சனி, 7 ஆகஸ்ட், 2010

கொத்தமங்கலம் சுப்பு -1 : பல்கலைச் செல்வர்

பல்கலைச் செல்வர் - கொத்தமங்கலம் சுப்பு

கலைமாமணி விக்கிரமன்




"சுப்பு பிறவிக் கவிஞன். ரச பேதமும் ரசக் குறைவும் இல்லாத ஹாஸ்ய புருஷன். வாழ்க்கையை இன்பமும், ரசமும் ததும்ப சித்திரித்துக் காண்பிக்க வேண்டும் என்ற அவரோடு கூடப்பிறந்த ஆவல், அவரை இலக்கிய உலகத்திலிருந்து அறவே விலக்கிவிட முடியவில்லை. தான் வாழ்க்கையில் கண்ட காட்சிகளை அவ்வப்போது சிறுகதைச் சித்திரங்களாக வரைந்து வந்தார். இந்தச் சிறுகதைகளை விலைமதிக்க முடியாத மாணிக்கங்கள் என்று சொன்னாலும் என் ஆவல் தணியாது. நோபல் பரிசைப் போல் தமிழ்நாட்டில் பாரதியார் பெயரால் ஒரு பரிசு இருக்குமானால் அதைத் தயங்காமல் நான் சுப்புவுக்குக் கொடுப்பேன்'' என்று மூத்த எழுத்தாளர் அறிஞர் வ.ரா., கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "மஞ்சுவிரட்டு' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

""அவர் ஒரு கவிஞர், அவர் ஒரு கதாசிரியர், அவர் ஒரு இயக்குநர், அவர் ஒரு நடிகர்...அதற்கும் மேலாகச் சிறந்த மனிதர்'' என்று கவிஞர் வாலி தன் கவிமாலையில் கொத்தமங்கலம் சுப்புவைப் பாராட்டியுள்ளார்.

கொத்தமங்கலம் சுப்பு, மக்களிடையே புகழ் பெற்றதோ, நடிகர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் என்ற வகையில்தான்.

ஆவுடையார்கோயிலுக்கு அருகேயுள்ள கன்னரியேந்தல் என்ற சிற்றூரில், மகாலிங்கம்-கங்கம்மாள் தம்பதிக்கு 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சுப்பிரமணியன். சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்ட சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார்.

அத்தை மகளை மணந்து அவர்கள் வாழ்ந்த கொத்தமங்கலத்துக்கு வந்து, தனவணிகர் ஒருவர் வீட்டில் கணக்கு எழுதும் பணியில் அமர்ந்தார்.

பள்ளத்தூரில் நாடகக் கம்பெனி ஒன்றில் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பல்வேறு நாடகங்களில் நடித்து கதாநாயகனாகப் புகழ்பெற்ற கொத்தமங்கலம் சுப்பு, சீனுவின் பரிந்துரையால் சென்னைக்கு வந்தார். சிவனால் பாபநாசமும், ராமலிங்கம் பிள்ளையால் நாமக்கல்லும் புகழ்பெற்றது போல் சுப்புவால் "கொத்தமங்கலம்' பிரபலமானது.

சென்னையில் ஜெமினி நிறுவனம் அவர் ஆற்றலைக் கண்டுகொண்டது. தன் திறமையால் படிப்படியாகத் திரை உலகில் முன்னேறி பல துறைகளில் பிரபலமானார். செல்வமும் செல்வாக்கும் பெருகின. இயற்கையாகவே எழுத்துக் கலை அவருக்குக் கைவரப் பெற்றிருந்ததனால் காட்சிகளை அமைப்பதில் நயமிருக்கும். நகைச்சுவையும் அவருடனே ஒட்டியிருந்ததால், நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பதில் திறமை மிகுந்திருக்கும். கருத்தாழம் மிக்க காட்சிகளுக்கு வசனம் எழுதும்போது அவை நெஞ்சை அள்ளுவனவாக அமையும்.

அவர் திறமையை, கலைஞானத்தை உணர்ந்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், சுப்புவுக்கு வாய்ப்புகள் பல அளித்தார். ஜெமினி கதை இலாகாவில் முக்கிய பங்கு அவருக்குக் கிடைத்தது. "மிஸ் மாலினி', "தாசி அபரஞ்சி', "கண்ணம்மா என் காதலி', "வள்ளியின் செல்வன்' ஆகிய படங்களில் இயக்குநராகப் பணியாற்றினார்.

தேசப்பற்று மிக்க அவர் எப்போதும் கதரே அணிவார். காந்திமகான் மீது பக்தியும் மரியாதையும் கொண்டிருந்ததால், காந்திமகான் கதையை வில்லுப்பாட்டில் அமைத்தார். வில்லுப்பாட்டில் திறமைமிக்கவர் என்.எஸ்.கிருஷ்ணனும், சுப்பு ஆறுமுகமும். கொத்தமங்கலம் சுப்புவும் அந்த வரிசையில் சேர்ந்து புகழ் பெற்றவர்.

""சுப்புவின் "காந்திமகான் கதை' வில்லுப்பாட்டு தேசபக்தி உணர்வை நாட்டில் சிலமணி நேரங்களில் ஊட்டின'' என்று பிரபல தலைவர்களே ஒப்புக்கொள்வர்.

ஔவையார் கதை தமிழ்நாட்டு மக்களைக் கவர்ந்ததுபோல் வேறு எந்தக் கதையும் கவரவில்லை. எஸ்.எஸ்.வாசன், ஔவையாராக நடிக்க கே.பி.சுந்தராம்பாளை ஒப்பந்தம் செய்து கொண்டார். டைரக்ஷன் பொறுப்பை எஸ்.எஸ்.வாசன் ஏற்றிருந்தாலும் கொத்தமங்கலம் சுப்புவின் வசனங்களும், யோசனைகளும்தான் படம் மகத்தான வெற்றிபெறக் காரணமாக அமைந்தன. படம் நூறு நாள்களுக்கு மேல் தமிழ் நாடெங்கும் வெற்றி நடைபோட்டது. படத்தின் வெற்றிக்குக் காரணம் சுப்புவாக இருந்தாலும், தன்னை முன்னிலைப்படுத்தாமல் பத்திரிகையாளருக்கு அவர் அளித்த மிக அடக்கமான பேட்டி இன்றும் நினைவிருக்கிறது.

ஔவையார் திரைப்படக் கைவண்ணத்துக்குப் பிறகு சுப்புவின் எழுத்தாற்றல் "தில்லானா மோகனாம்பாள்' புதினத்தால் வெளிப்பட்டது. பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாரந்தோறும் அந்தத் தொடரைப் படித்து மகிழ்ந்தனர். கதைக்கு "கோபுலு'வின் சித்திரங்கள் மேலும் பெருமை சேர்ந்தன. தில்லானா மோகனாம்பாள் திரைக் காப்பியமாகவும் புகழ்பெற்றது.

தில்லானா மோகனாம்பாளுக்குப் பிறகு அவர் பல புதினங்களை எழுதினார். சமூகக் கதை எழுதுவதில் புகழ்பெற்ற சுப்பு, சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி எழுதியும் புகழ்பெற்றார். சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையரை மிகத் துணிவுடன் எதிர்த்த வீரர்களின் கதை தமிழ் நாடெங்கும் நிறைந்திருந்தது. ஆங்காங்கே கிராமங்களில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் வரலாறு மக்களிடையே பரவக்காரணம், மக்களுக்குப் புரியும் மொழியில் "கும்மி' மெட்டில் வீரர்கள் வரலாறு அமைத்ததுதான். அவற்றை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை. தமிழகத்தில் அப்பாடல்கள் பாடப்பட்டன. அவற்றுள் ஒன்று "கட்டபொம்முவின் கதை'.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பே அத்தகைய வீரனான கட்டபொம்மன் கதையை ஓலைச்சுவடியிலிருந்து எடுத்துத் தன் கை வண்ணத்துடன் வாரப் பதிப்பில் பாடல்களாக எழுதினார் கொத்தமங்கலம் சுப்பு. கொத்தமங்கலம் சுப்புவின் கைவண்ணத்துடன் கூடிய கட்டபொம்மன் கதையை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. மிகவும் பாராட்டினார். "வீரபாண்டிய கட்டபொம்மன்' என்று புத்தகம் எழுதி, கட்டபொம்மனை நாடறியச் செய்தார்.

சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து, சிறு கிராமத்திலிருந்து பெரிய நகரமான சென்னைக்கு வந்த சுப்புவின் வளர்ச்சி, அவருடைய உழைப்பு, திறமை, அணுகுமுறை, மனித நேயம், எழுத்தாற்றல் என்றும் தமிழ்மக்களால் மறக்க முடியாதவை. கொத்தமங்கலம் சுப்பு இளங் கவிஞர்களை உற்சாகமூட்டுவதுடன், அவர்கள் அழைக்கும் கவியரங்கங்களில் கலந்துகொண்டு பாராட்டுவார். கவிஞர்களை அழைத்து விருந்துபசாரம் செய்து ஊக்கமூட்டுவார்.

காந்திமகான் கதையை வில்லுப்பாட்டில் தயாரித்த சுப்பு, ராமாயணக் கதையையும் பாடி மகிழ்வித்தார். பாரதியார் கதையை "பாட்டிலே பாரதி' என்ற பெயரில் அரங்கேற்றினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இப்போது வழங்கப்படும் "கலைமாமணி' விருதுபோல், "கலாசிகாமணி' என்ற விருது பெற்றவர் சுப்பு.

சுப்பு எட்டாம் வகுப்புவரைதான் படித்தார். ஆனால், தன் குழந்தைகளைப் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். எட்டமுடியாத புகழை கலைத்துறையில் அடைந்தார். ரசிகமணி டி.கே.சி., சுப்புவின் கிராமிய மொழிப் பாடல்களை மிகவும் ரசித்தவர். "மண்ணாங்கட்டி கவிஞர்' என்ற பட்டமளித்து மகிழ்ந்தவர். பொறியியல், வேளாண்துறை மேதை ஜி.டி. நாயுடு, சுப்புவின் சிறந்த நண்பர். ஜி.டி.நாயுடுவின் புதிய புதிய கண்டுபிடிப்புகளை சுப்பு புகழ்வார்.

பன்னிரண்டு புத்திரச் செல்வங்களுக்கு (இருவர் மறைந்தனர்) தந்தையாக இருந்து அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை எல்லாம் பொறுப்புடன் செய்து அவர்கள் ஒவ்வொருவரையும் கலை உணர்வுடன் வளர்த்து ஆளாக்கினார் சுப்பு.

தனக்கு வாழ்வளித்த எஸ்.எஸ்.வாசனின் புகைப்படத்தை தன் வீட்டின் முகப்பில் பெரிய அளவில் அலங்கரிக்கச் செய்து நாள்தோறும் மரியாதை செலுத்துவாராம். கொத்தமங்கலம் சுப்புவின் பல்கலைத் திறமையை நாடறியச் செய்த மேதை எஸ்.எஸ்.வாசனின் "ஜெமினி மாளிகை' இன்று இல்லாவிட்டாலும், "கொத்தமங்கலம் ஹவுஸ்' என்ற பெயருடன் புதுப்பித்துக் கட்டிய சுப்புவின் இல்லம், வாசன் பெயரையும் பல்கலைச் செல்வர் சுப்புவின் திறமையையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

பத்மஸ்ரீ முதலிய உயர் விருதுகளைப் பெற்ற கொத்தமங்கலம் சுப்பு, 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி அமரரானார். அவரின் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதன் மூலம் அவ்வறிஞருக்கு நாம் மரியாதை செலுத்துவோம்.

[ நன்றி: தினமணி ]

திங்கள், 19 ஜூலை, 2010

'தேவன்': கண்ணன் கட்டுரை - 4

கண்ணன் கட்டுரை - 4

தேவன்

 ஒரு சின்னப் பையன் எழுதுவது போன்ற நடையில் பல அரிய விஷயங்களை  'சின்னக் கண்ணன்' என்ற புனைபெயரில் விகடனில் தேவன் எழுதி வந்தார். 'கண்ணன் கட்டுரை' என்ற தலைப்பில் வெளியான அவை 50-களில்  பலரைக் கவர்ந்தன. நூல் வடிவில் வெளியாகாத ‘தேவனின்’ கட்டுரைத் தொடர்களில் இது ஒரு மிகச் சிறந்த ஒன்று என்று நான் நினைக்கிறேன். கோபுலு அவர்களும் இதற்கு விசேஷமாகப் படங்கள் வரைந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

முதல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இங்கே :

கண்ணன் கட்டுரை


[ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்]


ஒரே ஒரு சின்ன ஈ ஒரு பெரிய ஓட்டல் மேஜை மேலே இப்டி சுத்தி சுத்தி பறந்துட்டு, கடைசியிலே ஒரு இடத்தைப் பொறுக்கி உட்கார்ந்துது. அங்கேருந்து நாலாப் புறமும் கண்ணோட்டம் விட்ட போது ஒரு மைசூர் பாக் விள்ளல் திருஷ்டிலே விழுந்தது. அதை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறப்போ, அங்கே காபி சாப்பிட்டிண்டிருந்தான் ஒருவன். அவன் கையிலே வைச்சிருந்த பேப்பரைச் சுருட்டி, 'டப்'னு ஒரு அடி போட்டானே பார்க்கலாம், குறிபார்த்து! சின்ன ஈ முதுகிலே 'பளாச்'சுனு விழுந்தது அது. ஒரு கலங்கு கலங்கி, இறக்கையை உதறிண்டு, காலை நீட்டி சரி பண்ணிண்டு சின்ன ஈ விட்டது சவாரி! மேஜைக்குக் கீழே ஓடி, மேல் மூச்சு வாங்க, தாத்தா ஈ பக்கமா நின்னு, "தாத்தா, தாத்தா! இன்னிக்கு நான் ஒரு கண்டத்திலே தப்பிச்சேன்!'' அப்படின்னுது.

தாத்தா ஈ எல்லாத்தையும் கவனிச்சுண்டுதானே இருந்தது? சும்மா சிரிச்சுட்டு, "போடா! முட்டாள் பையா! ஒரு கண்டமும் இல்லை! அவன் உன்னை அடிச்சது நேத்து நியூஸ் பேப்பராலே! நாலே நாலு காயிதம்தானேடா அதிலே! உம்! என்ன காயம் பட்டுடப் போறது! முன் காலத்திலே எப்படி இருந்தது பேப்பர்னு கேளு, சொல்றேன்! 16, 24 பக்கம். அதனாலே ஒரு அடி வாங்கியிருந்தயானால்...'' என்று ஆரம்பிச்சுது.

அதுக்குள்ளே இன்னொரு பெரிய ஈ, "அதைச் சொல்றிங்களே, தாத்தா! அடிச்சானே, அந்த ஆளுக்கு உடம்பிலே திராணி இருக்குதா, பார்த்தியா? ஆறு அவுன்ஸ் ரேஷனிலே என்ன பண் ணிட முடியும் அவனாலே! இங்கே வந்து குடிக்கிறதோ காபிங்கிற வெறும் தண்ணி''னு சொல்லிச் சிரிச்சுது.

இதுக்குள்ளே சின்ன ஈ ஒடம்பைச் சரி பண்ணிண்டு, "கெடக்கிறது, தாத்தா! இதுக்கெல்லாம் பயந்து சாவலாமா? உசிரை லெச்சியம் பண்ணாம கௌம்பிட வேண்டியதுதான்''னுது.

தாத்தா ஈ வழுக்கைத் தலையைத் தடவிக்கொண்டு, "போடா பைத்தாரப் பையா! உசிரை எதுக்கடா லச்சியம் பண்ணப்படாது? அதோ கொண்டு வரானே, அந்தக் கோதுமை அல்வாவுக்காகவாடா? போடா! முன் காலம் மாதிரி வெண் பொங்கல், சேமியா-பேணி, பால் போளி என்று இருந்தால், உசிரு போனாலும் உட்கார்ந்து சாப்டோம் என்று இருக்கும். இதென்னடா, சோளத்தைப் போட்டு ஒபயோக மத்த பண்டங்கள்...''

சின்ன ஈ நேரே ஓடிப் போய், ஸர்வர் கையிலிருந்த சப்பாத்தியிலே உட்கார்ந்துண்டுது. சூடு பொறுக்காமல் எழுந்திருக்கிறதற்குள்ளே, 'டணார்'னு மண்டையிலே விழுந் தது ஒரு அடி! ஸர்வர் போட்டு விட்டான். சின்ன ஈக்கு ஸ்மரணையே தப்பிப் போச்சு! ஸர்வர் இப்போ அதைத் தட்டினது நியூஸ் பேப்பராலே இல்லை; இன்னொரு சப்பாத்தியாலேயாக்கும்! அதுதான் அப்படிக் கல்லு மாதிரி அதன் தலை மேலே விழுந்திருக்கு. ஸர்வர் ஒண்ணையும் கவனிக்கவே இல்லை. அவன் சப்பாத்தியைக் கொண்டு போய் மேஜை மேலே வச்சுட்டான்.

இதிலேருந்து நாம் தெரிஞ்சுக்கற நீதி என்ன தெரியுமா? ஆகாயத்திலே பறக்கிற இரண்டு ஈக்களைவிட, ஆகாரத்திலே அகப்பட்டிருக்கும் ஒரு ஈ எவ்வளவோ மேலானது!

[நன்றி: ஆனந்த விகடன்]

தொடர்புள்ள சில பதிவுகள்:

கண்ணன் கட்டுரை -1 

கண்ணன் கட்டுரை -2 

கண்ணன் கட்டுரை -3

தேவன்: படைப்புகள்

தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

சனி, 26 ஜூன், 2010

'தேவன்':கண்ணன் கட்டுரை-3

நீங்க கதை எழுதப் போறெளா..?

தேவன்

(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)

(9.1.55)

நாமும் எழுத்தாளனாகணும்கிற ஆசை அநேகம் பேருக்கு இருக்கு. எங்கப்பாவோடே சிநேகிதாள், மச்சினன்கள், மருமான்கள், ஒண்ணு விட்ட தம்பிகள் எல்லாரும், ''ஒரு சான்ஸ் கொடுங்கோ! கொளுத்திக் காட்டுறோம். ஊதிக் காட்டுறோம்''னு அடிக்கடி கேக்கறா. (பத்திரிகை வேலைன்னா சிகரெட்டா... கொளுத்தறதுக்கும் ஊதறதுக்கும்!) அப்பா என்னைக் கூப்பிட்டு, ''எலே! உங்கம்மா தினம் தவறாமே வெண்டைக்காய் கறி பண்றதனாலே எனக்குப் பயித்தியம் பிடிக்காதுடா! இந்தப் பசங்கள் பிடுங்கலிலேயே மூளை கலங்கிடும்டா!'' அப்படீன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டுண்டார்.

எதுக்குச் சொல்ல வந்தேன்னா... எதை எழுதினாலும் ஜனங்க வாசிப்பானு தப்பா நினைக்கிறா. வர கடிதாசுகளிலே கடோசி வரியைத்தான் எங்கப்பா படிப்பார். ஒடனே, ''எங்கிட்டே பணம் இருக்குன்னு தவறா நினைச்சுண்டிருக்கா இவா''ன்னு கீழே போட்டுடுவார். ஆபீஸ் டயத்திலே இருபத்தொண்ணாம் நம்பர் பஸ்ஸிலே கூட ஏறிப்பிடலாம்; அதைவிடக் கஷ்டம் பத்திரிகையிலே எழுத எடம் கிடைக்கிற காரியம்.

எழுதற விஷயம் ஜனங்களுக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ, ஒதவி ஆசிரியருக்குப் பிடிச்சிருக் கணும். காலத்துக்கு ஏத்த மாதிரி எழுதினாக் கூடப் பிரயோசனம் இல்லை. இப்போ நான் நம்ம 'தண்டு' கதையைச் சொன்னால் எல்லாம் புரிஞ்சுடும்.

அவருக்குத் தபால்காரா மேலே ரொம்ப எரிச்சல். பின்னே, ஓயாம அவர் கதைகளைத் திருப்பிக் கொண்டு வந்தால்? கடோசியா அவர் ஒரு மிக மிக நல்ல கதை எழுதி, நேரே ஒதவி ஆசிரியரை பேட்டி கண்டு, ''இப்போ இதை வாசிக்கிறீரா? இங்கேயே தற்கொலை பண்ணிக்கட்டுமா?'' அப்படின்னார். அந்த ஒதவி ஆசிரியர் புன்னகை செய்து, ''வாசிக்கிறேன். எதற்கும் நீர் போய் நம்ம 'கான்ட்டீன்'லே டிபன் பண்ணிவிட்டு வாரும், பார்க்கலாம்!''னார்.

'தண்டு' திரும்பி வந்தபோது, ஒதவி ஆசிரியர் உலாத்திண்டிருந்தார். கதையை அவசரமா கூடையிலேருந்து எடுத்து, ''பேஷா இருக்கிறது கதை!'' அப்படீன்னார். 'தண்டு' வயிறெல்லாம் 'கபகப'ன் னுண்டிருந்த 'வெஜிடபிள் குருமா' கூட 'ஜில்'லுனு போச்சு. 32 பல்லையும் காட்டி, ''அப்படியா! அது எப்போ பிரசுரமாகும்?''னு கேட்டார்.


''அதுவா! ஜனங்கள் இன்னும் இதைப் படிக்கத் தயாராகல்லை. 20 வருஷம் கழிச்சுப் போட்டால் நன்னாயிருக்கும்''னார் அந்த ஒதவி ஆசிரியர்.

'தண்டு'வோட மனசு பூஷணிக்காய் மாதிரி உடைஞ்சு போச்சு. அந்த ஏக்கத்தோடேயே திரும்பி வரபோது, மூணாம் நம்பர் பஸ்ஸிலே கதையையும் காணடிச்சுட்டு, எழுதறதையும் நிறுத்தி விட்டார்; கிராமத்திலே போய் பயிர்ச் செலவு பண்ணிண்டிருந்தார்.

இருபது வருஷத்துக்கு அப்றம்தான் 'தண்டு' பட்டணத்துக்கு வந்தார். முப்பத்தி மூணாம் நம்பர் பஸ்லே எடமும் கெடைச்சுது. பழைய நினைவெல்லாம், பொங்கல் இனாம் கேழ்க்க வரவங்க மாதிரி 'க்யூ' வரிசைலே கூச்சல் போட்டுது. குனிஞ்சு பார்த்தால், ஸீட் அடியிலே ஒரு காகிதக் கட்டு சிக்கிக் கிடந்தது. எடுத்துப் பிரிச்சுப் படிச்சால், அவர் முன்......னே எழுதின கதை! 20 வருஷமா நம்ம சர்க்கார், பஸ்களை அப்படியே நலுங்காமே வச்சிருந்து நம்பரை மட்டும் மாத்தி ஓட்டறா!

'ஆஹா'ன்னார் நம்ம 'தண்டு'. கதையோடே ஓடினார். ஒதவி ஆசிரியர் அதே அறையிலே அதே மாதிரி உலாத்திண்டிருந்தார். முன் போலவே கதையைப் படிச்சுட்டு, ''பேஷாயிருக்கிறது கதை!'' அப்படீன்னார். 'தண்டு' தன்னோட 14 பல்லையும் காட்டி, ''அப்படியா? சந்தோஷம்! எப்போ இது பிரசுரமாகும்?''னு கேட்டார்.

ஒதவி ஆசிரியர் வழுக்கையைத் தடவிண்டே, ''பிரசுரம் செய்ய றதா? இந்தக் காலத்து ஜனங்க இதையெல்லாம் வாசிக்கமாட்டா ஓய்! இருபது வருஷம் முந்தி கொணர்ந்திருந்தீர்னா போட்டிருப்பேன்!'' அப்படீன்னார்.

''உமக்கென்ன வயசு?'' னு கேட்டார் 'தண்டு' வெடுக்குனு.

''ஏன்..? அறுபதாகிறது!''

'தண்டு' ஒரு நாற்காலியை அலாக்காய்த் தூக்கி, ''ஏனா? அறுபது வருஷத்துக்கு முந்தி நீர் பொறந்திருக்கவே கூடாது!''ன்னு சொல்றப்போ, நல்லவேளையா ஆபீஸ் பையன் ஓடி வந்து நாற்காலியைக் காப்பாத்தினான்.

எதுக்குச் சொல்ல வந்தேன்னா, எழுத்தாளனைக் கோபமூட்டப் படாது; எக்கச்சக்கமா ஆயிடும்! என்னைக் கேட்டா, பசிக்கிறபோது சாப்பிட்டுடணும்; தூக்கம் வர போது தூங்கிடணும்; எழுத வர போது எழுதிடணும். ஒலகம் முன்னேற, அது ஒண்ணுதான் வழி!

தெரியாமலா பெரியவா சொன்னா, வேலை செய்றவனுக்கு வேலையைக் கொடு; வேலை செய்யாதவனுக்குச் சம்பளத்தைக் கொடு அப்படின்னு?

[நன்றி: ஆனந்த விகடன் ]

தொடர்புள்ள சில பதிவுகள்:

கண்ணன் கட்டுரை - 1

கண்ணன் கட்டுரை - 2

கண்ணன் கட்டுரை - 4

தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

தேவன் படைப்புகள்

வியாழன், 24 ஜூன், 2010

'தேவன்':கண்ணன் கட்டுரை-2

மக்காவது... சுக்காவது..!
தேவன்

(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)

(24.2.52)




'இந்தக் காலத்திலே நல்ல வேலையைக் காண்றதுன்னா சிவராத்திரியன்னிக்குச் சந்திரனைத் தேடறாப்லே'ன்னு பாட்டி சொன்னா. அப்பாவைக் கேட்டா, கடையிலே காப்பிக் கொட்டை வாங்கற மாதிரின்னு சொல்றார். முன் காலத்திலே, உத்தியோகம் வேணும்னா பெரிய மனுஷா சிபார்சு இருந்தாப் போறுமாம்; இந்தக் காலத்திலே அதுக்குப் பெரிய மனுஷாளாவே இருக்க வேண்டியிருக்காம்..!

எத்தனையோ பேர் வேலையில்லாத் திண்டாட்டம் போகணும்னு ஒரே வேலையாச் சொல்லிண்டிருக்கா. வேலை கெடைக்கிற முந்தி, எதுவானாலும் போறும்கறா; அது கெடைச்ச பேரோ, அது நன்னா இல்லையேனு மொனகிண்டிருக்கா!

இப்படித்தான் ஒருத்தன் எதானும் ஒரு வேலை கேட்டுண்டு வந்தானாம். மானேஜர் எரக்கப்பட்டு ஆபீஸ் பையனா வெச்சுண்டாராம். அப்புறம் அவன் ஆபீஸ் ரகஸ்யம் எல்லாம் தெரிஞ்சுண்டு மேலே மேலே வந்து மானேஜர் எடத்தையே புடிச்சுண்டானாம். ''நான் ஒரு முட்டாள்''னு மானேஜர் தலேல அடிச்சுண்டாராம். ஒடனே அவன், ''முட்டாள்களுக்கு இந்த ஆபீஸ்லே எடம் இல்லே''னு விரட்டிட்டானாம்.




அப்பாகிட்ட ஒருத்தர் வேலைக்கு, ஒரு பெரிய மனுஷர்கிட்டே சிபார்சுக் கடுதாசி வாங்கிண்டு வந்தார். அப்பாவாலே வேலை பண்ணி வைக்க முடியல்லே. ஆனா, அந்த மனுஷர் கொஞ்ச நாளிலே ரொம்ப சிநேகிதராப் போயிட்டார். ஒரு நாளைக்கு அவர் திடீர்னு வந்து, ''ஒங்களாலே ஒரு ஒபகாரம் ஆகணும்! நீங்க சொன்னா நடந்துடும்''னார்.

''சொல்லுங்கோ!''ன்னார் அப்பா.

''அந்தப் பெரிய மனுஷரே ஒரு ஆபீஸ் தொடங்கியிருக்கார். நிறையப் பேருக்கு அதிலே வேலை கொடுக்கிறார். உங்க கையாலே ஒரு சிபார்சு லெட்டர் கொடுத்தா, எனக்கும் ஒண்ணு கட்டாயம் கொடுத்துடுவார்...''

அப்பா பிரமிச்சுப் போயிட்டார். ''நீங்களே எனக்கு அவர்கிட்டத்தானே லெட்டர் வாங்கிண்டு வந்தேள்?'' அப்படீன்னார்.

''ஆமா! இப்போ அவரை விட நீங்க தெரிஞ்சவரா போயிட்டேளே!''

அப்பாவுக்கு ரெண்டு பயம்; அந்தப் பெரிய மனுஷரை நன்னாத் தெரியாதே என்கிறது ஒண்ணு; தன் லெட்டரை மதிக்கிற அளவு தான் பெரிய மனுஷர் இல்லையே என்கிறது ரெண்டு. நம்ம சிபார்சுக்கு மதிப்பு வரணும்னா எப்படி இருக்கணும்னு ஒரு கதை கூடச் சொன்னார் அப்பா...
ஒரு பெரிய ஆபீஸ்லே ஒரு வேலை காலியாச்சாம். இந்தச் சமாசாரம் செவிடாள் உள்பட எல்லார் காதிலேயும் விழுந்துட்டுதாம். ஒடனே அந்த ஆபீஸை நோக்கி, கிரிக்கெட் மாச்சுக்குப் போறாப்லே பட்டதாரிகள் போனாங்களாம்.

மானேஜர் வெளிலே வந்து, பழக் கடையிலே ஆரஞ்சுப் பழம் பொறுக்கறாப்லே மூணு பேரை நிறுத்தி வெச்சுண்டு, பாக்கிப் பேரை ''போங்கடா வேலையத்தவங்களா!''னு வெரட்டிட்டாராம்.


அந்த மூணு பேர்லே முதல் ஆளைப் பார்த்து, ஒரு தியேட்டர் பேரைச் சொல்லி, ''ஓய்..! நீர் போய் நமக்கு அந்தத் தியேட்டரிலே இன்னிக்கு ஒரு டிக்கெட் கொண்டு வாரும்! உம்ம சாமர்த்தியத்தைப் பார்க்கிறேன்''னார். அவன் அசந்து போனான். அன்னிக்குதான் அதிலே ஒரு புதுப்படம் ஆரம்பமாம்!

இரண்டாவது ஆளைப் பார்த்து ''நீர் ட்ராம்லே பாரீஸ் கார்னருக்குப் போய் பஸ்ஸிலே திரும்பி வந்துடணும். பார்க்கலாம்!''னார். அவன் தலையைப் புடிச்சுண்டான்; அது அப்படிச் சுத்தித்து.

மூணாவது ஆள் கையிலே ஒரு மூணு ஸ்தானக் கூட்டல் கணக்கைக் கொடுத்து, ''இதைப் போட்டு வையும், பார்க்கலாம்''னார்.

சரியா ஆறு மணி அடிச்சது. மானேஜர் கார்யதரிசியைக் கூப்பிட்டு, ''அந்தப் பசங்கள் வந்தாங்களா?"ன்னு கேட்டார்.

''ஓ! மொதல் பேர்வழி எப்படியோ டிக்கெட் கொண்டு வந்துட்டான்; ரெண்டாவது ஆள் ட்ராம்லே போய் பஸ்ஸிலே வந்துட்டான். ரொம்ப சாமர்த்தியசாலிகள் ஸார், ரெண்டு பேரும்!''

''உம்ம்.. அப்றம்..?''

''மூணாவது ஆள் கணக்கைப் பத்துத் தரம் போட்டிருக்கான். பத்து விடை வந்தது. அத்தனையும் தப்பு!''

''உம்... சரி! மூணாவது ஆளை வேலைக்கு வெச்சுண்டு, பாக்கி ரெண்டு பேரையும் வெளியிலே வெரட்டு! நமக்கு வாண்டாம்!''

''ஸார், ஸார்..! அந்த ஆள் ரொம்ப மக்காச்சே!''

''மக்கானால் என்ன ஓய்..! அவன் நம்ம ஊர் கலெக்டர் மருமான் ஆச்சே, அது போறாதா?'' அப்டீன்னாரே, பார்க்கலாம் அந்த மானேஜர்!

நீங்க கதை எழுதப் போறெளா..?

[நன்றி: ஆனந்த விகடன்]

தொடர்புள்ள சில பதிவுகள்:

கண்ணன் கட்டுரை -1

கண்ணன் கட்டுரை -3

கண்ணன் கட்டுரை - 4

தேவன்: படைப்புகள்

தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

திங்கள், 21 ஜூன், 2010

'தேவன்’:கண்ணன் கட்டுரை -1

அவனவன் வேலையை...
தேவன்


ஒரு சின்னப் பையன் எழுதுவது போன்ற நடையில் பல அரிய விஷயங்களை 'சின்னக் கண்ணன்' என்ற புனைபெயரில் விகடனில் தேவன் எழுதி வந்தார். 'கண்ணன் கட்டுரை' என்ற தலைப்பில் வெளியான அவை 50-களில் பலரைக் கவர்ந்தன. நூல் வடிவில் வெளியாகாத ‘தேவனின்’ கட்டுரைத் தொடர்களில் இது ஒரு மிகச் சிறந்த ஒன்று என்று நான் நினைக்கிறேன். கோபுலு அவர்களும் இதற்கு விசேஷமாகப் படங்கள் வரைந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
======

(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)
(17.2.52)
எங்க பள்ளிக்கூடத்து வாத்தியார் பெரம்பை ஆட்டி, ''அவனவன் வேலையை அவனவன் செய்யுங்களேண்டா! உருப்படறதுக்கு வழி பிறக்கும்''னு அடிக்கடி கூச்சல் போடறார். நாலு பேர் கவனிக்கணும்னா இவர் யோசனை பலிக்காது! பள்ளிக்கூடத்துப் பசங்களானாலும் சரி, பார்லிமென்ட்லே ஒக்கார்ர மந்திரியானாலும் சரி... பேர் எடுக்கணும்னா பிறத்தியான் கார்யத்தைச் செய்யணும். அப்பத்தான் பத்ரிகேலே அவா பேர் பெரிசா வரும்.

இல்லாட்டா, கொல்ருல் வெச்சுண்டு மந்திரிகள் எதுக்காக அஸ்திவாரக் கல் நடறா? கொத்து மேஸ்திரியைவிட மந்திரி நன்னாக் கட்டி விடுவாரோ? பெரிய இஞ்சினீர், நாடகத்திலே நடிச்சுட்டு எத்தனை புகழ் வாங்கி விடறார்! அப்புறம், ஒரு நெஜ வக்கீல் சங்கீதக் கச்சேரி பண்ணிட்டு எல்லார்கிட்டேயும் ஸர்ட்டிபிகேட் வாங்கிடறார். பசங்க மாத்திரம் அவனவன் பாடத்தைப் படிச்சுண்டு இருந்துட்டால் யார் கவனிக்கப் போறா? பக்கத்துப் பையன்கள்கிட்டே பேசினாலும் வாத்தியார் கவனிச்சு, முதுகிலே ரெண்டு அறையாவது வைப்பார்!

எதுக்குச் சொல்ல வந்தேன்னா, ஒலகம் அப்படி ஆயிடுத்து. நாய் மனுஷனைக் கடிச்சா, அதைக் கேட்கிறவா இல்லை; மனுஷன் நாயைக் கடிச்சுட்டா, விழுந்து விழுந்து பார்க்கறா. பத்திரிகையிலே எழுதிப்பிடறா. ஆகையினாலே, பட்டணத்திலே அவனவன் வேலையைச் செய்றவனைக் காண்றது, பலசரக்குக் கடையிலே காப்பிக் கொட்டையைக் காண்ற மாதிரி அரிதா ஆயிப் போச்சு! கேளுங்கோ இந்தக் கதையை!

முந்தா நாள் தேனாம்பேட்டை யிலே யாரோ ஒருத்தர் வீட்டுக் கொழாயிலே ஜலம் வரதா ஒருத்தன் சொன்னான்னு ஜனங்கள் திரள் திரளா அதை வேடிக்கை பார்க்கப் போனா. 'பொழலேரியிலேயே தண்ணியில்லாத போது, கொழாயிலே வருமா?'னு எங்கப்பா மாத்திரம் போகல்லே. நானும் மாமாவும் மாத்திரம் போனோம்.

அந்தத் தேனாம்பேட்டை வீட்டுக்காரர் எங்களையெல்லாம் பார்த்து, ''யாரோ வெஷமக்காரன் பொய் வதந்தி கிளப்பியிருக்கான். ஐயோ பாவம்! இவ்வளவு தூரம் நடந்து வந்தேளே!''ன்னு வருத்தப் பட்டு, கண்ணாலே ஜலம் விட்டார். அப்றம் அவரை விசாரிச்சதிலே, அவரோட ஆறு பிள்ளைகளும் பத்திரிகைக்கு எழுதி பிரபலமான பேர்னு பெருமையாச் சொல்லி, அதை விவரமாவும் மாமாவிடம் சொன்னார்.

''மூத்தவன் இப்போ டெல்லியிலே அரசியல்லே இருக்கான்; ரொம்ப கெட்டிக்காரன். அவன் கையைச் சொடக்கினான்னா மந்திரி சபையே கலைஞ்சுடும்'' னார். ''அடிக்கடி சொடக்கு வாரோ?''னு கேட்காம, ''எழுத்தாளர்னேளே!''ன்னு கேட்டேன்.

''ஓ! அவன் அரசியல் கட்டுரைகள் அடிக்கடி பத்திரிகையிலே பிரபலமா வருதே! இரண்டாவது பையன் கிரிக்கெட்லே யமனே தான்! அவன் 'ஸ்போர்ட்ஸ்' கட்டுரைகள் வாராவாரம் கொடுத் துண்டு வரான், ஒரு தினசரிலே!''

''பேஷ், பேஷ்!''

''மூன்றாவது பெண்; புக்காத்திலே இருக்காள். வாரப் பத்திரிகையிலே 'சித்தியின் சிங்காரம்'னு ஸ்திரீகள் பகுதி, அவள் பேரிலே தவறாமே வரது...''

''சபாஷ்!''

''நாலாவது பயல் கார்ப்பரேஷன் ஜனன - மரண ஆபீஸ்லே குமாஸ்தா. சக்கைப் போடு போட றான். ஒன்பது பத்திரிகைகளுக்கு அவன் வார பலன் பகுதி எழுதறான். நல்ல கற்பனை போங்கோ! ஒரு பத்திரிகையிலே வராப்லே இன்னொண்ணுக்குக் கொடுக்க மாட்டான். புதுசு புதுசா இருக்கும்.''





''பலே, பலே! அப்றம்..?''

''அஞ்சாவது பையன் நடிகனா இருக்கான். போன வாரம் கூட அவன் கட்டுரை 'சோக நடிப்பைச் சிரிக்காமல் செய்ய வேண்டுமா?'ன்னு பார்த்திருக்கலாமே!''

''ஆறாவது பையனும்...''

''இல்லை; பெண் அவள். அவளுக்கு ஏழு குழந்தைகள். இதோடே அவள் 'சுக வாழ்வு'ன்னு வைத்தியப் பகுதி ஒண்ணு விடாமே...''




மாமா ரொம்பச் சந்தோஷப்பட்டுண்டு, ''போறது! உங்க பசங்க அத்தனைபேருமே பத்திரிகை மூலம் பிரபலமாயிருக்கா!''ன் னார்.

அவர், ''இன்னொரு பய இருக்கான். அவன்தான் பிரயோசனமில்லே''னு சொன்னார். அப்போ அவர் மொகம் அப்பா 'மார்க்கெட்' லேருந்து வாங்கிண்டு வர கறிகாய்கள் மாதிரி ஒரேமிக்க வாடி வதங்கிப் போயிருந்தது.

''ஏன் ஸார்! அவன் என்ன பண்ணிண்டிருக்கான்?''

''அவனைக் கவனிக்கற பேர் இல்லை ஸார்! ஒரு பத்திரிகையிலே உதவி ஆசிரியரா இருக்கான். அவன் வேலையைச் செஞ்சுண்டு வரான். அவனாலே ஒரே ஒரு ஒபயோகம்... அவன் அண்ணன் - அக்காமார்களுக்குத் தவறாமே கட்டுரைகள் எழுதித் தந்துடறான். வேற ஒரு ப்ரயோஜனமுமில்லை, ஸார்!'' அப்படீன்னார் அவர்.

ஆகையாலே, இந்தக் காலத்திலே அவன் அவன் தொழிலைச் செஞ்சு பிரபலமாகி விடறது என்கிறது மட்டும் கிடையாது! அப்படி ஆயிடுத்து ஒலகம்!

[நன்றி: ஆனந்த விகடன்; ஓவியம் :கோபுலு ]


தொடர்புள்ள சில பதிவுகள் :

கண்ணன் கட்டுரை -2

கண்ணன் கட்டுரை -3

கண்ணன் கட்டுரை -4

தேவன்: படைப்புகள்


தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு