தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர்
தேமொழி (முனைவர் ஜோதி தேமொழி )
மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம்.
===
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S. Subrahmanya Sastri) அவர்கள் பின்னங்குடி சாமிநாத சாஸ்திரி, மங்களாம்பாள் இணையரின் மூத்த மகனாக, திருச்சி மாவட்டம் பாலக்கிருஷ்ணம் பட்டியில் ஜூலை 29, 1890 ஆண்டு பிறந்தவர். இந்த ஆண்டு இவரது 125 ஆம் ஆண்டு நிறைவு ஆண்டாகும்[1]. பன்மொழி அறிஞரான பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் தமிழிற்கும் வடமொழிக்கும் ஆற்றிய இலக்கியப்பணிகள் குறிப்பிடத்தக்கது.
தமிழிலக்கணப் பணியும் மொழிநூற் பணியும் செய்த பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார், தொல்காப்பியத்தை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். தொல்காப்பிய மொழி பெயர்ப்பு பணியை 1919ல் தொடங்கி 1956ல் நிறைவு செய்துள்ளார் [2]. தொல்காப்பிய எழுத்ததிகார மொழிபெயர்ப்பை 1930 லும், சொல்லதிகார மொழிபெயர்ப்பை 1937 லும், பொருளதிகார மொழிபெயர்ப்பை 1945 லும் வெளியிட்டார். தொல்காப்பியக் குறிப்பு என்று பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் எழுத்ததிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும் எழுதிய நூல்கள் மிகச் சிறந்தனவாகப் போற்றப்படுகின்றன.
தமிழ் அகராதியியலில் ஒரு திருப்புமுனையாக இருந்த “சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி” உருவானதிலும் (1912ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு வரை) இவருக்குப் பெரும் பங்கு உண்டு, அகராதியின் துணை ஆசிரியர்களுள் ஒருவராகப் பணியாற்றினார். வடமொழி நூலான பதஞ்சலியின் “மகாபாஷ்யா”வும் இவரால் ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. மேலும் இவர் வடமொழியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஆனந்தவர்த்தனர் என்பவரின் “தொன்யாலோகம்” என்னும் வடமொழி அணி இலக்கண நூலை “தொனிவிளக்கு” எனத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் திருச்சி ஆண்டார் வீதியில் வசித்தவர். பள்ளிப்படிப்பை திருச்சி தேசிய உயர்நிலைப்பள்ளியிலும் (National High School), கல்லூரிப் படிப்பை திருச்சி தூய வளனார் கல்லூரியிலும் (St. Joseph’s College), திருச்சியின் முதல் கல்லூரியான பிஷப் ஹீபர் கல்லூரியில் (இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் இக்கல்லூரி “எஸ்.பி.ஜி. கல்லூரி” என்று அழைக்கப்பட்டது, SPG College – Society for Propagation of Gospels) இளங்கலை கணிதமும் பயின்றார். கணித உதவி ஆசிரியராக திருவையாறு உயர்நிலைப்பள்ளியிலும் (இக்கால ஸ்ரீனிவாச ராவ் மேல்நிலைப்பள்ளி), திருச்சி தேசிய உயர்நிலைப்பள்ளியிலும் சிறிது காலம் பணிபுரிந்தார்[3].
இலக்கணம் மற்றும் தத்துவ அறிஞரான நீலகண்ட சாஸ்திரியாரிடம் வடமொழியும், ஏரணம் (logic) மற்றும் அணியிலக்கணம் (Nyaya and Alankara Sastra/Poetics and Literary Criticism) ஆகியவற்றை சென்னை ராஜாதானிக் கல்லூரி பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரியாரிடமும், மொழியியலை (Mimamsa /Linguistics) காசி இந்துப் பல்கலைக்கழக பேராசிரியர் சின்னசாமி சாஸ்திரியாரிடமும் பயின்றார். வடமொழியில் முதுகலைப்பட்டமும், சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியும் பெற்றார் [1].
உரையாசிரியராகவும், மொழிபெயர்பாளராகவும் பலநூல்கள் எழுதிய இவருக்கு, தமிழ்த்துறை ஆய்வில் “முதல் முனைவர் பட்டம் பெற்றவர்” என்ற பெருமையும் உண்டு. ‘History of Grammatical Theories in Tamil and their relation to grammatical literature in Sanskrit’ (தமிழ் இலக்கணக்கொள்கை வரலாறும் அதன் வடமொழி இலக்கண உறவும்) என்ற ஆய்வறிக்கையை சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1930 ஆம் ஆண்டு சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழில் முதல் முனைவர்ப்பட்ட ஆய்வேடாக இது இருப்பினும் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அக்காலத்தில் தமிழ் இலக்கிய ஆய்வு அறிக்கைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. பிறகு, இந்த ஆய்வு 1934 ஆம் ஆண்டில் “History of Grammatical Theory in Tamil” என்ற நூலாகவும் வெளிவந்தது. இவரது சிறந்த மொழியியற் புலமையையும், மொழியிலக்கண அறிவையும், ஒப்பியல் ஆய்வுத் திறமையையும், கண்டு வியந்து இவரது பெயரான பி.சா. சுப்பிரமணியம் என்பதைச் சுருக்கி செல்லமாக “பிசாசு” என்றும் அழைக்கப்பட்டார். கணிதத்தில் இளங்கலை, வடமொழியில் முதுகலை, தமிழில் முனைவர் பட்டமும், ஆசிரியப் பயிற்சியும் என இவரது கற்றல் பலதுறைகளையும் தொட்டுச் சென்றுள்ளது.
தொல்காப்பியமும் பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியாரும்:
தொல்காப்பியப் பதிப்பாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர் பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார். செம்மொழிகளான தமிழுக்கும் வடமொழிக்கும் இடையே தொன்றுதொட்டு தொடர்பு இருந்துவருகிறது. இருமொழிகளிலும் இலக்கண இலக்கிய படைப்புகளையும் ஆழ்ந்து பயின்ற பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் இம்மொழிகளுக்கிடையேயான உள்ள இலக்கணப் பொதுமைகள், வேற்றுமைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அறிவதில் ஆர்வும் கொண்டார்.
சொல்லதிகாரத்தின் முதல் நான்கியல்கள் “தொடரியல்” பற்றிப் பேசுவன எனவும், கிளவியாக்கம் எழுவாய் பயனிலைத் தொடர்புகள், தொடர் இயைபு, வழுக்கள் சிலவற்றை ஏற்றல் பற்றிக் கூறுவது எனக் கூறியுள்ளார் [4].
தொல்காப்பியத்தை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்ற பெருமையைக் கொண்டவர் பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியார்[1]. முதலில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இலக்குவனார் (இலக்குவனார், பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரி அவர்களின் மாணவர்) என்றும் சில தவறான கருத்துகள் உலவி வந்ததும் உண்டு. இந்நாள் வரை பலரும் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
பலர் தொல்காப்பியத்தின் பகுதிகளை மட்டும் மொழிபெயர்த்திருந்தாலும், தொல்காப்பியம் முழுவதையும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்கள் பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரி, தமிழறிஞர் முனைவர் சி. இலக்குவனார், வெ. முருகன் ஆகிய மூவர் மட்டுமே [5]. ஆங்கில அறிஞரான வெ. முருகன் அவர்களின் தற்கால மொழிபெயர்ப்பு அதன் மொழிநடைக்காகப் பாராட்டப் படுவதுண்டு.
தொல்காப்பியத்தின் புகழ் மேனாட்டு மொழி ஆய்வாளர்களைச் சென்றடையும் அரும்பணியைச் செய்த முன்னோடிகள் பேராசிரியர்கள் பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியாரும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும் என்று தமிழறிஞர் சி. இலக்குவனார் பாராட்டுவார். ஆனால் நாவலர் மேற்கொண்ட ஆய்வு தொல்காப்பியம் முழுமைக்குமாக அமைந்திருக்கவில்லை. முழுமையான ஆய்வாக இருந்தாலும், பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்களின் தொல்காப்பிய ஆய்வில் வடமொழி சார்பின் தாக்கம் அதிகம் என்ற கருத்து தமிழறிஞர்களிடையே உண்டு. பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் ‘அந்தணர் மறை’, என்னும் சொற்றொடருக்கு ‘scriptures of the Brahmins’ எனப் பொருள் தரும் பொழுது, தமிழறிஞர் இலக்குவனார் அதை மறுத்து ‘book of the learned’ எனப் பொருள்கொள்வதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தொல்காப்பியர் வடமொழி இலக்கணங்களின் அடிப்படையில் தொல்காப்பியத்தைப் படைக்கவில்லை என்பதை உறுதிபடப் பல்வேறு சான்றுகளுடன் இலக்குவனார் நிறுவியுள்ளார்[6].
பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியாருக்கும், இலக்குவனாருக்கும் தமிழில் வடமொழியின் தாக்கம் பற்றிய கருத்துவேறுபாடுகளும் எழுந்ததுண்டு. திருவையாறு கல்லூரியின் முதல்வர் பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் பணியாற்றிய பொழுது அவரது மாணவரான இலக்குவனார், பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் வடமொழியை உயர்த்திப் பிடிக்கும் கருத்துகளை முன்வைக்கும் பொழுது அவருக்கு எதிர் குரல் கொடுத்துள்ளார். இதனால் இலக்குவனார் பல தொல்லைகளுக்கும் ஆளானதாகத் தெரிகிறது. “தகுதியற்ற தலைவரின்கீழ் தமிழ்க் கல்லூரியின் நிலை” என்ற துண்டறிக்கை ஒன்றினை வெளியிட்டு தனது கண்டனக் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சி. இலக்குவனார்[7].
வடமொழி சார்பு இருந்தாலும் தமிழின் தனித்தன்மைகளைச் சுட்டிகாட்டியுள்ளார் என்பதும் மறுக்க முடியாத உண்மையும் கூட. ம.நா.சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியாரின் சொல்லதிகாரக் குறிப்பு நூலுக்கு வழங்கிய மறுப்புரைகளில், “வினைக்கு வேற்றுமையுருபைச் சேர்ப்பின் அது பெயராய்த் தமிழில் ஆகின்றது; அவ்வாறு வடமொழியில் இல்லை” என்று சுட்டிக்காடியுள்ளார்[8].
பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து, வீரசோழியம் என்ற வடமொழி சார்ந்த இலக்கணச் சிந்தனை, பாணினீயம், நிருக்தா, கயாதரம், கச்சாயனம் போன்ற வடமொழி நூல்களுடன் தொல்காப்பியம் ஒப்பிடப்பட்டாலும், தொல்காப்பியத் தனித்தன்மையும் கூறுகிறார் என்று பேராசிரியர் க.பூரணச்சந்திரன் சுட்டிக் காட்டுகிறார் [8]. அத்துடன் வடமொழியில் இலக்கணக் கருத்துகளையும், தமிழ் இலக்கணக் கருத்துகளையும் ஒப்பிட்டு ஆராய விரும்புவோர்க்கு இவை மிகச் சிறப்பான கையேடுகளாக உதவக்கூடியவை இந்நூல்கள் என்றும் பரிந்துரைக்கிறார்.
இவரது நூல்களின் இடம் பெறும் குறிப்புகளில் இருந்து, லண்டனிலுள்ள பேராசிரியர் ஆர்.எல்.டர்னர், பாரிஸிலுள்ள பேராசிரியர் ஜூல்ஸ் பிளாக், சிகாகோவின் மொழியியல் பேராசிரியர் லெனார்ட் புளூம்ஃபீல்டு, கோபன்ஹேகன் பேராசிரியர் ஹோல்கர் பெடர்சன், நார்வே பேராசிரியர் ஸ்டென் கோனோவும், எடின்பர்கிலிருந்த ஏ.பி.கீத் ஆகியோரது பாராட்டுரைகள் இவரது நூல்கள் உலகப்பெரும் ஆராய்ச்சியாளர்களால் எப்படி மதிக்கப்பட்டன என்றும் தெரியவருகிறது. அத்துடன் இலத்தீன் அல்லது ரோமன் எழுத்துகளில் தொல்காப்பியத்தை ஒலிபெயர்த்து, ஆங்கில மொழிபெயர்ப்புடன் (Tolkappiyam in Roman transliteration and English translation) வழங்கங்கப்பட்ட விதமும் உலக மொழியியல் அறிஞர்களால் பாராட்டு பெற்றது[8].
கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை கார்டினர் (Rev.Allan F.Gardiner) அவர்களால், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் 1917 முதல் 1926 வரை கீழைமொழித்துறைப் பேராசிரிராகவும் (Professor of Oriental Studies, Bishop Heber College, Trichinopoly), துறைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அப்பொழுது இளங்கலை மாணவர்களுக்கு, 1919 ஆம் ஆண்டு கால்ட்வெல் அவர்களின் திராவிட மொழியிலக்கணம் கற்பிக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது கால்டுவெல் தமிழ்மொழி பற்றிக் கூறியவை தமிழ் இலக்கணநூல்களில் குறிப்பிடப்படுள்ளனவா என்று ஒப்பிட்டு ஆராயும் நோக்கில் தொல்காப்பியத்தை ஆழ்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டது. அவ்வாறு மேற்கொண்ட ஆய்வை “செந்தமிழ்” பத்திரிக்கையில் 1927 ஆம் ஆண்டு அறிக்கையாகவும் வெளியிட்டார். தான் மாணவருக்கு இலக்கணம் கற்பிக்கும் பொருட்டு மேற்கொண்ட ஆர்வம் அவரது தொல்காப்பிய ஆராய்ச்சிக்கு வித்திட்டதை தனது நூலின் முகவுரையிலும் குறிபிட்டுள்ளார்[8].
பின்னர் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் (1932 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு வரை) பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வடமொழி பேராசிரியராகவும், வடமொழித் துறைத் தலைவராகவும் 1942 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரைப் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் துறைத்தலைவர் பதவியேற்றபிறகு, வடமொழி கற்பித்தல் உயிர்த்தெழுந்தது. சிறப்புப் பாடங்கள், ஆங்கில வழி விரிவுரைகளால் கவரப்பட்டு பிற்காலத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக வடமொழி ஆய்வாளராகப் பணியாற்றிய ‘தாமஸ் டி பர்ரோ’ (Thomas T. Burrow) போன்றவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழி கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டினர்[1].
பணி ஓய்விற்குப் பிறகும், திருவையாறு திரும்பி தனது மொழிப்பணியைத் தொடர்ந்தார். காஞ்சிப் பெரியவரின் அறிவுரையையும் ஆசியையும் பெற்று பதஞ்சலியின் மகாபாஷ்யாவை 4000 பக்கங்கள் கொண்ட 14 தொகுப்புகளாக ஆங்கிலத்தில் 1953 ஆம்ஆண்டில் மொழிபெயர்த்து முடித்தார். இவரது மொழிப்பணியைப் பாராட்டி இவருக்கு பல பட்டங்களும் விருதுகளும் வழங்கப்பட்டன. ‘வித்யாரத்னா’ (காசி), ‘வித்யாநிதி’ (கேரளா), ‘வித்யாபூஷணா’ (கர்நாடகா), மஹோபாத்தியாய (அலகாபாத்), ‘வாணி திரிவேணி பிரயாக’ (காஞ்சி மடம்) என்ற பட்டங்கள் இவரைத் தேடி வந்தன. காஞ்சியின் மகாப் பெரியவர் ‘வாணி திரிவேணி பிரயாக’ என்ற பட்டம் வடமொழியையும், தமிழையும் குறிப்பதாகவும், இந்த இரண்டு மொழிகளின் பணிக்கு பின்புலத்தில் உதவிய ஆங்கிலம் சரஸ்வதி நதியைக் குறிப்பதாகவும் குறிப்பிட்டார். தமிழ், வடமொழி, ஆங்கில மொழிப் புலமைகளையும் தவிர்த்து ஜெர்மன், ஃபிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளையும் அறிந்ததிருந்த பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் 40 க்கும் மேலான நூல்களையும், பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்[1].
எளிமையை விரும்பிய இத்தமிழறிஞர் பல மாணவர்களுக்கு கல்விக்கான, தேர்வுக்கான கட்டணங்களை தாமே வழங்கி உதவியுள்ளார். மாணவர்களுக்கு நான்கு வேதங்களையும், தனது ஓய்வுகாலத்தில் பாமரமக்களுக்கு திருக்குறளும் கற்பித்து வந்தார். அயராது மொழிப்பணியில் ஈடுபட்டிருந்த இத்தமிழறிஞர் தமது 87 வது அகவையில் (மே 20, 1978 அன்று) திருவையாறு நகரில் மறைந்தார்[1].
______________________________________________________________________________________
உதவிக்குறிப்பு:
தமிழ், வடமொழி, ஆங்கிலம் என ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொருவிதமாகவும், ஒவ்வொரு மொழி எழுத்தையும் பலவிதத்தில் கலந்து பலவிதமாகவும் இவரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் பதிவிடப்படும் நிலையுள்ளது. எனவே, இவரது பெயரைக் கொண்டு இணையத்தில் இவரைப்பற்றித் தகவல் தேடும் பொழுது கீழ் காணும் பல வகைகளிலும் அவரது பெயர் கிடைக்கலாம்
பி. சா. சுப்பிரமணிய சாத்திரி (https://ta.wikipedia.org/s/4l9s) என்று கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பதிவிட்டுள்ளது. சாஸ்திரி என்பது சாத்திரி என்று தமிழ்ப்படுதப்பட்டது போலவே, ஆங்கிலத்தில் எழுதும்பொழுதும் சாஸ்திரி என்பது பலவித உச்சரிப்புகளுடன் வலம் வருகிறது. அவற்றில் சில, பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார், பி. சா. சுப்பிரமணிய சாத்திரி, பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார், பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரி, டாக்டர் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார், பி.எஸ்.சுப்பிரமணியம், P.S. சுப்பிரமணிய சாஸ்திரியார், Prof.P.S.Subrahmanya Sastri, Dr.P.S.Subrahmanya Sastri, P. S. Subrahmanya Sastri
இவரது நூல்கள்:
A book Tamil grammar, orthography with elaborate commentary, 1937
A critical study of Valmiki-Ramayana, 1968
An Enquiry Into the Relationship of Sanskrit and Tamil, 1946
Comparative Grammar of the Tamil Language, 1947
Historical Tamil Reader, 1945
History of Grammatical Theories in Tamil and Their Relation to the Grammatical Literature in Sankrit, 1934
Lectures on Patanjali’s Mahabhashya, 6 volumes, 1950s and 1960s
Mummaiyāl ulakāṇṭa Mūrtti Nāyan̲ār carittiram: tirunīr̲u uruttirākṣam pañcākṣaram ivaikaḷin̲ makimaiyuṭan̲ : Periyapurāṇattaiyum Kantapurāṇa mūlattaiyum oṭṭi el̲utapper̲r̲atu, 193?
Tamil̲ mol̲i ilakkaṇam, 1930
Tamil̲mol̲i nūl, 1936
Teyvappulavar Tiruvaḷḷuvan̲ār iyar̲r̲iya Tirukkur̲aḷ: poruṭpālum kāmattuppālum, 1949
Thirukuratkurippu
Tolkāppiyac collatikārakkur̲ippu, 1930
Tolkappiyam Porulatikāram with English Translit, 1949
Tolkāppiyam, the earliest extant Tamil Grammar: text in Tamil and Roman scripts with a critical commentary in English. Poruḷ-Atikāram – Tamil poetics, Part 3, 1956
Tolkāppiyam: the earliest extant Tamil grammar : the earliest extant Tamil grammar : with a short commentary in English, 1930
Tolkāppiyam-Collatikāram, 1945
Tolkappiyam-eluttatikaram: with an elaborate commentary, 1937
Ton̲iviḷakku: translation of Sanskrit Dhvanyālōka – Ānandavardhana, P. S. Subrahmanya Sastri – 1944.
Vaṭamol̲i nūlvaralār̲u, 1946
______________________________________________________________________________________
படம் உதவி:
https://commons.wikimedia.org/wiki/File:P_S_Subrahmanya_Sastri_(1890-1978).png
http://www.thehindu.com/multimedia/dynamic/02483/24fr_Sastri_jpg_2483518e.jpg
______________________________________________________________________________________
சான்றாதாரம்:
[1]The First Tamil Ph.D, by, DR. V. KAMESWARI
http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/dr-ps-subrahmanya-sastri-a-sanskrit-and-tamil-scholar-whose-125th-birth-anniversary-was-on-july-29-2015/article7456140.ece
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/celebrating-a-prolific-writer/article7457686.ece
[2]வளர்தமிழ்ச் சிந்தனைகள், முனைவர் மு.முத்துவேலு
[3] P.S.சுப்பிரமணிய சாஸ்திரியார் -தமிழ் மொழிநூல் வல்லுநர், http://thamilkalanjiyam.blogspot.com/2015/06/ps.html
[4] தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (சேனாவரையம்), http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/II_Year/matt08/html/mat08010tmp3.htm
[5] தமிழ்ச் செவ்விலக்கிய மொழிபெயர்ப்புகள், பேராசிரியர். க.பூரணச்சந்திரன், சிறகு http://siragu.com/?p=16509
[6] இலக்குவனாரின் பன்முக ஆளுமை, தொல்காப்பிய ஆராய்ச்சி, முனைவர் க. இராமசாமி (பொறுப்பு அலுவலர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), http://literaturte.blogspot.com/2011/10/multi-personality-of-drsilakkuvanar.html
[7] வாழ்க இலக்குவனார்! , விடுதலை http://viduthalai.periyar.org.in/20100206/news08.html
[8] தொல்காப்பியக் குறிப்புரை, பேராசிரியர். க.பூரணச்சந்திரன். சிறகு, http://siragu.com/?p=15928
[ நன்றி:
http://siragu.com/?p=18087 ]
தொடர்புள்ள பதிவுகள்:
பி. சா. சுப்பிரமணிய சாத்திரி : விக்கிப்பீடியாக் கட்டுரை