திங்கள், 19 நவம்பர், 2018

1183. ந. சிதம்பர சுப்பிரமணியம் - 1

"சுத்த மணிக்கொடிக்காரர்" ந.சிதம்பர சுப்பிரமணியம்


மணிக்கொடி எழுத்தாளர் வரிசையில் கடைசியில் வந்து சேர்ந்துகொண்டவர். ஆனால், தமிழ்ச் சிறுகதையாசிரியர் வரிசையில் முதலில் வைத்து எண்ணத்தக்கவர்; தன்னுடைய யதார்த்தக் கதைகளின் ஊடாக புனைகதைக்குப் பெருமை சேர்த்தவர்; ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா. உள்ளிட்ட எழுத்தாளர்கள் பிற இதழ்களில் கதை எழுதிவிட்டு மணிக்கொடிக்கு எழுத வந்தவர்கள். ஆனால், இவர் முதன்முதலில் மணிக்கொடியில்தான் எழுதினார்.

"சுத்த மணிக்கொடிக்காரர்" என்ற பெருமைக்குரிய ந.சிதம்பர சுப்பிரமணியம். 

1912ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி காரைக்குடியில் பிறந்தார். காரைக்குடியிலும் புதுக்கோட்டையிலும் தம்முடைய பள்ளிப்படிப்பை முடித்த இவர், சென்னையில் சாட்டர்டு அக்கவுண்டண்டாகப் பயிற்சிப் பெற்றார். ஆனால், இப்பயிற்சியை இவர் முழுமையாக முடிக்கவில்லை. சென்னை வந்த இவர், விஜயா - வாஹினி ஸ்டுடியோவில் நிர்வாகியாகப் பணியில் சேர்ந்தார். திரைப்படத்துக்குப் பலமுறை கதை எழுத முயன்று தோற்றார். 1967 ஜூலை முதல் தேதி இப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சுமார் 21 ஆண்டுகள் சிதம்பர சுப்பிரமணியம் இப்பணியில் இருந்தார். எழுதுவதற்குப் புனைபெயர் வைத்துக்கொள்ளாத இவரை, பணிபுரிந்த இடத்தில் மட்டும் என்.சி.எஸ். என்று அழைத்தனர்.  என்.சி.எஸ்., மேல்நாட்டு இலக்கியங்கள் பலவற்றைப் படித்தவர். சங்கீத ஞானம் உடையவர். தியாகைய்யர் மீது அளவில்லாத பற்று கொண்டவர். வீணை வாசிக்கத் தெரிந்தவர். மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, காந்தி, கலைமகள், ஆனந்த விகடன் முதலிய இதழ்களைத் தொடர்ந்து படித்ததன் காரணமாக இவருக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 

"வாழ்க்கையின் முடிவு" என்ற இவரது முதல் கதை மணிக்கொடி ஐந்தாவது இதழில் வெளிவந்தது. பி.எஸ்.இராமையா இவரின் முதல் கதையைப் பிரசுரித்து சிறுகதை உலகுக்கு இவரை அறிமுகப்படுத்தினார். வஸ்தாத் வேணு, ஒரு கூடை கத்தரிக்காய் ஆகியவை முறையே இவரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கதைகள். மணிக்கொடியில் மட்டும் 10 கதைகளை எழுதியிருக்கிறார். மணிக்கொடியைத் தொடர்ந்து கலைமகள், சந்திரோதயம், ஹனுமான், தினமணி - ஆண்டு மலர், சக்தி, கிராம ஊழியன் பொங்கல் மலர், கலாமோகினி, ஹிந்துஸ்தான் கதாமணி, சூறாவளி முதலிய பல இதழ்களிலும் இவருடைய கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் பிரசுரமாயின.  என்.சி.எஸ்., சுமார் 60 கதைகள் வரை எழுதியுள்ளார். இவைகளில் ஆறு கதைகள் எந்தத் தொகுப்பிலும் இடம்பெறவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு "சக்ரவாகம் முதலிய கதைகள்". இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு "சூரிய காந்தி". மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு "வருஷப் பிறப்பு". தவிர, இவருடைய 12 நாடகங்கள் அடங்கிய "ஊர்வசி" என்ற நாடகத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.  எழுத்தை முழுநேரத் தொழிலாகக் கொள்ளாத என்.சி.எஸ்., ஆரம்ப காலத்தில் சிறுகதைகளை எழுதினாலும், இவர் உச்சத்தைத் தொட்டது நாவலில்தான். மொத்தம் மூன்று நாவல்களை  எழுதியுள்ளார்.  இவருடைய முதல் நாவல், இதயநாதம். தான் நேசிக்கும் கலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் ஓர் இசைக் கலைஞனின் கொள்கை அடிப்படையிலான வாழ்க்கை முறையை இந்நாவல் விளக்குகிறது. இதை ஆன்மிகப் புதினம் என்று கூறுமளவுக்கு இதன் தன்மை உள்ளது.



இதயநாதம், க.நா.சு.வின் "பொய்த்தேவு" நாவலின் சாயலைக் கொண்டது என்ற விமர்சனமும் உண்டு. இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட நாவல்.  அடுத்து இவர் எழுதிய நாவல் "நாகமணி". பண்புக்கும் பணத்துக்கும் உள்ள முரண்பாட்டை இந்நாவல் காட்டுகிறது. "புகார் நகரத்தையும் இந்திர விழாவையும் வைத்து ஒரு கதையைக் கற்பனை செய்ய வேண்டுமென்பது என் வெகுநாளைய அவா. அதற்கு இந்தக் கதையின் மூலக் கற்பனை இடங்கொடுத்தது'' என்று என்.சி.எஸ்., நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.  மூன்றாவது நாவல், மண்ணில் தெரியுது வானம். வாசகர் வட்டம் இந்நாவலை 1969ஆம் ஆண்டு வெளியிட்டது. காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது காந்தியை சிதம்பர சுப்பிரமணியம் நேரில் பார்த்திருக்கிறார். அவரது எளிமையானத் தோற்றம் இவரை வசீகரித்திருக்கிறது. காந்தி 1929இல் நடத்திய இயக்கத்தில் கலந்துகொள்ளவிடாமல் இவரின் அம்மா தடுத்திருக்கிறார். அந்தச் சம்பவம் எதிர்காலத்தில் இப்படியொரு நாவல் எழுதத் தூண்டியிருக்கிறது. காந்தியடிகளின் நூற்றாண்டு விழாவின்போது இந்நாவல் வெளிவந்தது. பக்கத்துக்குப் பக்கம் இந்நாவல் காந்தியடிகளின் பெருமை பேசுகிறது.



"காந்திய யுகத்தில் நான் அனுபவித்ததையும் கண்டதையும் இந்நாவலில் காட்ட முயன்றிருக்கிறேன். காந்தி இருந்த காலம், நம் சரித்திரத்தில் ஒரு பொற்காலம்; என் வாழ்விலும் இது ஒரு பொற்காலம்தான். மகாத்மாவும் நானும் ஒரே காற்றை ஒரே சமயத்தில் சுவாசித்துக் கொண்டிருந்தோம் என்பதே எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. இது ஒரு தனி மனிதன் கதைதான். ஆனால், மகாத்மாவின் கதையும்கூட; தேசத்தின் கதையும் கூடத்தான்'' என்று இந்நாவல் குறித்து சிதம்பர சுப்பிரமணியம் முன்னுரையில்  குறிப்பிட்டிருக்கிறார். 

நமக்காகத்தான் நாம் எழுத வேண்டும். மற்றவர்களுக்காக நாம் என்றும் எழுத முடியாது. வாசகர்களுக்கென்று நான் எழுதவில்லை (ஞானரதம், மார்ச்.1972) என்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ந.சிதம்பர சுப்பிரமணியம், 1978ஆம் ஆண்டு காலமானார். 

புனைகதை வரலாற்றுக்கு இவரளித்த பங்களிப்பு அளப்பரியது. மணிக்கொடி எழுத்தாளர்கள் குறித்துப் பேசும்போது, இவருடைய எழுத்துகளையும் சேர்த்துதான் பேசவேண்டும்.  ந.சிதம்பர சுப்பிரமணியம் எழுதிய கட்டுரைகள் இன்னும் முறையாகத் தொகுக்கப்படவில்லை. நீண்டகாலமாக பதிப்பிக்கப்படாத, மறுபதிப்பில்லாத அவருடைய எழுத்துகளை காலவரிசையாகத் தொகுப்பதுதான் நாம் அவருக்குத் தரக்கூடிய மிகச்சிறந்த அங்கீகாரமாக இருக்கும்.

[ நன்றி:- தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
ந.சிதம்பர சுப்பிரமணியம்

கருத்துகள் இல்லை: