வியாழன், 5 ஏப்ரல், 2018

1025. வை. கோவிந்தன் - 1

பதிப்புலகின் பிதாமகன் சக்தி வை. கோவிந்தன்
புதுக்கோட்டை 'ஞானாலயா' கிருஷ்ணமூர்த்தி


கடந்த நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகள் தமிழின் மறுமலர்ச்சிக் காலம். மகாத்மா காந்தியின் வரலாறு மற்றும் மகாகவி பாரதியின் எழுச்சிமிகு பாடல்களாலும் பெரிதும் ஈர்க்கப்பட்ட தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், தமிழ் நூல் வெளியீட்டாளர்கள், தமிழ்ப் பத்திரிகையாளர்கள் முதலிய அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு, நாட்டிற்கும், மொழிக்கும் தங்களின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும், எவ்விதம் அமைய வேண்டும் எனத் திட்டமிட்டு, தீர்மானித்து ஆற்றிய பணிகள் தமிழ் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

தமிழ் நாட்டின் நிலையையும், தமிழ் மக்களின் நிலையையும் படம் பிடித்துக் காட்டி முதல் தமிழக் கவிஞன் பாரதியே!. நாட்டு விடுதலை பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தபோது, 'தமிழ் மொழி அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அது ஒரு சாராரின் குழுவூக்குறியாக மாறிவிட்டது. அதை மீட்டெடுக்க வேண்டியது அவசியம்' என பாரதிதான் முதன் முதலாக தனது கவிதைகளாலும், கட்டுரைகளாலும் மக்களுக்கு உணர்த்தினான்.

தமிழின் மேன்மையை உணர்ந்து அதை மக்களுக்கும் உணர்த்திய பாரதி, தமிழர்கள்

"பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப்பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்."

எனக்கேட்டு இந்த நிலை மாறவேண்டுமானால்

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"

என நம்மவரைத் தட்டி எழுப்பினான். மேலும், கம்பனையும் வள்ளுவனையும், இளங்கோவையும் நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டதைச் சுட்டிக்காட்டி,

"ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒரு சொல் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!"

எனக் கட்டளையிட்டான். அத்துடன் அப்பணியை எப்படியெல்லாம் மேம்படுத்த வேண்டும் என்றும் அதற்கான திட்டங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளான்.

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழிமொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்."

என பாரதி கூறியவற்றை நிறைவேற்றியவர் சக்தி வை.கோவிந்தன்.

உலகம் போற்றும் 'டைம்' (Time) இதழைப் போன்ற வடிவமைப்பில், தமிழில், யோகி சுத்தானந்த பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு 1939-ல் 'சக்தி' மாத இதழைத் தொடங்கினார். 'சக்தி மலர்' என்ற பெயரில், காந்தியின் வழிகாட்டிகளில் ஒருவரான ரஷ்ய ஞானி டால்ஸ்டாயின் (WHAT SHALL WE DO THEN?) 'இனி நாம் செய்யவேண்டுவது யாது' என்ற நூலை பென்குவின் வெளியீடுகளைப் போல் வெளியிட்டார்.

சக்தி வை.கோவிந்தன் வெளியிட்ட 'சக்தி மலர்'கள் நாற்பதையும் நான் எனது ('ஞானாலயா') நூலகத்தில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தேன். 1992-ல் சிகாகோ பல்கைலைக் கழக நூலகக் காப்பாளர் ஜேம்ஸ் நே (James Nye) புதுக்கோட்டையில் இருக்கும் 'ஞானாலயா'விற்கு வந்தபோது 'சக்தி மலர்' வரிசையைப் பார்த்து வியந்து போனார். அவரது வியப்பிற்குக் காரணம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே காலால் இயக்கும் அச்சு இயந்திரத்தில் இத்தகைய அருமையான நூல்களை அற்புதமாக அச்சிட்டு வெளியிட்டிருக்கிறாரே என்பதுதான். இப்போதைய அச்சுக்கலையின் பல முன்னேற்றங்களையும், வசதிகளையும் கண்டிராத காலத்திலேயே இத்தகைய அழகான, அச்சுப் பிழை இல்லாத, புத்தகத்தின் மேலட்டை, உள் அட்டை, பின் அட்டை, பின் உள் அட்டை நான்கிலும் நூலாசிரியரைப் பற்றி, நூலைப் பற்றி, இனிவரவிருக்கும் நூல்களைப் பற்றி என எல்லா விவரங்களையும் கொடுத்துள்ளதையும் வியந்து பாராட்டினார். 'சக்தி மலர்' வரிசையில் ஏழாவது நூல் 'அமெரிக்கா'. உலகம் சுற்றிய தமிழர் எ.கே. செட்டியார் எழுதியது. அதில் ஆப்ரஹாம் லிங்கனின் படமும், 'சுதந்திரதேவி'யின் படமும் அழகிய ஆர்ட் காகிதத்தில் இருப்பதைப் பார்த்து மெய்மறந்து போன ஜேம்ஸ் நே 'இப்படி ஒரு லிங்கன் படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை!' என வியந்து பாராட்டினார்.


சென்னையில் உள்ள 'ஆயிரம் விளக்கு' பகுதியில் 1950-களில் 'சக்தி காரியாலயம்' செயல்பட்டுக் கொண்டிருந்தது. நோபல் பரிசு பெற்ற பெர்ல் எஸ் பக் (Pearl S Buck) அம்மையாரின் நல்ல பூமி (Good Earth) என்ற நாவலை 'பெர்ல்ஸ் பப்ளிகேஷன்' என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்டிருந்தது. 350 பக்கங்கள் கொண்ட அந்த நூலின் விலை 50 காசுகள். எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர் ஒருவர், வை. கோவிந்தனிடம், இதுபோல ராஜாஜி எழுதிய "வியாசர் விருந்து" என்ற நூலை மலிவு விலையில் வெளியிட முடியுமா எனக் கேட்டார். கணக்குப் போட்டு பார்த்து, 'முடியும்' என்று வை. கோவிந்தன் சொல்ல, அடுத்த சில மாதங்களிலேயே அந்த யோசனை நூல் வடிவம் பெற்று ஒன்பது மாதங்களில் எண்பதாயிரம் பிரதிகள் வரை விற்று தீர்ந்தது. இது ஒரு பெரும் சாதனையாகும்.

இதே சமயம் பாரதியாரின் புதல்விகள் தங்கம்மாள் பாரதியும், சகுந்தலா பாரதியும் பாரதியார் கவிதைகளை இதுபோல் வெளியிட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.


அன்றைய முதல்வர் திரு. காமராஜ் அவர்கள் ஒரு நாள் இரவு 8 1/2 மணிக்கு சக்தி காரியாலயத்திற்கு வந்தார். "என்ன 'ரெட்' ஏதேனும் விசேஷம் உண்டா?" என சக்தி வை. கோவிந்தனைப் பார்த்துக் கேட்டார். உடனே, அமெரிக்க நிறுவனம் 50 காசுக்கு (8 அணா) வெளியிட்ட பெர்ல் எஸ் பக் நூலைக் காட்டி, இதைப் போல் மலிவுப் பதிப்பாக பாரதியார் கவிதைகளை வெளியிடாமல் 7 1/2 ரூபாய் விலைக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ளதே என அங்கலாய்த்துக் கொண்டார் வை. கோவிந்தன். உடனே காமராஜர் "ஏன்யா, எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே எதிர்பார்க்கிறீர்கள்? முடிந்தால் நீயே போடேன்யா" என்றார். உடனே வை. கோவிந்தன் காமராஜரிடம் "நான் போடுகிறேன். நீங்கள்தான் வந்து வெளியிடணும்" என்றார். "சரி வரேன் நீ போடு" என உறுதியளித்தார் காமராஜர். 1957 ஏப்ரல் 13 ஆம் நாள் பாரதியார் கவிதைகள் முழுவதையும் 510 பக்கங்களில் 1 1/2 ரூபாய் விலையில் திரு. காமராஜரைக் கொண்டு ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிட்டார் வை. கோவிந்தன். இதன் மூலம் தமிழ்நூல் வெளியீட்டில் ஒரு சாதனையைப் படைத்து பதிப்புத்துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தினார். முதல் பதிப்பின் 10,000 பிரதிகளும் பதினைந்து நாட்களிலேயே விற்றுத் தீர்ந்துது. எந்த விற்பனை நிலையத்திற்கும் எந்த விதக் கழிவும் இல்லாமல் 1 1/2 ரூபாய் விலைக்கே வற்று சாதனை படைத்தவர் வை. கோவிந்தன். சென்னையில் புகழ் பெற்ற புத்தக விற்பனை நிறுவனமான 'ஹிக்கின் பாதாம்ஸ்' கமிஷன் இல்லாமல் வாங்கி விற்க மறுத்து, பின்னர் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வை. கோவிந்தனிடம் எந்த கமிஷனும் இல்லாமல் இருநூறு பிரதிகள் வாங்கி விற்ற வரலாறு அன்று மட்டுமல்ல, இன்றும்கூட வியப்பளிப்பதாகும்.

திருக்குறளை பரிமேலழகர் உரையோடு 3-7-1957 இல் மலிவுப் பதிப்பாக 15,000 பிரதிகளும் 9-9-1957-ல் 10,000 பிரதிகளும் வை. கோவிந்தனால் வெளியிடப்பட்டன. அதாவது 66 நாள்களில் 25,000 பிரதிகளும் விற்றுத்தீர்ந்தன. பிழையில்லாத பதிப்பு; தரமான தாள் ஆகியவை மலிவுப் பதிப்புக்களின் பெருமையைப் பறைசாற்றின.

12-6-1912-ல் பிறந்த வை. கோவிந்தன் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்தார். இளமையிலேயே பர்மாவில் தேக்குமர ஆலையிலும், செட்டி நாட்டு வங்கியிலும் பணியாற்றினார். 1934-ல் தமிழகம் வந்து ரூபாய் ஒரு லட்சம் முதலீட்டில் சக்தி இதழையும், சக்தி வெளியீட்டகத்தையும் தொடங்கினார்.

தமிழ்ப் பத்திரிகைத்துறை, தமிழ்நூல் வெளியீட்டுத்துறை ஆகிய இரண்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். யோகி. சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்த விக்டர் ஹீயூகோவின் 'ஏழை படும்பாடு' என்ற நாவலை 1938-ல் முதன் முதலாக வெளியிட்டார். 1939-ல் வை.கோ.வின் தூண்டுதலால் யோகி சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்த விக்டர் ஹீயூகோவின் 'இளிச்சவாயன்' நாவல் அன்பு நிலைய வெளியீடாக வெளிவந்தது.

'சக்தி'யின் ஆசிரியராக தொடக்கத்தில் யோகி. சுத்தானந்த பாரதியாரும் அதன்பின் ஆறு ஆண்டு காலம் தி.ஜ. ரங்கநாதனும் பின்னர் சுப. நாராயணன், கு. அழகிரிசாமி, விஜய பாஸ்கரன் ஆகியோரும் பணியாற்றினர். இறுதியில் வை. கோவிந்தனே ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். 1954-ல் 'சக்தி' இதழ் நின்றது. தமிழில் வந்த முதல் டைஜஸ்ட் (DIGEST) 'சக்தி'யே என்றால் அது மிகையில்லை.

மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை அளிப்பதுதான் என்பது பத்திரிகையின் நோக்கமாக இருக்கக்கூடாது. மக்களுக்கு எது தேவையோ அதைத்தான; அளிக்க வேண்டும் என்றார் வை. கோவிந்தன்.

வை. கோவிந்தனின் சாதனைகளின் சிறப்பம்சமாக நான்கு விஷயங்களைக் குறிப்பிடலாம். ஒன்று - பதிப்பு பணியில் முதலாளி, தொழிலாளி பேதமின்மை.

இரண்டு - தமிழகத்தின் முதல் டைஜஸ்ட் 'சக்தி' என அனைவரும் பாராட்டும்படி செயல்பட்டது.

மூன்று - கட்சி வேற்றுமையின்றி எல்லா கட்சித் தலைவர்களின் கட்டுரைகளையும் வெளியிட்டது.

நான்கு - ஆர்ட் காகிதத்தில் எட்டு பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டது.

இலட்சியத்தையே உயிரினும் மேலானதாக நினைத்து வாழ்ந்தவர் வை. கோவிந்தன். அதனாலேயே அவரது பத்திரிகை நெருக்கடிக்கு ஆளானது. மகாத்மா காந்தி, ஜே.சி. குமரப்பா ஆகியோரால் கண்டனத்திற்கு உள்ளான உணவுப் பொருள்களின் விளம்பரங்களை தம் பத்திரிகையில் வராமல் நிறுத்தினார். குறிப்பாக ஜே.சி. குமரப்பா எழுதிய  ஒரு கட்டுரை ஒரு பெரிய நிறுவனத்தின் பொருளைக் கண்டனம் செய்வதாக நினைத்த அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அக்கட்டுரைக்கு மறுப்பு வெளியிடும்படி வை. கோவிந்தனை வலியுறுத்தினார்கள். மேலும் மறுப்பை வெளியிடும் பட்சத்தில் வை. கோவிந்தனின் துறை சார்ந்த நஷ்டங்களை ஈடு செய்வதோடு, விளம்பரங்கள் தருவதாகவும் உறுதியளித்தார்கள். ஆனால், 'பத்திரிகையை நிறுத்தினாலும் நிறுத்துவேனேயொழிய காந்திக்கு மறுப்புப் போட மாட்டேன்' என்றார் வை. கோவிந்தன்.

வை. கோவிந்தனின் கொள்கைப் பிடிப்பிற்கும் மன உறுதிக்கும் மற்றொரு நிகழ்ச்சியையும் உதாரணம் காட்டலாம். ஒரு முறை வை. கோவிந்தன் பயணம் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அவ்விபத்தில் ஓட்டுநர் மரணமடைந்தார். தெய்வாதீனமாக வை. கோவிந்தன் உயிர் பிழைத்தார். சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கும்படி நேர்ந்தது. அப்போது அவர் நடத்திக் கொண்டிருந்த குழந்தைகளுக்கான 'அணில்' பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் தமிழ்வாணன். வை. கோவிந்தன் மருத்துவமனையில் இருந்ததால் பத்திரிகையின் முழுப்பொறுப்பையும் தமிழ்வாணன் ஏற்றார். அதுவரை 5000 பிரதிகள்தான் விற்பனையாகிக் கொண்டிருந்தன. தமிழ்வாணன் பொறுப்பேற்றவுடன் 25,000 பிரதிகள் விற்பனையாயின. விற்பனை திடீரென்று ஐந்து மடங்கு உயர்ந்தது எப்படி? என தமிழ்வாணனை வை. கோவிந்தன் கேட்டார். "நான் 'பயமாயிருக்கே' என்ற தலைப்பில் ஒரு மர்மக்கதை எழுதுகிறேன். அதுதான் விற்பனை அதிகமானதற்குக் காரணம்" என்று தமிழவாணன் கூறினார். அக்கதையைப் படித்த வை. கோவிந்தன் சொன்னார்: "தமிழவாணன், இதில் ஒரே துப்பாக்கி சத்தம், ரத்தம், அது, இது என்று ஒரே வன்முறையாக உள்ளது. அப்படி எழுதாதீங்க. நமக்கு கொள்கை பெரிது. காந்தீய வழியில் வாழும் நாம் எப்படி எழுதுவது கூடாது". இவ்வாறு கூறியதோடு அத்தொடரை நிறுத்தும்படியும் கூறிவிட்டார்.

பெண்களுக்காக 'மங்கை' என்ற மாத இதழை நடத்தினார். குகப்பிரியை அதன் ஆசிரியர். சிறுகதைகள் மட்டும் கொண்ட 'கதைக்கடல்' மாத வெளியீடாக வந்தது. 'குழந்தைகள் செய்தி' இதழை தானே ஆசிரியராக இருந்து குழந்தைகளுக்காக நடத்தினார். 'குழந்தை எழுத்தாளர் சங்கம்' என்பதைத் தோற்றுவித்து அதன் முதல் தலைவராக இருந்து பணியாற்றினார்.

கல்கி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவாக இருந்தபோது வை. கோவிந்தன் அதன் துணைத் தலைவராக இருந்தால்தான் நான் தலைவராக  இருப்பேன் எனக் கூறி வை. கோவிந்தனை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக்கினார். தென்னிந்தியப் புத்தகத் தொழில் கழகத்தின் பொருளாளராகவும், தலைவராகவும் பணியாற்றிய காலத்தில் 'வீட்டுக்கோர் நூலகம்'  முயற்சியில் ஈடுபட்டார்.

வை.கோவிந்தனைப் பற்றி க.நா.சு. "நான் சிருஷ்டி இலக்கியத்தில் நம்பிக்கை உள்ளவன். வை.கோ. உபயோகமான அறிவு இலக்கியத்தில் நமபிக்கை உள்ளவர். நீதி போதிப்பது, பொருளாதார  அறிவு ஊட்டுவது, அரசியல் கற்றுத் தருவது இவைதான் எழுத்தின் நோக்கம் என்பது வை. கோ.வின் நம்பிக்கை". மேலும் சொல்கிறார், "தமிழ்ப் பிரசுர முயற்சியில் வை. கோ. வின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். லாபத்தை மட்டும் எண்ணிச் செயல்படாத பிரசுராலயத்தாரின் முதல் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் அவர்."


"தமிழ் நூல்கள் எல்லாவற்றையும் ஒருங்கே சேர்த்து ஒரு விற்பனை  நிலையம் அமைக்க வேண்டும் என்றும் செயல்பட்டார். அவர் கண்ட கனவில் பாதிதான் நிறைவேறியது. ஆனால் அது ஓர் உன்னதமான, சுயலாபம் தேடாத கனவு" என எழுதுகிறார்.

இறுதிக் காலத்தில் வை. கோவிந்தன் விவசாயத்தில் நாட்டம் கொண்டார். பேரறிஞர் மு. அருணாசலம் எழுதிய 'காய்கறித் தோட்டம்' என்ற  நூலை வெளியிட்டார். மேலும் சக்தி மலராக 'எருவும் எருஇடுதலும்' என்ற  நூலையும் வெளியிட்டார். 'இந்திய  அரசியல் சட்டம்' மாண்டி சோரியின் 'குழந்தைமை ரகசியம்' 'சூரிய நமஸ்காரம்' என்ற தலைப்பில் ஆசனங்கள் பற்றியன நூலையும் வெளியிட்டார்.

தமிழில் பல்வேறு துறைகள் பற்றிய நூல்களை வெளியிட்ட முதல்வர் வை. கோவிந்தன் ருஷ்ய இலக்கியங்களையும், குறிப்பாக டால்ஸ்டாயின் போரும் அமைதியும்' (War and Peace) என்ற நாவலையும், டி.எஸ். எலியட்டின் 'பாழ் நிலம்' (Waste Land) என்ற நூலின் சுருக்கத்தையும், கலையோகி ஆனந்தகுமாரசாமியின் கட்டுரைகளையும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் வை. கோவிந்தன். அவர் தொடாத பொருளில்லை தொட்டதை அழகு படுத்தாமல் விட்டதில்லை எனக் கூறினால் அது மிகையில்லை.
[ நன்றி:  appusami.com ]

தொடர்புள்ள பதிவுகள்:
வை. கோவிந்தன்
வை. கோவிந்தன்; விக்கிப்பீடியா

3 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

அருமையான பதிவு.
வை. கோவிந்தன் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி.

Babu சொன்னது…

விவரமான தகவல்கள். திரு வை கோவிந்தன் பற்றி அறிய முடிந்தது . உங்கள் பணி மிகவும் சிறப்பானது . நன்றி - பாபு

பழ.கைலாஷ் சொன்னது…

அருமையான பதிவு.
நன்றி.