பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
பா.சு. ரமணன்
அக்டோபர் 24. பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் நினைவு தினம்.
===========
தன்னலம் கருதாது சிவத்தொண்டும் தமிழ்த் தொண்டும் புரிந்தவர்களுள்
தலையாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள் நகரத்தார்கள். ஆலயப் பணியோடு அறிவுக் கண் திறக்கும்
தமிழ்ப் பணியும் ஆற்றிய அப்பெருமக்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் பண்டிதமணி மு.கதிரேசன்
செட்டியார்.
"பண்டிதர்கள் உலகிற் பலர் இருப்பினும் அவருள் நம் கதிரேசனார் மணி போலத் திகழ்கின்றார்.
ஆதலின் அறிஞர்களாகிய உங்கள் முன்னிலையில் இக்கதிரேசனார்க்கு யாம் பண்டிதமணி என்னும்
i சிறப்புப் பெயரைச் சூட்டுகின்றோம்" என்று மொழிந்து கதிரேசன் செட்டியாருக்கு
அச்சிறப்புப் பெயரைச் சூட்டியவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்.
"என்னைப் பாராட்டிய முதற்புலவர் பண்டிதமணியே. அதன் பயனாகவே, அவர் தந்த ஊக்கத்தினாலேயே என்னால் "தசரதன் குறையும்
கைகேயி நிறையும்' என்ற நூலை எழுத முடிந்தது" என்கிறார் நாவலர் சோமசுந்தர பாரதியார். இவ்வாறு
தம் காலத்தே வாழ்ந்த தமிழறிஞர்கள் பலராலும் போற்றப்பட்ட கதிரேசன் செட்டியார், செட்டிநாட்டைச் சேர்ந்த மகிபாலன்பட்டி என்னும் சிற்றூரில்
முத்துக்கருப்ப செட்டியாருக்கும், சிகப்பி ஆச்சிக்கும், அக்டோபர் 18, 1881ம் ஆண்டில் மகவாகத் தோன்றியவர். (இவ்வூர் சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார்
பிறந்து வாழ்ந்த ஊர்) இவரது மூன்றாம் வயதில் இளம் பிள்ளை வாதம் தாக்கிற்று. அதனால்
பிற சிறுவர்கள் போல் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க முடியவில்லை. ஏழாம் வயதில் அவரை
அருகில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். ஆனால் அதுவும் சுமார் ஏழு மாதங்களே
நீடித்தது. திரைகடல் ஒடித் திரவியம் தேடுவதில்தான் அக்கால நகரத்தாரில் பலருக்கு ஆர்வம்
இருந்ததே தவிர, படிப்பில் நாட்டமில்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பதே அவர்களது எண்ணமாக
இருந்தது. அதனால் பண்டிதமணியின் திண்ணைப் பள்ளிக் கூடப் படிப்பு பாதியிலே நின்று போனது
இதைப் பற்றி பண்டிதமணி, "யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையனாக இருக்கும்பொழுது தான் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்றேன்.
அறிவார்ந்த சான்றோர்கள் நிரம்பிய அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திசூடி, உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது
அச்சிறுசிறு வாக்குகளின் அழகு நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. 'ஆ' இவைகள் எத்துணை அழகாகவும் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன' என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோவொரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருளும் எனக்குத் தெளிவாகவே
புலப்பட்டன. அவற்றை ஆர்வத்தோடு ஒரு சில திங்களிலேயே
கற்று மனப்பாடஞ் செய்து கொண்டேன். அக்காலத்தே நூல்கள் கிடைப்பதே அருமை. அவ்வாறு அரிதிற்
கிடைத்த திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும், ஆசிரியரின் உதவியின்றியே
யான் பயின்ற பொழுதும் பழம்பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்பட்டது"
என்கிறார்.
இதிலிருந்தே பண்டிதமணியின் அறிவாற்றலையும், கற்றலில் அவருக்கிருந்த
ஆர்வத்தையும் அறியலாம். குடும்பச் சூழலால் அவர் பதினோராவது வயதில் வியாபார நிமித்தமாக
இலங்கைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு மூன்று ஆண்டுகள் தங்கிப் பணியாற்றியவர், தந்தை இறந்துவிடவே தாய்நாட்டுக்குத்
திரும்பினார். குடும்பப் பொறுப்பை ஏற்றார். ஆனால் மீண்டும் இளம்பிள்ளை வாதத்தால் அவரது
உடல் மேலும் நலிவுற்றது. ஊன்றுகோலின் உதவியில்லாமல் நிற்கவோ, நடக்கவோ இயலாத நிலை ஏற்பட்டது.
ஆனாலும் உள்ளம் தளராது தாமே இலக்கிய நூல்களைப் பயில ஆரம்பித்தார்.
ஆனால் இலக்கண நூல்களைப் பயில்வது மிகக்
கடினமாக இருந்தது. அந்நிலையில் முதுபெரும் புலவர் மதுரை அரசன் சண்முகனாரின் நட்பு அவருக்குக்
கிடைத்தது. பண்டிதமணியின் மீது பேரன்பு பூண்ட அரசன் சண்முகனார், பண்டிதமணியின் இல்லத்திலேயே
தங்கி அவருக்கு இலக்கணத்தில் இருந்த ஐயங்களைப் போக்கியருளினார். "இப்புலவர் பெருமானின்
நட்புக் கிடைத்ததன் பயனாகத் தொல்காப்பிய முதலிய இயல்நூல்களும் எனக்கு இலக்கியம் போன்று
இன்புற்றுப் பயிலும் இனிய நூல்களாயின" என்று குறிப்பிட்டிருக்கிறார் பண்டிதமணி.
தொடர்ந்து பல இலக்கிய, இலக்கண நூல்களைக் கற்றுத்தேர்ந்து
சிறந்த புலவரானார் பண்டிதமணியார். சண்முகனாரின் மூலம் அக்காலத்தில் முதுபெரும் தமிழறிஞர்களாகப்
போற்றப்பட்ட மு. ரா. கந்தசாமிக் கவிராயர், மறைமலையடிகள், ஞானியாரடிகள், வெள்ளக்கால் சுப்பிரமணிய
முதலியார், உ.வே.சாமிநாதையர் போன்ற அறிஞர்களின் நட்புக் கிடைத்தது. அறிஞர்களது தொடர்பால் பண்டிதமணியின்
இலக்கிய ஆர்வம் மேலும் அதிகரித்தது. சைவ சமய சாத்திரங்களைப் பயில வேண்டும் என்ற பெரு
விருப்பமும் அவருக்கு உண்டானது. அவற்றை தாமே பயில்வதை விட, சமயத்துறையில் வல்ல பெரியார் ஒருவர்
மூலம் பயிலுதல் சிறப்புத் தரும் என்று கருதினார். அப்போது காரைக்குடியில் வாழ்ந்த சிறந்த
சிவபக்தரும், சைவ அறிஞருமான சொக்கலிங்கையா என்பவரை நாடி, அவரிடம் இரண்டு ஆண்டுகள் சைவ சாத்திரங்களைப்
பயின்றார்.
இதே சமயத்தில் பண்டிதமணிக்கு வடமொழியும், வடநூல் சாத்திரங்களும் பயிலும்
எண்ணம் தோன்றியது. ஆகவே அக்காலத்தில் சிறந்த வடமொழி வல்லுநராக விளங்கிய தருவை நாராயண
சாஸ்திரியாரை அணுகித் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். சுமார் ஐந்து ஆண்டுகள் அர்த்தசாஸ்திரம், விதுர நீதி, சுக்ரநீதி போன்ற சாத்திர
நூல்களையும், பாணினி போன்ற இலக்கணங்களையும், சாகுந்தலம், மேகதூதம் போன்ற காவியங்களையும் கற்றுத் தேர்ந்தார்.
பண்டிதமணியின் அறிவும் திறனும் கண்டு
தமிழறிஞர்கள் பலரும் அவரிடம் நட்பு கொண்டனர். மகாவித்வான் ரா. ராகவையங்கார் அவரை நான்காம்
தமிழ்ச்சங்கம் உருவாக்கி நடத்திவந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவரிடம் அறிமுகப்படுத்தினார்.
தேவர், மதுரை தமிழ்ச் சங்கத்தை நடத்தும் புலவர்களுள் ஒருவராகப் பண்டிதமணியையும் ஏற்றுக்
கொண்டார். பண்டிதமணியும் தம் உடல்நிலைமையையும் பொருட்படுத்தாது அச்சங்கக் கூட்டங்களில்
கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தார். அதேசமயம் அறிவார்ந்த சான்றோர்கள்
நிரம்பிய தமது செட்டிநாட்டுப் பகுதியிலும் இதே போன்றதொரு சங்கம் இருந்தால், அது மேலும் அறிவைப் பெருக்க்கவும், தமிழையும், சமயத்தையும் வளர்க்கவும்
உதவுமே என்று நினைத்தார்.
ஊருக்குச் செல்லும் போதெல்லாம் மேலைச்சிவபுரி
வள்ளல் வ. பழ.சா. பழநியப்பச் செட்டியாரைக் கண்டு இலக்கியம், சமயம், சாத்திரம் பற்றிப் பேசிக்
கொண்டிருப்பது பண்டிதமணியின் வழக்கம். அவ்வாறு பேசும்போதெல்லாம் நம் பகுதியிலும் ஒரு
சங்கம் அமைக்க வேண்டும், அதன் மூலம் தமிழையும், சைவத்தையும் வளர்க்க வேண்டும் என்று
கூறுவார். இருவரது முயற்சியால் 1909ம் ஆண்டு மே மாதம் 13ம் நாள் மேலைச்சிவபுரியில் 'சன்மார்க்க சபை நிறுவப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அரசன் சண்முகனார் தலைமை தாங்கினார். மு. ரா. கந்தசாமிக் கவிராயர், சொ. வேற்சாமிக் கவிராயர்
உட்படப் பல பெரும்புலவர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர். சபையின் கிளை நிலையமாக
'கணேசர் செந்தமிழ்க் கலாசாலை' நிறுவப்பட்டது.
"ஒழுக்கம் கல்வி முதலிய பல விஷயங்கள் குறித்து உபந்நியாசங்கள் புரிவித்தலும், தக்க பண்டிதர் ஒருவரைச்
சபையில் உபாத்தியாயராக நியமனஞ்செய்து அங்கு சேரும் சிறுவர்களுக்குக்
கல்வி பயிற்றுவித்தலும், சபையில் வந்து படிப்பார் பலருக்கும் உபயோகமாகும்படி தமிழ்
ஸ்ம்ஸ்க்ருத மொழிகளிலுள்ள எல்லாப் புத்தகங்களையும்
தொகுத்து வைத்தலும், கல்வி ஒழுக்கம் முதலிய துண்டுப் பத்திரங்கள்
அச்சிட்டு எல்லாருக்கும் இனாமாகக் கொடுத்தலும், லெளகீக இலக்கண, இலக்கிய சாஸ்திர சம்பந்தமான
பத்திரிக்கைகளைத் தருவித்தலும் பிறவுமாம்" - என்பது மேலைச்சிவபுரி. சன்மார்க்க சபையின் நோக்கமாக வரையறை செய்யப்பட்டது.
திங்கள் தோறும் சொற்பொழிவுகளும் ஆண்டுதோறும்
விழாக்களும் நடைபெற்றன. கணேசர் செந்தமிழ்க் கலாசாலையே பிற்காலத்தில் கணேசர் செந்தமிழ்க்
கல்லூரி என்று பெயர் பெற்றதுடன், தமிழகத்தின் தென்பகுதியில், வித்வான் வகுப்பு நடத்துவதற்கென ஏற்பட்ட
முதல் கல்லூரி என்ற சிறப்பையும் பெற்றது.
இல்லப் பொறுப்புகள் அனைத்தையும் சரிவர
நிறைவேற்றிய பண்டிதமணியார், தமது முப்பத்தியிரண்டாம் அகவையில் தனது அத்தை மகள் மீனாட்சியை
மணந்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்களும், மூன்று பெண்களும் பிறந்தனர். குடும்பப்
பொறுப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த போதும், தமது இலக்கிய ஆர்வத்திற்குத் தடையேற்படுத்தா
வண்ணம் தமது வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டார்.
சொற்பொழிவு, நூல் பதிப்பித்தல், புதுநூல் உருவாக்கம், மொழிபெயர்ப்பு எனத் தமிழ்
இலக்கியத்தின் பல்துறைகளிலும் ஆர்வம் காட்டினார். வடமொழியிலிருந்து சிறந்த நூல்களை
தமிழுக்கு மொழியாக்கம் செய்த முன்னோடி பண்டிதமணியார் என்பது குறிப்பிடத்தக்கது. மிருச்சகடிகத்தை
மண்ணியல் சிறுதேராகவும், கெளடிலீயம் என்னும் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை பொருணூலாகவும், சுக்கிர நீதி, சுலோசனை, உதயண சரிதம், மாலதி மாதவம், பிரதாப ருத்ரீயம் போன்ற
நூல்களையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். தவிர இலக்கியக் கட்டுரைகள், சமயக்கட்டுரைகள், திருவாசக உரைக் கட்டுரையான
கதிர்மணி விளக்கம் போன்ற உரைநடைக் கோவை நூல்களைப் படைத்திருப்பதுடன், தன் பொறுப்பில் நாட்டுக்கோட்டை
நகரத்தார்களின் சீர்திருத்தம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழிசைப் பாடல் வரிசை போன்ற நூல்களையும்
பதிப்பித்திருக்கிறார்.
இவரது பெருமையையும் அறிவுத்திறனையும்
கண்ட செட்டிநாட்டு அரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், தனது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
இவரைத் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பேற்குமாறு வேண்டினார். முதலில் மறுத்தாலும் பின்னர்
அப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட பண்டிதமணியார் சுமார் 12 ஆண்டுகாலம் அக்கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ் மற்றும் ஆராய்ச்சித்
துறைத் தலைவராகவும் பணியாற்றினா "ஏழு மாதங்கூடப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியாக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச்சிறப்பு இவர்க்கு உரியது. முயற்சியும் உறுதியும் இருக்குமானால்
உடல் ஊனமுற்றவர்களும் உயர்நிலையை அடைய இயலும் என்பதற்குக் கதிரேசனாரின் வாழ்க்கை எடுத்துக்காட்டாகும்"
என்கிறார் தமிழறிஞர் சோமலெ தனது பண்டிதமணி என்னும் நூலில்,
அ. சிதம்பரநாதன் செட்டியார், டாக்டர் வ.சுப. மாணிக்கம்
போன்ற பல தமிழறிஞர்கள் பண்டிதமணியாரின் மாணவர்கள் என்பது நினைவுகூரத் தக்கது.
"இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை வளர்ச்சியில் பண்டிதமணிக்கு சிறப்பான ஓர் இடம் உண்டு"
என்கிறார் டாக்டர் வ.சுப. மாணிக்கம்.
சைவ சமயத்தின் மீது அளவிலாப் பற்றுக்
கொண்ட கதிரேசன் செட்டியார் பலவான்குடியில் மணிவாசகக் சங்கத்தையும், சிதம்பரத்தில் தில்லை தமிழ்ச்
சங்கத்தையும் உருவாக்கினார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு.வி. கலியான சுந்தர
முதலியார், சொ. முருகப்பச் செட்டியார் போன்ற தமிழறிஞர்கள் பண்டிதமணியின் மீது பெருமதிப்புக்
கொண்டிருந்ததுடன் அவரது சங்கப் பணிகளிலும் ஆர்வம் காட்டினர். 'மகாமகோபாத்தியாயர் பண்டிதமணி
மு.கதிரேசன் செட்டியார் என்றால் தமிழ்நாட்டில் அழுதபிள்ளை வாய் மூடாது. அது பாட்டுக்கு
அழுது கொண்டிருக்கும். ஆனால் தமிழ்ப் புலவர்கள் கூட்டங்களில் இப்பெயரைச் சொன்ன மாத்திரத்தில்
மரியாதைக்கு அறிகுறியாக அமைதி நிலவும்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்
கல்கி. பண்டிதமணியின் தமிழ்ச்சேவையையும், சமயப் பணியையும் பாராட்டி ஆங்கிலேயே அரசு அவருக்கு மகாமகோபாத்தியாய
என்ற பட்டத்தை வழங்கியது. இது தவிர சைவ சித்தாந்த வித்தகர், முதுபெரும் புலவர், தமிழ் ஞாயிறு என பல்வேறு
பட்டங்கள் பெற்று தமிழுக்காகவும், தமிழ்ச் சமய வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்த பண்டிதமணியார்
அக்டோபர் 24, 1953 அன்று 73ம் வயதில் காலமானார்.
கடந்த ஆண்டு அவர் தோற்றுவித்த சன்மார்க்க
சபையின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுடன், பண்டிதமணியின் எழுத்துக்களையும் நாட்டுடைமையாக்கி
தமிழக அரசு அவருக்கு கெளரவம் சேர்த்தது. தமிழ், வடமொழி, சமயம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும்
ஆர்வம் கொண்டு, அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த
முன்னோடிகளுள் ஒருவர் என்பதில் ஐயமில்லை.
(நன்றி. இந்திய இலக்கியச் சிற்பிகள் - பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், சாகித்ய அகாதமி நிறுவன வெளியீடு)
தொடர்புள்ள பதிவுகள்: