கிழவியும் காதம்
பி.கு;
( 2) பொருள் : " உயர்ந்த சேரர்குடியில் பிறந்த மன்னனே! இனிய சொற்களைப் பேசும் உமையம்மையாரின் மகனாகிய விநாயகரின் திருவடிகளை வணங்குவோர்க்கு எந்தச் செயலும் அரிதன்று. நிலம் அதிரப் போகும் யானையும் தேரும், அதற்குப் பின்னர்ப் புறப்பட்டு வந்த குதிரையும் நாழிகை ஒன்றுக்கு காதவழி நடக்கும். நடக்க இயலாத கிழவியான நானும் நடந்து வந்தது காத வழியே ஆகும் "
S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam
* ரசபதி அவர்களின் விநாயகர் அகவல் உரையை இங்குக் காணலாம்:
விநாயகர் அகவல்: மதுரைத் திட்டம்
கி.வா.ஜகந்நாதன்
[ ஓவியம்: எஸ்.ராஜம் ] |
இந்தக் கட்டுரை 'கல்கி' இதழில் 'கிழவியும் காதமும்' என்ற தலைப்பில் 1959-இல் வந்தது. இதில் வரும் ஒரு காட்சியை அட்டைப்பட ஓவியமாய் வழங்கினார் எஸ்.ராஜம். இக்கட்டுரை பின்னர் கி.வா.ஜ வின் ' சித்திவேழம்' என்ற நூலில் இடம்பெற்றது.
=====
எந்தக் காரியம் செய்தாலும் செய்யா விட்டாலும் விநாயகனைப் பூசித்து வழிபடுவதை மறக்க மாட்டாள் பாட்டி தமிழ்ப் பாட்டியாகிய ஒளவையைத்தான் சொல்கிறேன். தமிழ் தளரா நாவும் அன்பு தளரா உள்ளமும் உடைய அந்தப் பெருமாட்டி, -
'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்;-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா" –
என்று விநாயகப் பெருமானை வேண்டித் தமிழ்ப் புலமை பெற்றவள் அல்லவா? - இன்று சுந்தரமூர்த்தி நாயனார், இறைவன் ஆனையும் ஆணையும் அனுப்பத் திருக்கைலை போகிறார், அவரைத் தொடர்ந்து பரியின்மேல் பரிவுடன் சேரமான் பெருமாள் நாயனாரும் போகிறார் சேரனுடன் தமிழ்ச் சுவையை அளவளாவிப் பருகும் ஒளவைக்கு இச் செய்தி தெரிந்தது. “எத்தனை காலம் இந்த மண்ணுலகில் வாழ்வது! நாமும் கைலை செல்வோம்' என்ற எண்ணம் வந்தது.
மனத்தினை அடக்கமாட்டாமல் அதன் போக்கிலே செல்பவர்களுக்கு மரணம் வரும் காலம் இன்னதென்று தெரியாது. இறைவனிடம் பேரன்பு கொண்டு அவன் அருளால் மனத்தை வசப்படுத்தியவர்களுக்கு மரணம் வருங் காலம் முன்பே தெரியும். தவத்திலும் யோகத்திலும் முதிர்ந் தவர்களுக்கோ, தாம் வேண்டும் போது பூவுலக வாழ்வை நீத்து விடமுடியும், - - -
பழுத்த பழமாகிய ஒளவை, நெடு வழிக்கு நல்ல துணை அமைந்திருக்கிறது என்று எண்ணிச் சேர மன்னருடன் கைலை செல்ல எண்ணினாள். விநாயக பூசை செய்யும் நேரம் அது. தான் நினைத்த காரியம் முட்டின்றி முடிய வேண்டு மென்று பூசையைப் புரியத் தொடங்கினாள். கைலை போகும் வேகம் உந்தியது. பூசையும் வேகமாக நடந்தது.
அப்போது ஒரு குரல் கேட்டது: 'ஏன் இத்தனை விரைவு' அமைதியாகப் பூசை செய். உன் விருப்பம் நிறைவேறும்” என்று ஒளவையின் காதில் விழுந்தது. சுற்று முற்றும் பார்த்தாள்: யாரும் இல்லை. விநாயகப் பெருமானே இவ்வாறு அருளினான் என்று உணர்ந்து, அமைதியாகவே பூசையைத் தொடர்ந்து செய்தாள்.
பூசை முறைப்படி நிறைவேறியது. பாட்டிக்குத் திருப்தி பிறக்கவில்லை. நம் விருப்பத்தை நிறைவேற்றும் பெருந் துணையாகக் கரிமுகக் கடவுள் இருப்பதை மறந்து அவசரப் பட்டோமே!’ என்று உருகினாள். அப் பெருமானுடைய திருவருளால் தனக்கு வாழ்வில் கிடைத்த நலங்களையெல்லாம் எண்ணிப் பார்த்தாள். அருந்தமிழ்ப் புலமையும் பெரும் புகழ் நிலைமையும் அவன் வழங்கினான். குருவடிவாகி வந்து உவட்டா உபதேசம் புகட்டினான். தெவிட்டாத ஞானத் தெளிவைக் காட்டினான். ஐம்புலனை அடக்கும் உபாயத்தை அருளினான். கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, இருவினைதம்மை அறுத்து இருள் கடிந்தான். தவம் பலிக்கச் செய்தான். யோகம் நிறைவுற அருளினான். 'என்னை அறிவித்து எனக் கருள் செய்து, முன்னை வினையின் முதலைக் களைந்தான்.' "
அவை மட்டுமா? வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கிய அவளுடைய சிந்தை தெளிவித்தான். அருள் தரும் ஆனந்தத்தில் அழுத்தினான். அல்லல் களைந்தே அருள் வழி காட்டினான். அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சில் நிறுத்தினான். இவ்வாறெல்லாம் தத்துவ நிலையைத் தந்து ஆட்கொண்ட விநாயகப் பிரானை மறக்கலாமா? புலமை பெறுவது எளிது; அருள் இன்பம் பெறுவது அரிது. அதனே அருளிய பெருமானுடைய கருணையை எண்ணி எண்ணிக் கண்ணீர் ஆறாகப் பெருகப் புளகம் போர்ப்ப அமர்ந்திருந்தாள்.
+
இப்போது அவளுக்குக் கைலையின் நினைவு மறந்தது. சேரமானைப் பற்றிய சிந்தனை ஒழிந்தது. தன்னேயே மறந்து விநாயகப் பெருமானுடைய திருவருள் இன்ப உணர்ச்சியிலே மிதந்தாள். அவள் உள்ளத்தில் அந்த இன்ப அலைகள் மோதின. அப்போது ஒரு பாட்டு எழுந்தது. கவித் திறமை படைத்தவர்கள் உள்ளம் உணர்ச்சி வசப்படும்போதெல்லாம் கவி பிறக்கும். நாம் துயரத்தில் ஆழும்போது புலம்பலும், மகிழ்ச்சியில் திளைக்கும்போது ஆ ஊ என்ற ஆரவாரமும் எழுகிறதுபோல, கருவிலே திருவுடைய கவிஞர்களிடம் கவி எழும்.
அப்போது உதயமான கவிதையே விநாயகர் அகவல் என்ற அழகிய திருப்பாட்டு. எழுபத்திரண்டு அடிகளே உடைய அப்பாட்டில் ஒளவைப் பாட்டி முதல் முதலில் விநாயகப் பெருமானுடைய திருவடியை எண்ணி, அதன் கண் பலவிசை பாடும் சிலம்பைத் தியானித்து, அவனுடைய திருவுருவம் முழுவதையும் சொல்லால் கோலம் செய்கிறாள்.
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன்அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும் –
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!" (1)
இவ்வாறு தொடங்கி, தான் விநாயகன் அருளால் பெற்ற பேற்றையெல்லாம் சொல்லி, கடைசியில் அப்பெருமானைச் சரண் புகுகிறாள் தமிழ்ப் பாட்டி.
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக, விரைகழல் சரணே!
உலக வாழ்வை நீக்கும்போது இறைவனுடைய திருவடியே சரணமென்று புகுவது அறிஞர் இயல்பு. அந்த முறைப்படியே ஒளவை பாடி நிறைவேற்றினாள். பாட்டு முடிந்தும் அவள் உள்ளக்கிளர்ச்சி நிற்கவில்லை. பாட்டின் கார்வை போல இன்பம் உள்ளத்தே தேங்கி நின்றது. .
அப்போது விநாயகப் பெருமான் தன் துதிக்கையினால் அப்பெருமாட்டியைத் தூக்கிக் கைலையிலே கொண்டு சேர்த்தான். ஒளவை பாட்டால் துதிக்கை செய்து நிறைவேற்றின அளவிலே, விநாயகன் துதிக்கை அவள் விருப்பத்தை நிறைவேற்றியது. கண்ணை விழித்துப் பார்த்தாள் ஒளவை. புதிய இடம்: புதிய தோற்றம்; எல்லாம் மாசு மறுவற்ற வெள்ளி மயம். இதுதான் திருக்கைலாயம் என்று அங்குள்ள சிவகணத்தினரில் ஒருவர் சொன்னார் பாட்டி வியப்பினால் மலர்ந்த கண்களுடன் பார்த்தாள். நாலு திசைகளையும் பார்த்தாள். என்ன சாந்தமான சூழ்நிலை! ஏதோ புதிய ஆனந்தம் தன்னைக் கரைத்துக் கொண்டது போன்ற உணர்ச்சி அல்லவா எழுகிறது?
சிறிது நின்று நிதானித்தாள். கணபதியின் கருணையால் சிறிதும் முயற்சி இல்லாமலே கைலை வந்ததை எண்ணி உருகி வழுத்தினாள். அப்போதுதான் சேரமான் பெருமாளின் நினைவு வந்தது. அவர்கள் முன்னே போயிருப்பார்களோ? இந்த ஐயத்தை அருகில் நின்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்; அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை.
+ பாட்டி நின்றாள். சுந்தரர் வந்தார். அவர் சிவபெருமான் நினைவையன்றி வேறு ஒன்றும் இன்றி வந்தவர்; பாட்டியைக் கவனிக்கவில்லை. பின்னாலே,சேரமான் பெருமாள் வந்தார். பாட்டி நிற்பதைக் கண்டு வியந்து. "எப்படி வந்தீர்கள்? காலால் நடந்தா?’ என்று கேட்டார்; அருகில் வாகனம் ஒன்றும் இல்லையல்லவா?
'இல்லை; கையால்' என்றாள் பாட்டி.
“கையாலா? விளங்கவில்லையே!”
'விநாயகப் பெருமான் தம் துதிக்கையாலே என்னை இங்கே கொண்டு வந்து விட்டார். வாகனத்தில் வரும் உங்களுக்கு முன்னே நான் வந்து விட்டேன். எல்லாம் உமை மைந்தர் திருவருள் வலிமை” என்று சொல்லி ஒரு பாடலையும் கூறினாள். - -
மதுர மொழிநல் உமையாள்
புதல்வன் மலர்ப்பதத்தை
முதிர நினையவல் லார்க்குஅரி
தோ? முகில் போல்முழங்கி
அதிர நடந்திடும் யானையும்
காதம்; அதன்பின்வரும்
குதிரையும் காதம்; கிழவியும்
காதம், குலமன்னனே! ( 2)
தமிழ்ப் பாட்டியைத் திருக்கைலையில் ஏற்றக் காரணமாக இருந்த விநாயகர் அகவல் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெரு வரமாக இன்றும் நின்று நிலவுகிறது. அதைப் பாராயணம் செய்து தம் விருப்பம் நிறைவேறப் பெறும் அன்பர்கள் பலர். -
======================================
(1) களபம் - கலவைச் சந்தனம். துகில் ஆடை - மிக மெல்லிய ஆடை, வன்ன மருங்கில் - அழகிய இடையில். எறிப்ப - வீச. பேழை - பெட்டி. கோடு - தக்தம், சிந்துரம் - சிவப்புத் திலகம். நான்ற - தொங்கிய, சொற்பதம் - சொல்லின் நிலை. துரியம் - கருவி கரணம் கழன்ற நிலை.
======
பி.கு;
( 2) பொருள் : " உயர்ந்த சேரர்குடியில் பிறந்த மன்னனே! இனிய சொற்களைப் பேசும் உமையம்மையாரின் மகனாகிய விநாயகரின் திருவடிகளை வணங்குவோர்க்கு எந்தச் செயலும் அரிதன்று. நிலம் அதிரப் போகும் யானையும் தேரும், அதற்குப் பின்னர்ப் புறப்பட்டு வந்த குதிரையும் நாழிகை ஒன்றுக்கு காதவழி நடக்கும். நடக்க இயலாத கிழவியான நானும் நடந்து வந்தது காத வழியே ஆகும் "
தொடர்புள்ள பதிவுகள்:
கி.வா.ஜகந்நாதன்S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam
* ரசபதி அவர்களின் விநாயகர் அகவல் உரையை இங்குக் காணலாம்:
விநாயகர் அகவல்: மதுரைத் திட்டம்
1 கருத்து:
வினாயகன் வெவ்வினை தீர்த்து அருளிய வரலாறு மெய் சிலிர்க்க வைக்கிறது. வினாயகர் அகவலை மீண்டும் துதிக்க ஆரம்பிக்கிறேன்.
அவனே வழி காட்டாட்டும். மிக மிக நன்றி.
கருத்துரையிடுக