வியாழன், 22 நவம்பர், 2012

லா.ச.ராமாமிருதம் -1: சிந்தா நதி - 1

17. மணிக்கொடி சதஸ் - 1
லா.ச.ரா


என்னை மிகவும் கவர்ந்த பல எழுத்தாளர்களில் லா.ச.ராமாமிருதம் ஒருவர். அவருடைய சுயசரித்திர நினைவுகள் ‘சிந்தா நதி’ என்ற பெயரில் தினமணி கதிரில் 1985-இல் ஒரு தொடராக வந்து என்னை உலுக்கியது. அதை 86-இல் நூலாக வானதி பதிப்பகம் வெளியிட்டது. அந்த நூல்  1989-இல் சாஹித்ய அகாதமியின் பரிசு பெற்றது.

’சல சல’ என்று தலைப்பிட்ட நூல்முன்னுரையில் லா.ச.ரா எப்படி இந்தத் தொடர் எழுந்தது என்று விளக்குகிறார். 1984-இன் கடைசியில் ‘தினமணி கதிரின்’ ஆசிரியர் ( கி.கஸ்தூரிரங்கன் ?), வாராவாரம் இரண்டு பக்கங்கள் அவருக்கு ஒதுக்குவதாய்ச் சொல்கிறார். எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்கிறார். ஒரு சிறுகதைக்கே சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளும் லா.ச.ரா எப்படி வாரா வாரம் ‘கதிரின்’ பசிக்குத் தீனி போட முடியும் என்று வியக்கிறார். கடைசியில், வாசகர்களின் அமோகமான ஆதரவே ‘சிந்தா நதி’ வற்றாமல் ஒரு வருடம் ஓடியதற்குக் காரணம் என்கிறார்.

அதிலிருந்து சில அத்தியாயங்களை ( உமாபதியின் அழகான ஓவியத்துடன்) இங்கிடுகிறேன். மூல ஓவியங்களுடன் இத்தொடர் அச்சில் வந்ததாகத் தெரியவில்லை.   ( நூலில் சில மாற்றங்கள் இருக்கலாம்; உதாரணமாக, ‘கதிரில்’ வரும்போது தலைப்புகள் இருக்கவில்லை. இவற்றைக் கவனிக்கும் பொறுப்பை லா.ச.ரா.வின் ஒரு தீவிர ரசிகரிடம்  விட்டுவிடுகிறேன்.)

இனி லா.ச.ரா.வே உங்களுடன் பேசட்டும்!

தி.ஜ.ர, சிட்டி, சி.சு. செல்லப்பா, ந.பிச்சமூர்த்தி , கு.ப.ரா.,க.நா.சு போன்ற பல இலக்கிய முன்னோடிகள் இந்த ‘நினைவலையில்’  தலைகாட்டுகிறார்கள். ( இதன் தொடர்ச்சியாக இன்னொரு கட்டுரையும் பின்பு எழுதினார் லா.ச.ரா; அதைப் பின்னர் இடுகிறேன்.)

இது ‘சிந்தா நதி’ யின் 17-ஆம் அத்தியாயம்.




=======
நாற்பத்து ஐந்து, நாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன் கூடவே இருக்கலாமோ? ஆனால் ஐம்பது ஆகவில்லை.

உங்களை மெரினாவுக்கு அழைத்துச் செல்கிறேன்.

சொல்லத் தேவையில்லையானாலும், கண்ணகி சிலை இல்லை.

ஸ்ப்- வே இல்லை. மூர்மார்க்கெட் பின்னால் வந்த பர்மா பஜார் போல் எல்லாப் பொருள்களும் வாங்கக்கூடிய சந்தையாக மெரினா மாறவில்லை. இத்தனை ஜனமும் இல்லை.

மாலை வேளை, வானொலியின் ஒலி பெருக்கிகளை மாட்டியாகிவிட்டது. அங்கேயே சுட்டு அப்பவே விற்கும் பஜ்ஜியின் எண்ணெய்ப் (எத்தனை நாள் Carry overஓ?) புகை சூழவில்லை. நிச்சயமாக இப்பொக் காட்டிலும் மெரினா ஆசாரமாகவும், சுகாதாரமாகவும், கெளரவமாகவும், காற்று வாங்கும் ஒரே நோக்கத்துடனும் திகழ்ந்தது. பூக்கள் உதிர்ந்தாற்போல், இதழ்கள் சிதறினாற் போல், எட்ட எட்ட சின்னச் சின்னக் குடும்பங்கள். நண்பர்களின் ஜமா. அமைதி நிலவுகிறது.

இதோ மணலில், வடமேற்கில் ப்ரஸிடென்ஸி கல்லூரி மணிக் கோபுரத்துக்கு இலக்காக அக்வேரியம் பக்கமாக என்னோடு வாருங்கள். ஆ, அதோ இருக்கிறார்களே, ஏழெட்டுப் பேர் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உஷ்-மணிக்கொடி சதஸ் கூடியிருக்கிறது. அதன் நடு நாயகமாக- அப்படியென்றால் அவர் நடுவில் உட்கார்ந்திருக்கவில்லை. எல்லாருமே சப்தரிஷி மண்டலம் போல் வரிசை இல்லாமல்தான் அமர்ந்திருப்பார்கள். நாயகத் தன்மையை அவருடைய தோற்றம் தந்தது.

அந்நாளிலேயே அவரைத் தென்னாட்டுத் தாகூர் என்று அந்த வட்டம் அழைக்கும். அந்த ஒப்பிடலுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தார். நடு வகிடிலிருந்து இருமருங்கிலும் கறும் பட்டுக் குஞ்சலங்கள் போலும் கேசச் சுருள்கள் செவியோரம் தோள் மேல் ஆடின. கறுகறுதாடி மெலிந்த தவ மேனி. ஆனால் அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் மெலிந்த உடல்தான். சிதம்பர சுப்ரமணியனைத் தவிர, அவர் பூசினாற் போல், இரட்டை நாடி. க.நா.சு, சிட்டி சாதாரண உடல் வாகு.

ந. பிச்சமூர்த்தியின் அழகுடன் சேர்ந்த அவருடைய தனித்த அம்சம் அவருடைய விழிகள். ஊடுருவிய தீக்ஷண்யமான பார்வை. அதன் அற்புதக்ரணத் தன்மை அவருக்குக் கடைசிவரை இருந்தது. உயரத்தில் சேர்த்தி அல்ல. அவரிடம் மற்றவர்கள் காட்டின மரியாதையும், அவர் பேச்சுக்குச் செவி சாய்த்த தனிக் கவனமும், என்றும் சபாநாயகர் அவர்தான் என்பதை நிதர்சனமாக்கியது.

எத்தனைக்கெத்தனை பிச்சமூர்த்தி ஒரு பர்ஸனாலிட்டியாகப் பிதுங்கினாரோ அத்தனைக்கத்தனை அவர் எதிரே உட்கார்ந்திருந்த

கு. ப. ரா. தான் இருக்குமிடம் தெரியாமலிருப்பதே கவனமாயிருந்தார் எனத் தோன்றிற்று. பிச்சமூர்த்தியைக் காட்டிலும் குட்டை. அவருடைய கனத்த மூக்குக் கண்ணாடி இல்லாவிட்டால் அவர் பாடு திண்டாட்டம்தான். பேசும்போது அவர் குரல் அவருக்குக் கேட்டதா என்பது என் சந்தேகம்.

பிச்சமூர்த்தியும், கு.ப.ரா.வும் எழுத்தில் கையாள எடுத்துக்கொண்ட விஷயம், பாணி தனித்தனி, ஆனால் ஏன் இவர்களைச் சிறுகதை இரட்டையர்கள் என்று குறிப்பிட்டார்கள்- எனக்குப் புரியவில்லை.

புதுமைப் பித்தனை மனதில் கூட்டுகையில், பளிச்சென்று நினைவில் படுவது அவருடைய உயர்ந்த dome like நெற்றியும் வெடிப்பான உரத்த சிரிப்பும்தான். அடிக்கடி சிரிப்பார்.

எனக்கு நினைவு தெரிந்தவரை, பி. எஸ். ராமய்யா எப்பவுமே உற்சாகமான பேர்வழி, நிமிர்ந்த முதுகும் வரித்த கழி போன்ற உடலுக்கு உறையிட்டாற் போல், ஜிப்பாவும், தரையில் புரளும் வேட்டியும் அவரை உயரமாகக் காட்டின. கைகளை உற்சாகமாக ஆட்டி உரக்கப் பேசுவார்.

இந்தக் கூட்டத்தை நான் உங்களுக்குப் பரிச்சயம் பண்ணும் சமயத்தில் கலைமகளில், சக்ரவாகம் என்கிற அவர் கதை வெளியாகி, அதன் வெற்றிப்ரபை சிதம்பர சுப்ரமணியனைச் சூழ்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவரிடம் விஷயம் நிறைய இருந்தது. ஆனால் சங்கோஜி. அப்படியே அபிப்ராயமாக ஏதேனும் அவர் சொல்ல ஆரம்பித்தாலும் சரியாக முடிக்காமல், சிரிப்பில், பலமான தலையாட்டலில் மழுப்பிவிடுவார். நுண்ணிய முக அங்கங்கள். அலைபாயும் க்ராப்.

தி. ஜ. ர. முழங்கால்களைக் கட்டியபடி குந்திட்டபடி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு செளகர்யமான போஸ்ட்சர். தலையை அழுத்த வாரி, உடனேயே மெனக்கெட்டுத் தானே கையை உள்ளே விட்டுக் கலைத்துக் கொண்டாற்போல் குட்டையாக வெட்டிய க்ராப் விரைத்துக் கொண்டிருக்கும். அவர் தோற்றத்தில் கவனம் இன்னும் கொஞ்சம் செலுத்தியிருந்தால் அழகான மனிதனாகவே வெளிப்படுவார் என்பது என் கருத்து. செதுக்கினாற் போன்ற மூக்கு, வாய், வரிசையான முத்துப் பற்கள். சிரிக்கும் போது அவர் முகத்தில் ஐந்தாறு வயதுகள் உதிரும்.

சிட்டி, சி. சு. செல்லப்பா, க. நா. சு. இவர்களின் படங்களைச் சமீபமாகப் பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள். அன்றைக்கு இன்று வருடங்கள் இவர் தோற்றங்களை அதிகம் பாதித்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஒருவர், இருவர் அல்லது இருவர் மூவர். கூட்டத்தில் சேரலாம். குறையலாம். ஆனால் மாலை, இந்த வேளைக்கு இந்த இடத்தில் இந்த ஏழு பேர் நிச்சயம்.

அத்தனை பேரும் கதராடை

இவர்களை விழுங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு இவர்கள் பேச்சைச் செவியால் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பதில் எனக்கு அலுப்பே இல்லை.

இலக்கிய ஆர்வம் மிக்க என் நண்பன் குஞ்சப்பாவும் நானும், எங்கள் மரியாதையில், இயற்கையான வயதின் அச்சத்தில் இவர்களுக்கு நாலு அடி எட்ட உட்கார்ந்திருப்போம்.

நான் அப்போத்தான் மொக்கு கட்டியிருந்த எழுத்தாளன். எஸ்.எஸ்.எல்.சி. குட்டெழுத்து தட்டெழுத்துப் பரீட்சைகள் தேறிவிட்டு வேலைக்கு அலைந்துகொண்டிருந்தேன். தேடினால் கிடைத்துவிடுகிறதா? பறித்து எடுத்துக்கொள் என்கிற மாதிரி அப்பவே, வேலை ஒண்ணும் காய்த்துத் தொங்கவில்லை. அந்த ரோசம், அதனால் படும் கவலை சமயங்களில் தவிர, சிந்தனைக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் வயது காரணமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஆக்கக் கனல் வெளிப்பட வழி காணாது, உள் புழுங்கவும் வேண்டிய நேரம் இருந்த அந்தப் பருவத்தில், என்னை என்னிலிருந்து மீட்டு, எனக்குத் தருவதற்கு இந்தக் கடற்கரைக் குழுவின் பாதிப்பு, தன் பங்கைச் செய்தது என்றால் மிகையில்லை.

மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன் ஆசிரிமையில் வெளி வந்து கொண்டிருந்த 'ஷார்ட் ஸ்டோரி' ஆங்கில மாதப் பத்திரிகையில் என் கதைகள் இரண்டு பிரசுரமாகியிருந்தன, அடுத்து மணிக்கொடி (ஆசிரியர் ப.ரா) யில் மூன்று கதைகள், ஹனுமான் வாரப் பத்திரிகையில் ஒன்று. உம், ஆமாம்.

"ஏண்டா, அங்கே தனியா உட்கார்ந்திண்டிருக்கே, இங்கே வாயேன்!"

தி. ஜ. ர, அழைப்பார். அப்படியே நகர்ந்து, அவருக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே (என் நினைப்பில்) அவர்கள் பாதுகாப்பில் இடுங்குவேன். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நான் என்னைப் பாவித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் இதுமாதிரி நேர்ந்தால் வலிக்குமா? ஆனால் இங்கே வாய் திறக்க எனக்கு 'தில்' கிடையாது. போயும் போயும் இங்கே 'றாபண'வா? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்போதெல்லாம் யார் சொல்வதையும் கவனமாகக் கேட்டுக் கொள்ளும் பங்குதான் என்னுடையது.

என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார் தட்டல் கிடையாது. வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை. இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு, கட்சிப் பிரசாரம் கிடையாது. உலக இலக்கிய கர்த்தாக்களின் சிருஷ்டிகள் நடமாடின. அவர்கள் பெயர்களைச் சொல்லிச் சுவைக்க எனக்கு ஆசைதான். ஆனால் ஏதோ வெறும் பெயர்களை உதிர்த்து அதில் பெருமை அடையப் பார்க்கிறேன் எனும் சந்தேகத்துக்குக்கூட நான் ஆளாக விரும்பவில்லை. அந்த மாதிரிப் பெருமையால் எனக்கு இனி ஆக வேண்டியது ஏதுமில்லை. தவிர அப்போதேனும் மாப்பஸான், மாம், செக்கோவ் என்று எழுத்தாளர்கள் முனகினார்கள். Chase, Robbins, Maclean என்று இடத்தைப் பிடித்துக்கொண்டு, எழுத்து ஒரு ஃபாக்டரியாக மாறியிருக்கும் இந்நாளில் நாங்கள் பழகிய பெயர்கள், அந்த எழுத்துக்களின் சத்தியங்கள் எடுபடா.

பிச்சமூர்த்தியின் வெளிப்பாட்டில் விஷயம் நிறைய இருக்கும். அபூர்வமான விதானங்கள் தட்டும். இத்தனைக்கும் பேச்சில் சிங்காரங்கள், நகாசுகள் effect உண்டாக்க வேண்டும் எனும் தனி முயற்சி இல்லை. உள்ளது உள்ளபடி அவர் கண்டபடி, ஆனால் எப்படியும் கவிஞன் மனம் இல்லையா? லேசாக நடுக்கம் கொடுத்த குரலில் வார்த்தைகள் வெளிப்படுகையில், பிசிர்கள் கத்தரிக்கப்பட்டு, சொல்லும் பொருளும் சுளை சுளையாக விழுவது போலத் தோன்றும். ரத்னச் சுருக்கம். இதற்குள் முடிஞ்சு போச்சா? இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா?

"ராஜகோபாலா! சிட்டி! செல்லப்பா!" என்று அழைக்கையில் அந்தக் குரல் நடுக்கத்தில் ததும்பிய இனிமை, பரஸ்பரம் யாரிடம் இப்போ காண முடிகிறது? அவர் பார்வையே ஒரு ஆசீர்வாதம்.

இலக்கிய விழாக்கள் இந்நாளில் கொண்டாடப்படுகின்றன. கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. டி.வி., வானொலி வழி வேறு: பேட்டிகள், சந்திப்புகள், மோஷியாரா, ஸம்மேளனம்..... எந்தச் சாக்கிலேனும் மேடை.

ஆனால் கடற்கரையில் மாலை அந்த இரண்டு, இரண்டரை மணி நேரம் இந்த ஏழெட்டுப் பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, அதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை.

இத்தனை வருடங்களின் பின்னோக்கில் எனக்கு இன்னும் வேறு ஏதேதோ உண்மைகள் புலப்படுகிறாப் போல் ஒரு உணர்வு.

ஏதோ ஒரு வகையில், இவர்கள் எழுத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பிக்குகள்.

இந்த ஏழெட்டுப் பேரில் நாலுபேர் இப்போது நம்முடன் இல்லை. இவர்களில் மூவரேனும் எழுத்துக்கே பலியானவர்கள்.

அந்த மஹாராஜியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். அவள் மோஹினி. மிக்க அழகி. இரக்கமற்றவள். Medusa "வா, வா. என்னைப் பார். என் அழகைப் பார்!"

அவன் நெஞ்சை நீட்டுகிறாள். உள் உள்ளே*யே பாடுகிறாள்.

கொல் இசை.

சிந்தா நதி மேல் கவிந்த ஒரு பனிப் படலம்.

* *


இந்தக் கட்டுரை வந்த அடுத்த வாரம், கதிரின் “வாரம் ஒரு கடிதம்” என்ற பகுதியில் , “தேவகுமார்” என்பவர் எழுதியது:

“ அற்புதம்! வெகு அற்புதம்! சென்னையின் பிரசித்தி வாய்ந்த மெரீனாக் கடற்கரையில் “மணிக்கொடி” காலத்துப் பிரமுகர்கள் கூடிப்பேசும் காட்சியை தத்ரூபமாகச் ” சிந்தா நதி”ப் பகுதியில் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியுள்ள திரு லா.ச.ரா வின் சாதனையைக் குறிப்பிடுகிறேன். அந்த சம்பாஷணைகளின் சில பகுதிகளையேனும் லா.ச.ரா. தன் நினைவுப் பேழையிலிருந்து பொறுக்கி எடுத்து தந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? “

நமக்கும் அப்படித்தானே தோன்றுகிறது ? ஒரு வேளை இந்தக் கடிதத்தைப் படித்தபின் தான் லா.ச.ரா இன்னும் கொஞ்சம் ‘ மணிக்கொடி சதஸ்’ பற்றி எழுதலாம் என்று எண்ணி, அதற்கடுத்த வாரம்  இன்னொரு கட்டுரையை . .  தன் 19-ஆவது பதிவாக . . . எழுதினாரோ?

[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம் ]

( தொடரும் )

பி.கு.

கட்டுரையைப் படித்த ஆசுகவி சிவசூரியின் மறுமொழி


சிந்தை என்னும் நதிகாட்டி -அது
   தெளிவாய் ஓடும் கதிகாட்டி
விந்தை புரியும் மதிகாட்டி-கதை
   விரியும் விதத்தின் முதல்காட்டி
முந்தை நாளின் கதைகாட்டி- அதில்
   முற்றும் எம்மைக் குளிப்பாட்டி -ஒலி
சிந்தும் கடலின் கரைகாட்டும் - அது
   செம்மை மிகுந்த நாட்காட்டி.

சுற்றுப் புறத்தின் எழில்காட்டி -அன்று
   துடிப்பாய் வரைந்த முகம்காட்டி
வெற்றுத் தாளில் உயிரூட்டி- எமை
   வேகம் வளர்த்த பயிர்காட்டி
கற்றுக் கொடுக்கும் கலைகாட்டி- அவர்
   கதையும் தொடுக்கும் நிலைகாட்டி
பற்றி நடந்திடும் வழிகாட்டும்-அது
   பண்டை நாளின் மொழிகாட்டும்.


மால்குடி நாளைக் கண்டுள்ளேன் -அதில்
   மையல் மிகவும் கொண்டுள்ளேன்
லால்குடி யார்என் முனம்கண்டேன் - அந்த
   ராமா அமுதின் இனம்கண்டேன்
பால்குடி நாட்களின் வலம்கண்டேன்-என்
   பள்ளிப் பருவ நலம்கண்டேன்
கோல்பிடித் தவரின் பதம்கண்டேன் -நான்
   கொஞ்சும் தமிழின் இதம்கண்டேன்.


சிவ சூரியநாராயணன்.

===========

தொடர்புள்ள பதிவுகள்:

லா.ச.ராமாமிருதம் படைப்புகள்

திங்கள், 19 நவம்பர், 2012

செல்வமலைச் செவ்வேள்: சில நினைவுகள்

                                                               
செல்வமலைச் செவ்வேள்: சில நினைவுகள்

பசுபதி




ஒரு கோயிலுக்குக் குடமுழுக்கு விழா நடக்கும் போது, அந்தக் கோவில் வளர்ச்சியை முழுதும் பார்த்த ஒருவன் மனத்தில் சில காட்சிகள்வரலாற்று நிகழ்வுகள்ஒரு திரைப்படம் போல் ஓடுவதில்  ஆச்சரியமில்லை. அக்காட்சிகள் சிலவற்றைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

காட்சி 1

1988 –இல் ஒரு நாள் என்று நினைவு. டொராண்டோ, ரிச்மண்ட் ஹில் ( Richmond Hill) கோவிலில் திரு ஜானகிரமண ஸ்தபதியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். “எப்படி அவர்சிவசுப்பிரமணியமூர்த்தியாய்ச் சிலையை வடிவமைத்தார் என்று கேட்கிறேன். அவர், எப்படிக் காலையில் இறைவனைத் தியானித்து, முருகனின் தியான ஸ்லோகத்தை மனத்தில் சொல்லிக் கொண்டே தொடங்கும் தன் சிற்பப் பணி எப்படி இறையருளால் ஒரு நெற்றிக் கண் கொண்ட முருகனை கடைசியில் ஈந்தது என்று விவரிக்கிறார். எனக்குப் புல்லரிக்கிறது. “சிவசுப்பிரமணியர்என்ற நாமமும் என்னுள் ஒலிக்கத் தொடங்குகிறது.


காட்சி 2

1988 அல்லது 1990. திருப்புகழ்குருஜிராகவன் டொராண்டோவிற்கு வந்திருக்கிறார். நான் திருப்புகழ் நூலிலே தேடுகிறேன். அருணகிரி எங்கேனும்சிவசுப்பிரமணியர்என்ற பெயரைப் பயன்படுத்தி இருக்கிறாரா என்று. கடைசியில்ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுஎன்று ஒரு திருவொற்றியூர் திருப்புகழைக் கண்டுபிடிக்கிறேன். ‘சொருபப் பிரகாசஎன்று தொடங்கும் அத் திருப்புகழில்

குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
   . பிடிகைத்தல ஆதியரி  மருகோனே

குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய 
   . குணமுட்டர வாவசுரர்  குலகாலா
என்று வரும். அத்திருப்புகழை டொராண்டோத் திருப்புகழ் அன்பர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார் குருஜி ராகவன்.


காட்சி 3

1990. ரிச்மண்ட் ஹில் கோவில் வெளியிட்ட இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகிறது. அதிலிருந்து ஒரு பகுதி:

“ (முருகனின் ) ஐந்தாம் படை வீடானகுன்றுதோறாடல்ஓர் இடத்தை மட்டும் குறிப்பதன்று; குன்றுகள் தோறும் குலவும் குமரனின் திருவிளையாடலையே குறிக்கிறது. இந்தக் குன்றுகளுக்கெல்லாம் பிரதிநிதியாகப் பொதுவாகத் திருத்தணி போற்றப்பட்டாலும், முருகனுக்கு ஏற்படும் புதுக் கோவில்களையும் சேர்ப்பது முறையே. உதாரணமாக, ரிச்மண்ட் ஹில்லில் உள்ள சிவசுப்பிரமணிய மூர்த்தியை, தமிழ் மரபிற்குப் பொருந்தசெல்வமலைச் செவ்வேள்என்று அழைத்துப் போற்றலாம். செல்வர்களின் வீடுகள் பல உள்ள இவ்விடத்தில், ‘ஆன்மிகச் செல்வத்தை மறக்காதேஎன்று அறிவுறுத்தும் வகையில் கோயில் கொண்டுள்ளான் ஆறுமுகன். இந்த இடத்தைஸ்ரீகிரிஎன்று வடமொழியில் அழைக்கலாம். வள்ளி-தெய்வானை இருவரும் திருமாலின் குமாரிகள் , பார்வதி விஷ்ணுவின் சோதரி என்ற புராணக் கதைகளை அநுசரித்துச் செல்வமலைக் குமரனை மாமி வீட்டில் உள்ள மருகனாக எண்ணி, ரசித்து, மகிழலாம்”.


காட்சி 4

1990 –இல் ஒரு நாள். என் சோதரர், ‘திருப்புகழ் அடிமைநடராஜன் சென்னையில் தவத்திரு ஸாதுராம் ஸ்வாமிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது , தற்செயலாக, என் சோதரர், நான்ரிச்மண்ட் ஹில்லுக்குசெல்வமலை என்று மொழியாக்கம் செய்ததைக் குறிப்பிடவே,  அதை ரசித்த ஸ்வாமிகள், உடனே கீழ்க்கண்டஅருட்புகழைஅருளினார். ( அருணகிரி நாதர் எப்படி மிகக் கடினமான திருப்புகழ் பாடல்களை ஆசுகவியாய்ப் பாடினார் என்பது ஸாதுராம் ஸ்வாமிகள் பாடுவதைக் கேட்டவர்களுக்குப் புரியும் ) .

                 அருட்புகழ்

ராகம் : ஷண்முகப்ரியா
தய்ய தனத்தன தத்தன தத்தன தனனத் தனதான

உய்வர் திருப்புகழ் கற்றவர் எனும்அற் புதம்ஓரா
. . உய்தி பெறத்தமிழ் சொற்றுனை வழிபட் டுணரேன் நான்;

வைவ துரைப்பது மற்றெதும் உனதர்ச் சனையாக
. . வள்ளி மறத்தி திறத்த!நின் மனம்வைத் தினிதேலாய் ;

சைவர் பழிச்சுடும் அப்பணி ஜடையற் கருள்சேயே!
. . தைவ குருத்துவ புத்திர! தமிழிற் ப்ரியவேளே!

செய்வ தனைத்தையும் அர்ப்பணி ஜநர்நற் கனடாவில்
. . செல்வ மலைச்சிவ ஸுப்பிரமணியப் பெருமாளே.
                          ஸாதுராம் ஸ்வாமிகள்
                               29-11-1990
                              சென்னை -61    

[ பழிச்சுடும்போற்றிடும் ]

( பின் குறிப்பு: சங்கீத வித்வான் நெய்வேலி சந்தான கோபாலன் பின்னர் சென்னைக்கு விடுமுறையில் நான் சென்றிருந்தபோது இதை ஷண்முகப்ரியா ராகத்தில் அமைத்து எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார் என்பதும் இதற்குத் தொடர்புள்ள ஒரு நிகழ்வே ]

செல்வமலைச் செவ்வேளுக்குஅரகரோகரா

டொராண்டோ தீரனுக்கு - அரகரோகரா

ஆண்டேரியோ அழகனுக்குஅரகரோகரா

கனடா கந்தனுக்குஅரகரோகரா

சிவசுப்பிரமணிய ஸ்வாமிக்குஅரகரோகரா 

[ ரிச்மண்ட் ஹில் கோவில்  புனருத்தாரண கும்பாபிஷேக மலரில்
வெளியான கட்டுரை, 28 அக்டோபர், 2012 ]

தொடர்புள்ள பதிவுகள்:
பசுபடைப்புகள்

அனுபந்தம்
===========
இக்கட்டுரையைப் படித்த ஆசுகவி சிவசூரி அளித்த கவிதைகள்:




செல்வமலைச் செவ்வேள்

ஆசு கவிதிரு சாது முனியவர்
ஆசை யுடன்உனைப் பாடிடவே
தேசு புகழுடன் செல்வ மலைதனில்
சிங்காரக் கோயிலில் கூடியவா.

பாசு பதிமுதல் பாவலர் பற்பலர்
பக்தி யுடன்நினைப் பாடிடுவார்
காசு பணம்நிறை கானடா நாட்டிலே
காலடி வைத்தவன் ஆடிடுவாய்.

முத்தமிழ் வித்தகர் மாமுனை வர்பலர்
முந்தித் துதிப்பதை வேட்டனையா
சித்தம் களித்திடும் சிந்து பலவிதம்
செல்வ மலைதனில் கேட்டனையா.
வெள்ளிப் பனிமலை வேண்டி விரும்பியே
வேலவன் அங்குநீ சென்றனையோ
கொள்ளை அழகுடன் குட்டிக் குழந்தையாய்க்
கொஞ்சக் குருபரன் நின்றனையோ

அப்பனின் பேரின் முதலெழுத்து அட
அய்யனே நீயுமே கொண்டனையா
சுப்பனே நின்னைச் சிவனாகக் கூடவும்
செல்வ மலைதனில் கண்டனரா.

சிற்றுளி கொண்டு செதுக்குமுன் சிற்பியின் சிந்தனையில்
பற்றிய பாலன் முருகனின் நாமம் பதிந்திருக்க
நற்றுணை யாக நுதல்விழி வந்து நடனமிடக்
கற்சிலை செய்யக் கடவுள் வழிதனைக் காட்டினரே.

கல்லில் கடவுளைக் காட்டும் கலைஞரின் கண்களின்முன்
எல்லை கடந்த எழிலுரு கொண்ட இளமிறையாய்ச்
செல்வ மலையில் திருவிழி மூன்றும் திகழ்ந்திடவே
சொல்லில் வராத சுகந்தரு சோதியன் தோன்றினனே.


வெள்ளிப் பனிமழை வீழ்ந்திடும் நாட்டில் விளங்குமெழில்
துள்ளும் தொராந்தோ துதிசெயும் தொண்டர் துணையெனவே
கள்ளின் சுவையுடைக் கன்னித் தமிழ்தினம் காதுபட
வள்ளிக் கணவன் திருவிழி மூன்றுடன் வந்தனனே.


அருண கிரியார் அருளிய பாடல் அனுதினமும்
உருகும் உளமுடன் ஓதும் அடியார் உயிர்வளர்க்கப்
பெருகும் நிதிக்கும் நிதியாய் சிவசுப் பிரமணியாய்க்
கருணை முகிலெனக் கண்முனம் வந்தனன் கந்தய்யனே.

செல்வ மலைவாழ் சிவமணி நாமம் செபிப்பவர்க்குக்
கல்லாக் கலையும் கணத்தில் உணர்த்தும் கருணையினால்
எல்லா நலமும் இகத்தினில் சேர இமைப்பொழுதில்
வல்லான் அருளினால் நாடும் நகரும் மணம்பெறுமே.



சிவ சூரியநாராயணன்.