திங்கள், 12 பிப்ரவரி, 2018

986. கிருத்திகா -1

கீர்த்தி மிகுந்த கிருத்திகா
திருப்பூர் கிருஷ்ணன்


பிப்ரவரி 13. எழுத்தாளர் கிருத்திகா ( மதுரம் பூதலிங்கம் ) வின் நினைவு தினம்.
====
அழகிய நடையில் ஆங்கிலத்திலும்,தமிழிலும் இலக்கிய ஓவியங்களைத் தீட்டிய எழுத்தாளர் கிருத்திகா. உண்மையிலேயே ஓவியங்களைத் தீட்டவும் வல்லவர் என்பது பலரும் அறியாத தகவல். கிருத்திகா வரைந்த வண்ணச் சித்திரங்கள் கண்ணைக் கவர்பவை. அவரது மெல்லிய உணர்வுகளைப் போலவே அவர் வரைந்த சித்திரங்களும் கூட மென்மையும்,மேன்மையும் நிறைந்தவை. கிருத்திகாவின் "யோகா ஆஃப் லிவிங்" என்ற நூலில், உள்ளே ஆங்கிலத்தில் ஓடுவது அவரது எண்ணம்; வெளியே அட்டையை அலங்கரிப்பது அவரது வண்ணம்.


விமர்சகர் சிட்டி பி.ஜி.சுந்தரராஜன் சொன்ன வண்ணம், நிறைய எழுதலானார் கிருத்திகா. சிட்டி தான் அவரது இலக்கியம் வளர ஊக்கம் கொடுத்தவர். சிட்டிக்கும்,கிருத்திகாவுக்கும் இருந்த உறவை அண்ணன் - தங்கை உறவு என்பதா அல்லது குரு - சிஷ்யை உறவு என்பதா?இரண்டுவிதமாகச் சொன்னாலும் அது உண்மைதான். தன் பெயர்த்திக்குத் தான் வளர்த்த தன் அபிமான எழுத்தாளரான கிருத்திகாவின் பெயரை வைத்து மகிழ்ந்தார் அமரர் சிட்டி. தி. ஜானகிராமன் மதித்த எழுத்தாளர்களில் ஒருவர் கிருத்திகா.


சிட்டி, சிவபாதசுந்தரம், க.நா.சு., ஆதவன் போன்ற மிகச் சிலர்தான் தமிழில்
எழுதுவதோடு கூட ஆங்கிலத்திலும் எழுதியவர்கள். அவர்கள் வரிசையில் வரும் இருமொழி எழுத்தாளர் இவர்.

தில்லியிலும்,பல்வேறு நகரங்களிலும் வசித்த கிருத்திகா சிட்டிக்கு எழுதிய
கடிதங்களும்,சிட்டி அவருக்கு எழுதிய பதில் கடிதங்களும் தனித்தனிக்
காகிதங்களில் எழுதப்பட்டவை அல்ல. எண்பது பக்கம், நூறு பக்கம் கொண்ட நோட்டுப் புத்தகங்களில் ஒவ்வொரு நோட்டுப் புத்தகமும் ஒரு கடிதம் என்ற வகையில் எழுதப்பட்டவை. தற்காலத் தமிழிலக்கிய வரலாற்றையே பேசுபவை.

கிருத்திகாவின் செல்ல மகளும்,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் மனைவியுமான மீனா, "அந்த மிக நீண்ட கடிதப் புத்தகங்களை எல்லாம் அவற்றைப் பாதுகாக்கும் ஏதாவது ஒரு நூலகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்றிருக்கிறேன்," என்கிறார் மிகுந்த அக்கறையுடன். மீனாவின் முகத்தில் தன் தாயாரைப் பற்றிய பெருமிதத்தைப் பார்ப்பதே ஒரு பரவசம்.

அமரர் கிருத்திகாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஸ்ரீவித்யா (மணிக்கொடி எழுத்தாளர்-சிட்டியின் புதல்வி), "என்னிடம்,கிருத்திகா சிட்டிக்கு எழுதிய ஏராளமான கடிதப் புத்தகங்களின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. அவற்றை நான் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்!" என்கிறார் பெருமையுடன். ஸ்ரீவித்யா என்ற பெயரை அவருக்குச் சூட்டியவரே கிருத்திகா தானாம். கி. இராஜநாராயணன்,
வல்லிக்கண்ணன், வண்ணதாசன் போன்றோர் கடிதங்கள் நூலாக்கம் பெற்றுள்ளன. இன்னும் சிட்டி - கிருத்திகா கடிதங்கள் எதுவும் நூலாக்கம் பெறவில்லை!

சிட்டியின் அணுக்கத் தொண்டராகவே காலம் கழித்த சிட்டியின் புதல்வரான மொழிபெயர்ப்பாளர் விஸ்வேஸ்வரன், சிட்டி தான் இல்லை என்றால் இனி கிருத்திகாவும் இல்லையே என்று உருகுகிறார். ஒருகாலத்தில் தில்லிவாழ் எழுத்தாளர்கள் மத்தியில் கிருத்திகா ஒரு முக்கியப் புள்ளி.

பாரதியைப் படித்த பரவசத்தில் எழுதத் தொடங்கியவர் கிருத்திகா. "புகை
நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே" என்ற பாரதி வரிகளின் முதல் இரு வார்த்தைகளைத்தான், தமது தொடக்க கால நாவலுக்குத் தலைப்பாக்கினார்."சத்யமேவ, பொன்கூண்டு, வாஸவேஸ்வரம், தர்ம ஷேத்ரே, புதிய கோணங்கி, நேற்றிருந்தோம்" போன்ற நாவல்கள், "யோகமும் போகமும்," "தீராத பிரச்னை," போன்ற குறுநாவல்கள், "மனதிலே ஒரு மறு, மா ஜானகி" போன்ற நாடகங்கள் இவையெல்லாம் கிருத்திகா தமிழுக்குக் கொடுத்த கொடை.

ஆங்கிலத்தில் எழுதும்போது "மதுரம் பூதலிங்கம்" என்ற தம் இயற்பெயரில்
எழுதினார். "குழந்தைகளுக்கான இராமாயணம், மகாபாரதம், பாகவதம்" என இவரது ஆங்கில நூல்கள் பல. பாரதியின் வாழ்க்கை வரலாற்றை, பாரதி வாழ்ந்தஇடங்களுக்கெல்லாம் நேரில் சென்று ஆராய்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதற்கு உதவி செய்தவர் தினமணி கதிர் முன்னாள் ஆசிரியர் ஆர்.ஏ. பத்மநாபன். பிரபல எழுத்தாளர் சிவசங்கரி, அமரர் கிருத்திகாவின் உறவினர். "எனக்குக் கிருத்திகா தான் ஆதர்சம்" என்று சிவசங்கரி சொல்வதுண்டு.

இந்தியா முழுவதும் பயணம் செய்தவர் கிருத்திகா. இந்தியக் கோயில்கள்,
கலைகள் போன்றவை குறித்துக் கலைமகளில் முன்னர் பற்பல கட்டுரைகள் எழுதி வந்தார். ஆங்கிலத்தில் மிக அழகாக மேடையில் பேசக்கூடியவர்; அது பேச்சல்ல, சங்கீதம். சம்ஸ்கிருதத்திலும் பெரும்புலமை படைத்தவர்.

கணவர் காலஞ்சென்ற பூதலிங்கம் அரசாங்கத்தில் மிகப் பெரும் பதவிகள்
வகித்தவர். (பழைய ஐ.சி.எஸ்; உருக்குத் துறையிலும், நிதித்துறையிலும்
செயலாளராகப் பணியாற்றியவர். பிலாய் உருக்காலை நிர்மாணத்தில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு).

ஆழ்ந்த இலக்கியவாதிகளோடு ஆத்மார்த்தமாக உரையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் கிருத்திகா. அவரது கணவர் பூதலிங்கம் போலவே இவரும் சடங்குகளில் நம்பிக்கை அற்றவர். மதங்கடந்த ஆன்மிகத்தைப் போற்றியவர். "செய்வன திருந்தச் செய்" என்பதில் மிகுந்த நாட்டமுள்ளவர். சின்னச் சின்னச் செயல்களிலும் கூட முழு அக்கறை செலுத்தி அவர் செய்வதைப் பார்த்தால், நடைமுறை வாழ்வையே அவர் ஒரு யோகமாகப் பயின்றார் என்பது புரியும்.

கலை, இலக்கியம் ஆகிய சிந்தனைகளில் தோய்ந்தவராய், சென்னை நகரில் 93 வயதுவரை வாழ்ந்தார் கிருத்திகா. அதாவது நேற்றுவரை. பழுத்த பழம் தானாய்க் காம்பிலிருந்து உதிர்வதுபோல, நல்லவர்கள் உயிர் முதுமைக் காலத்தில் இயல்பாய் உதிரும் என்று சொல்லியிருக்கிறார் மூதறிஞர் இராஜாஜி. இதோ பழுத்த பழம் ஒன்று வாசகர்கள் மனத்தில் கமகமக்கும் இனிய நினைவுகளைப் பரப்பிவிட்டுத் தானாய் உதிர்ந்துவிட்டது.

(13-2-2009 அன்று கிருத்திகா காலமானார்)

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

கிருத்திகா

கிருத்திகா; விக்கிப்பீடியா

1 கருத்து:

கோமதி அரசு சொன்னது…

திருமதி கிருத்திகா அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
நன்றி.

கருத்துரையிடுக