செவ்வாய், 31 மார்ச், 2015

சாவி -13: 'கமிஷன்' குப்பண்ணா

'கமிஷன்' குப்பண்ணா 
சாவி 


[ ஓவியம்: நடனம் ]

"குப்பண்ணாவை யாராவது பார்த்தீர்களா, சார்! ஆளே அகப்பட மாட்டேங்கிறானே?" 

"எந்தக் குப்பண்ணா? கமிஷன் குப்பண்ணாவா? இத்தனை நேரம் இங்கேதானே இருந்தான்? இப்பத்தான் ஒருவர் வந்து அவனைக் காரில் அழைத்துக் கொண்டு போனார்." 

குப்பண்ணாவைத் தேடிக் கொண்டு தினமும் ஆயிரம் பேர் அலைவார்கள். அவனோ ஆயிரம் இடத்தில் சுற்றிக் கொண்டிருப்பான்.

''என்ன ஸார் பண்றது? சப் ஜட்ஜ் வீட்டிலே கல்யாணம்; வக்கீல் வீட்டுப் பையனுக்கு காலேஜ் அட்மிஷன்; இன்னொருத்தருக்கு வீடு வேணும்; வேறொருத்தருக்கு கார்ப்பரேஷன் லைசென்ஸ்; எல்லாத்துக்கும் இந்தக் குப்பண்ணாதான்! முடியாதுன்னா யார் விடறா?'' என்பான்.

இந்தச் சமயம் ''குப்பண்ணா! உன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்'' என்று சொல்லிக்கொண்டு வருவார் ஓர் ஆசாமி.

'' என்ன சங்கதி,  ரிஸ்ட் வாட்ச் விஷயம்தானே? வாங்க, இந்த ஓட்டலுக்குள்ளே போய்க் காப்பி சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்'' என்று அவரை ஓட்டலுக்குள்ளே அழைத்துச் சென்று, '' எங்கே கடியாரத்தைக் காட்டுங்க, பார்க்கலாம் ?  எத்தனை ஜ்வல்ஸ்? பழசு மாதிரி இருக்கே? என்ன விலை?'' என்பான்.



''என்ன, குப்பண்ணா! புது வாட்ச் இது! பார்த்தால் தெரியல்லே? சிங்கப்பூர்லேருந்து வந்தது. போன மாசம்தான் வாங்கினேன். 270 ரூபாய்'' என்பார் அவர்.

''அடாடா! ஏமாந்துட்டேளே சார்! என்கிட்டே சொல்லியிருந்தா இதே வாச்சை இருநூற்று முப்பது ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருப்பேனே! சரி, போறது. இப்ப யார் சார் வாங்கப் போறா? இருநூறு ரூபாய்க்குத் தருவதானால் சொல்லுங்க. ஓர் இடத்திலே கேட்டுப் பார்க்கறேன். அதுவும் உங்களுக்கு அதிருஷ்டம் இருந்தால் விலை போகும்'' 

" அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, குப்பண்ணா, உன்கிட்டே வந்தா காரியம் நடக்கும்னுதானே காலையிலிருந்து அலையறேன்" 

[ ஓவியம்: கோபுலு ]

" சரி, வாச்சைக் கொடுங்க, சரியா மூணு மணிக்கு என்னைப் பஸ் ஸ்டாண்ட்லே வந்து பாருங்க" என்று கடியாரத்தை வாங்கிக்கொள்வான். இதற்குள் இன்னொரு ஆசாமி அவனைத் தேடிக்கொண்டு வருவார்.

''என்ன குப்பண்ணா? உன்னை எங்கெல்லாம் தேடறது?  காலையிலே எட்டு மணிக்கு என்னைப் போஸ்டாபீஸ் வாசல்லே வந்து காத்துண்டிருக்கச் சொல்லிட்டு நீபாட்டுக்கு வராமலேயே இருந்துட்டயே! காத்துக் காத்து எனக்குக் காலே வலியெடுத்துப் போச்சு. சரி, நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு?'' என்று கேட்பார். 

அவ்வளவுதான்... ரிஸ்ட் வாச் ஆசாமியை அப்படியே நடுத் தெருவில் விட்டுவிட்டுப் புதிதாக வந்தவருடன் போய்விடுவான்.

''உன்னை நம்பி முகூர்த்தத்தை வெச்சுண்டுட்டேன். இன்னும் ஒரு வேலையும் ஆகல்லே! நாளோ ஓடிண்டிருக்குது. நீயோ அதுக்கு மேலே ஓடிண்டு இருக்கே. 'கலியாணத்துக்குச் சத்திரம் பிடிச்சுத் தரேன்னே; கச்சேரிக்கு ஏற்பாடு பண்றேன்னே;' பந்தல்காரன், மேளக்காரன், பால்காரன், சமையல்காரன் எல்லாம் என் பொறுப்பு. நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்கோ'ன்னே?''

'' நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க. இதோ, இப்பவே போய் சத்திரத்தை 'ஃபிக்ஸ்' பண்ணிடறேன். கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணிடறேன். பால்காரன், சமையல்காரன், மேளக்காரனுக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துடறேன். போதுமா?  அவ்வளவுதானே? அப்புறம் என்ன? இன்னொரு சின்ன விஷயம்... மாப்பிள்ளைக்கு ரிஸ்ட் வாட்சு போடணும்னு சொல்லிண்டிருந்தீங்களே... ஒரு இடத்திலே ஃபஸ்ட் கிளாஸ் சிங்கப்பூர் வாச் இருக்குது. விலை ரொம்ப மலிவு. அவன் 300 ரூபா சொல்றான். வேணுமானா சொல்லுங்க, 250-க்கு முடிச்சுடலாம். முந்திக் காட்டாப் போயிடும்'' என்றெல்லாம் கூறி, அந்தக் கடியாரத்தை அவர் தலையில் கட்டிவிட்டு, வாச்சின் சொந்தக்காரரிடம் 240-க்குத்தான் விலை போயிற்று என்று கூறுவான். இதைத் தவிர, இரண்டு பேரிடமும் கமிஷன் வேறு தட்டிவிடுவான்.

" என்ன குப்பண்ணா, உன்னைப் பார்க்கிறதே அபூர்வமாய்ப் போச்சே?"

' இன்னும் நாலு நாளைக்கு ஒண்ணும் பேசாதீங்க, அண்ணா! வக்கீல் சேஷாத்திரி வீட்டிலே கல்யாணம். மூச்சு விட நேரமில்லே. தேங்காய் வாங்கி வரக் கொத்தவால் சாவடிக்குப் போயிண்டுருக்கேன்" 

''எங்க வீட்டுக் கலியாணத்திலே ஆயிரம் தேங்காய் மிஞ்சிப் போயிடுத்தே! அதை வித்துக் கொடுன்னு சொல்லியிருந்தேனே... மறந்துட்டியா!''

''வக்கீல் வீட்டிலே பெரிய காயா இருக்கணும்னு சொன்னா. அதனாலே யோசிக்கிறேன். எதுக்கும் என்ன விலைன்னு சொல்லுங்க.''

''நூறு 15 ரூபாய்னு போட்டுண்டு தள்ளிவிடுடா. உனக்கும் கொஞ்சம் கமிஷன் தரேன்.''

''கமிஷனா? சேச்சே! உங்ககிட்டே அதெல்லாம் வாங்குவேனா? அவர் என்ன விலை கொடுக்கிறாரோ, அதை அப்படியே வாங்கிக் கொடுத்துடறேன். எனக்கெதுக்கு கமிஷனும் கிமிஷனும்?''



ஆனால், வக்கீல் வீட்டில் நூறு 18 என்று விலை சொல்லி, ஆயிரம் காய்களையும் தள்ளிவிடுவான். தேங்காய் கொடுத்தவரிடம் 14 ரூபாய் என்று சொல்லி அதிலும் ஒரு ரூபாய் பார்த்துக்கொள்வான். 
கடைசியில் வக்கீல் கல்யாணத்தில் மிஞ்சிய தேங்காய்களை வேறொரு கல்யாண வீட்டில் கொண்டுபோய் விற்று, அதிலும் பத்து ரூபாய் கமிஷன் பார்த்துக் கொள்வான். 

" ஏண்டா குப்பண்ணா! இப்படியே எத்தனை நாளைக்குத் தான் காலம் தள்ளப் போகிறாய்? ஏதாவது சொந்த வியாபாரம் ஆரம்பிக்கக் கூடாதோ? " என்று யாராவது கேட்டால் "எனக்கு எதுக்கண்ணா அதெல்லாம்? நாலு பேருக்கு உபகாரம் பண்றதிலே இருக்கிற சந்தோஷம் வேறெதிலே உண்டு?" என்பான். ஆனால், அவன் புது வியாபாரம் ஆரம்பிக்காததற்குக் காரணம் அதுவல்ல; தன்னுடைய வியாபாரத்தில் வேறு எவனாவது கமிஷன் அடித்துவிட்டுப் போகிறானே   என்பதுதான் அவனுக்குள்ள பயம்!  

[ நன்றி : விகடன்  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

4 கருத்துகள்:

ஊமைக்கனவுகள் சொன்னது…

அய்யா,
வணக்கம்.
தங்களின் பகிர்வுகளைத் தொடர்கிறேன்.
யாப்பாளுகையில் நேர்ந்த ஐயம் பற்றிய பதிவொன்றை யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் எனும் பதிவில் இட்டுள்ளேன்.
தங்கட்கு நேரம் இருக்கும் போது அருள்கூர்ந்து கருத்திட்டு நெறிப்படுத்த வேண்டுகிறேன்.

மிக்க நன்றி.

Pas S. Pasupathy சொன்னது…

@ஊமைக்கனவுகள். . தயவு செய்து , என் http://s-pasupathy.blogspot.com/2014/05/10_21.html பதிவின் கீழ் ஓர் பின்னூட்டத்தில் பாடலை இட்டு, ஐயத்தைக் கேட்க வேண்டுகிறேன். நிச்சயமாய் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். பின்னர் படிப்பவர்களுக்கும் பயனளிக்கலாம். அல்லது ‘சந்தவசந்தம்’ என்ற கூகிள் குழுவில் சேர்ந்து ஐயத்தைக் கேட்கலாம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சமீபத்திய பயணம் ஒன்றில் இப்படித் தான் நிறைய கமிஷன் ஏஜண்டுகளைப் பார்த்தேன்...... அனைத்திலும் கமிஷன் அடிக்கிறார்கள்! :)

UK Sharma சொன்னது…

சாவியின் "காரெக்டர்" தொடர் இப்படி ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி எங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.