செவ்வாய், 12 மே, 2020

1540. கதம்பம் - 21

அமுதைப் பொழியும் நிலவு!
கு.மா.பா.திருநாவுக்கரசு
மே 13. கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியத்தின் பிறந்த தினம்.
இந்த வருடம் அவருடைய நூற்றாண்டு.
======

காற்றில் மிதந்துவரும் நூற்றுக் கணக்கான பாடல்களைக் கேட்டு, காலங்கடந்தும் நினைவுகூர்ந்து லயித்துப் போகிற ஏராளமான ரசிகர்களை ஈட்டிய திரைக் கவிஞர்! ‘அமுதைப் பொழியும் நிலவு’ என்ற ஒரு பாடல்போதும், தலைமுறைகளைக் கடந்தும் வசப்படுத்தும் சொற்களைக் கட்டி ஆண்ட கவிஞர் என்பதற்கு. ஒரு வெற்றிகரமான பாடலாசிரியராக, இசைக்கேற்ற திரைப்பாடல்களை வடித்த ‘சொற்களின் பாரி’ இவர்.

சொற்களின் அமுதைப் பாடல்களில் பொழிந்து தள்ளிய இந்தக் கவி நிலவு, தான் பயணித்த பால் வீதியில் பதித்துச்சென்ற நட்சத்திரப் பாடல்களின் பட்டியல் மிக நீளமானது. அவரது பாடல்களை எந்த வேளையில் கேட்டாலும் உள்ளம் கொள்ளை போகும். இரவில் கேட்டாலோ இன்ப நித்திரை கண்களைத் தழுவும். வாழும் வரை ‘வெள்ளை மனதுக்காரர்’ என்று உறவுகளையும் நண்பர்களையும் திரையுலகினரையும் சொல்லவைத்த அபூர்வக் கவிஞர்.

அவர் கு.மா.பா. என்னும் மூன்று எழுத்துக்களால் அறியப்படும் கு.மா.பாலசுப்பிரமணியம். 1920 மே 13 அன்று பிறந்த கவிஞரின் நூற்றாண்டு இது. 1979-ல் கவிஞருக்கு மணிவிழா நடத்தப்பட்டபோது அதற்குத் தலைமையேற்றார் கலைஞர் மு.கருணாநிதி. அவர் பேசியபோது கு.மா.பா எனும் மூன்று எழுத்துக்களுக்கு விளக்கமளித்தார். “ கு – என்றால் குன்றனைய கொள்கையுடையவர். மா- என்றால் மாசற்ற மனமுடையவர். பா- என்றால் பாவேந்தர் பாரதிதாசனின் பட்டியலில் இடம்பெற்றவர்” என்றார். அவரது மகன் என்பதைவிட, அவரது தலை சிறந்த ரசிகர்களில் ஒருவனாக, அவரது வாழ்க்கைக் கதையை என்னிடம் அவர் விவரித்துக் கூறியதிலிருந்து சுருக்கமாகப் பகிர்கிறேன்.

வறுமை வழங்கிய வரம்

அத்தகைய பெருமைக்குரிய கு.மா.பா. கீழத்தஞ்சை மாவட்டம் திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் வேளுக்குடி என்னும் சிறிய கிராமத்தில், ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில், மாரிமுத்து –கோவிந்தம்மாள் தம்பதிக்குப் பிறந்த ஒரே மகன். இரண்டு வயதாக இருந்தபோதே தந்தை இறந்துவிட, தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார். சில கறவை மாடுகளை வைத்து வளர்த்து, பால் வியாபாரம் செய்து வந்த இவரின் தாயார் எழுதப் படிக்கக் கற்றவர்.

தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களைப் பாடி, மகனுக்குத் தாய்ப்பாலுடன் தமிழ்ப்பாலும் ஊட்டி வளர்த்து ஆளாக்கினார் கவிஞரின் தாய். ஆனால், வறுமை காரணமாக, மகனை திருவாரூர் நகருக்கு அனுப்பி ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்கவைக்க அந்தத் தாயால் முடியவில்லை. இதனால் இளம் வயதிலேயே மகனை விவசாய கூலிவேலைக்கு அனுப்ப வேண்டிய நிலை.

அதை மனமுவந்து ஏற்றுக்கொண்ட மகன், அந்த வேலையில் மகன் சிரமப்படுவதைக் கண்டு, பிறகு எளிதான மளிகைக்கடை வேலையில் சேர்த்துவிட்டார். வறுமையே அங்கே வரமாக மாறியது அவருக்கு. மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்க வாங்கும் பழைய இதழ்களை, செய்தித்தாள்களை வேலைக்கு இடையே படிக்கும் ஆர்வம் பொங்கிப் பெருகியது. அந்த வாசிப்புப் பழக்கம் அவரைச் சிறுகதைகள் எழுதத் தூண்டியது. இவர் எழுதிய ‘இன்பத்துளி’ எனும் சிறுகதையை ‘நவயுகன்’ என்ற சிற்றிதழின் ஆசிரியர் தெரிந்தெடுத்து முதன்முதலாகப் பிரசுரித்துள்ளார். தாம் எழுதிய சிறுகதையை அச்சில் கண்டதும் இளைஞன் பாலுவுக்கு நிலைகொள்ளாத மகிழ்ச்சி.

பின் தனக்குக் கிடைக்கும் மாத ஊதியத்தில் இலக்கியச் சிற்றிதழ்களை வாங்கி, அவற்றிலிருந்து பிரபல சிறுகதை எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், தி.ஜ.ரங்கநாதன், கு.ப.இராஜகோபாலன் போன்றோரின் கதைகளை விரும்பி வாங்கிப் படித்து, தானும் அவர்களைப் போல் எழுத வேண்டும் என்று முயன்றிருக்கிறார். சில காலம் திருவாரூரில் ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்தபடி இவர் எழுதிய சிறுகதைகள் திருமகள், சண்டமாருதம், பிரசண்ட விகடன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

பத்திரிகையாளர் எனும் அடையாளம்

பிரபலத் திரைப்படப் பாடலாசிரியர் கவி கா.மு.ஷெரீப், எழுத்தாளர் ‘மேதாவி’ (கோ.த.சண்முகசுந்தரம்) ஆகியோர் வேளுக்குடியைச் சேர்ந்த இவருடைய இளமைக்கால நண்பர்கள்தாம். காந்தியக் கொள்கைகளில் பற்றுடைய இவர் திருவாரூரில் நடந்த ஆகஸ்ட் போராட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார். தேசபக்திப் பாடல்களில் ஈடுபாடு கொண்டு கவிதைகள் எழுதவும் முயன்றிருக்கிறார். காங்கிரஸில் இருந்துகொண்டு தந்தை பெரியார் நடத்திய தன்மான இயக்கக் கொள்கைகளில் நாட்டத்துடன் வேளுக்குடியில் கா.மு.ஷெரீப்புடன் இணைந்து, சில இயக்கங்களை நடத்தி இருக்கிறார்.

இந்த அனுபவங்களைக் கொண்டு, தனது 22-ம் வயதில் மதுரையில் இருந்து வெளிவந்த ‘தமிழன்’ பத்திரிகை நிர்வாகியான சி.பா.ஆதித்தனாரைச் சந்தித்துப் பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணிசெய்தார். சில ஆண்டுகளில் அங்கிருந்து இடம்மாறி கோவை ‘வீரகேசரி’, ‘திருமகள்’ போன்ற பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார். கொழும்பிலிருந்து வெளிவந்த ‘வீரகேசரி’ நாளிதழில், 1945-ம் ஆண்டில் துணையாசிரியராக இடம்பெயர்ந்தார். இவர் பத்திரிகையாளராக தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, தந்தை பெரியார், கோவை ஜி.டி.நாயுடு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதலான அன்றைய பிரபலங்களை நேரில் சந்தித்து விரிவான பேட்டிகள் எடுத்துள்ளார்.

1946-ல் திருவாரூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரை ‘கதர்த் திருமணம்’ என்று சொல்லும் எளிய காந்திய வழியில், கதராடைகளை அணிந்து, நாகப்பட்டினத்தில் திருமணம் செய்துகொண்டார். இந்திய விடுதலைக்குப் பிறகு, கொழும்பிலிருந்து மீண்டும் திருவாரூர் திரும்பிய இவர், ராயவரத்தில் சொந்தமாக ‘தமிழ்க் குரல்’ என்ற மாதம் இருமுறை இதழை சில மாதங்கள் நடத்தினார். பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் அதை விற்றுவிட்டு, சென்னைக்கு வந்துவிட்டார்.

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானத்தின் ‘தமிழ் முரசு’ இதழில் துணை ஆசிரியர் ஆனார். அப்போது தான் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியரான திருவேங்கடம் என்பவர் இவருடைய எழுத்தாற்றல், கற்பனைத் திறனைப் படித்துப் பார்த்து, இவருக்கு யாப்பிலக்கண முறைப்படி மரபுக் கவிதைகளை எழுதப் பயிற்றுவித்துள்ளார். 1949-ம் ஆண்டில், பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில், கோவையில் நடைபெற்ற கவியரங்கத்தில் தன் 28-ம் வயதில் பங்கேற்றுள்ளார்.

திரையில் முதற்பாடல்

பத்திரிகைத் துறையில் இவருக்கு ஏற்கெனவே பரிச்சயமான ப.நீலகண்டன் அந்நாளில் ஏவி.எம். ஸ்டுடியோ உரிமையாளர் ஏவி. மெய்யப்பனுடன் இணைந்து திரைப்படத் துறையில் சில படங்களில் கதை, வசனம் எழுதி வெற்றியடைந்திருந்தார். அந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ‘ஓர் இரவு’ படத்துக்கான ஆயத்த வேலைகளில் மும்முரமாக ஈடிபட்டிருந்தார். அந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற, தனக்குத் தெரிந்த எழுத்தாளரான கவிஞர் கு.மா.பா.வை அழைத்துவந்து ஏவி.எம்.மிடம் அறிமுகப்படுத்தி, ஒப்பந்த அடிப்படையில் கதை இலாகாவில் மாத ஊதியத்தில் பணியமர்த்திவிட்டார்.

இந்தப் படத்துக்காகத் திரைக்கதை, வசனம் எழுதுவதற்கு அறிஞர் அண்ணாதுரை வந்தபோது, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களை, படி எடுக்கும் பணிதான் கவிஞருக்கு ஒப்படைக்கப்பட்ட முதல் வேலை. அப்படிப் படி எடுத்தபோது ஒரு காட்சிக்குப் பொருந்தும் பாடலைத் தன்னார்வத்துடன் இவர் எழுதியிருக்கிறார். இயக்குநர் ப.நீலகண்டன், கவிஞர். கே.பி.காமாட்சி சுந்தரம், இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் ஆகியோர் கு.மா.பா. எழுதி வைத்திருந்த பாடலைப் படித்து வியந்து, இயக்குநரிடம் காட்டியிருக்கிறார்கள். அதைப் படித்துப் பார்த்த ப.நீலகண்டனுக்கு பாடல் பிடித்துவிட்டதால், ஏவி.எம்.மின் ஒப்புதலுடன் கவிஞரின் முதல் திரைப்படப் பாடலை ஒலிப்பதிவுக்கு அனுப்பினார்.

‘பெண்ணாகப் பிறந்தாலே – வாழ்வில் எந்நாளும் துயர்தானே!.’ என்ற பல்லவிக்கு, ஆர்.சுதர்சனத்தின் சோக இசையும், டி.எஸ்.பகவதியின் இனிய குரலும் சேர, கவிஞரின் முதல் இசைத்தட்டு சுழன்றது. இசையும் வரிகளும் பதிவுக்குப்பின் ஒலித்தபோது ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கை உணர்ந்து, இதே படத்தில் மேலும் இரண்டு பாடல்களை எழுதும் வாய்ப்பும் கவிஞருக்குக்
கிட்டியது. அதன்பின் கு.மா.பாவைத் திரையுலகம் அடையாளம் கண்டுகொண்டது. தமிழ்த் திரைக்கு ஒரு மாபெரும் கவிஞர் கிடைத்தார்.

[ நன்றி: https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/536404-amudhai-poliyum-nilavu-4.html  ]

தொடர்புள்ள பதிவுகள்:

கு.மா.பாலசுப்பிரமணியம்; பசுபதிவுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக