ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சசி - 8 ; புல்லிலிருந்து பால்!

புல்லிலிருந்து பால்!
சசிந்த ஆசாமியிடம் எனக்கென்னவோ சந்தேகம்தான் முதலில் உண்டாயிற்று. 'சர்வ சாதாரணமாக எங்கே கண்டாலும் மண்டிக்கிடக்கும் புல்லிலிருந்து நல்ல பாலைத் தயாரிக்க முடியும்' என்று அந்த ஆசாமி சொல்லும்போது, எப்படிச் சந்தேகம் உண்டாகாமல் இருக்கும்?

''அப்படி உங்களால் புல்லிலிருந்து பால் தயாரிக்கமுடியுமானால், இப்பொழுதே உணவு இலாகா டைரக்டரைப் பார்த்து ஏன் உங்கள் நூதன வழியைச் சொல்லப்படாது? பால் பஞ்சம் ஏற்பட்டிருக் கும் இந்தச் சமயத்தில் அதனால் எவ்வளவோ நன்மை ஏற்படக்கூடுமே! அதோடு, அந்த நூதன வழியைச் சொல்லிக்கொடுத்தால், உங்களுக்கும் ஏராளமான சன்மானம் கிடைக்குமே!'' என்றேன்.

''யாரிடம் அந்த மர்மத்தைத் தெரிவிப்பது என்று தெரியாமல்தான் முழிக்கிறேன்! ரகசியத்தைக் கற்றுக்கொண்டுவிட்டு, பிறகு பணம் தராமல் ஏமாற்றி விட்டால், என்ன செய்வதென்றும் பயமாக இருக்கிறது'' என்றார் அந்த ஆசாமி.

''அப்படி ஒன்றும் உங்களை ஏமாற்றிவிடமாட்டார்கள்! ஆமாம், நீங்கள் குறைந்தது எவ்வளவு தொகை எதிர்பார்க்கிறீர்கள்?''

''நானும் தேச நன்மைக்காகப் பாடுபடுகிறவன் தான், ஸார்! ஆகவே, நான் அப்படியன்றும் அதிகத் தொகை எதிர்பார்க்கிறவனல்ல. பத்து ரூபாய் கொடுத்தால் கூடப் போதும்!''

''பத்து ரூபாய்தானா... பூ..! அதை நானே கொடுத்துவிடுகிறேன். என்னிடம் சொல்லுங்கள் ரகசியத்தை. அதை உணவு இலாகா டைரக்டருக்குப் பிறகு நான் தெரிவித்துவிடுகிறேன்.''

''இப்படி அநேகர் என்னிடம் சொல்லி மர்மத்தைத் தெரிந்து கொண்டுவிட்டுப் பணம் கொடுக்காமல் ஓடிப்போய் விட்டார்கள். நான் யாரை நம்புவது?''

இவ்வாறு அவர் கூறியபோது, அவர் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்துகொண்டு இருந்தது. உடனே, நான் அவருக்குச் சில ஆறுதல் மொழிகளைக் கூறிவிட்டு, ''எல்லோரும் அயோக்கியர்களாக இருக்கமாட்டார்கள். இந்த உண்மையை நிரூபிப்பதற்காக இதோ இப்போதே நான் பத்து ரூபாய் கொடுக்கிறேன். முதலில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு ரகசியத்தைச் சொல்லலாம்'' என்று பத்து ரூபாயை அவரிடம் கொடுத்தேன்.

சிறிது நேரம் அவர் என்னையே உற்றுப் பார்த்தவாறு, ஏதோ சிந்தனையிலிருந்தார். பிறகு, ''சரி, இந்தாருங்கள்! அந்த மர்மம் எழுதிய கடிதம் இந்தக் கவருக்குள் இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் பாருங்கள்'' என்று ஒரு கவரை என்னிடம் கொடுத்தார்.

அதை நான் ஒரு மூலைக்கு எடுத்துக் கொண்டுபோய், யாருக்கும் தெரியாமல் படித்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! புல்லிலிருந்து பால் எடுக்கும் விதம் பற்றித் தெளிவாகவும் வெகு சுருக்கமாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். உங்களுக்கும் உபகாரமாக இருக்கட்டும் என்று அதைக் கீழே பிரசுரிக்கிறேன்.

''தினந்தோறும் நல்ல பசும் புல்லை நிறையச் சேகரித்து, அதைக் கறவைப் பசுக்களுக்குப் போட்டு வாருங்கள். அவை அதைத் தின்று, நல்ல பாலைக் கொடுக்கும். புல்லிலிருந்து பால் கிடைக்க இதுவே வழி!''

[ நன்றி: விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற படைப்புகள்

5 கருத்துகள்:

Los Angeles Swaminathan சொன்னது…

(;-)))))
நல்ல ஆலோசனை !
இதன் பரிணாம வளர்ச்சிதான் மூலிகை பெட்ரோல் !

Soundar சொன்னது…

If m=milk, g=grass, then m=f(g) என்று சுவாரசியமாகத் தொடங்கி, இறுதியில் m=MOD(g) என்கிற MOD-function-இன் செயல்பாட்டினை விளக்கிய உத்தி எழுதியவரின் வித்தகத்தைக் காட்டுகிறது.

நுனிப்புல் நூதனன்

Pas S. Pasupathy சொன்னது…

m=MOD(g) -யா ? அல்லது m=மாடு(g) - யா?:-)

பசும்புல் பாகுவன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை. முடிவினை யோசிக்க முடியவில்லை! :)

R.V.RAJU சொன்னது…

பத்து வயசில் படித்தது. முடிவு தெரிந்தாலும் மறுபடி படிக்க சுவாரசியமாயிருந்தது. இந்த விகடன் இதழின் தேதி எங்காவது மூலையில் கிடைக்குமா?

கருத்துரையிடுக