு, கண்ணாடி, கத்தி இவைகளுக்கும் அட்டைப் பெட்டி இவ்வளவுக்கும் ஸ்நானம் செய்து வைத்துவிடுவார்கள். இவ்விடத்தில் அந்த உபத்திரவமில்லையே யென்று நினைத்துக் குழந்தையைப் பார்த்தேன். வெகு சாதுவாய் ஒரு மூலையில் காகிதத்தால் 'ஏரோப்ளேன்' செய்து விட்டுக்கொண்டிருந்தான். முகத்தில் சோப்பைத் தடவிக்கொண்டேன். பையன் பார்த்துவிட்டான்.
             

''உனக்கொண்ணுமில்லைடா. நீ ஏரோப்ளேன் விடு, போ!'' என்றேன். அவனா போகிறவன்? வெறும் வாயை மெல்கிறவனுக்கு ஒரு பிடி அவல் அகப்பட்டால் விடுவானா? நான் ஸேப்டீ ரேஸரால் சோப்பை வழித்தேன். குழந்தையும் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை முன்போல் வீட்டில் வந்து சொல்லிவிடப் போகிறானேயென்று ''பாபா ஆசாமணி! ஆத்திலே வந்து சொல்ல மாட்டியோன்னோ?'' என்று நயமாய், மிருதுவாய்க் கேட்டேன்.

''நிச்சயமாய்'' என்று தலையாட்டினான். 'இல்லை' என்றானோ, 'சொல்லுவேன்' என்றானோ நான் கவனிக்கவில்லை. அன்றிரவு வீட்டில் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தேன். ராஜாமணி என் மோவாய்க்கட்டையைத் தடவினான்.
''சீ கழுதை, உட்காரு'' என்றேன்.

''அம்பி மாமா ஒண்ணு பண்ணினா'' என்றான்.
''சீ! வாயை மூடிக்கோ'' என்று சொன்னேன்.

''ஒண்ணு பண்ணினா, சொல்லாதேன்னா; சொல்லவே மாட்டேன்'' என்றான். நான் பேச்சை மாற்ற யத்தனித்தேன்.

''ஒண்ணு பன்னினா, சொள்ளிடட்டுமா?''

''சொல்லேண்டா பார்ப்போம்'' என்றாள் என் தமக்கை.

''அம்பி மாமா மூஞ்சியெல்லாம் ஸோப் தடவிண்டா...'' என்று என்னைப் பார்த்தான். நான் அவனைப் பார்ப்பதாகக் காண்பித்துக்கொள்ளவில்லை.

''உம்.''

''அப்புறம் ஒண்ணாலே வழிச்சா....... மூஞ்சி வழவழன்னு போயிடுத்து...... அப்புறம் நீ சானமே பண்ணலியே?''
நான் பதில் சொல்லாமல் நகர்ந்தேன்.
            

அன்று மாலை நான் ஸைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிளம்பினேன். ராஜாமணி என் பக்கத்தில் வந்து நின்றான். ஆனால் நான் அவனைப் பார்த்ததுபோல் காண்பித்துக்கொள்ளவில்லை. அவன் என் சட்டை நுனியைப் பிடித்துக்கொண்டு அண்ணாந்து என்னைப் பார்த்து, ''நானும் வெளியில் வருவேன்'' என்றான்.
''கூடாது. நீதான் எல்லாத்தையும் வந்து சொல்லிடறியே?''

''நீதான் 'வாயை மூடு, கழுதே'ண்ணீயே! இன்னமே வையாதே!''

''நீ இன்னமே சொல்லாதே!''

''நிச்சயமா இல்லை?''
''சொன்னால் என்ன பண்றது?... குட்டுவேன். என்ன?''

''உம்ம்ம்ம். மா...ட்...டே...ன்.''
''பின்னென்ன பண்றது?''
''சொன்னேண்ணால்--''

''சொன்னாலென்ன?''

''எம்பேரு ஆசாமணி இல்லை!''

குழந்தையை வாரி எடுத்து ஸைகிளில் முன்னால் வைத்துக்கொண்டு வேகமாய் வெளியில் சென்றேன்.

[ நன்றி: appusami.com ]

தொடர்புள்ள சில பதிவுகள் :


மிஸ்டர் ராஜாமணி: மற்ற கட்டுரைகள்

தேவன் படைப்புகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக