செவ்வாய், 22 டிசம்பர், 2020

1738. சார்வாகன் - 2

 சார்வாகன்: பரிவும் படைப்பூக்கமும்

 சி.மோகன்



டிசம்பர் 21. 'சார்வாக'னின் நினைவு தினம்.

====

ஒரு படைப்பாளியாகவும், தொழுநோய் மருத்துவராகவும் சார்வாகனை இயக்கிய ஆதார சக்திகளாக, வாழ்வின் மீதான பரிவும், படைப்பூக்க மனமுமே அமைந்திருந்தன. அவரது படைப்புகளைப் பொறுத்தவரை யதார்த்தரீதியான புனைவு, கனவுத் தன்மையான புனைவு, இவ்விரு தன்மைகளும் ஒன்றோடொன்று முயங்கி இன்னதென்று பிரிக்க முடியாப் புதிர்க்கோலம் கொண்டிருக்கும் மாயப் புனைவு என மூன்று வகையான புனைவாக்கப் பாதைகளில் இவரது படைப்புப் பயணம் அமைந்திருக்கிறது. தன் படைப்புலகப் பிரவேசத்தின் தொடக்கம் முதலே இம்மூன்று வகைக் கதைகளையும் அவர் உருவாக்கியிருக்கிறார். எத்தன்மையான கதையாக இருந்தாலும், படைப்பாக்கத்தில் கலை நுட்பங்கள் கூடிய படைப்பு சக்தி சார்வாகன்.

சிறு வயது வாழ்வின் களன்களாக இருந்த தமிழகச் சிற்றூர்களே இவரது பெரும்பாலான சிறுகதைகளின் களன்களாக இருக்கின்றன. மனித வாழ்நிலை குறித்த அதிருப்தியின் வெளிப்பாடுகளே இவரது கதைகள். அவரது படைப்பு மனம் இந்த அதிருப்தியிலிருந்துதான் மனித வாழ்வின் மீது ஆழ்ந்த பரிவுகொள்கிறது. அவரது நுட்பமான புனைவு முறைகளால் இக்கதைகள் பெறும் அழகுதான் அவை கலைத்துவம் கொள்ள ஏதுவாகிறது. ஏதோ ஒரு பிரச்சினை சார்ந்த துயரத்தை இவரது கதைகள் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. சில, யதார்த்த தளத்தில் புனைவாக்கம் பெறுகின்றன. வேறு சில, கனவுத் தன்மையோடு புனைவுகொள்கின்றன. மற்றும் சில, இருவிதப் புனைவுகளும் மேவிய மாய யதார்த்தக் கதைகளாக மந்திரப் புனைவு பெறுகின்றன.

தமிழ்ச் சிறுகதை உலகம், யதார்த்த பாணிக் கதை மரபில் உலகத் தரத்துக்கு இணையாகக் கணிசமான கதைகளைக் கொண்டிருக்கிறது. வாழ்வின் மெய்மையைக் கண்டறிய யதார்த்த மரபுக் கதைகள் போதுமானவை அல்ல என்று உணரப்பட்ட நிலையில் மேலைநாடுகளில் புதிய பாணிகள் வேரூன்றி வளம்பெற்றன. மேலும், காரண-காரிய தர்க்க அறிவே உலகப் போர்களுக்கு வித்திட்டது என்ற புரிதலும் புதிய வெளிப்பாட்டு முறைகளுக்கு இட்டுச்சென்றன. தர்க்கரீதியிலான நேரான கதை சொல்லல் முறையே யதார்த்த மரபின் அடிப்படை என்பதால் அதிலிருந்து வெளியேறி வேறு புனைவுக் கோலங்களுக்குள் பிரவேசிக்கப் படைப்பாளிகள் பிரயாசைப்பட்டனர். எனினும், யதார்த்த பாணிக் கதை மரபே மூன்றாம் உலக நாடுகளில் இன்னமும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. தமிழும் விலக்கல்ல. அதேசமயம், சமீப காலங்களில் தமிழிலும் கனவுக் கதைகள், விந்தைக் கதைகள், மாய யதார்த்தக் கதைகள், குறியீட்டுக் கதைகள் எனப் புதிய பாணிக் கதைகள் தம்மை வலுவாக ஸ்தாபிக்க முனைந்திருக்கின்றன. பழமை வடிவங்களைச் சார்ந்து இயங்க முடியாத இருத்தலியல்வாதிகளின் வெளிப்பாடுகள் இவை. அறியாத பாதைகளில் அலைந்து அறிவதை ஒரு படைப்பாளி நேசிப்பதிலும் தேர்ந்தெடுப்பதிலும் வியப்பில்லை. வகுக்கப்பட்ட பாதைகளையும் எல்லைகளையும் கடந்து செல்லவே கலைஞன் பிரயாசைப்படுகிறான். இப்பின்புலத்தில்தான் சார்வாகன் கதைகள் முக்கியத்துவமும் பெறுகின்றன.

சார்வாகனின் முதல் கதையான ‘விசுவரூபம்’ அவரது 35-வது வயதில் 1964-ல் ‘தாமரை’ இதழில் பிரசுரமானது. அவரது கம்யூனிஸக் கட்சி ஈடுபாடும், மார்க்ஸியப் பிடிப்பும், தி.க.சிவசங்கரனோடு கொண்டிருந்த நட்பும் அவர் அளித்த உத்வேகமும் அவர் தொடர்ந்து தன் ஆரம்ப காலக் கதைகளை ‘தாமரை’ இதழில் எழுத ஏதுவாக இருந்திருக்கும். அதேசமயம், அக்கதைகள் கொண்டிருந்த கலைத்துவம், நவீனத் தமிழ் இலக்கியத்தில் கலை மேதமையோடு செயலாற்றிய ஆளுமைகளின் கவனத்தையும் ஈர்த்தது. அதைத் தொடர்ந்து அவரது கதைகள் ‘தீபம்’, ‘ஞானரதம்’, ‘சுதேசமித்திரன்’, ‘சதங்கை’, ‘கணையாழி’, ‘கசடதபற’ ஆகிய இதழ்களில் வெளியாகின. 1968-ல் நகுலன் கொண்டுவந்த ‘குருக்ஷேத்திரம்’ தொகுப்பின் சிறுகதைப் பகுதியில் சார்வாகனின் ‘சின்னூரில் கொடியேற்றம்’, ‘உத்தரீயம்’ கதைகள் இடம்பெற்றபோது தனித்துவமான படைப்பாளியாக அவர் அறியப்பட்டார்.

1960-களின் பிற்பாதியிலிருந்து எழுபதுகள் வரை சிறுபத்திரிகை வாசகர்களிடையே குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராக சார்வாகன் கவனம் பெற்றிருந்தார்.

1976-க்குப் பிறகு, அவர் 15 ஆண்டுகள் கதைகளோ கவிதைகளோ எழுதாததும் அவரது கதைகள் புத்தகமாக வெளிவராததும் சிறுபத்திரிகை வாசகர்களின் நினைவுகளிலிருந்தும்கூட அவர் பெயர் மங்குவதற்கான முகாந்திரங்களாகின. பின் ஏதோ ஒரு உத்வேகத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர், 1991-ல் அவர் மூன்று கதைகள் எழுதியிருக்கிறார். அவை ‘இந்தியா டுடே’யிலும் ‘கணையாழி’யிலும் பிரசுரமாகியிருக்கின்றன. 1993-ல் கணையாழி நவம்பர் மற்றும் டிசம்பர் இதழ்களில் ‘வெறி நாய் புகுந்த பள்ளிக்கூடம்’ என்ற நெடுங்கதை வெளியாகியிருக்கிறது. இதுவே அவர் எழுதிய கடைசிக் கதை.

15 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் எழுதிய மூன்று கதைகளும் படைப்புரீதியிலான அவரது மன இயக்கத்தின் தொடர்ச்சியாகவே அமைந்திருக்கின்றன. இவற்றில், ‘போன ஜன்மங்களும் வேறு உலகங்களும்’ என்ற கதை யதார்த்த மரபிலான சமூக அங்கதக் கதை. ‘கடைத்தேறினவன் காதல்’ என்ற கதை கற்பனைக் காட்சிப் புலத்தில் அமைந்த குறியீட்டுக் கதை. மரபும் நவீனமும் பரிசோதனையும் என இவரது படைப்பு மன இயக்கம் தொடர்ந்து அமைந்திருக்கிறது.

யதார்த்த பாணிக் கதைகளில் ‘சின்னூரில் கொடியேற்றம்’, ரப்பர் மாமா’, ‘போன ஜன்மங்களும் வேறு உலகங்களும்’ ஆகிய கதைகளும், ‘அமர பண்டிதர்’ குறுநாவலும் சிறந்தவை. ‘அமர பண்டிதர்’ குறுநாவல், சுதந்திரப் போராட்ட கால லட்சியங்களும் வாழ்வியல் மதிப்புகளும், சுதந்திரத்துக்குப் பின்னான வாழ்வில் அடைந்த சரிவின் அவலத்தைக் கச்சிதமான வடிவத்தில் வெளிப்படுத்தியிருக்கும் படைப்பு. கனவுப் பாங்கும் குறியீட்டுத் தன்மையும் முயங்கிய நவீன பாணிக் கதைகளில் ‘உத்தரீயம்’, ‘புதியவன்’, ‘அருவங்கள்’, ‘கடைத்தேறினவன் காதல்’ ஆகியன சிறப்பானவை. மனித மனதையும் வாழ்நிலைகளையும் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் பன்முக வெளிப்பாடுகளே உதவும் என்பதற்கான படைப்புச் சாட்சிகள் இவை. இவரது ‘கனவுக் கதை’ ஓர் அலாதியான புனைவுக் கண்டுபிடிப்பு. இரு நிகழ்வுகளால் இக்கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. யதார்த்தமும் மாய யதார்த்தமும் கலந்துறவாடியிருக்கும் கதை. முன்நிகழ்வு யதார்த்தமெனில், பின்நிகழ்வு கனவு. முன்நிகழ்வு கனவெனில் பின்நிகழ்வு யதார்த்தம். எது யதார்த்தம், எது கனவெனப் பிரித்தறிய முடியா மாயத் தன்மை கொண்டது. இக்கதை, அவரது கலைக் கண்டுபிடிப்பு. காலம் உவந்தளித்த பெரும் கொடை சார்வாகன்.

[ நன்றி : https://www.hindutamil.in/news/literature/510021-writer-sarvagan-2.html  ]

தொடர்புள்ள பதிவுகள்:



கருத்துகள் இல்லை: