ஆறுபடை வீடுடையான்
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
கந்தர் சஷ்டி விழா ஆறுநாட்கள் நடைபெறும். இந்த ஆறு நாட்களிலும் நாள் ஒன்றுக்கு ஒரு படைவீடு என்று ஆறு படை வீடுகளுக்கும் சென்றுவரும் பழக்கம் உடையவர்கள் அனேகர். ஆனால் இதனை ஒட்டி ஒரு விவாதம், ஆறு படை என்பது சரியல்ல. ஆற்றுப்படை என்பதே சரி என்பாரும், ஒரு ‘ற்’ செய்த வேலை காரணமாகவே ஆறு படையே ஆற்றுப்படை என்றாயிற்று என்பாரும் உளர்.படைவீடு என்றால் ஓர் அரசன் தன் பகைவரை அழிக்கப் போர்க்கோலம் கொண்டு தன் படையுடன் தங்கியிருக்கும் இடம் என்று பொருள். முருகனும் தன் பகைவரான அசுரரை அழிக்க ஆறு படைவீடுகளில் தங்கியிருக்கின்றான். அவைதாம் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்பவை. இதுதான் கர்ணபரம்பரை வழக்கு. இத்தலங்கள் ஆறையும், நக்கீரர் தம் திருமுருகாற்றுப் படையில் பாடி இருக்கிறார் என்பதையும் அறிவோம். இதில் ஒரு சங்கடம். முதலில் குறிப்பிட்ட மூன்று ஊர்களும் எங்கே இருக்கிறது என்று தெரியும். ஏரகம் என்பது சுவாமி மலையே என்பர் ஒரு சாரர். இல்லை அது மலைநாட்டுத் திருப்பதியாம் குமர கோயிலே என்று வாதிடுபவர் மற்றையோர். எது எப்படி இருந்தாலும் குன்றுதோறாடல் ஓர் ஊரைக் குறிப்பது அன்று. முருகன் ஏறிநிற்கும் குன்றுகளுக்கெல்லாம் இப்பெயர் பொருந்தும் என்றாலும் சிறப்பாக தணிகை மலையையே குறிப்பிடுவதாகும் என்று கருதுவதும் உண்டு. இன்னும் பழமுதிர் சோலையைப் பற்றியும் ஒரு விவாதம். பழங்கள் கனிந்திருக்கும் சோலை என்றுதானே பழமுதிர் சோலைக்குப் பொருள் கொள்ள முடியும். என்றாலும் இந்தப் பழமுதிர்சோலை மதுரைக்குப் பக்கத்தில் உள்ள அழகர் கோயில் மலைதான் என்றும் கூறுவர். இதையெல்லாம் நோக்கியபோது படைவீடுகள் ஆறு அல்ல ஆயிரக் கணக்கானவை என்று கூடக் கூறலாம்.
இன்னும் ஓர் இடர்ப்பாடு. முருகப் பெருமான் சூரபதுமனோடு போர் தொடுத்த போது படைவீடு வீரமகேந்திர புரத்தை அடுத்த ஏமகூடத்தில் இருந்தது என்று கந்தபுராணம் கூறுகிறது. அப்படியிருக்க, நக்கீரர் கூறிய ஆறு இடங்கள் எப்படிப் படைவீடுகள் ஆகும். திருப்பரங்குன்றத்திலே முருகன் தெய்வயானையை மணந்து கொள்கிறான். அது அன்றி போர் முரசம் அங்கு கொட்டியதாக வரலாறு இல்லை. ஏரகத்திலும், ஆவினன் குடியாகிய பழனியிலும் இருப்பவனோ கோவணாண்டி, தனித்திருக்கும் தவமுனிவன் இவனுக்கும், போருக்கும் தொடர்பு இருத்தல் இயலாது. தணிகையில் அமைதியை நாடுகிறான். பழமுதிர் சோலையிலோ பழைய முருகனையே காணோம். அங்கும் போர்ப்படை அமைந்திருக்க நியாயமில்லை.
இதிலிருந்து நாம் அறிவது ஆறு படைவீடு என்று நம்முன்னேர்கள் வழிவழியாக சொல்லி வருகிறார்கள். உண்மையில் நக்கீரர் நம்மை முருகனிடத்து ஆற்றுப்படுத்துகிறார் என்றே கொள்ளல் வேண்டும். ஆற்றுப்படை என்றால் வழிகாட்டுதல் என்றுதான் பொருள். பழந்தமிழ் நாட்டில் புலவர்களும், கலைஞர்களும் பரிசு கொடுக்கும் மன்னர்களையும், வள்ளல்களையும் தேடி அலைந்தனர். அப்படி அலையும்போது முன் சென்ற புலவன் ஒருவன் தான் ஒரு வள்ளலை அடுத்து அவனிடம் பரிசு பெற்று வந்த வரலாற்றைக் கூறி நீயும் அவனை அடுத்துச் சென்றால் அவ்விதமே பரிசு பெறலாம் என்று கூறுவதே ஆற்றுப்படையின் அடிப்படை. இதைப் போலவே முருகப் பெருமானிடம் சென்று அவன் அருள் பெற்ற கவிஞன் ஒருவன் மக்களை எல்லாம் கூவி அழைத்து அப்பெருமானிடம் சென்று அவன் அருள் பெறவைப்பதே ஆற்றுப்படை.
எய்யா நல்லிசை
செவ்வேள் செய்
சேவடி படரும்
செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கை
புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை
ஆயின் பலவுடன்
நன்னர் நெஞ்சகத்து
இன்நசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ
முன்னிய வினையே
என்றுதானே ஆற்றுப்படுத்துகிறார். இந்த முறையிலே நானும் இந்த கந்தர்சஷ்டி விழாவிலே உங்களை எல்லாம் ஆறுபடை வீடுகளுக்குமே ஆற்றுப்படுத்த விழைகிறேன். கால வசதியும் பொருள் வசதியும் உடையவர்கள் தாமே, இந்த விழா நடக்கும் ஆறு நாட்களுக்குள், ஆறுபடை வீடுகளுக்கும் சென்று ஒவ்வொரு கோயிலிலும் வணங்கித் திரும்புதல் கூடும். நானோ ஒரு சிரமும் இல்லாமல், செலவுக்கும் இடம் வைக்காமல் ஆறுபடை வீடுகளுக்கும் அநாயாசமாகவே அழைத்துச் சென்று திரும்பியும் கொண்டு வந்து சேர்த்து விடுவேன். இந்த மானசீக யாத்திரையைத் துவங்குவோமா?
ஆறுபடை வீடுகளிலும், படைவீடு என்னும் பொருளுக்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பது திருச்செந்தூர்தான். அதைத்தான் திருச்சீர்அலைவாய் என்று நக்கீரர் அழைத்திருக்கிறார். அலைவாய் என்ற பெயரிலேயே அது ஒரு கடற்கரைப் பட்டினம் என்று தெரியும். திருநெல்வேலி மாவட்டத்திலே கீழ்க்கோடியிலே மன்னார் குடாக் கடற்கரையிலே முருகன் சூரபதுமனை வதைத்து வெற்றி கொண்டிருக்கிறான். சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேலைத் தாங்கியவனாகவே நிற்கிறான். அங்கே கருவறையில் நிற்கும் அவனையும் முந்திக் கொண்டே சண்முகன் நம் வரவை எதிர்நோக்கி, நிற்பவன் போல, நாம் கோயிலில் நுழைந்ததும் காட்சி தருகிறான். அவனது ஆறு முகங்களும் எப்படிப் பொலிகின்றன, எவ்வாறெல்லாம் அருள்புரிகின்றன என்பதை நக்கீரர் வாயாலேயே கேட்கலாம்.
மாயிருள் ஞாலம்
மறுஇன்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று
ஒரு முகம்; ஒரு முகம்ஆர்வலர் ஏத்தஅமர்ந்து இனிது ஒழுகிக்காதலின் உவந்துவரம்கொடுத்தன்றே; ஒருமுகம்மந்திர விதியின்மரபுளி வழாஅந்தணர் வேள்விஒர்க்கும்மே; ஒருமுகம்எஞ்சிய பொருள்களைஏம்உற நாடித்திங்கள் போலத்திசைவிளக்கும்மே; ஒருமுகம்செறுநர்த் தேய்த்துச்செல்சமம் முருக்கிக்கறுவுகொள் நெஞ்சமொடுகளம் வேட்டன்றே; ஒரு முகம்குறவர் மடமகள்கொடிபோல் நுசுப்பின்மடவரல் வள்ளியொடுநகையமர்ந்து அன்றே
இப்படி மூவிரு முகங்களும் முறைநவின்று ஒழுகும் என்றே பாடி மகிழ்ந்திருக்கிறார் அவர். இந்த சண்முகனே வள்ளி தெய்வானை என்னும் இரு மனைவியரையும் உடன் இருத்திக் கொண்டே மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கிறான். கோயிலின் தெற்குப் பிரதான வாயிலில் நுழைந்து அந்த சண்முக விலாசத்தைக் கடந்தே கருவறையில் உள்ள பாலசுப்பிரமணியனைக் காண வேணும். அவனோ அழகிய வடிவினன். அவனை விபூதி அபிஷேகம் பண்ணிப் பார்த்தால்தான் அவன் அழகு முழுவதையும் அனுபவித்தல் கூடும். இவனது அழகையும், அருளையும் நினைத்துத் தானே,
சூரலை வாயிடைத்
தொலைத்து மார்பு கீண்டு
ஈரலை வாயிடும்
எஃகம் ஏந்திய
வேரலை வாய் தரு
சீரலைவாய் வரு
சேயைப் போற்றிப்
பாடி மகிழ்ந்திருக்கிறார்கள் பக்தர்கள். நாமும் அந்தப் பக்தர் கூட்டத்தில் கூடி நின்று வணங்கி எழுந்து மேல் நடக்கலாம்.
கார் வசதியோடு சென்றிருந்தால் அன்றே வடக்கு நோக்கிக் காரைத் திருப்பி விரைந்து செல்லலாம். அப்படி நூறு மைல் சென்றால் நாம் திருப்பரங்குன்றத்திற்கு வந்து சேரலாம். மதுரைக்குத் தெற்கே ஆறு மைல் தூரத்தில் இருக்கிறது திருப்பரங்குன்றம்.
அங்கு ஓங்கி உயர்ந்து நிற்பது பரங்குன்று. அதனையே சிக்கந்தர் மலை என்பர் சாதாரண மக்கள். உண்மையில் கந்தன் மலைதான் அது. சமய வேறுபாடுகளைப் பெரிது பண்ணாத தமிழர் அம்மலை முகட்டில் முஸ்லீம் பெரியார் ஒருவரைச் சமாதி வைக்க அனுமதித்திருக்கிறார்கள். அதனால் தான் கந்தன் மலை நாளடைவில் சிக்கந்தர் மலையாக உருப்பெற்றிருக்கிறது. குன்றமர்ந்து உறையும் முருகன் இங்கு ஒரு பெரிய கோமகனாகவே வாழ்கிறான். சூரபதுமனை வென்ற வெற்றிக்குப் பரிசாகத்தானே அந்த தேவேந்திரன் தன் மகள் தேவசேனையை மணம் முடித்துக் கொடுக்கிறான். தேவர் சேனாதிபதியாக இருந்து போர்களில் வெற்றி பெற்றவன் இங்கு தேவசேனாபதியாகவே அமைகிறான். அக்கோமகன் கோயில் கொண்டிருக்கும் கோயிலும் பெரிய கோயில்தான். பலபடிகள் ஏறிக் கடந்தே அவன் சந்நிதிமுன் சென்று சேரவேணும். அங்கு மலையைக் குடைந்தமைத்த குடை வரையிலேதான் அவன் குடியிருக்கிறான். அவனை வணங்கித் திரும்பும்போது அடிவாரத்தில் உள்ள மகாமண்டபத்துத் தூண் ஒன்றில் தேவசேனையை மணந்து கொள்ளும் காட்சியையும் கண்டு மகிழலாம். இத்தலத்திற்கு வந்த சுந்தரர், அன்று முடியுடை வேந்தர் மூவரும் வந்து வணங்கிய தலம் என்பர். நாமும் இன்று முடியுடைவேந்தர் தாமே. ஆதலால் நாம் அம்மூவரைப் பின்பற்றி வணங்கி சரித்திர ஏடுகளில் இடம் பெறலாம் தானே.
அடுத்த படைவீடு என்று கருதப்படுவது பழமுதிர் சோலை. நான் முன்னமேயே சொல்லியிருக்கிறேன். இது எந்த இடம் என்று தீர்மானிப்பதில் பல கஷ்டங்கள் உண்டு என்று. என்றாலும் பலரும் ஒப்புக் கொள்ளும் பழமுதிர் சோலைதான், மதுரைக்கு வடக்கு பத்து மைல் துரத்தில் உள்ள அழகர் கோயில், அந்த அழகர் கோயிலுக்குச் சென்றால் அங்குள்ள பெரிய கோயிலில் இருப்பவன் சுந்தரராஜன் என்னும் பெருமான் அல்லவோ என்று தானே கேட்கிறீர்கள். அந்த மாமன் பின்னர் உருவானவன்தான் என்பர் பெரியோர். அவனையும் வணங்கி அங்குள்ள மலைமீது ஏறி ஒன்றரை மைல் நடந்து சென்றால் ஒரு குளிர் பூஞ்சோலையில் வந்து சேருவோம். அங்கு தான் நூபுர கங்கை என்னும் சிலம்பாறு ஓடுகிறது. அந்தப் பழமுதிர் சோலை மலை கிழவோன் நல்ல இடத்தைத் தான் தேடி எடுத்திருக்கிறான். இங்கு அவன் கோயில் கொண்டிருந்த இடத்தில் ஒரு மண்டபமும் அதில் வேல் ஒன்றும் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. சமீப காலத்தில் அன்பர் பலர் சேர்ந்து ஒரு சிறுகோயிலையே கட்டி வைத்திருக்கின்றனர். இந்தக் கோயில் காரணமாக இப்பழமுதிர் சோலைக் கிழவன் கோர்ட்டு வரை வரவேண்டியவனாக இருந்திருக்கிறான். அவன் கோர்ட் வரை வந்தாலும் நாம் அவனைத் தேடிச் சென்று கண்டு வணங்கித் திரும்பலாம். நமது கந்தர் ஷஷ்டி விழா யாத்திரையில் பழமுதிர் சோலையம் பகவனை வாழ்த்திப் போற்றிய மன அமைதியுடன் மேல் நடக்கலாம்.
ஒரு சிறப்பு என்னவென்றால் ஆறுபடை வீடுகளில் நான்கு படைவீடுகள் பாண்டி நாட்டிலேயே அமைந்திருக்கின்றன. அதில் மூன்றைத் தான் பார்த்திருக்கிறோம். அடுத்தது தான் திரு ஆவினன்குடி, ஆவினன் குடி என்றால் அது எங்கே இருக்கிறது என்றுதான் கேட்கத் தோன்றும். ஆனால் பழநி என்னும் தலமே அது என்றால் அங்குதான் பல தடவை சென்றிருக்கிறோமே. பழநி ஆண்டவனையும் வணங்கியிருக்கிறோமே என்றுதான் பலரும் சொல்வார்கள். ஆம், நாம் அந்த பழநிக்கே செல்லலாம். பழநி மலைக் கோயிலும் அங்குள்ள ஆண்டவன் சந்நிதியும் பிற்காலத்தில்தான் எழுந்திருக்க வேண்டும். அங்குள்ள பழமையான கோயில், மலை அடிவாரத்தில் உள்ள திரு ஆவினன் குடிக் கோயில் என்பர். அந்த ஆவினன் குடி உறை அமலனைத் தானே நக்கீரர் பாடியிருக்கிறார்.
ஆவினன் குடியில் உள்ளவனையோ அவன் பெருமைக்கு எல்லாம் மேலான பெருமையுடைய பழநி ஆண்டவனைப் பற்றியோ அதிகம் கூற வேண்டியதில்லை. எண்ணியது எண்ணியாங்கு எய்தும் வகையில் அருள்புரியும் கண்கண்ட தெய்வமாக வணங்கப்படுபவன் அல்லவா? ஆதலால் நாமும் அங்கு சென்று விழுந்து வணங்கித் திரும்பலாம்.
இனித்தான் சோழநாட்டில் புகவேண்டும் சோழ நாட்டில் உள்ள கோலக்குமரர்களில் எல்லாம் சிறப்பு வாய்ந்தவன் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாதனே. அவன் தந்தைக்கு குருவாக அமைந்தவன் ஆயிற்றே. பிரணவப் பொருளைத் தந்தையாம் சிவபெருமானுக்கே உபதேசிக்கும் ஆற்றல் பெற்றவன் என்றல்லவா புராணங்கள் பேசுகின்றன. இந்த சுவாமி மலைதான் அன்றைய ஏரகம் என்பர். அவனையே ஏரகத்து உறைதலும் உரியன் என்று நக்கீரர் பாடியிருக்கிறார். அங்குள்ள சுவாமிநாதனையும் வணங்கலாம். அதிலும் அவனை ராஜகோலத்தில் அலங்கரித்து இருக்கும் போது கண்டால் ‘ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டல மீதே மனோகர ராஜகம்பீர நாடாளும் நாயகன்’ என்று அருணகிரியார் பாடியதின் பெருமையையும் அறியலாம்.
சரி, ஆறில் ஐந்து தலங்கள் சென்று விட்டோம். கடைசியாக எங்கு செல்வது என்பதுதான் பிரச்சனை. இந்த நக்கீரர் கடைசியாக குன்றுதோறாடும் குமரர்களிடம் அல்லவா நம்மை ஆற்றுப் படுத்துகிறார். குன்றுதோறாடும் குமரர்கள் ஒன்றா இரண்டா, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குன்றின் பேரிலும் தான் ஒரு குமரன் கோயில் இருக்கிறதே. தெற்கே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமரகோயிலிலிருந்து வடக்கு நோக்கி நடந்தால், திருமலையில் ஒரு முருகன், மயிலத்தில் ஒரு முருகன், செங்கோட்டில் ஒரு வேலன் என்றெல்லாம் வடவேங்கடம் தென் குமரியாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் குன்றுதோறாடும் குமரர்களில் சிறந்தவன் ஒருவனைக் காணவேண்டும் என்றால் திருத்தணிகை செல்ல வேணும். இத் தணிகை மலை சமீபகாலத்தில் தான் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவோ காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டுடன் இணைந்திருக்க வேண்டிய இத்தணிகை ஏன் இவ்வளவு காலம் கழித்து இணைந்தது என்று ஏங்கும் நம் உள்ளம். இதே ஏக்கம் அன்று அருணகிரியாருக்கும் இருந்திருக்கிறது. அந்த ஏக்கத்தைத்தானே.
கோடாத வேதனுக்கு யான்செய்த
குற்றம் என்? குன்றெறிந்த
தாடாளனே! தென் தணிகைக்
குமரா; நின் தண்டையந் தாள்
சூடாத சென்னியும் நாடாத
கண்ணும் தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே
தெரிந்து படைத்தனனே
என்று வெளியிட்டிருக்கிறார். நாம் அந்த ஏக்கம் உடையவர்களாக இருக்க வேண்டியதில்லை அல்லவா. நாம்தான் இந்த ஆறுபடை வீடுடையானை அவன் இருக்கும் ஆறு தலங்களிலுமே சென்று கண்டு வணங்கித் திரும்பியிருக்கிறோமே.
ஆறுபடை வீடு என்றெல்லாம் பேசுகின்ற போது தமிழ் நாட்டில் இறைவழிபாடு எப்படி உருவாகியிருக்கிறது என்பதுமே தெரிகிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தமிழ் மக்கள் குறிஞ்சியிலும், முல்லை, மருதம், நெய்தல், நிலங்களிலும் குடிபுகுந்து வாழ்வு நடத்தியிருக்கிறார்கள். தமிழ் மக்களது வாழ்வு துவங்கிய இடம் மலையும், மலையைச் சார்ந்த குறிஞ்சியுமாகவே இருந்திக்கிறது. பின்னரே அவர்கள் காடாகிய முல்லையில் இறங்கி, வயலாகிய மருதத்தில் தவழ்ந்து நெய்தலாகிய கடற்கரை வரையிலும் சென்றிருக்க வேண்டும். ஆதலால் தான் இறைவழிபாடு முதல் முதல் மலைநாடாகிய குறிஞ்சியில் தோன்றியதில் வியப்பில்லை. நீண்டுயர்ந்த மலையிலே பிறந்த இறை வழிபாடு அகன்று பரந்த கடற்கரைக்கே நடந்திருக்கிறது. அதற்கடுத்தபடியாகத்தான் காடாகிய முல்லையிலும், வயலாகிய மருதத்திலும், பரவியிருக்கிறது. இந்நாடுகளிடையே எழுந்த பலபல குன்றுகளிலும் சிலசில சோலைகளிலும் புகுந்திருக்கிறது. இதையெல்லாம் தெரிந்த நக்கீரர், இறை வழிபாட்டை மலையாம் திருப்பரங்குன்றத்திலே துவங்கி, கடற்கரையாம் திருச்செந்தூரிலே நடத்தி, காடாகிய ஆவினன் குடியிலும் வயல் வெளியாகிய ஏரகத்திலும், சோலையாகிய பழமுதிர் சோலையிலும் பரவவிட்டிருக்கிறார். இப்படி ஆதியில் எழுந்த இறை வழிபாடே, தமிழ் நாட்டில் முருகன் வழிபாடாக வளர்ந்திருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம் நாமும்.
[ நன்றி: “ ஆறுமுகமான பொருள்” தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ]
தொடர்புள்ள பதிவுகள்:
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
முருக வழிபாட்டு நெறியின் முன்னோடி: கட்டுரை
குருஜி ஏ.எஸ்.ராகவன்
திருப்புகழ்
முருகன்
பி.கு. If you enter your e-mail in the 'Follow by Email' box to be
found on the top right-hand side of my blog, the service , follow.it
will deliver my blog-updates to your e-mail regularly.
If you are already a Follower of my blog , thanks for reading!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக