புதன், 5 ஜூன், 2019

1301. பாடலும் படமும் - 65

வராக அவதாரம்

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

இது திருமாலின் மூன்றாவது அவதாரம் ஆகும். இரண்யாட்சன் என்ற அரக்கன் பூமியை எடுத்துக் கொண்டு சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்துவிட்டான். திருமால் வெள்ளை நிறப் பன்றியாய் அவதரித்து,  இரண்யாட்சனை வென்று, பூமியைத் தன்கொம்புகளில் தாங்கி  வெளியே கொண்டுவந்து உயிர்களைக் காத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் உள்ள லட்சுமி வராகப் பெருமாள் பெயரில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் “ ஸ்ரீ லக்ஷ்மி வராகம்” என்ற அருமையான ஆபோகி கிருதியை இயற்றியுள்ளார்.

அருணகிரிநாதர் 
சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த
     சூதன்
( பன்றியின் உருக்கொண்டு (வராக அவதாரத்தில்) அழகிய பூமியை மேலே எடுத்து வந்த தந்திரம் வாய்ந்த திருமால் )

என்று “ வாரமுற்ற “ என்ற திருப்புகழிலும் ,

தொல்லைப் பெருநிலம் குகரமாய்க் கீன்றான்”  
( பழமை பொருந்திய பெரிய பூமியை வராகமாய் உருவெடுத்து பிளந்தவராகிய திருமால்) 

என்று “ யான் தான் “ என்று தொடங்கும் கந்தர் அலங்காரத்திலும் குறிப்பிடுகிறார்.  


திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இதோ.

பாரார் அளவும் முதுமுந்நீர் 
  பரந்த காலம், வளைமருப்பில்
ஏரார் உருவத்து ஏனமாய் 
  எடுத்த ஆற்றல் அம்மானை,
கூரார் ஆரல் இரைகருதிக் 
  குருகு பாயக் கயலிரியும்,
காரார் புறவில் கண்ணபுரத்து
  அடியேன் கண்டு கொண்டேனே.


உரை: கடல் வெள்ளம் பூமிப்பரப்படங்கலும் சூழ்ந்த காலத்தில் வளைந்த கோரப்பல்லையுடைய அழகு மிக்க திருமேனியை யுடைய
வராஹமூர்த்தியாகி (பூமியை) உத்தரிப்பித்த மிடுக்கையுடையனான
ஸர்வேச்வரனை கூர்மை பொருந்திய (வாயலகுகளையுடைய)
நாரைகளானவை ஆரல் மீன்களை ஆஹாரமாகக் கொள்ள நினைத்து
(நீரில்) பாய்ந்தவளவிலே கயல் மீன்கள் அஞ்சியோடும் படியுள்ளதும்
மேகங்கள் படிந்த சோலைகளை யுடையதுமான திருக்கண்ணபுரத்தில்
அடியேன் கண்டுகொண்டேன்).

கருத்துகள் இல்லை: