'தேவன்'
கலாரசிகன்
=====
நவம்பர் 10, 2013 ’தினமணி’யில் ‘தேவ’னைப் பற்றி ஒரு
கட்டுரையைப் படித்தேன்.
அதைப் பார்த்ததும் என் மனத்தில் ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ‘தினமணி’யில் தேவனைப் பற்றி வந்த இன்னொரு கட்டுரையின் நினைவு எழுந்தது.
‘தேவன்’ இருமுறை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக
இருந்தார்; ‘தினமணி’ துணை ஆசிரியர்
ஏ.ஜி.வெங்கடாச்சாரியார் அச்சங்கத்தின் துணைத்
தலைவராக இருந்தார். மேலும் அவர் ‘தேவ’னின் நெருங்கிய
நண்பரும் கூட. ‘தேவன்’ மறைந்தவுடன், 9-5-57 ‘தினமணி’
இதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. தமிழ்
எழுத்தாளர் சங்கம் கூட்டியிருந்த கூட்டத்தில்
’தேவ’னைப்பற்றிப் பேசிய பல எழுத்தாளர்களின்
மனமுருக்கும் உரைகளை அந்தத் ‘தினமணி’க் கட்டுரை
விவரமாகப் பதிவு செய்திருந்தது. அந்தக் கூட்டத்தைப் பற்றி
நாளேடுகளில் வந்த கட்டுரைகளில் அதுவே மிக நீண்ட
கட்டுரை எனலாம். இதற்கு ஏ.ஜி.வெ அவர்களே காரணம்.
அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி :
அக்கூட்டத்தில் பேசிய ஏ.ஜி.வெங்கடாச்சாரியார் தேவனின்
மறைவு சங்கத்திற்கு ஈடு செய்ய முடியாத நஷ்டமென்றார்.
“
எழுத்து வன்மையால் மட்டுமின்றி சிறந்த பண்பாட்டினாலும்
தமிழகத்திற்குச் சிறந்த தொண்டினைத் தேவன்
செய்துள்ளார். ..எழுத்து வன்மையும் பண்பாடும் சேர்ந்து
தேவனிடம் அமைந்திருந்தது போல் வேறு யாரிடமும்
அமையவில்லை எனலாம். எப்போதும் மலர்ந்த முகம்,
இனிமையான பேச்சு, ஆழ்ந்த அனுபவம் பிறருடன் அதைப்
பகிர்ந்து கொள்வதில் இன்பம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
“ என்று கூறி அன்னாரின் கடைசி காலத்தில் நான்கு மாத
காலம் கூட இருந்து அவர் பட்ட கஷ்டங்களை ஒரு அளவுக்கு
தாம் பார்த்ததைப் பற்றிக் குறிப்பிடுகையில்
வெங்கடாச்சாரியாருக்குத் துக்கம் தொண்டையை அடைக்க
நா தழதழத்து சிறிது நேரம் பேச முடியாமல் போயிற்று.
இப்போது கலாரசிகன் என்ற புனைபெயரில் எழுதும்
’தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் , அவருடைய ‘ இந்த
வார கலாரசிகன்’ பத்தியில் ’தேவ’னுக்குப் புகழாரம்
சூட்டியுள்ளார். அந்தக் கட்டுரையைக் கீழே இட்டிருக்கிறேன்.
அவருக்கு என் மனமார்ந்த நன்றி!
அதன் கீழே ’தினமணி’யில் வந்த என்னுடைய பின்னூட்டம்.
( இதுவே தேவன் நூற்றாண்டு விழாவில் நான் பேசியபோது,
நான் விடுத்த முக்கிய வேண்டுகோள்! நீங்களும் இங்கு
உங்கள் பின்னூட்டத்தைத் தரலாமே! )
கலாரசிகனின் கட்டுரையைத் தினமணி வலைப்பதிப்பில் படிக்க:
தேவன்
‘கலாரசிகன்’ [ 10-11-2013; தினமணி ]
நினைவு தெரிந்து என்னை பத்திரிகைகள் படிக்கத் தூண்டிய
எழுத்துகள் இருவருடையது. நடுநிலைப் பள்ளி மாணவனாய்
வீட்டிற்கு வரும் ஆனந்த விகடனைப் படிக்க
அப்போதெல்லாம் போட்டி நடக்கும். தேவனின் மறைவுக்குப்
பிறகு கோபுலுவின் படங்களுடன் சித்திரக் கதையாக
வெளிவந்த துப்பறியும் சாம்புவும், சாவியின் வாஷிங்டனில்
திருமணமும்தான் அந்த ஆர்வத்தை ஏற்படுத்தக் காரணம்.
உயர்நிலைப் பள்ளி மாணவனான பிறகு, "கல்கி' வார இதழில்
மறுபதிப்பாக வெளிவந்த "பொன்னியின் செல்வன்',
"சிவகாமியின் சபதம்', "பார்த்திபன் கனவு' போன்ற
கல்கியின் படைப்புகள் கதை படிக்கும் பழக்கத்தை
நிலைநிறுத்தின. இன்றுவரை, வார சஞ்சிகைகள்
ஒன்றுவிடாமல் படித்து விடுகிறேன், குறைந்தபட்சம் புரட்டிப்
பார்த்துவிடுகிறேன் என்றால் மேலே குறிப்பிட்ட மூன்று
பேரும்தான் அதற்குக் காரணம்.
தேவன் நூற்றாண்டு விழாவையொட்டி
தொகுக்கப்பட்டிருக்கும் "தேவன் வரலாறு' என்கிற
புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தபோது,
துப்பறியும் சாம்புவும், இன்ஸ்பெக்டர் கோபாலனும் கண்
முன்னே நடமாடும் கதாபாத்திரங்களாக இன்றைக்கும்
மனதில் பதிந்திருப்பதை உணர்ந்தேன்.
44 வயதில் தேவன் என்கிற மகாதேவன் காலமாகிவிட்டார்.
முழுநேர எழுத்தாளனாக அவர் இருந்தது என்னவோ ஏறத்தாழ
கால் நூற்றாண்டு காலம் மட்டுமே. அதற்குள் அவர்
படைத்திருக்கும் படைப்புகள் 31. துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ்
ஜகந்நாதன், மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம்,
கோமதியின் காதலன் முதலியவை காலாகாலத்திற்கும்
தேவனின் பெயரை நிலைநிறுத்தும் படைப்புகள்.
"கல்கி ஒரு காந்த சக்தி. அந்த சக்தி எழுத்தாளர் உலகத்தில்
என்றென்றும் இருக்கும்' என்று கல்கியின் மறைவின்போது
எழுதினார் தேவன். அது அவருக்கும்தான் பொருந்தும்.
கல்கியைப் போலவே, தேவனுக்கும் நகைச்சுவை என்பது
இயல்பாகவே பேனாவில் வந்து கொட்டும். தேவன்
ஆசிரியராக இருந்தபோது விகடனில் ஒரு துணுக்கு. ""என்ன
சார், இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டீர்களா?'' என்கிற
கேள்விக்குத் தரப்பட்ட பதில் ""இல்லை. இப்போதுதானே
விமர்சனம் எழுதி முடித்திருக்கிறேன்'' என்பது. பல புத்தக
விமர்சனங்கள் இப்படித்தான் இப்போதும் எழுதப்படுகின்றன
என்பதுதான் வேடிக்கை.
ஏனைய படைப்பிலக்கியவாதிகளுக்கும் தேவனுக்கும் ஒரு
வித்தியாசம் உண்டு. அவருடைய கதாபாத்திரங்கள்
அந்நியப்பட்டவையாக இருக்காது. நாம் சந்திக்கும், அல்லது
நமக்கு எங்கேயோ தெரிந்த நபர்களின் சாயல் அவரது
கதாபாத்திரங்களில் இருக்கும். சம்பவங்களும் சரி,
யதார்த்தமாக இருக்கும்.
"கல்கி' என்கிற மிகப்பெரிய ஆளுமை அமர்ந்திருந்த
நாற்காலியில் அமர்வது என்பது எளிதான ஒன்றல்ல. கல்கி
விலகியதுடன் ஆனந்த விகடன் அழிந்துவிடும் என்று
எதிர்பார்த்தவர்கள் ஏராளம். 1940-இல் கல்கி
வெளியேறியபோது துமிலனும் அவருடன் வெளியேறினார்
எனும்போது, இனி என்னவாகும் என்கிற பயம் ஆனந்த
விகடன் அதிபர் ஜெமினி எஸ்.எஸ். வாசனையேகூட சற்று
நிலைகுலைய வைத்தது என்பார்கள். அப்படிப்பட்ட சூழலில்
ஆனந்த விகடனைத் தாங்கிப் பிடித்தவர் தேவன். விகடனின்
பொறுப்பாசிரியராக தேவன் மட்டும் இல்லாமல்
போயிருந்தால்...
"தேவன் வரலாறு' புத்தகத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் பதிவு
நிஜமாகவே யோசிக்க வைக்கிறது. ""தேவன் ஒரு
காலகட்டத்தில் வெகுஜன எழுத்துக்கு முக்கியமான
முன்னோடி. கல்கி அளவுக்கு அவருக்கும் பல திறமைகள்
இருந்திருக்கின்றன. அவரும் கல்கியைப் போல் ஒரு
நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வந்து
தனியே ஒரு பத்திரிகை துவங்கியிருந்தால் என்ன
ஆகியிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது'' என்பதுதான்
சுஜாதாவின் பதிவு. அதை நானும் வழிமொழிகிறேன்.
கல்கியில் "கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்தியும், ஆனந்த விகடனில்
"தேவன்' என்கிற மகாதேவனும் ஆசிரியராக இருந்த
காலகட்டம் தமிழ் பத்திரிகை உலகின் பொற்காலம்.
தேவனின் சகோதரி மகனான கே. விஸ்வநாதன் (அன்னம்)
எழுதுகிறார்-- ""எனக்குத் தெரிந்து மாமாவுக்கு இருந்த
மனக்குறை ஒன்றுதான். அவர் தனது படைப்புகளைப்
புத்தகங்களாகக் கொண்டு வர "ஆனந்த விகடன்' நிறுவனம்
அனுமதி மறுத்துவிட்டது. சொல்லிச் சொல்லி
வருத்தப்படுவார். இப்போது, தேவனின் நூற்றாண்டு
விழாவையொட்டி அவர் நினைவால் அமைந்திருக்கும்
அறக்கட்டளை மூலம் அவரது ஆசை நிறைவேற்றப்பட்டதே
அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும்'' என்கிறார் அன்னம்.
எனக்கும் நீண்ட நாளாக ஒரு மனக்குறை இருந்தது. தேவனின்
அத்தனை புத்தகங்களும் எனது தனி நூலகத்தில் இடம் பெற
வேண்டும். கல்கியின் படைப்புகளை அவ்வப்போது எடுத்துப்
படித்து மகிழ்வது போல, தேவனின் படைப்புகளையும்
நினைத்தபோதெல்லாம் படித்து மகிழ வேண்டும் என்கிற
அந்தக் குறை இனி தீர்ந்தது - அல்லயன்ஸ் சீனிவாசனுக்கும்,
சாருகேசிக்கும் நன்றி!
[ நன்றி : தினமணி ]
பின்னூட்டம்:
தேவனின் பல படைப்புகள் இன்னும் அச்சில் வராமல்
இருக்கின்றன. எடுத்துக் காட்டுகள்; மிஸ்டர் ராஜாமணி,
கண்ணன் கட்டுரை, பிரபுவே!உத்தரவு, புஷ்பக விஜயம்,
அதிசயத் தம்பதிகள், போடாத தபால்..... இவற்றை விகடன்
பதிப்பகம் வெளியிட வேண்டுகிறேன். மேலும், தேவனின்
நாவல்களை ராஜு, கோபுலு அவர்களின் மூல
சித்திரங்களுடன் வெளியிட்டால் ஒரு பொற்காலத்தை
மீண்டும் சுவைக்கலாம்.
----பசுபதி -----
தொடர்புள்ள பதிவுகள் :
இந்தக் கட்டுரையில் தினமணி ஆசிரியர் குறிப்பிட்ட,
‘கோபுலு’ படங்களுடன் , தேவன் மறைவிற்குப் பின்
விகடனில் வெளிவந்த ‘துப்பறியும் சாம்பு’ சித்திரத்
தொடரிலிருந்து சில கதைகள், மற்ற சில படைப்புகள்: