சனி, 16 அக்டோபர், 2021

1948. புலியூர்க் கேசிகன் - 1

சங்க காலத்து மதுரை

புலியூர்க் கேசிகன்



அக்டோபர் 16. புலியூர்க் கேசிகனின் பிறந்த தினம்.

அவர் 'மதுரை'யைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை இதோ.

=====

‘மதுரை’ என்று குறிப்பிடுகிற போது, இன்று இருக்கிற மதுரைப்பேரூரை நாம் நம் உள்ளத்திலே கொண்டுவிடக் கூடாது. சங்ககாலத்து மதுரை இஃதன்று. இம் மதுரைக்குக் கிழக்கே வையையாற்றின் தென்கரையிலே அஃது அமைந்திருந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் தமிழகத்தே ஏற்பட்ட களப்பிரர்களின் படைஎழுச்சியினாலே அதுஅழிந்து போயிற்று.

திருப்பரங்குன்றத்தைக் குறிப்பிடுகின்ற புறநானூற்றின் நூற்றுநாற்பத்தொன்பதாவது பாடலுள், தாயங் கண்ணனார் என்னும் சான்றோர்,

‘கொடி நுடங்கு மறுகிற் கூடற் குடாஅது

பல்பொரி மஞ்ஞை வெல்கொடி உயரிய

ஒடியா விழவின் நெடியோன் குன்றம்’

என்று கூறுகின்றனர். ‘திருப்பரங்குன்றம் மதுரைப் பேரூருக்கு மேற்காக இருப்பது’ என்னும் இதனால், இன்றைய பரங்குன்றத்திற்குக் கீழைத் திசைக்கண்ணேயே அந்நாளைய மதுரை இருந்தது என்பது புலனாகும்.

நக்கீரனாரின் திருமுருகாற்றுப்படையும், ‘மதுரைக்கு மேற்கிற் பரங்குன்றம்’ என்றுதான் கூறுகின்றது. இதனால், சங்க காலத்துப் பேரூரான மதுரை இன்று காணப்பெறுகின்ற மதுரையன்று எனலாம்.

வையையின் தெற்குக் கரையிலேதான் அந்த மதுரை இருந்தது என்பதனை,

‘மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித் தேமலர் நறும்பொழில் தென்கரை எய்தி’

என்ற சிலப்பதிகார அடிகளினாலே நாம் அறியலாம்.

இன்றுள்ள மதுரைக்குச் சற்றுத் தொலைவிலே, பழமதுரை மேடு என்றொரு மேடு உள்ளது. அங்கே பழமதுரை முனியன் கோயில் என்றொரு கோயிலும் இருக்கிறது. அந்த இடத்திலே தான் மதுரைப் பேரூர் சங்ககாலத்திலே விளங்கியிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மதுரை நகரின் அமைப்பு

பழைய மதுரை நகரம் தாமரைப்பூவினைப் போன்று வட்டவடிவமாக அமைந்திருந்தது. அதனைப் பழைய பரிபாடற் செய்யுள் ஒன்று இவ்வாறு கூறுகிறது:

"சிறப்புடைய மதுரையாகிய பேரூரானது திருமாலின் தொப்புளிலே பூத்த தாமரைப் பூவினைப் போன்றதாகும்.அப்பூவின் அகவிதழ்களைப் போன்றவை அதன் தெருக்கள். அவ்விதழ்களின் நடுவே உள்ள அரிய தாமரைக் கொட்டையினைப்போல விளங்கியது, பெருமையிற் சிறந்தவனாகிய பாண்டியனின் அரண்மனை. அந்நகரிலேயிருக்கிற குடிமக்கள் குளிர்ந்த தமிழ்மொழியினை பேசுபவர்கள். அவர்கள் அத் தாமரைமலரின் மகரந்தப் பொடியினைப் போன்றவராவர். அவர்களிடத்துப் பரிசில் பெறுவதற்காக வேற்று நாட்டிலிருந்து வரும் இரவலர்கள், அம்மகரந்தப் பொடிகளை உண்ணவரும் வண்டுகளை ஒத்தவர்கள் ஆவர்."

இந்த வருணனை, மதுரை நகரத்தின் வட்டவடிவமான அமைப்பினை நமக்கு நன்கு அறிவுறுத்துகின்றது. சிறந்த தொரு நகரமைப்புத் திட்டப்படி, சங்ககால மதுரை அன்று அமைந்து விளங்கிற்று என்பதனை, இது காட்டுவதாகும்.

கோட்டை மதில்

இப்படி அமைந்த இந்நகரைச் சுற்றிலும் இருவகையான கோட்டை மதில்கள் இருந்தன. அவை அகமதில் எனவும் புறமதில் எனவும் விளங்கின. ஒன்று உட்புறத்தும், மற்றொன்று அதனையடுத்த இடைவெளிக்குப் பின்னர் வெளிப்புறத்துமாக விளங்கின.

புறஞ்சேரி

இந்த இரண்டு கோட்டைகளுக்கும் இடைப்பட்ட வெளியிடம் புறஞ்சேரி என்ற பெயருடனே விளங்கிற்று. இந்தப் புறஞ்சேரியில் அறத்துறை மாக்கள் பலரும் அந்நாளிலே தங்கி வாழ்ந்தனர்.

மதுரை நகரம் வட்டவடிவினதாக அமைந்திருந்தது என்பதனை, ‘இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த இலங்குநீர்ப் பரப்பின் வலம்புணர் அகழி’ எனவரும் சிலப்பதிகார அடிகளும் காட்டும். ‘வளைவுடன்’ என்ற சொல், வட்டவடிவமான தன்மையைக் குறிப்பதனையும் அறிக.

மதுரை நகரின் கோட்டை வாயில்களிலே ‘பந்தும் பாவையும் கட்டித் தூக்கியிருந்தனர்’ என்கிறது திருமுருகாற்றுப் படை பகைவரை மகளிராகக் குறிப்பிட்டு ஏளனஞ் செய்வதற்கான அடையாளங்கள் அவை. அவற்றருகே, செருப்புகன்று எடுத்த, மிகவுயரத்தே பறந்திருக்கும் நெடுங்கொடியும், அந்நாளிலே மதுரையிற் பறந்து கொண்டிருந்ததாம்.இந்தக் கோட்டை வாயில்களின் காவல் ஏற்பாடுகள் மிகவும் வியப்பானவை. அவற்றின் விரிவைச் சிலப்பதிகாரம் காட்டும். புறக்கோட்டையினைச் சூழ நாற்புறமும் காவற்காடும் அகழியும் விளங்கின. வடக்குப் புறத்து அகழியாக வையைப் பேராறு ஓடிக்கொண்டிருந்தது.

கோட்டையின் நாற்புறத்துக்கும் நான்கு வாயில்கள் விளங்கின. அவை நெடிதான வாயில் நிலையினையும், பலகாலும் நெய்யிடுதலால் கருகின திண்மையான செறிவுள்ள கதவினையும் உடையன. மேகம் உலாவும் மலைபோல் உயர்ந்த மாடங்களையும் அவை தம் மேற்புறத்தே கொண்டிருந்தன.

கண்ணகி கீழ்த்திசை வாயிலின் வழியாகக் கோவலனுடன் மதுரைக்குள் சென்றதாகவும், மதுரையை விட்டு வெளியேறும்போது மேற்றிசை வாயில் வழியாகச் சென்றதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இது நாற்புறமும் இருந்த வாயில்களைப் பற்றிய செய்தியினை அறிவதற்கு உதவும்.

கோட்டைக் காவலுக்குரியவராக யவனவீரர்கள் அந்நாளில் விளங்கினர் என்கிறது சிலம்பு. இவர்கள், ‘கிரேக்கர்கள் அல்லது அயோனியர்களாயிருக்க வேண்டும்’ என்பார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தெருக்களும் பிறவும்

நகரில் இருந்த பல்வேறு தெருக்களைப் பற்றியும், கோயில்களைப் பற்றியும், ‘சிலம்பு காட்டும் மதுரை’ என்ற பகுதியிலே கூறியிருப்பதனைக் காண்க. கலைமகளுக்குத் தனியாகக் கோயிலொன்றும் அந்நாளிலே இருந்தது. மணிமேகலையிலே இப்படி ஒரு செய்தி காணப்பெறுகின்றது. ‘சிந்தாதேவி கோயில்’ என்று அதற்குப் பெயர்.

நீதி மன்றம்

‘அறங்கூறு அவையம்’ என்ற பெயருடனே மதுரையின்கண் நீதிமன்றம் ஒன்றும் சிறப்புடன் விளங்கிற்று. இதனை, ‘மதுரைக் காஞ்சியின்’ 490-2 அடிகளால் நன்கு அறியலாம்.

இவ்வாறாக, சங்ககால மதுரையின் அமைப்பினைப்பற்றி இன்னும் பற்பல செய்திகள் சங்க நூற்களுள் காணப் பெறுகின்றன. அவையெல்லாம் மதுரைப் பேரூரின் அமைப்பினை, பெரும்சிறப்பினை ஒருவாறாக நாமும் ஊகித்து அறிந்து கொள்வதற்கு உதவுவனவாம்.

தொடர்புள்ள பதிவுகள்:


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: