செவ்வாய், 27 ஜூன், 2017

752. ச.து.சுப்பிரமணிய யோகி - 2

"பாலபாரதி' ச.து.சுப்பிரமணிய யோகியார்
 பி.தயாளன்


ஜூன் 27. ச.து.சுப்பிரமணிய யோகியாரின் நினைவு தினம்.
====
பாரதிக்குப்பின், தமிழ்க் கவிஞர்களில் சொல்வளமும், பொருட்செறிவும் நிறைந்த கவிதைகளை அளித்தவர்களில் ஒருவர். 20-ஆம் நூற்றாண்டில் இணையற்ற கவிஞராய் விளங்கியவர்; இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; தமிழில் சிறு காப்பியங்கள் இயற்றியவர்; தமிழ்நாட்டில் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்; கம்பர் வழிக் கவிஞர் - என்றெல்லாம் போற்றப்படுபவர், அவரே பைந்தமிழை நேசித்த "பாலபாரதி' ச.து. சுப்பிரமணிய யோகியார்.

  கேரளாவில் உள்ள எல்லப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் 1904-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி, துரைசாமி - மீனாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். ஆனால் அது நாளடைவில் சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகியார் என்றானது. வழக்குரைஞராகப் பணிபுரிந்த தமது தந்தையிடம், ஆங்கிலம் கற்றார். தந்தை திடீரென்று காலமாகிவிட்டதால், குடும்பம் சங்ககிரிக்குக் குடிபெயர்ந்தது.

  சங்ககிரி தொடக்கப் பள்ளியிலும் பின்னர் ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். இளமையிலேயே தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கினார் யோகியார். தமது ஒன்பதாவது வயதில் பாரதியைப் போல, "பாலபாரதி' எனும் பட்டம் பெற்றார்.

  1925-ஆம் ஆண்டு கமலாம்பாள் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

  உதகமண்டலம் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, காந்தியடிகள் ஊட்டிய விடுதலை வேட்கை, யோகியாரை, அரசாங்க வேலையைத் தூக்கியெறியச் செய்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டம் கொள்ளவைத்தது.

  சென்னையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார் யோகியார். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

  1932-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி ஈரோட்டில் நடந்த மறியல் போராட்டத்தில், தடையை மீறிக் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார், ராஜாஜி ஆகியோருடன் சிறையில் இருந்துள்ளார் யோகியார். தனது சிறை அனுபவங்களை, ""சிறைச்சாலை ஓர் தவச்சாலை; அது ஒரு "புன்மைக் கோட்டம்'; இழிவுக்குகை; ஆனால், அதுவே நமது சுதந்திர தேவியின் கோயில் வாயில்! அடிமைத்தனத்தின் குறுகிய சந்துகளில் சென்றால்தான், நாம் அழகிய அகண்ட விடுதலையின் ராஜபாட்டையில் நடக்க முடியும். ஆகவே, சிறைச்சாலையை நான் வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்; போற்றுகிறேன்; சிறைகள் நீடு வாழ்க!'' என, "எனது சிறைவாசம்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  நூலகம் சென்று நூல்களை ஆழ்ந்து படிப்பார் யோகியார். கண்டதும் கற்பார்; கண்டதையும் கற்பார். எறும்பின் வாழ்க்கை தொடங்கி விண்ணில் விரையும் விண்கலம்வரை, நன்கு கற்றறிந்தவர் யோகியார்.

  "தேசபக்த கீதம்' என்ற கவிதை நூலை 1924-ஆம் ஆண்டு, முதன் முதலாக வெளியிட்டார். "புதுமை', "பித்தன்', "குடிநூல்', "குமாரவிகடன்', "சுதந்திர சங்கு', "ஆனந்தபோதினி' ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள யோகியார், இந்து நாளிதழில் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களுக்கு விமர்சன உரையும் எழுதியுள்ளார்.

  ""யோகியாரின் விமர்சனம் யார் மனதையும் புண்படுத்தாது, வசைபாடாது. தவறு இருந்தால் நாசூக்காகச் சுட்டிக்காட்டும் தன்மையுடையது. எந்த விதத்திலும் எழுத்தாளரின் மனம் நோகும் வண்ணம் அதில் ஓர் எழுத்துக் கூட இருக்காது'' எனக் கவிஞர் கண்ணதாசன், யோகியாரின் விமர்சனம் குறித்து கருத்துரைத்துள்ளார்.

""சாதிச் சேற்றில் சமயத்தின் குப்பையில்
சாத்திரக் கந்தலில் தடுமாறக் கூடாதென்றும்''

  என்பது யோகியாரின் கவிதை வரிகள். ""கவிதை மனிதனை உயர்த்த வேண்டும். உள்ளங்களை உருக்க வேண்டும், புதுப்பாதை காட்ட வேண்டும். சமுதாயத் தீமைகளைச் சாட வேண்டும். சமுதாயத் தேவைகளை எடுத்துரைக்க வேண்டும்'' என்பார் யோகியார்.

  1935-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் பொன்விழா கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்!

  தேசபக்த கீதம், தமிழ்க்குமரி, கதையைக் கேளடா தமிழா ஆகிய கவிதை நூல்களையும், "கவி உலகில் கம்பர்' என்ற உரைநடை நூலையும், "குளத்தங்கரைக் குயில்கள்', "மரண தாண்டவம்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், "காமினி', "பவானி', "நவபாரதம்' ஆகிய கவிதை நாடகங்களையும், "எனது சிறைவாசம்' என்ற தன் வரலாற்றையும், "கவிபாரதி' என்ற திறனாய்வையும், "கொங்கர் குறவஞ்சி' என்ற நாட்டிய நாடகத்தையும் அளித்து, இலக்கியத் தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளார் யோகியார்.

  ஆங்கிலத்திலிருந்து, "ரூபையாத்', "மனிதனைப் பாடுவேன்', "அத்தர்', "இதுதான் ருசியா', "கடலும் கிழவனும்', "மான்குட்டி' ஆகிய நூல்களைத் தமிழுக்கு மொழிமாற்றம் செய்துள்ளார். மேனாட்டுக் கவிஞர்கள், வால்விட்மேன், ஹெமிங்வே ஆகியோரது ஆங்கிலக் கவிதைகளையும் தமிழில் கவிதை வடிவிலே மொழி பெயர்த்து அளித்துள்ளார்.

  காரைசித்தர் எழுதிய "கனகவைப்பு' என்ற தமிழ் நூலையும், கம்பராமாயணத்தில், "சீதா கல்யாணம்' என்ற பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்துள்ளார். சாத்தனார் எழுதிய கூத்த நூலுக்கு (பரதநாட்டியம் பற்றியது) பொழிப்புரையும் பதவுரையும் எழுதியுள்ளார்.
  புதுதில்லியில் சுதந்திர தினக் கவிதையை அப்போதைய பிரதமராக இருந்த நேரு முன்னிலையில் பாடி, பாராட்டைப் பெற்றார். அவரது அக்கவிதை, தமிழிலும், ஆங்கிலத்திலும் அகில இந்திய வானொலியில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.

  இரு சகோதரர்கள், பக்த அருணகிரி, அதிர்ஷ்டம், கிருஷ்ணகுமார், லஷ்மி, கிருஷ்ணபக்தி ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியதுடன், அவற்றைத் தானே இயக்கியும் உள்ளார். திரைப்படத்தின் மூலம் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பி, அரும்பாடு பட்டுள்ளார் யோகியார்.

  1963-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம், யோகியாருக்கு, சிறந்த திரைப்பட வசன கர்த்தாவுக்கான தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டியது. மேலும் யோகியாரின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  ""சொல்லினாலே கவி சொல்ல வந்தேன்'' என்று வாழ்ந்து, தமிழுக்குத் தொண்டாற்றிய யோகியார், தமது 59 வயதில் 1963-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி காலமானார். யோகியார் மறைந்தாலும் அவரது தமிழ்த் தொண்டினால் அவரது பெயர், தமிழ் இலக்கிய உலகில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

ச.து.சுப்பிரமணிய யோகி

1 கருத்து:

ELANDHAI RAMASAMI சொன்னது…

ஈரோட்டில் 1921ல் பாரதி மரணமிலாப் பெருவாழ்வு பற்றிப்பேசியபோது அவரை நேரில் கண்டார். அதைப்பற்ரி எழுதியிருக்கிறார்.