ஞாயிறு, 10 நவம்பர், 2013

கொத்தமங்கலம் சுப்பு - 5 : ஔவையார்

ஔவையார் திரைப்படம்

நவம்பர் 10. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பிறந்த நாள். 




அவருக்கு நிறைய புகழ் தேடித் தந்த  ‘ஔவையார்’ படத்தைப் பற்றிச் சில வரலாற்றுத் தகவல்கள் என் களஞ்சியத்திலிருந்து! 

[ கொத்தமங்கலம் சுப்பு: படம்: தாணு; நன்றி; ஸ்ருதி இதழ் ]


இப்போது ‘ஔவையார்’ என்பவரைப் பற்றிய நம் கண்ணோட்டம் வேறு! மூன்று ஔவையார்களா? நான்கு பேரா? என்றெல்லாம் ஆராய்வதிலேயே முனைந்து  ஒரு ஔவையாரின் பாடல்களையும் ஒழுங்காய்ப் படிக்காமல் போகும் நிலைதான் நமது! 53-இல் வெளியான  திரைப்படமோ நமக்குத் தெரிந்த எல்லா ஔவைக் கதைகளையும் சேர்த்து ஒரு கவர்ச்சிகரமான கலவையை அளித்த முத்தமிழ்க் காவியம்!  

படத்தைப் பார்த்த திருவாசகமணி கே. எம். பாலசுப்பிரமண்யம் 'சிவாஜி' இதழில் 1953- இல் 'ஔவையார் வெண்பா'க்கள்  எழுதினார்.
அதில் ஒன்று:

திடமெல்லாம் வாசன் திடமாகா! செய்யும்
படமெல்லாம் ஔவைபடம் போல -- நடமாடா!
பாட்டெலாம் சுந்தராம்பாள் பாட்டாகா என்றுலகின்
ஓட்டெல்லாம் கூறும் உணர்.
( தகவல்: 'அமுதசுரபி' )



கவிஞர் ‘வாலி’ சுப்பு அவர்களைப் பற்றி ஒரு கவிதையில் இப்படி எழுதினார்:

அவ்வையார்’
அவர் இயக்கிய படம்;
தமிழை
தமிழிசையை 
தமிழ்ப்பண்பை
தமிழ்ப் பாராம்பரியத்தை 
துலாம்பரமாகத் 
துலக்கிய அந்தத் 
திரைச் சித்திரம் 
தந்தது ...
சுப்புவிற்கு 
சிறப்பான தனி இடம் 
ஆயினும் -
அவர் நிறைகுடம்! 

'ஔவையார்' படம் எடுத்ததற்காகத் தமிழ் நாட்டில் 1954-இல் பெரும் விழாக்கள் எடுக்கப் பட்டன. இதில் பேராசிரியர் 'கல்கி' முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டார். 

அந்த விழாக்கள் தொடர்புள்ள சில 'விகடன்' பக்கங்கள்





சென்னையை விடப் பெரிய முறையில் தஞ்சையில் ஒரு பாராட்டு விழா நடந்தது. அதைப் பற்றிய  'விகடன்' பக்கங்கள் இதோ









[ நன்றி : விகடன் ] 

படங்கள்: “ராவுஜி” [ ஸ்ரீநிவாச ராவ். “நாரதர்” பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:





வியாழன், 7 நவம்பர், 2013

ராமன் விளைவு : கவிதை

சி.வி.ராமன் : ஒரு நினைவுச் சுடர்


நவம்பர் 7. ஸர் சி .வி. ராமனின் 125-ஆம் பிறந்த நாள். 
அவரைப் பற்றிய ஒரு சிறிய நினைவைப் பகிர்ந்து கொள்கிறேன். 
1966-ஆம் ஆண்டு, ஜூலை 30. ஐ.ஐ.டி(மதராஸ்) பட்டமளிப்பு விழாவிற்கு அவர்தான் தலைமை. இந்தியா எப்படித் தன் முயற்சியாலேயே உலக அரங்கில் வலம் வரவேண்டும், வரமுடியும்  என்பதைப் பற்றி  அற்புதமாய்ப் பேசினார். பிறகு மாணவர் பலருக்குப் பரிசு வழங்கினார். என்னையும் சேர்த்துத்தான்.

எனக்குப் பரிசு கொடுக்கும் போது, “என்ன, இது மிகவும் கனமாய் இருக்கிறதே ? “ என்றார். அவர் என்னிடம் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை! ஒரு விநாடி தடுமாறிப் பின், “ அறிவு தானே...கனமே இல்லையே? “ என்பது போல் ஏதோ உளறி , அவர் கையிலிருந்து அந்தப் புத்தகக் கட்டு அடங்கிய பரிசைப் பெற்றுக் கொண்டேன். ஆனால், என் மனத்தில் ஒரு குறுகுறுப்பு. அந்தக் கட்டுக்குள் இருந்தவற்றை எப்படி “அறிவு” என்பது?


விஷயம் இதுதான். எனக்குப் பரிசு என்று தெரிந்தவுடனேயே, ஐ.ஐ.டி நிர்வாகத்தினர் என்னைக் கூப்பிட்டு, பரிசுத் தொகை இவ்வளவு, அதற்குள் அடங்கும்படி சில நூல்களை நானே வாங்கி, அவர்களிடம் பில்லையும், நூல்கட்டையும் சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தனர். உடனே நான் ஹிக்கின்பாதம்ஸுக்கு விரைந்து, நான் சில வாரங்களாகக் குறி வைத்திருந்த இரு ஆங்கில நாவல் தொகுப்புகளை வாங்கினேன். ஒன்று: ‘ஸேப்பர் ‘ ( Sapper) எழுதிய ‘ புல்டாக் ட்ரம்மண்ட்’
Bulldog Drummond



என்ற சாகசக்காரனைப் பற்றிய புதினத் தொகுப்பு; ( இதை ‘வேட்டைநாய் தாமோதரன்’ என்ற பெயரில் ஆரணி குப்புசாமி முதலியாரோ, வேறொருவரோ மொழிபெயர்த்த நினைவு!) இன்னொன்று ,

 ‘பாரனெஸ் ஆர்ஸி’ ( Baroness Orczy) எழுதிய ’ஸ்கார்லெட் பிம்பெர்னல்’

The Scarlet Pimpernel



என்ற புனைபெயரில் பல பிரெஞ்சுப் பிரபுக்களை மரணத்திலிருந்து  காப்பாற்றிய ஓர் ஆங்கிலப் பிரபு பற்றிய ‘த்ரில்லர்’ நாவல்களின் தொகுப்பு! இவற்றை ஐ.ஐ.டியிடம் கொடுத்தபின், எனக்குத் ‘திக் திக்’ கென்றே இருந்தது! யாராவது, கட்டைப் பிரித்துப் பார்த்துவிட்டால்? நல்ல வேளையாய், யாரும் அப்படிச் செய்யவில்லை! இப்படி, ஒரு நிம்மதியுடன் நான் சி.வி.ராமன் முன்னிலையில் அந்த நூல்கட்டை வாங்கும்போது, திடீரென்று அவர் ஒரு கேள்வி கேட்டவுடன், எனக்குத் தடுமாறி விட்டது! அதே சமயம், அவரிடம் உண்மையை மறைத்த ஒரு குற்ற உணர்வும் என்னுள்ளே நிரந்தரமாய்க் குடி கொண்டது. “சரி, என்றாவது இதற்கு ஒரு பரிகாரம் செய்வேன்” என்று உறுதியுடன் இருந்தேன்.

காலம் கழிந்தது. நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட ராமன் அவர்களைப் பற்றி ஒரு துணுக்கைப் படித்தேன். அதை ஒரு கவிதையாக வடித்தேன்.

ராமன் என்னை மன்னிப்பாராக! 
ராமன் விளைவு
பசுபதி
பார்புகழ் நோபல் பரிசுவென்று, பாரதத்தில்
பேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்.
விருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்;
அருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும்.
மதுக்கிண்ணம் பார்த்ததுமே மறுத்துவிட்டார் ராமன் !
'இதற்கென்ன காரணம்?' என்றவர்க்(கு) உரைத்தார்:
"ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்;
ஸோமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று!"
ராமன் விளைவு= Raman Effect 

பின்குறிப்பு:

1)
இந்தப் படத்தில் என்னை  அந்த விழாவில் அறிமுகம் செய்பவர் பேராசிரியர் சம்பத்.  எங்கள் மின்னியல் துறையின் தலைவர். பிறகு ஐ.ஐ.டி ( மதராஸ், கான்பூர்) டைரக்டராகவும் பணிபுரிந்தவர். அண்மையில் அவருடைய மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலரும் பணம் சேகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சியால்,   அவர் பெயரில் ஒரு பேராசிரியர் ஐ.ஐ.டி -யில் விரைவில் நியமிக்கப் படுவார். இப்படி எங்களுக்கு ஆசிரியர்களாய்ப் பணி புரிந்த பேராசிரியர் பலரையும் கௌரவிக்க வேண்டும் என்பது எங்கள் அவா. 


2) தற்செயலாய்,  நவம்பர் 1, 2016 “ நியூ இண்டியன் எக்ஸ்ப்ரெஸ்’ இதழ் இந்தப் பட்டமளிப்பு விழாவைப் பற்றி எழுதி , நான் பரிசு வாங்கும் படத்தையும் வெளியிட்டிருக்கிறது !. 

செவ்வாய், 5 நவம்பர், 2013

திசைமாற்றிய திருப்பங்கள் : கவிதை

திசைமாற்றிய திருப்பங்கள்

பசுபதி 

கலைமகள் 2013-ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியாகியுள்ள என் கவிதை இதோ!


திசைமாற்றிய திருப்பங்கள்
பசுபதி , கனடா

திருப்பம் 1:
காலமொன்றே மருந்தாமோ காயத்தைக் குணமாக்க?
காலமென்னும் சாம்பலுக்குள் கனன்றிருக்கும் தணலுண்டே!
சிறுவயதில் உண்டையம்பால் சீராமன் அடித்ததெல்லாம்
மறக்காமல் பழிவாங்க மந்தரையும் காத்திருந்து
காலக்கோள் ஆகிநின்றாள்; கைகேயி மனம்மாற்றிக்
கோலமிகு காப்பியத்தின் கூர்திசையைத் திருப்பியது
கூனியின் கோபக் கொதிப்பு

திருப்பம் 2 :

காகுத்தன் முடிதுறக்கக் காரணியோர் மங்கையெனின்
ராகவன்தன் மனையிழக்கச் சூர்ப்பணகை வந்தனளே!
இராமனென்ற சொல்லுக்குள் ரம்யமெனும் பொருளிருந்தால்
அரக்கியுமே அவனழகுக் கடிமையெனின் அதிசயமோ?
கற்புத்தீ நகரழித்தல் கண்டோம்நாம் சிலம்பினிலே!
காமத்தீ குலமழித்தல் காட்டுகிறது ராமகதை!
காப்பியத்தின் திசைமாற்றிக் கதைப்போக்கைத் திருப்பியது
அரக்கியின் காமவெறி ஆம்.

திருப்பம் 3:

துரியோத னனுக்கொருநாள் துணைநின்றான் அவன்மாமன்;
அரக்கனுக்குத் துணைநின்றான் அவன்மாமன் மாரீசன்.
மா யமனாய் ராமனம்பு வருமென்று தெரிந்தாலும்
மாயமான் உருவெடுத்து மயிலாளை மயக்கிவிட்டான்.
மாயவனோர் மானிடனாய் மண்ணுலகில் அவதரித்தும்
மாயம்செய் மானிடத்தில் மயங்கிநின்றான் விதிவசத்தால்.
கூற்றுவன் அழைத்தவுடன் கூக்குரலால் கதைத்திசையை
மாற்றியது மாரீச மான்.

திருப்பம் 4:

தாசரதி மட்டுமா? தசமுகனின் தம்பியுமே
தர்மங்கள் இழுபறியில் தத்தளித்து மீண்டவன்தான்.
இரணியனின் கதைகேட்டும் மனம்மாறா இராவணனின்
அரண்மனையை விட்டுவிட்டு அரியவனைச் சரணடைந்தான்
சரணடைதல் சாத்திரமாய்க் கதைவிளங்கச் சாட்சியிவன்.
அடைக்கலம் பெற்றபின்னர் ஆழ்வானாய் உயர்ந்துவிட்டான்;
கடல்கடக்க வழிசொன்னான்; கதைச்சிலைக்குக் கண்திறந்தான்.
அறவழியில் நடந்துசென்று ஆக்கமுறக் கதைமுடித்த
அரக்கன் விபீஷணனே ஆம்.

===========================

[ நன்றி : கலைமகள் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

வெள்ளி, 1 நவம்பர், 2013

சங்கீத சங்கதிகள் - 19

 திருநாளுக் கேற்ற இரு பாடல்கள்!



“ சார், என் பெண் தீபாவளியன்று ஒரு கச்சேரி செய்யப் போகிறாள். அதில் தீபாவளியைப் பற்றி ஒரு விருத்தம் பாடி, பின்னர் ஒரு தீபாவளிக் கிருதியையும் பாட விரும்புகிறாள். நீங்கள் ஏதாவது பாடல்களைப் பரிந்துரைக்க முடியுமா?” என்று கேட்டார் என் நண்பர்.

“ நிச்சயமாக! மற்ற மொழிகளில் உள்ள தீபாவளிப் பாடல்கள்  பற்றி எனக்குத் தெரியாது! ஆனால், தமிழில் இருக்கின்றன! தமிழில் ஒரு ராகமாலிகை விருத்தம் பாடி, மத்தியமாவதியில் முடித்து, அதைத் தொடர்ந்து அதே ராகத்தில் ஒரு தமிழ்ப் பாடலும் பாடலாமே? இரண்டு தீபாவளிப் பாடல்களையும்  இயற்றியது ஒரு வாக்கேயக்காரர் தான். “ என்றேன். “சரி” என்று தலையாட்டிய நண்பருக்குச் சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன், இங்கே.

ஐம்பது, அறுபதுகளில் நான் விரும்பிப் படித்த ‘தீபாவளி’ மலர்களில் ‘சுதேசமித்திர’னும் ஒன்று.

சுதேசமித்திரன் தான் தமிழ்நாட்டின் முதல் நாளேடு. 1882-இல் தொடங்கிய சுதேசமித்திரன் 1929-இல் ஒரு வாரப் பத்திரிகையையும் ஆரம்பித்தது. ( உபரித் தகவல்: தி.ஜானகிராமனின் பிரபல நாவல் ‘மோகமுள்’ அதில் தான் தொடர்கதையாய் வந்தது.) இலக்கியம், அரசியல், சமூகவியல் போன்ற துறைகளுடன் இசையைப் பற்றியும் ‘நீலம்’ போன்றவர்கள் பல நல்ல கட்டுரைகளை அதில் எழுதினர். பாரம்பரியம் மிக்க அந்தப் பத்திரிகையின் தீபாவளி மலர் பல விதங்களில் ‘ஆனந்தவிகடன்’ ‘கல்கி’ மலர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும்.

வருடா வருடம், அந்த மலர்களில் பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம்பெறும் என்ற நினைவு. சில சமயம் சுரக் குறிப்புகளுடன் இருக்கும்; சில சமயம் ஒரு விருத்தமாக இருக்கும். சில சமயம் சுரக் குறிப்புகள் இல்லாமல், கிருதிக்கு ராகம் மட்டும் குறிப்பிட்டிருக்கும். ஆனால், எல்லாப் பாடல்களும் தீபாவளியைப் பற்றியே இருக்கும்.

எடுத்துக்காட்டாக இரண்டு பாடல்களை இங்கு இடுகிறேன்.

இரண்டு விருத்தங்கள் கொண்ட முதல் பாடல் 1965 - மலரில் வந்தது. மத்தியமாவதி ராகத்தில் அமைந்த இரண்டாம் கிருதி 1967 - தீபாவளி மலரில் வெளியானது.




பின் குறிப்பு:

இரண்டாம் பாட்டைக் கேட்க விரும்பினால் . . . 


[ நன்றி : சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சிவனின் தீபாவளிப் பாடல்கள்

சங்கீத சங்கதிகள்


வெள்ளி, 25 அக்டோபர், 2013

தென்னாட்டுச் செல்வங்கள் - 10

நீலோத்பலாம்பாள் 



 திருவாரூரில் உள்ள நீலோத்பலாம்பிகை பேரில் திருவாரூர் “மும்மூர்த்தி”களில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர் எட்டு “விபக்தி” ( வேற்றுமைத் தொகை )ப் பாடல்கள் இயற்றியுள்ளார். அதாவது, அம்பிகை, அம்பிகையை, அம்பிகையால்,அம்பிகைக்கு  ..என்று தொடங்கும் அழகான எட்டு ஸம்ஸ்கிருதப் பாடல்களை எட்டு விதக் ‘கௌள’ ராகங்களில் அமைத்திருக்கிறார். அவற்றில் ஒன்றை அண்மையில், இந்த ஆண்டு நவராத்திரி சமயத்தில் நான் கேட்க நேர்ந்தது. அப்போது ‘சில்பி’யின் நீலோத்பலாம்பிகைச் சித்திரமும், அதை விளக்கும் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கட்டுரையும் நினைவுக்கு வந்தன.

நீலோற்பலம் அல்லது கருங்குவளை மன்மதனின் பாணங்களில் ஒன்று அல்லவா? குவளை மலரைக் கையிலேந்திய அம்பிகையும் சிருங்கார ரசத்தை ஆளும் நாயகியே. யோகத்தை வலியுறுத்தும் தெய்வமாய்க் கமலாம்பிகை தவநிலையில் திருவாரூரில் இருப்பதுபோல், இல்லறமே நல்லறம் என்று அருளும் கோலத்தில் நீலோத்பலாம்பாள் ( அல்லியங்கோதை)  ஒரு தனிச் சன்னதியில் திருவாரூரில் காட்சி தருகிறாள். ஞான சக்தி கமலாம்பிகை; கிரியா சக்தி நீலோத்பலாம்பிகை.

அம்பிகையின் அண்மையில் ஒரு தோழி. தோழியின் தோளில் ஒரு குட்டி முருகன் ! முருகனின் சுட்டுவிரலைப் பிடித்தபடி அம்பிகை! ( மகன் தலையைத் தாய் தடவிக் கொடுப்பது போலும் சிற்பம் உள்ளது என்பர்.) இது ஒரு நூதனமான சிற்பப் படைப்பு, இல்லையா?

மேலும் , “ கவிஜனாதி மோதின்யாம்” ( கவிஞர்களை மகிழ்விப்பவள்) என்று தீக்ஷிதர் இந்த அம்பிகையைத் துதிக்கிறார் ஒரு பாடலில்! அப்போது எல்லாக் கவிஞர்களும் நிச்சயமாய் அந்தத் தேவியை --- ‘தேவனின் கட்டுரையில் உள்ள ‘சில்பி’யின் சித்திரம் மூலம் --  தரிசிக்க வேண்டாமா?





[ நன்றி : விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள்