புதன், 9 டிசம்பர், 2020

1717. சங்கீத சங்கதிகள் - 257

மதுரை சோமு - 8

சங்கீத சிங்கம்

மீ.ப.சோமு

டிசம்பர் 9. 'மதுரை சோமு'வின் நினைவு தினம்.

மதுரை சோமு பற்றி அவருடன் நெருக்கமாகப் பழகியவரும், இசையிலும் எழுத்திலும் அறிஞருமான மீ.ப.சோமு சொன்னது...  அவர்  மறைந்தவுடன் விகடனில் வந்த கட்டுரை.

"1941-ம் வருஷம், திருச்சி வானொலியில் நான் அறிவிப்பாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த சமயம் அது. ஒரு நாள், சங்கீத மேதை சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையின் நிகழ்ச்சியை அறிவிப்பு செய்யவேண்டிய பணி இருந்தது. சித்தூரார், தான் பாடவிருக்கும் கீர்த்தனையின் பெயரைச் சொல்லி விட்டு, தன் பின்னால் இருந்த ஒரு சிறுவனைப் பார்ப்பார். அந்தச் சிறுவன் மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்ததும், அடுத்த கீர்த்தனையின் பெயரைச் சொல்வார். இப்படி அந்தச் சிறுவன் அங்கீகரித்தவைதான் அன்று பட்டியலாகியது. சித்தூராரின் நம்பிக்கைக்குரிய அந்தச் சிறுவன் - சிஷ்யன்தான் மதுரை சோமு என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்.

தனது குரு உட்கார இடம் பண்ணித் தருவதிலிருந்து, அவருக்கு வியர்க்கும்போது மேல் துண்டால் துடைத்துவிடுவதுவரை சோமுவின் குருபக்திக்கு எல்லையே கிடையாது.

ஒரு நாள், வானொலியில் கச்சேரி செய்ய குருவுடன் வந்த சோமுவையே கேட்டேன்... "நீங்கள் ஒரு தனிக் கச்சேரி செய்யவேண்டியது தானே?' என்று. அதற்கு சோமு, 'தலை இருக்க வால் ஆடக்கூடாது, சார்!' என்று மிகவும் அடக்கத்துடன் கூறினார். இது நடந்து சில காலம் கழித்து, ஒரு நாள் என்னைப் பார்க்க, சோமு வீட்டுக்கு வந்தார். 'நான் இப்போது தனிக் கச்சேரி செய்கிறேன். என் கச்சேரியைக் கேட்க நீங்கள் வரவேண்டும்' என்று அழைத்தார். அவர் கச்சேரியைக் கேட்டு மெய்ம்மறந்தேன். வெறும் தம்புரா மீட்டி, புன்சிரிப்பை மட்டுமே வெளிக்காட்டிக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்குள் எப்பேர்ப்பட்ட அற்புதமான இசை வல்லமை குடிகொண்டிருந்தது என்பதை உணர்ந்தேன். இதை மனத்தில் கொண்டு, அவரை 'இசை பயில்வான்' என்று நான் குறிப்பிட்டதை அவர் மிகவும் ரசித்தார். பலவீனம் என்பதே இல்லாத சத்தான குரல்; எவ்வளவு உச்சத்துக்குப் போனாலும் அந்தக் குரல் சன்னமடையாது. கீச்சிடாது. அதேசமயம் கீழே இறங்கும்போது, சுருதி பிசகாமல் ஸ்வர ஸ்தானத்தை தொட்டு நின்று பேசும்.

1963-ல் இருந்து சென்னை தமிழிசைச் சங்கத்தின் நிபுணர் குழுவில் என்னோடு உடன் அங்கம் வகித்துப் பணியாற்றினார் மதுரை சோமு. 'இசைப் பேரறிஞர்' பட்டத்துக்குக் கலைஞர்களைத் தேர்ந் தெடுப்பது முதல் விழா நிகழ்ச்சிகளை அமைப்பதுவரை எல்லா செயல்களிலும் என்னோடும், தமிழிசை சங்க நிர்வாகிகளோடும் கருத்து ஒருமித்து மிகவும் பண்பாட்டுடன் நடந்துகொள்வார்.

மதுரை சோமு இசைப் புலமை, குரல் வளம் இரண்டும் இணைந்த ஒரு சிங்கம். அவர் கர்னாடக ரசிகர்களுக்கும் பாடினார்; ஜனரஞ்சக ரசிகர்களுக்கும் பாடினார். அவர் மறைந்துவிட்டாலும், கேட்பவர்களுக்குப் பொருள் புரியும்படி பாடிய அவருடைய கம்பீரமான குரல் நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்!"

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை: