குடும்பத்தேர்
மௌனி
ஜூலை 27. மௌனியின் பிறந்த தினம்.
மணிக்கொடியில் 1936-இல் வந்த கதை.
===
பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு, ஒரு நாள் , கிருஷ்ணய்யர் தன் வீட்டு ரேழி உள்ளே உட்கார்ந்துகொண்டு, நான்கைந்து தினம், எழுதப்படாது நின்றுபோன தினசரிக் கணக்கை எழுதிக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணய்யருக்கு ஐம்பத்திரண்டு அல்லது ஐம்பத்து மூன்று வயது இருக்கலாம். திடசாரி. அவர் அந்தஸ்தும் கௌரவமும் உடையவர். குடும்ப பரிபாலனம், வெளி விஷய வியாபகம் முதலிய எல்லா விஷயங்களிலும் அக்கிராமத்தாருக்கு, பின்பற்றக்கூடிய லட்சிய புருஷராகக் கருதப்பட்டவர். நாலைந்து தினம் அசௌக்கியமுற்றுக் கிடந்து, அவருடைய தாயார் இறந்து போய் ஒரு மாதம் ஆகிறது.
கிழவிக்கு, அந்த எண்பது வருட உலக வாழ்க்கை , ஒரு மலர்ப்பாய்ப் படுக்கையாக இருக்கவில்லை. ஒரு தனவந்தக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டது, அவளை சிற்சில சங்கடங்களுக்கு ஆளாகாது மீட்டதெனினும், அற்ப ஆயுளில் போன அவள் குழந்தைகள், குடும்பம் நடுநடுவே சஞ்சலங்கள் முதலிய இன்னும் எத்தனையோ விதப் பொறுப்புகளின் தன்மையற்ற தொல்லைகளை அவள் அனுபவிக்காமல் இல்லை. அதில் சந்தோஷமே தவிர அவள் வருத்தம் கொள்ளவில்லை. விவேகமான இயற்கை அறிவு கொண்டு அவள் நடத்திய குடும்ப வாழ்க்கை , வீடு நிறைந்த ஒரு சுடரொளி போன்றது.
செலவுகளை ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்தி எழுதலானார். ஆட்களுக்குக் கொடுத்தது. பறையன்கள் தண்ணிக்காக..... தச்சன்கூலி.... மூன்று நாள் முன்பு அமாவாசை தர்ப்பண தக்ஷிணை... ஸ்வாமி புறப்பாட்டிற்கான ஊர் வீதாச்சாரம் எல்லாம் எழுதியாகி விட்டது. அப்படியும் மூன்றே காலணாக் குறைந்தது. செலவு தெரியவில்லை . வழக்கமாக, எழுதிப் பழக்கப்பட்ட கை, 'அம்மா பற்று..... 0.3.3' என்று எழுதிக் கணக்கைச் சரிக்கட்டி விட்டது. அதைக் கிருஷ்ணய்யர் பார்த்தார். அதன் அர்த்தம் சிறிது சென்று திடீரென்று புலப்பட்டது போன்று அவர் கண்கள் நிரம்பின. இரு சொட்டுக் கண்ணீர் கணக்குப் புத்தகத்தின் மீது விழுந்தது. அறியாமல் விரலால் துடைத்த போது அம்மா பற்று........0.3.3' என்ற வரி நன்கு காயாததினால் மெழுகிக் கறைபட்டது.
'அது அவர் வழக்கம். சிறிது தொகை கணக்கிற்கு அகப்படாவிட்டால், தலையைச் சொறிந்தும் ..... பேனா மறுமுனையை மூக்கு நுனியில் அழுத்தியும் ..... என்ன ஞாபகப்படுத்தியும், செலவு தெரியாவிட்டால் 'அம்மா பற்று என்று குறைந்த தொகையை எழுதி முடித்துவிடுவது அவர் வழக்கம்.
கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு, இரண்டு தரம், நன்றாகப் பூட்டப்பட்டு இருக்கிறதா என்று கதவை தள்ளிப் பார்த்துவிட்டுக் கூடத்து ஊஞ்சலில் வந்து உட்காருவார். திருப்பத்தாழ்வாரச் சந்தனக் கல்லடியில், குருட்டு யோசனைகள் செய்துகொண்டு அவர் தாயார் படுத்திருப்பாள். மனைவி உள்ளிருந்து காப்பி கொணர்ந்து வைத்துவிட்டுப் போனவுடன், காப்பியை அருந்தி, வெற்றிலை போட்டுக்கொண்டே அம்மா இன்னிக்கு உன் பற்று அணா' என்று சொல்லுவார். உள்ளே இருந்து அவர் மனைவியின் சிரிப்புச் சப்தம் கேட்கும். அவர் தாயாருக்கோவெனின், சமீப சில வருஷமாக காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது. ஆனாலும் இவர் சொல்வது அவளுக்குக் கேட்கும். 'ஆமாம் எனக்குத்தான் காக்கை புத்தி வைத்தது மறந்துவிடும்! உனக்கு? அவ்வப்போது செலவு குறித்துக்கொண்டால் தானே. நான் இருக்கேன் என் தலையை உருட்ட , என் தலையிலே போட, அப்புறம் வயது ஆகியும் குடும்பப் பொறுப்பு...' அவள் சொல்லி முடிப்பாள். கிருஷ்ணய்யருக்கு சாந்த சுபாவம் தான். இருந்தாலும் தன் தாயார் சொல்லும்போது சிற்சில சமயம் கடிந்து பேசி விடுவார் - 'ஆமாம், பிரமாதம்! குடிமூழ்கிப் போய்விட்டது. அடித்துக் கொள்ளுகிறாயே' என்பார்.
'எல்லாம் இருந்தாத்தாண்டா. எப்படியாவது போயேன்; என் காதிலே போட்டால் தானே நான் சொல்லும்படியாகிறது' என்று சொல்லும்போதே அவளுக்கு வருத்தத்தில் அழுகை வந்துவிடும். சிறிது சென்றபின் பழையபடி தாயாரும், பிள்ளையும் பேசிக் கொள்வதைப் பார்க்கும் போது - இவருடைய குதூகல குடும்பப் பேச்சுகள் !
ஆம், அம்மா பற்று மூன்றே காலணாத்தான். எதிரிலே. மேஜையின் மீது நோட்டு விரிக்கப்பட்டு வெறிக்கப் பார்க்கிறது. அவர் கண்ணீர் நின்றுவிட்டாலும் மனது மட்டும் உள்ளே உருகிக் கொண்டிருந்தது. குடும்ப வீட்டின் தாய்ச் சுவர் இடிந்து கரைந்ததைக் கண்டார். அதற்குப் பிரதியாக, தன்னால் தாங்கி நிற்க முடியுமா என்ற எண்ணத்தில் தன் முழு பலவீனத்தையும் உணர்ந்தார். குடும்ப விவகாரங்களை, அடுத்த தலைமுறைக்கு விட்டு விட்டுத் தன் தாயார் வகித்த ஸ்தானத்தை ஏற்றுக்கொள்ளச் சமயம் இன்னும் வரவில்லையே என்பதை எண்ணினார்.
அவருடைய பெரிய பையன் படித்துவிட்டு உத்தியோக வேட்டையில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறான். மற்றவர்கள் இன்னும் சிறுவர்கள் தான். தன் மனைவியோ வெனில் ....... சுத்த அசடுதானே!
திடீரென்று எழுந்து உள்ளே காப்பி சாப்பிடச் சென்றார். வீடே வெறிச்சென்று தோன்றியது. மனைவி காப்பி வைத்துவிட்டுப் போனதும், ஏதோ சொப்பன உலகில் ஊமையாக நடப்பதுபோன்று தான் தோன்றியது. சந்தனக் கல்லடி காலியாக இருந்தது. காப்பி குடித்துவிட்டு வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். அவர் மனைவி, பாத்திரங்களை எடுத்துப்போக வந்தபோது எதிரே எங்கேயோ ஆகாயத்தைப் பார்ப்பது போல உட்காந்திருந்தார். சிம்னி இல்லாது தொங்கிக் கொண்டிருந்தது கூடத்தில் பவர்லைட்! 'மூன்று நாளாச்சி, கிளாஸ் உடைந்து - சொன்னால் மறந்து விடுகிறீர்களே என்று பாத்திரங்களைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் மனைவி உள்ளே போக ஆயத்தப்பட்டவள் , அவர் எதையோ உற்றுநோக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.
மூன்று நாளாய் அவள் சொல்லியதும் மறக்கும்படியாகத் தான் இருந்தது. கிருஷ்ணய்யருக்கு அவள் சொன்னது போலவே இல்லை . தன் தாயார் சொல்லியிருந்தால்...? தான் மறந்திருந்தால் -? அவர் மனது என்னவெல்லாமோ யோசித்தது நான்கு வருஷத்துக்கு முன் ஊரார் கூடிப் பெருமாள் கோவிலில் ஏகாதசி இரவு பஜனை செய்ய எண்ணினார்கள். அது விட்டு விட்டுத் தூங்கும் பக்தி சிரத்தையின் ஒருவிதத் திடீர் ஆரம்பம். இவர் வீட்டு பவர்லைட் இரவல் போயிற்று. அது அவர் தாயாருக்குத் தெரியாது. அன்று இரவு அவர் சாப்பிடும் போது தூணடியில் அவர் தாயார் உட்கார்ந்து பலகாரம் செய்துகொண்டு இருந்தாள். கிருஷ்ணய்யரின் மனத்துள்ளே, ஏதோ சொல்லவேண்டிய ஒரு விஷயம் வெளிச் செல்லாது அடக்கப்பட்டதினால் ஏற்பட்ட ஒரு வேகம். அவர் அறியாமல் சொன்னவர் போன்று 'அம்மா கோவிலுக்கு பவர்லைட்' என்று ஆரம்பித்தவர், சொல்லி முடிக்கவில்லை . அவர் தாயார் சொன்னாள், 'எதையும் எரவல் கொடுத்துவிடு. ஏன் வாங்கணும்? தொலைக்கத்தானே...' அப்போது அவருக்குச் சிறிது கோபம்தான். இருந்தாலும் அவள் சொன்னதில் என்ன பிசகு இருக்கிறது என்பதில் சந்தேகம். அவளிடம் ஏன் சொல்லவேண்டும்? சொன்னால் தானே, அவள் சொல்வதற்குக் காரணமாகிறது? அது ஒரு விநோத விஷயம்தான் - தாயாருக்கு தெரியப்படுத்துவது என்பது. எதில் தான் என்ன பிசகு. தன் தாயாருக்குத் தெரியாது, தெரியப்படுத்தாது இருந்தால்? ஆனால் அவ்வகையில் தான் குடும்பம் நடத்தினால் நாசகாலம் தான். அவருக்குத் தன் குடும்பத்தில் தன் தாயார் வகிக்கும் பொறுப்புத் தெரியும். அவள் சொல்வதில் என்ன பிசகு என்பதைத்தான் உணர்ந்தார். பேசாது இருந்துவிட்டார். மறுநாள் விளக்கு வந்தபோது கிளாஸ் உடைந்து இருந்தது. தம்பூராவை நிமிர்த்தி சுருதி கூட்டிய போது அது விளக்கைத் தட்டியதினால் சிம்னி விரிந்து விட்டது. அந்த விஷயமும் தன் தாயாருக்குச் சொன்னார். அவருடைய மனதை அறிந்தவள் போன்றே ஆறுதலாக, "போகிறது. அல்பவிஷயம் ஸ்வாமி காரியம். ஒன்று வாங்கி வந்துவிடு சாயங்காலம்" என்றாள். அந்தச் சிம்னி தான் இதுவரையிலும் இருந்து வந்தது. எதிரே அந்த சிம்னியில்லா விளக்கும் தன் தாயார் நினைவை ஊட்டிக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார்.
இரேழி உள் சாத்தாது வந்தது ஞாபகம் வந்தது. எழுந்து உள்ளே சென்று சிறிது உட்கார்ந்து இருந்தார். கணக்குப் புஸ்தகம் மூடி மேஜை அறையில் வைக்கப்பட்டது. நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார் கிருஷ்ணய்யர். மாட்டுக்காரப் பையன் மாடுகளை வீட்டு வாயில் வழியாக உள்ளே அடித்துவிட்டு 'அம்மா மாட்டைக் கட்டுங்கோ' என்று கூவிவிட்டுப் போய்விட்டான்.
மேல்காற்று வாயிலில் புழுதியைத் தூற்றிக் கொண்டிருந்தது. உள்ளே வைக்கப்பட்டிருந்த விரைக்கோட்டை அந்துகள் அவர் முகத்தில் மொய்த்தன. அவருக்கு அதுவும் தெரியவில்லை. ஜன்னல் கதவு காற்றில் தடாலென்று அடித்துக்கொண்டது. மேல்காற்று நாளில் தன் தாயார் சொல்வது ஞாபகம் வந்தது. 'உடம்பு வலி எடுக்கும்; ரேழியிலேயே படுத்துக்கொள்' அவர் எங்கே படுத்துக்கொண்டாலும் அதைப்பற்றி அவளுக்குத் தெரியாது. அவள் சொல்லிதான் விடுவாள். இரவிலே அநேகமாக அவள் தூங்கமாட்டாள். காது மந்தம்; கிழவயது. தாழ்வாரத்துக் கீற்று இரட்டை விரி இரவில் காற்று அடித்துக் கொள்ளும் போது 'யார்-யார்?' என்று கேட்டுவிட்டுப் பின்னர் விஷயத்தை யூகித்துக் கொண்டு பேசாது உறங்கிவிடுவாள். மற்றும் நடுஇரலில் கேட்காத சப்தங்கள் (?) அவள் நுண்ணுணர்விற்கு எப்படியோ எட்டி 'யார்' என்று கேட்டும் திருப்தி அடையாது, இருளின் பயத்தை, அவள் ஊன்றுகோல் உதவின டக்டக் சப்தத்தினால் விரட்டுவது போன்று எழுந்து நடந்து ஒவ்வொரு இடத்தையும் தடவித் தடவித் திருப்தியுற்று, திரும்பிப் படுத்துக் கொண்டு விடுவாள். மார்கழி மாதக் குளிரானாலும் அவளை வருத்தாது. விடியற்காலையில் எழுந்து ஏதோ சுலோகத்தை முணு முணுத்துக் கொண்டு, கொல்லை மேட்டிலிருந்து வாயில் வரையிலும் சாணம் தெளித்து வீட்டையே புனிதமாக்குவது போன்று வேலை செய்வாள்.
கிருஷ்ணய்யருக்குத் தன் தாயாரை இழந்ததின் வருத்தம் தாங்கமுடியவில்லை. இழக்கப்பட்ட தாயார் தனக்குக் கவலைக்கு இடமின்றி குடும்பத்தை நடத்த எவ்வெவ்வகையில் உதவியாக இருந்தாள் என்பதை உணர்ந்தபோது, அவள் இடத்திற்கு யார் இப்போது இருக்கிறாள் என்பதை அவரால் கண்டுகொள்ள முடியவில்லை . அப்படி அவள் இல்லாது நடத்தும் வகையும் தோன்றவில்லை. தான் அந்த இடத்தைக் கொள்ள வேண்டின், தன் பொறுப்புகளைத் தன் கீழ் வாரிசுகள் கொள்ள வேண்டும். அதற்கோ ஒருவரும் இல்லை. இருந்தும் தன் தாயாரைப் போன்று தான் அவ்வளவு நன்றாகப் பாதுகாப்பளிக்க முடியுமா? இரவில், கூடத்துக் குத்துவிளக்கின் ஒளிபடராத பாதி இருளில் அவன் உட்கார்ந்து ஜபம் செய்து கொண்டிருப்பாள். உள்ளே குழந்தைகள் தாயாரிடம் விஷமம் செய்து கொண்டு அவளைக் காரியம் செய்யவிடாது உபத்திரவம் செய்யும் போது, குழந்தைகளைக் கூப்பிட்டு கதை சொல்வதும்..... அடிக்கடி குழந்தைகள் உடம்பு இளைத்துவிட்டது என்று நாட்டுப் பெண்ணைக் கோபித்துக் கொள்வதும், இவ்வகையில் தன்னால் கவனம் செலுத்த முடியுமா என்பதை அவர் நினைக்கும்போது யோசிக்க, யோசிக்க, கிருஷ்ணய்யர் வீடே தன் தாயாரால் நிரப்பப்பட்டிருந்தது போன்ற தோற்றத்தைத் தான் உணர்ந்தார். அவள் இறந்ததை எண்ணும் போது தன் பலவீனத்தைக் கண்டார்.
வெளியில் தான் எவ்வளவு கெட்டிக்காரரெனத் தோன்றுவதற்கு ஒரு உரைகல் போலவிருந்த தாயார் போய்விட்டாள்.
எழுந்து கதவைப்பூட்டிக்கொண்டு கொல்லையில் வேலை செய்யும் தச்சனைப் பார்க்கப் போனார். கொட்டிலில் கட்டப்படாத மாடுகளில் ஒன்று கடந்த அரைமணி நேரமாக தவிட்டைத் தின்று கொண்டிருந்தது. மாடு வந்திருக்கு கட்டு' என்று முன்பு தன் தாயார் சொல்லுவதை 'அனாவசியமாக ஏன் சொல்லுகிறாள்? கட்டமாட்டார்களா என்று மிகுந்த அலட்சியமாக எண்ணியவர், கண் கூடாக அவள் வார்த்தைகளின் மதிப்பைப் பார்த்தார். கொல்லையில் சாவதானமாக வீட்டு வேலைக்காரன் வேட்டி துவைத்துக் கொண்டிருந்தான். உள்ளே அவர் மனைவி படுத்துக்கொண்டிருந்தாள். மாடுகளைக் கட்டிவிட்டு கொல்லையில் சென்றபோது, தச்சன் வேலை செய்யாது வெற்றிலை போட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்து இருந்தான். அவனைக் கடிந்து, வாயிற்பக்கம் பார்த்துக்கொண்டே அங்கு உட்கார்ந்தார். கொல்லையில் வேலையை கவனிக்கும் போதும், வாயிற்பக்கத்தில் கவனிப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. எவ்வளவு சமாதானத்தோடு முன்பு வீட்டை விட்டு வெளியே போக முடியும் என்பதையும் வருகிறவர்கள் போகிறவர்களுக்கு எவ்வளவு சரியானபடி தன் தாயார் ஜவாப்பு சொல்லுவாள் என்பதையும் நினைத்துக் கொண்டார். 'அந்தக் கர்நாடகம்' என்று அவளை அடிக்கடி இவர் சொல்வது உண்டு .
ஆனால் அப்படியல்ல. நாகரிகத்தையும், நாகரிகத்தில் ஜனங்கள் முன்னேற்றத்தையும் அவள் கண்டுகொள்ளாமல் இல்லை. கண்டு கொள்ள அவைகளைப் பயன்படுத்தும்
வகையில் தான் வித்தியாசம். சூன்ய மூளையில், அழகற்று மிருகவேகத்தில் தாக்குவது போன்று நவநாகரிகம் , அவளிடம் தன் சக்தியைக் காட்டமுடியாது. எத்தனையோ தலைமுறையாகப் பாடுபட்டுக் காப்பாற்றி வரப்பட்ட , மிருதுவாக உறைந்த குடும்ப லஷியங்கள் உருக்கொண்டவள் போன்றவள் தான் அவள். வெற்று வெளியிலும், தாழ்ந்த இடத்திலும் பாய்வது போலவன்றித் தணிவு பெற்ற, அழகுபட, அமைதியுடன் தான் நாகரிகம் அவளிடம் இசைவு கொள்ளும். திடீரென்று தோன்றும் பச்சை எண்ணங்களையும், பழக்க வழக்கங்களையும் பதனிடாமல் ஏற்று வழங்குவது முடியுமோ குடும்பங்களினால்?
அவளைவிடப் புதுக்காலத்தின் முன்னேற்றத்தின் உயர் அம்சங்களை உணர்ந்தவர்கள் இல்லை. வெகு நாட்கள் முன்பே, வீட்டில் மணி அடிக்கும் கடியாரம், அவள் தூண்டுகோலின் பேரிலே வாங்கப்பட்டது. அதனால் அவளுக்குக் கொஞ்சமும் பிரயோஜனமில்லை . பகலில் முற்றத்தில் விழும் நிழல் தான் அவளுக்குக் கால அளவு. இரவிலோ வெனின், அவளுக்கு நக்ஷத்திரம் பார்க்கத்தெரியும். அருணோதயத்திற்கு இன்னும் எவ்வளவு நாழிகை இருக்கிறது என்று அவளால் தெரிந்து கொள்ள முடியும். வாங்கிய பின், அநேகர் மணி பார்க்க வருவதுண்டு. அதில் தான் அவளுக்கு மிகுந்த திருப்தி. சிறுவயதில், குடும்பத்தின் கௌரவ எண்ணங்களை, குழந்தைகளுக்குச் சொல்லுவாள். அதனால்..... குடும்பத்தில் பழைய நினைவுகள்... குத்துவிளக்கடியில் குழந்தைகளுக்குச் சொல்லும்போது... அறிவுக்கெட்டாது திகைப்பில் காலத்தில் மறைந்த பழைய பழைய கதைகள்.... அவளுடைய மாமிப் பாட்டி அப்படி இருந்தது.... பெரிய மாமனார் காசிக்கு ஓடிப்போனது... எவ்வளவு தூரம் தன் மதிப்பு, குடும்ப மதிப்பு, ஆரோக்கியமான போதனைகளை, குழந்தைகள் மனத்தில் பாலூட்டுவது போன்று, ஊட்டிவந்தாள்!....
சாயங்காலம் ஆகிவிட்டது. கொல்லைக் கதவுகளை பூட்டிக்கொண்டு வாயிற்பக்கம் வந்தார். அப்போது அவருடைய தூர பந்து ஒருவர், அவர் தாயார் இறந்த துக்கம் விசாரிக்க வந்தார். அவரோடு பேசும்போதே கிருஷ்ணய்யருக்கு துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது. வந்தவருக்கு இது வியப்பாகத்தான் இருந்தது. 'என்னடா கிருஷ்ணா! பச்சைக் குழந்தையைப் போல, அம்மாவை நினைத்துக்கொண்டு...! உன்னுடைய திடசித்தம் எல்லாம் எங்கே? என்றார் அவர்.
ஆனால் கிருஷ்ணய்யருக்கன்றோ, தன்னுடைய அவ்வளவு வெளியுலகப் பெருமைகளுக்கும் காரணம் மறைமுகமாக வீட்டினுள் இருந்தது, யார் என்று தெரியும்.
அவர் போனபின், என்ன நினைத்தென்ன என்று ஒரு பெருமூச்செறிந்தார் கிருஷ்ணய்யர். அவர் துக்கமெல்லாம், ஒரு குழந்தை போன்று, தன் தாயாரை இழத்தற்கன்று. மனது ஒரு நிதானமின்றி அலைமோதியது. அவருடைய குடும்பப் பொறுப்பைக் காப்பாற்றிப் பின்வருபவர்களிடம் ஒப்படைக்க, தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒரு உன்னத லக்ஷ்யம். குடும்பம் என்பது சமூகத்தின் எவ்வளவு அடிப்படையான அஸ்திவாரம் என்பது அவருக்குத் தெரியும். எவ்வளவு நாகரிக முற்போக்கு எண்ணங்களிலும் கட்டுக்கடங்கி உணரமுடியாது எட்டிச் செல்வது போன்ற குடும்பம் குடும்பவாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் தன் தாயாருடன் லயித்து இருந்தது என்பதை எண்ணித் துக்கமடைந்தார். உலகம் சீர்கெட்டுத் சிதைவு படுவதின் காரணம் குடும்ப வாழ்க்கையில் சமாதானமற்று இருப்பது தான் என்பதை ஸ்பஷ்டமாக அறிந்தார். குடும்பத்தினர் ஒருவரிடமும், அதன் பொறுப்பு அடைபட்டுக் கிடக்கவில்லை . ஒருவர் ஏற்கும்படியான அவ்வளவு லேசானதல்ல.. எல்லாரிடமும் அது இருப்பது முடியாது. அப்போது அது குடும்பப் பொறுப்பாகாது; சீர்கெட்ட தன் தலை ஆட்டம். பொறுப்பை வகிக்கும் அவர், பொறுப்பாளியின்றி, எல்லாம் தாயார் - தாயாரிடம் சொல்லி சொல்லுக் கேட்டுத்தான்- அவர் குடும்பத் தலைவர்! ஒரு விசித்திர யந்திரம்தான் குடும்பம் என்பது!........
மாலை நேரம் சிறிது சிறிதாக இருட்டிவிட்டது. கிருஷ்ணய்யர் வாய்க்கால் சென்று சந்தி ஜபம் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். திண்ணைச் சாய்மணையில், எதிர்த் தூணில் காலை உதைத்துக்கொண்டு, சாய்ந்து படுத்திருந்தார். வாய் ஏதோ மந்திர ஜபம் செய்து கொண்டிருந்தாலும், மனது என்னவெல்லாமோ புரியாத வகையில் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. தலைக்கு மேலே மாடத்தில், ஒரு சிறு விளக்கு , லக்ஷ்மிகளை வீசிப் பிரகாசித்தது. வெகு நேரம் அப்படியே சாய்ந்து கொண்டிருந்தார். உள்ளிருந்து வந்து தன் மனைவி விளக்கை எடுத்துச் சென்றதும் அவருக்குத் தெரியாது..... அவர் கடைசிக் குழந்தை, 'அப்பா நாழிகையாச்சு - சாப்பிடவா -' என்று கூப்பிட்டதால் திடுக்கிட்டு எழுந்தார். வீதியில் சென்று அங்கிருந்தே பெருமாளைத் தெரிசித்துவிட்டு கதவைத் தாளிட்டு உள்ளே சென்றார். மனத்தில் ஒரு பெரிய பளுத்தொல்லை நீங்கினதான ஒரு உணர்ச்சி.... பலங்கொண்டதான ஒரு எண்ணம். எதிர்கால வாழ்வு மிகவும் லேசாகத் தோன்றியது. ஒரு அளவற்ற ஆனந்தம்... புரியாத வகையில் அவர் மனது குடும்பம் ஒரு விசித்திர யந்திரம். பழுது பட்டுப்போன ஒரு பாகத்தினால் அது நிற்பதில்லை. அதற்குப் பிரதி மறு பாகம் தானாகவே உண்டாகிவிடும்...' என்று என்னவெல்லாமோ எண்ணியது.
பி.கு. If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it will deliver my blog-updates to your e-mail regularly.
If you are already a Follower of my blog , thanks for reading!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக