புதன், 14 அக்டோபர், 2020

1655. கதம்பம் - 38

`வீரத்துறவி’ நிவேதிதா 

மு.ஹரி காமராஜ்


அக்டோபர் 13. சகோதரி நிவேதிதாவின் நினைவு தினம். விகடனில் 2017-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.

=======

இந்திய விடுதலைப்போராட்ட வீராங்கனையாக, பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக, ஆன்மிகத் தேடலில் ஒரு வழிகாட்டியாக, இந்திய கல்வி முறையை சீர்திருத்திய கல்வியாளராக, பெண் விடுதலைப் போராளியாக, சிறந்த எழுத்தாளராக விளங்கியவர் சகோதரி நிவேதிதா. 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், இந்திய சரித்திரத்தில் அழுத்தமாக தன் தடத்தைப் பதிவு செய்திருக்கிறார். . அவரது வாழ்க்கையை 44 தகவல்களில் தரிசிக்கலாம்.


1. மார்கரெட் எலிசபெத் நோபிள் (Margaret Elizabeth Noble) என்ற இயற்பெயரைக் கொண்ட சகோதரி நிவேதிதா அயர்லாந்தின் டங்கானன் என்ற ஊரில் 1867-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் நாள் பிறந்தார். சாமுவேல் ரிச்மாண்ட் நோபிள் (Samuel Richmond Noble) - மேரி இஸபெல் ஹாமில்டன் தம்பதியினருக்கு மூத்த மகளாகப் பிறந்தார்.


2. நிவேதிதா ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோதே அவரது குடும்பம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு குடிபெயர்ந்தது.


3. நிவேதிதாவின் தந்தை சாமுவேல் மதகுருவாக விளங்கினார். இவரது பாட்டனார் ஜான் நோபிள், அயர்லாந்தின் விடுதலைப் போராட்டத்துக்குப் பாடுபட்டவர். அதனால் சிறுபருவம் முதலே நிவேதிதா போராட்ட குணமும், இரக்க சிந்தனையும் கொண்டவராக விளங்கினார்.


4. ஆரம்பத்தில் கிறிஸ்தவ மதத்தின் மீது பிடிப்புக் கொண்டிருந்த நிவேதிதா, இளமைப் பருவத்தில் புத்த மதக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டார்.


5. கல்லூரிப் படிப்பை முடித்த நிவேதிதா 1884-ம் ஆண்டு ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தார். புதிய கல்வி முறையை குழந்தைகளுக்குக் கற்பிக்க 1892-ம் ஆண்டு ஒரு பள்ளியைத் தொடங்கினார். `இங்கிலாந்தின் சிறப்பான கல்வியாளர்’ என்ற பெயரையும் பெற்றார்.


6. 1895-ம் ஆண்டு, இங்கிலாந்து சென்றிருந்த சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தார் நிவேதிதா. இந்தச் சம்பவம்தான் நிவேதிதாவின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.


7. விவேகானந்தரின் கருத்துகளும் இந்தியா பற்றிய பெருமைகளும் சேர்ந்து சகோதரி நிவேதிதாவை இந்தியாவுக்குச் செல்லுமாறு தூண்டியது. 1898-ம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு மாணவியாக வந்தார்.


8. 1898-ம் ஆண்டு, மார்ச்சில் அவருக்கு தீட்சை அளித்து ஆசிர்வதித்த விவேகானந்தர், அவருக்கு 'நிவேதிதா' என்ற பெயரைச் சூட்டினார். 'அர்ப்பணிப்பு' என்ற உயரிய பொருள் கொண்ட அந்தப் பெயரால் அன்றிலிருந்து அழைக்கப்பட்டார்.


9. தனது ஆன்மிக குருவான விவேகானந்தரிடம் நிவேதிதா எப்போதுமே எதிர்வாதங்களையே செய்து வந்திருக்கிறார். தான் நம்ப முடியாத பல கருத்துகளை வாதங்களின் வழியே உணர்ந்து தெளிவு பெற்றார்.


10. ஆன்மிக வாழ்வைவிட மக்களுக்கான சேவையே அப்போதைய தேவை என்பதை உணர்ந்த சகோதரி நிவேதிதா, கொல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளி ஒன்றைத் தொடங்கினார். அந்தப் பள்ளியை அன்னை சாரதா தேவி திறந்து வைத்தார். அங்குதான் அன்னை சாரதாதேவியை சந்தித்து, அவரை தனது குருவாக வரித்துக்கொண்டார் நிவேதிதா.


11. அன்னை சாரதா தேவியிடம் பேசுவதற்காகவே வங்காளம் கற்றுக்கொண்டார் நிவேதிதா. அன்னையின் மீது பெருமதிப்புக் கொண்டு அவரது ஆன்மிக மொழிகளை பின்பற்றத் தொடங்கினார்.


12. ஆதரவற்ற பெண்களுக்கான கைவினை தொழிற்பயிற்சி வகுப்பை நிவேதிதா தொடங்கினார். அங்கு ஓவியம் வரைதல், துணி தைத்தல், மண் பொம்மைகள் தயாரித்தல் போன்றவற்றைப் பயிற்றுவித்தார்.


13. தனது சேவைகளுக்கான செலவுகளை சமாளிக்க அமெரிக்க, இங்கிலாந்து நண்பர்களிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டார்.


14. நிவேதிதா இந்தியாவுக்கு வந்த இரண்டே மாதங்களில் கொல்கத்தாவை பிளேக் நோய் கடுமையாகத் தாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவித்துக் கிடந்தனர். அப்போது குடிசை குடிசையாக நுழைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ தாதியாக சேவை செய்து உதவினார் நிவேதிதா.


15. பழங்களையும் பாலையும் மட்டும் உண்டு வாழ்ந்தபடி பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவையாற்றினார் நிவேதிதா. பண நெருக்கடியால் பாலையும் நிறுத்திவிட்டு சேவையாற்றினார். அப்போதுதான் கொல்கத்தா மக்களால், `சகோதரி’ என்று அழைக்கப்பட்டார்.


16. 1899-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றார். அங்கு தனது பள்ளிக்கான நிதியைத் திரட்டினார். மேலும் இந்தியாவைப் பற்றி மேலைநாட்டினர் கொண்டிருந்த பல தவறான நம்பிக்கைகளை மறுத்து, இந்தியாவின் பெருமைகளை விளக்கிப் பேசினார்.


17. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ’ராமகிருஷ்ண தொண்டர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி இந்தியாவின் பெருமையைப் பரப்ப உதவினார்.


18. லண்டன் பத்திரிகைகள், சகோதரி நிவேதிதாவை அப்போதே 'இந்தியாவின் போராட்ட வீராங்கனை' என்று போற்றிப் புகழ்ந்தது.


19. தனது வெளிநாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிவேதிதா 1901-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். சமூகப் பணிகளோடு தனது ஆன்மிகம் குறித்தத் தேடலையும் தொடங்கினார்.


20. கல்விப்பணி, சமூக சேவை என்று அயராது பாடுபட்ட சகோதரி நிவேதிதாவுக்கு 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் பெரும் சோகத்தைத் தந்தது. அவருடைய குருவான சுவாமி விவேகானந்தரின் மறைவுதான் அது. குருவை இழந்த நிவேதிதா சோர்ந்து விடாமல், அவரது பணிகளை இன்னும் வேகமாகச் செய்யத் தொடங்கினார்.


21. சுவாமி விவேகானந்தர் தனக்கு எழுதிப் பரிசளித்த 'நல்வாழ்த்து' என்ற கவிதையை ஒரு பொக்கிஷமாகவே கருதி பாதுகாத்து வந்தார்.


22. சுவாமி விவேகானந்தருக்குப் பிறகு அரவிந்தருடன் நட்பானார் நிவேதிதா. அதோடு, இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பாடுபடத் தொடங்கினார். வங்காளத்தின் புரட்சிகர இயக்கங்கள் சிலவற்றுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கிவந்தார்.


23. தனது சுதந்திரப் போராட்ட நிலைப்பட்டால் கோபம் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, கோபத்தால் ராமகிருஷ்ண இயக்கத்தை முடக்கிவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தால் அதில் இருந்து விலகினார்.


24. நிவேதிதாவின் எழுத்தும் சிந்தனையும் இந்திய விடுதலை குறித்தும், மக்களின் விழிப்புஉணர்வு குறித்தும் இருந்தது. இவரது கட்டுரைகள் படித்த இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன.


25. இந்திய சுதந்திரம் உச்சம் பெறாத காலத்திலேயே வங்கமொழியின் 'வந்தே மாதரம்' பாடலை தேசிய மொழியாக அறிவித்து, அதைத் தனது பள்ளியில் பாடச் செய்தார்.


26. 1902-ம் ஆண்டு டிசம்பரில் சென்னைக்கு வந்தார் சகோதரி நிவேதிதா. இரண்டு நாள் சென்னையில் இருந்த இவர் பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு பேசினார். விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவிலும் கலந்துகொண்டார்.


27. பெண் கல்விக்கு பெரிதும் பாடுபட்ட நிவேதிதா, பழைமையான கல்வி முறையை மாற்றி, நவீன முறையில் கல்வி அமைப்பு உருவாகப் போராடினார். `இயற்கையோடு இணைந்து குழந்தைகள் பாடம் கற்க வேண்டும்’ என்று அப்போதே குரல் எழுப்பினார்.


28. `அறிவியல் சார்ந்த நடைமுறைக் கல்வியே நாளைய இந்தியாவை வளமிக்கதாக மாற்றும்’ என்று தொடர்ந்து எழுதினார். `குழந்தைகள் அச்சமின்றிப் பயில வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.


29. இந்தியாவின் பாரம்பர்யம், புராணங்கள், நம்பிக்கைகள் குறித்து ஆழ்ந்து அறிந்துகொண்டார். அவற்றின் பின்னணியில் இருந்த நல்ல கருத்துகளை மேலைநாட்டினர் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினார்.


30. அறிவியல் மேதை சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களுக்குப் பெரும் துணையாக இருந்து ஊக்கம் அளித்து 'தாவரங்களின் உணர்ச்சி' உள்ளிட்ட நூல்களை வெளியிட உதவினார்.


31. இந்தியாவின் தேசியக்கொடியை ஆரம்ப காலத்திலேயே வடிவமைத்தார் சகோதரி நிவேதிதா. இவர் உருவாக்கிய தேசியக்கொடியில் வஜ்ஜிராயுதம் மற்றும் தீபங்களை அமைத்திருந்தார்.


32. இந்தியக் கலைகளை பெரிதும் போற்றி, அவை வளரத் தூண்டுகோலாக இருந்தார். குறிப்பாக இந்திய ஓவியங்களை புனரமைக்க பாடுபட்டார். நந்தலால் போஸ், அஜித் ஹல்தார் போன்ற ஓவியர்களை ஆதரித்தார்.


33. இந்திய விடுதலை மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சகோதரி நிவேதிதாவை எல்லோருமே போற்றிக்கொண்டாடினர். குறிப்பாக தாகூரால் 'லோகமாதா' என்றும், அரவிந்த் கோஷால் ‘அக்னிசிகா’ என்றும், அரவிந்தரால் 'வீரத்துறவி' என்றும் போற்றப்பட்டார்.


34. 1907-ம் ஆண்டு கொல்கத்தாவில் காங்கிரஸ் தலைவர் ஆனந்தமோகன் போஸின் வீட்டில்தான் முதன்முதலாக மகாகவி பாரதியார் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். முதல் சந்திப்பே அவரைப் பெரிதும் பாதிப்படையச் செய்தது. அப்போதுதான் பாரதியார் தனது பாடல்கள் யாவும் இனி தேச விடுதலைக்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தார்.


35. பாரதியாரின் பாடல்களைப் பாராட்டிய சகோதரி நிவேதிதா அவரிடம் 'எங்கே உங்கள் மனைவி?' என்று கேட்டார். அவர் 'எங்கள் வழக்கப்படி பெண்களை வெளியே அழைத்து வருவதில்லை' என்று கூறினார். இதைக் கேட்டு நிவேதிதா `உங்கள் மனைவிக்கே விடுதலை கொடுக்காத நீங்கள், இந்தியாவின் விடுதலையைப் பெறுவது எப்படி சாத்தியம்?' என்று கேட்டார். அந்த ஒரு கேள்விதான் பாரதியை பழைமைவாதத்தில் இருந்து மீட்டு, புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தது.


36. பாரதி, `தேசிய கீதங்கள்’ என்ற நூலின் முகப்பில், தனது ஆன்மிக குருவான நிவேதிதா தேவிதான் அந்தப் பாடல்கள் உருவாகக் காரணமானவர் என்று புகழ்ந்து சமர்ப்பணம் செய்திருக்கிறார்.


37. மேலைநாட்டினரின் கலைகளை விட இந்தியக்கலைகள் மேன்மையானவை. குறிப்பாக அஜந்தா குகை ஓவியங்கள் உலகில் எந்த பகுதியிலும் காணமுடியாதவை என்று தெரியப்படுத்தினார்.


38. நிவேதிதாவின் பேச்சும் எழுத்துகளும்தான் அந்த நாளில் இந்தியாவைப் பற்றி அமெரிக்கர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கின. நிவேதிதா காலத்தில்தான் வங்காளம் கற்றறிந்த மேதைகளின் இடமாக மாறத் தொடங்கியது.


39. உபநிடதத்தில் இருக்கும் ருத்ரப் பிரார்த்தனைப் பாடல் ஒன்று சகோதரி நிவேதிதாவுக்கு விருப்பமானது `அஸதோ மா ஸதகமய தமஸோ ம ஜ்யோதிகமய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய’ என்ற இந்தப் பாடலை மனமுருகிக் கேட்பார்.


40. புத்தமதக் கொள்கைகளிலும் விருப்பம் கொண்டு பல புத்தங்கங்களை வாசித்து வந்தார்.


41. 1911-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், டார்ஜிலிங் சென்றிருந்த சகோதரி நிவேதிதா அங்கு தட்பவெப்பநிலை ஒப்புக்கொள்ளாமல் கடுமையாக பாதிக்கப்பட்டார்.


42. தனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்த நிவேதிதா, அக்டோபர் 7-ம் நாள் தனது சொத்துகள், படைப்புகள் எல்லாவற்றையும் இந்தியப் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கென எழுதி வைத்துவிட்டார்.


43. அக்டோபர் 13-ம் நாள் அதிகாலை சூரியனைக் கண்டு மகிழ்ந்து தனக்கு விருப்பமான ருத்ரப் பிரார்த்தனைப் பாடலைப் பாடி முடித்துவிட்டு 'என்னால் சூரிய உதயத்தைப் பார்க்க முடிகிறது' என்று சொல்லியவாறே தனது 44-வது வயதில் உயிரைவிட்டார் சகோதரி நிவேதிதா.


44. எங்கோ அயர்லாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இந்திய தேசம் வந்த இந்தச் சிறகில்லாத தேவதை எத்தனை எத்தனை சேவைகளை ஆற்றி இருக்கிறது! எத்தனையோ கலைஞர்களை உருவாக்கி, அவர்களின் வழியே இந்தியாவின் பெருமைகளை ஓங்கச் செய்த சகோதரி நிவேதிதாவின் நினைவு நாள் இன்று. கலை, கல்வி, போராட்டம், சமூக சேவை என பலவித தளங்களில் நின்று இந்தியாவைப் போற்றிய இந்த தெய்வீகத் துறவியை இந்த நாளில் போற்றுவோம். 

[ நன்றி : https://www.vikatan.com/spiritual/temples/104914-life-history-of-sister-nivedita  ]


தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக