ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பாரதி நினைவுகள்

" பாரதி அறியாத கலை” : செல்லம்மாள் பாரதி
[ கலாரசிகன்; தினமணி: 12 டிசம்பர் 2011]

அகில இந்திய வானொலி நிலையம் 1938 முதல் ஒலிப்பதிவு செய்த இசை நிகழ்ச்சிகளைக் குறுந்தகடுகளாக வெளியிட்டு வருகிறது. இதேபோல, வானொலியில் நிகழ்த்திய உரைகளையும் குறுந்தகடுகளாக வெளிக்கொணர்ந்தால் நன்றாக இருக்கும். சமீபத்தில், திருமதி. செல்லம்மாள் பாரதி, "பாரதி அறியாத கலை' என்கிற தலைப்பில் வானொலியில் பேசிய உரையை சமீபத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த உரையிலிருந்து சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

" மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயதுவரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டுக்கு உபதேசித்ததோடு, நாட்டில் பரப்பியதோடு நிறுத்திக் கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம்! தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார், என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

ஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை.

மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. ""இனி மிஞ்ச விடலாமோ?'' என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க மனம் துடிதுடித்தது. ஆனால், பயமும் ஒருபுறம் ஏற்பட்டது. "ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது, என்ன விஷயமோ?' என்று திகில் கொண்டேன்.

கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். "செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். "நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.

"கரும்புத் தோட்டத்திலே' என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம். பாரதியார் அறியாத கலை, "பணம் பண்ணும் கலை". என் கணவர் மறந்தும் காசுக்காகத் தமிழ்த்தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாக்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ, பகலோ, வீட்டிலோ, வெளியிலோ, கடற்கரையிலோ அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்''.

செல்லம்மா பாரதியின் இந்த உரையைப்போல, பல அறிஞர்களின் உரைகள் வானொலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவை புத்தகங்களாகவும், குறுந்தகடுகளாகவும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.”
--

பி.கு.
முழு உரையையும் 

இங்கே  படிக்கலாம். 

புதன், 7 டிசம்பர், 2011

கல்கி -1 : இராஜாம்பாள் ; நூல் மதிப்புரை

இராஜாம்பாள் ; நூல் மதிப்புரை
கல்கி 




ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர். ரங்கராஜு ஆகிய மூவரைத் துப்பறியும் நாவல்களின் ”முன்னோடி மும்மூர்த்திகள்” என்றே சொல்லலாம்.

இவர்களைப் பற்றி நாரண. துரைக்கண்ணன் ஒரு ‘கலைமகள்’ கட்டுரையில் சொல்கிறார்:

“ ஆங்கில நாவல்களை ஆரணியார் நேராக மொழி பெயர்த்துத் தந்தார். ஐயங்கார் அந்நாவல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு தம் கற்பனைகளையும் சேர்த்து வருணனைகளைப் புகுத்தித் தம் சொந்தச் சரக்குப் போலத் தரமுயன்றார். ரங்கராஜு அவற்றைத் துப்பறியும் கதைகளாக மாற்றிக் கொடுத்தார்” 

ஜே.ஆர்.ரங்கராஜு ( 1875-1959) வின் முழுப் பெயர்: ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு.
இவருடைய ‘இராஜாம்பாள்’ நாவலைப் பற்றிக் ‘கல்கி’ எழுதிய மதிப்புரையைக் கீழே காணலாம்:


நூல் : இராஜாம்பாள்
ஆசிரியர் : ஜே.ஆர். ரங்கராஜு


'மோசம் போனேன்...' என்னும் தலைப்பில் கல்கி எழுதிய நூல் மதிப்புரை


''நான் யார்? என்ற விசாரணையில் இறங்கிய வேதாந்திகள் அதிலிருந்து மறுபடி வெளிக்கிளம்புவதே யில்லையென்று கேள்விப்பட்டிருக்கிறோம் - அதாவது உண்ட உணவு ஜீரணமாகும்வரையில் பசி வந்ததோ இல்லையோ, வேதாந்த சித்தாந்தங்கள் எல்லாம் பறந்து போய் ''நான் கேவலம் ஒரு வேளைப் பசி தாங்கமுடியாத ஒர் அற்பப் பிராணி'' என்ற ஞானம் அவர்களுக்கு உண்டாகிறது. உடனே பக்கத்திலுள்ள ''பிராமணாள் கிளப்''பில் நுழைந்து ''முக்கால் சேர் காப்பி கொண்டா!'' என்று கதறுகிறார்கள். ''நான் யார்?'' என்ற வேதாந்த விசாரணை ஒரு புறமிருக்க, ''பதினைந்து வருஷத்திற்கு முன்பிருந்த நான் யார்? இப்போதுள்ள நான் யார்? இருவரும் ஒன்று தானா? வேறு வேறு ஆசாமிகளா? என்ற சந்தேகம் நம்மெல்லாரையும் சிலசில சமயம் பிடித்துக் கொள்கிறதல்லவா?


அந்தக் காலத்திலே நாம் செய்த சில காரியங்களை நினைத்துக் கொண்டால் நமக்கே சிரிப்பு, சிரிப்பாய் வருகிறது. அப்போது நாம் ரஸித்த விஷயங்களெல்லாம் இப்போது சுத்த அசட்டுத்தனமாய்த் தோன்றுகின்றன. அப்போது நினைத்தாலே வெட்கமாயிருக்கிறது. நமக்கு மட்டுந்தான் இது என்பதில்லை. பெரிய பெரிய மனிதர்களுடைய சமாசாரங்கூட இப்படித்தான்.

இன்றைய தினம் நாம் உலக சிரேஷ்டர் என்று கொண்டாடி பயபக்தி விசுவாசத்துடன் வரவேற்கும் மகாத்மா காந்தியை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு மாதத்துக் குழந்தையாயிருந்தபோது அவருடைய வீட்டில் நடந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தைக் கவனிக்கலாம்.

தாயார் குழந்தையைத் தொட்டிலில் இட்டு, அண்ணணைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சமையலறையில் காரியமா யிருக்கிறாள். அண்ணன் திடீரென்று ''அம்மா! ஒடி வா! ஒடி வா! ஓர் அதிசயம்!'' என்று கத்துகிறான். அந்த கூச்சலைக் கேட்டு அம்மா, அப்பா எல்லாரும் ஓடி வருகிறார்கள்.

''என்னடா அதிசயம்?''

''குழந்தை வாயில் விரல் போட்டிண்டிருக்கு, அம்மா!'' அவ்வளவுதான்; ஒரே அமர்க்களம் . ''ஆமாம்; போட்டிண்டிருக்கு, போட்டிண்டிருக்கு!'' என்று அம்மா குதிக்கிறாள்; அப்பா கூத்தாடுகிறார்.

மெதுவாகக் கட்டை விரலை வாயிலிருந்து எடுக்கிறார்கள். குழந்தை 'வீல்' என்று கத்துகிறது. மறுபடியும் போடுகிறார்கள். அழுகை நின்று விடுகிறது.

அந்தக் கட்டை விரலில் அப்படி என்னதான் ருசியிருக்குமோ?

அது அந்தக்காலம்! இப்போது வேண்டுமானால், யாராவது காந்திஜியைப் பேட்டி கண்டு அந்த நாளை ஞாபகப்படுத்தி, ''தங்கள் கைக் கட்டை விரலில் ஏதாவது தேன், கீன் ஊறுகின்றதா?'' என்று கேட்டுப் பாருங்கள். பொக்கை வாய் சிரிப்பைத் தவிர வேறு பதில் கிடைக்காது.

எல்லாருடைய விஷயமும் இப்படித்தான். அந்தக் காலத்தில் நமக்கிருந்த ருசிகள் எல்லாம் இப்பொழுது மாறிவிட்டன.

அப்போது நாம் பாட்டிகளிடம் கேட்ட ''ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு இராஜாவாம்'' என்று தொடங்கும் கதைகள் நமக்குப் பரமானந்தம் அளித்தன. காக்கை, நரி, கழுதைகளின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் சாப்பாட்டு நினைவுகூட இருப்பதில்லை. இப்போதோ 'விகட'னில் சிறுவர் பகுதிப் பக்கங்களை அப்படியே புரட்டித் தள்ளிவிட்டு மேலே படிக்கிறோம்.

அப்போது கேட்டு அநுபவித்த பாட்டுக்கள் எல்லாம் இப்போது சுத்த அபத்தமாய்த் தோன்றுகின்றன. அந்நாளில் இரவெல்லாம் கண் விழித்து படித்த புத்தகங்களோ? கடவுளே! இப்போது கூலி கொடுத்துப் படிக்கச் சொன்னால் கூடப் படிக்க மாட்டோம்!

ஆகவே, பதினைந்து வருஷத்துக்கு முந்தியிருந்த ''நானும்'' இப்போதுள்ள ''நானும்'' ஒரே ஆசாமிதானா என்ற சந்தேகம் எனக்கு மிகவும் பலமாக உண்டு. இதனால்தான் 'இராஜாம்பாள்' என்னும் நாவலின் 26ஆம் பதிப்பு மதிப்புரைக்காக வந்து மூன்று மாதத்துக்கு மேலாகியும் அதை எடுத்துப் படிப்பதற்குப் பயப்பட்டுக் கொண்டிருந்தேன்.

நமது வாழ்நாளில் என்ன என்ன விஷயங்கள் மனதில் ஆழ்ந்து பதிகின்றனவோ அவைதாம் அந்திம காலத்தில் மனதில் தோன்றும் என்று சொல்கிறார்கள். காலஞ்சென்ற கோபாலகிருஷ்ண கோகலே மரணத் தறுவாயிலிருந்த போது ''பகவானை நினையுங்கள்'' என்று பக்கத்திலிருந்தவர்கள் சொன்னார்களாம். அவர் ஆன மட்டும் முயற்சி செய்து பார்த்துவிட்டுக் கடைசியில் ''என்ன செய்வேன்? கண்ணை மூடினால் இந்தியாவின் பொருளாதாரம் சம்பந்தமான புள்ளி விவரங்களும், அரசியல் அமைப்பு விதிகளும், சட்டங்களும், சட்ட நுட்பங்களுத்தான் மனதின் முன் நிற்கின்றன. என்ன முயன்றாலும் பகவான் நினைவு வரவில்லை'' என்றாராம்.

இதுபோலவே என்னுடைய அந்திம நாளில் மனதில் தோன்றும் விஷயங்களுக்குள் ''மோசம் போனேன், கோபாலா! என்னைச் சுடலை மாடன் கோவில் தெரு 29வது நம்பர் வீட்டிலுள்ள குதிரில்...'' என்னும் வாக்கியம் முதன்மையாக இருக்குமென்று நம்புகிறேன்.

சென்னைப் பட்டணத்திலிருந்து எங்கள் கிராமத்துக்கு வந்த ஒருவர் ''இராஜாம்பாள்'' என்னும் துப்பறியும் நாவலைக் கொண்டு வந்தார். அவர் அதைப் படித்து முடிக்கும் வரையில் பக்கத்திலேயே காத்திருந்து அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். அன்றிரவு புகைந்து கொண்டிருந்த சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் புத்தகத்தை ஒரே மூச்சாகப் படித்து முடித்து இரவு சுமார் மூன்று மணிக்குத் தூங்கச் சென்றது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது.


மறுநாள் பொழுது விடிந்ததும் மறுபடியும் ஒரு தடவை அடியிலிருந்து கடைசிவரையில் படித்து முடித்தேன். புத்தகத்தைப் பற்றி அப்போது நான் கொண்ட அபிப்பிராயம் என்னவென்பதை உடனே என் நண்பனிடம் தெரிவித்தேன். அது என்னவென்றால், ''இதோ பார், முத்து! இந்த மாதிரி புத்தகம் தினம் ஒன்று மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டால் வாழ்க்கையில் எனக்கு வேறொன்றும் வேண்டாம். 'ராபின்ஸன் க்ரூஸோ'வைப் போல் தனியாக ஒரு தீவில் கொண்டு போய் விட்டுவிட்டால் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன்'' என்றேன்.

'பாரிஸ்டர் கொக்குதுரை' என்ற பெயரைப் படித்தபோது என்ன சிரிப்பு வந்தது? வக்கீல் துரைசாமி அய்யங்கார் கொக்குதுரையை மண்டையிலடித்துப் பேசிய போதெல்லாம் எவ்வளவு பெருமையாக இருந்தது? இராஜாம்பாள் கொலையுண்ட செய்தி எவ்வளவு திடுக்கிடச் செய்தது? கடைசியில் அவளைக் கோவிந்தன் உயிரோடு கொண்டு வந்து சேர்த்ததும் என்ன ஆச்சரியம், என்ன சந்தோஷம்! அந்த சமயத்தில் ஏதோ ஒரு தேர்தல் நடந்து துப்பறியும் கோவிந்தனும், லோகமான்ய திலகரும் அத்தேர்தலில் போட்டியிட்டார்களானால் துப்பறியும் கோவிந்தனுக்கே என்னுடைய வோட்டைக் கொடுத்திருப்பேன்!

இளம் பிராயத்தில் இவ்வளவு தூரம் எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட புஸ்தகம் இப்போது மற்றும் பலவற்றைப் போல் ரஸமற்றதாய்த் தோன்றப் போகிறதே என்ற பயத்தினால்தான் அதைப் படிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். இரண்டு, மூன்று தடவை ஞாபகப்படுத்தப்பட்ட பின்னர் எடுத்துப் படித்த போது மேற்சொன்ன பயத்துக்கு அதிக காரணமில்லை யென்றறிந்து பெருமூச்சு விட்டேன்.

மேனாட்டில் ஆசிரியர்கள் அற்புதமான நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதுகிறார்களென்றும், தமிழ்நாட்டில் அவ்வாறு எழுதக் கூடியவர்கள் இல்லையென்றும் சிலர் அடிக்கடி சொல்வதைக் கேட்கிறோம். மேனாட்டு ஆசிரியர்கள் மகா கெட்டிக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களைத் தமிழ்நாட்டில் கொண்டு வந்து விட்டுக் கதை எழுதச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும் அவர்கள் கெட்டிக்காரத்தனமெல்லாம், முழிமுழியென்று முழிப்பார்கள்.

சுமார் ஒரு வருஷ காலத்திற்குப் பிறகு சென்ற வாரத்தில் மேனாட்டு மாத சஞ்சிகை யொன்றை நான் படித்தேன். அதில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் எட்டுக் கதைகள் காதலை அடிப்படையாகக் கொண்டவை. அவைகளின் சாராம்சத்தைக் கீழே தருகிறேன்.

1. ஐம்பது வயதான மனிதன் ஒருவன் வாலிபனைப் போல் குதூகலமுள்ளவனாயிருக்கிறான்; ஓர் இளம் பெண்ணுக்கும் அவனுக்கும் இடையே நேசம் உண்டாகிறது; அம்மனிதனுடைய சொந்த மனைவி இதை அறிந்தாள். அவனுக்குச் சில சமயம் காச நோய் வருவதுண்டு; சில அபத்தியமான காரியங்களைச் செய்து அந்தப் பெண்ணின் முன்னிலையில் தன் புருஷனுக்கு காசம் வருமாறு செய்கிறாள். அப்போது அவன் ஒரு நோயாளிக் கிழவன் என்பதை அவ்விளம்பெண் உணருகிறாள். அத்துடன் அவர்கள் காதல் முடிகிறது.

2. மனைவியை இழந்த ஒரு கணவன் தனது குழந்தையைச் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் விடுகிறான். அக்குழந்தைக்குச் சிகிச்சை செய்த 'நர்ஸி'ன் மேல் அவன் காதல் கொண்டு முடிவில் அவளைக் கலியாணம் செய்து கொள்கிறான்.

3. இரண்டு இளைஞர்கள். ஒரு பெண். அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணைப் பற்றி விளையாட்டாகப் பரிகசித்து எழுதியதை மற்றவன் எழுதியதாக அந்தப் பெண் எண்ணிக் கொண்டு அவன் மேல் காதல் கொண்டிருந்தும், தன்னிடம் வர வேண்டாமென்று சொல்லி விடுகிறாள். தன் தகப்பனாருடைய தூண்டுதலால் மற்றொருவனைக் கலியாணம் செய்து கொள்ள இசைகிறாள். கலியாணம் நடப்பதற்குக் கொஞ்சம் முன்னால் அவளுக்கு உண்மை தெரிந்து பழைய காதலனையே மணந்து கொள்கிறாள்.

4. வட துருவப் பிரதேசங்களில் ஸர்வே செய்வதற்காக ஒரு கப்பல் போகிறது. அங்கே எஸ்கிமோப் பெண் ஒருத்தியின் காதல் காரணமாக ஒரு கொலை நடக்கிறது.

5. ஒரு ஹோட்டல்காரனுடைய வளர்ப்புப் பெண்ணை டம்பாச்சாரி ஒருவன் இச்சிக்கிறான். அவளை அடைவதற்காக அந்த ஹோட்டல்காரன் மீது பொய்யான கொலைக்குற்றம் சாட்டுகிறான். பெண் தன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக அவனுக்கு இணங்கச் சம்மதிக்கிறாள். கடைசி நேரத்தில் உண்மைக் குற்றவாளி வெளிப்பட்டு டம்பாச்சாரிக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.

6. உலக வாழ்க்கையில் வெறுப்புக் கொண்ட ஒரு பத்திராதிபரிடம் கையெழுத்துப் பிரதியுடன் ஓர் இளம்பெண் வருகிறாள். இருவரும் காதல் கொண்டு எகாந்தமான ஒரு காட்டுப் பிரதேசத்திற்குப் போய் வசிக்கிறார்கள். அங்கே ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவன் அவர்களுடைய குடிசையில் வந்து சரணாகதி அடைகிறான்; பெண் அவனுக்கு அபயமளிக்கிறாள்; புருஷன் அவன் மீது பொறாமை கொண்டு போலீஸ்காரரிடம் காட்டிக் கொடுத்து விடுகிறான். அந்தப் பெண், கைதியைப் பின் தொடர்ந்து சென்று சிறைக்கு வெளியே இருந்து வேண்டிய உதவி செய்து வருகிறாள். கடைசியில் அவன் இறந்த பிறகு புருஷனிடம் வந்து சேருகிறாள்.

7. ஷாங்காயில் அமெரிக்கத் தூதர் நடத்திய விருந்துக்குப் பிரிட்டிஷ் தூதரின் காரியதரிசி கழுத்தில் கருப்புச் சுருக்குடன் போய் விடுகிறான். அதன் பலனாகப் பெரிய தகராறு ஏற்பட்டு விடுகிறது. கடைசியில் அவனுடைய காதலியான அமெரிக்க தூதரின் பெண் சிபார்சினால் சமரசம் ஏற்படுகிறது.

8. கடைகளில் வேலை செய்த சில பெண்கள் சில இளைஞர்களுடன் விடுமுறை நாளைக் கழித்துவர பிரயாணம் செய்கிறார்கள். எல்லாரிலும் சாதுவான ஒருத்தியைச் சமைக்கச் செய்யச் சொல்லிவிட்டு மற்றவர்கள் ஆற்றில் படகோட்டிக் கொண்டு செல்கிறார்கள். எல்லாரும் போன பிறகு அங்கு ஒரு இளைஞன் வந்து சேருகிறான். அவனும் சமையலுக்கு விடப்பட்ட பெண்ணும் காதல் கொண்டு கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

இவ்வளவு கதைகளும் மேனாட்டாரின் சமூக வாழ்க்கைக்கு முற்றும் பொருத்தமாகவும், இயற்கையாகவும் காணப்படுகின்றன. இதே விதமாக ஆங்கில பாஷையில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான கதைகளும் நாவல்களும் எழுதப்படுகின்றன. அவைகளில் மிகப் பெரும்பாலானவை காதல் சம்பவங்களே.

தமிழ்நாட்டில் நல்ல கதைகள் எழுதப்படவில்லையென்றால் எங்கிருந்து எழுதுவது?

வரதக்ஷணையின் கொடுமை, சிறு பெண்ணைக் கிழவன் கலியாணம் செய்து கொள்வது, பால்ய விதவையின் துயரங்கள் - இவைகளைப் பற்றியே திரும்பத் திரும்ப நமது நாட்டில் கதைகளும், நாவல்களும் எழுதப்படுகின்றனவென்றால் அதற்கு யார் என்ன செய்யலாம்?

நமது சமூக வாழ்க்கை காதல் கதைகளும், நாவல்களும் எழுதுவதற்குப் பொருத்தமானதாய் இல்லையென்பது உண்மை. (இது நல்லதா, கெடுதலா என்பது வேறு விஷயம்)

இத்தகைய சாரமற்ற சமூக வாழ்வை ஆதாரமாக வைத்துக் கொண்டு ஸ்ரீமான் ரங்கராஜு இவ்வளவு ருசிகரமான நாவலை எப்படி சிருஷ்டித்தார் என்று எனக்குள்ள ஆச்சரியத்தைச் சொல்லி முடியாது. இதை உத்தேசிக்கும் போது இந்த நாவலில் பொருத்தமற்றதாகக் காணப்படும் சில விஷயங்களைப் பெரிதாகக் கருதக் கூடாதென்று தோன்றுகிறது.

இந்த நாவலின் கதாநாயகியாகிய இராஜாம்பாள் இப்போதுதான் வயது பன்னிரெண்டு பூர்த்தியாகி பதின்மூன்றாவது வயதில் இருப்பவள். அவளுடைய பேச்சும், சிந்தனையும், செய்கைகளும் பதின்மூன்று வயதுப் பெண்ணுக்க உரியவைகளாவென்ற சந்தேகம் இந்தத் தடவை படித்தபோது எனக்கு ஏற்பட்டது. அவ்வாறே கோபாலனைக் காதலிக்கும் லோகநாயகி, கொலையுண்ட தாஸி பாலாம்பாள் இவர்களுடைய செய்கைகளெல்லாம் நடக்கக் கூடியனவா என்ற சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றன. ஆனால் இப்படியெல்லாம் பார்த்தால் பின்னர் நாவல்தான் எப்படி எழுதுகிறது?

ஸ்ரீமான் ரங்கராஜு மிகுந்த தாராள மனதுடையவரென்பதில் சந்தேகமில்லை. அவருடைய கதாபாத்திரங்களெல்லாம் கோடீஸ்வரார்களாகவும், லக்ஷாதிபதிகளாகவும் இருக்கின்றனர். சாமிநாத சாஸ்திரிகள் தம்முடைய மைத்துனன் நடேச சாஸ்திரிக்கு அறுபது லக்ஷம் ரூபாய் பெறுமான கிராமங்களையும், தம் மகள் இராஜாம்பாளுக்கு மற்றோர் அறுபது லக்ஷம் ரூபாய் பெறுமான கிராமங்களையும் உயில் எழுதி வைக்கிறார். 'அர்பத்நாட் பாங்கி' யில் ('அர்பத்நாட் பாங்க்' என்று வெள்ளைக்காரர்கள் நடத்திய ஒரு பிரபலமான வங்கி அந்த நாட்களில் சென்னையில் இருந்தது. அது திவாலானதும், அதில் பணம் போட்டிருந்த பலர் தெருவுக்கு வந்ததும் அந்த நாளைய 'தலைப்புச் செய்தி) வேறு அவருக்கு ரொக்கம் இருக்கிறது. நீலமேக சாஸ்திரிகள் தம்முடைய கல்யாணத்திற்குப் பூர்வாங்கமான ஏற்பாடுகளில் ஐந்து லக்ஷம் ரூபாய் செலவு செய்கிறார். லோக சுந்தரியின் சொத்துக்குக் கணக்கு வழக்கே இல்லையென்று தோன்றுகிறது.

ஸ்ரீமான் ரங்கராஜுவின் தமிழ்நடை பேசும் நடை; எனவே உயிருள்ள நடை. அவருடைய நாவல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதற்கு இது ஒரு முக்கிய காரணமென்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு நெருடல். இராஜாம்பாளின் வாய் மொழியாக அவர் பின்வரும் வாக்கியத்தை அமைத்திருக்கிறார்.

''ஜோஸ்யர்களுடைய வார்த்தையை லக்ஷ்யம் செய்யாமல், என் தகப்பனார் பொருத்தமில்லாவிட்டாலும் தங்களுக்கே என்னைக் கலியாணஞ் செய்து கொடுப்பேனென்று சொன்னவுடனே, நீலமேக சாஸ்திரியும் இராமண்ணாவும் யோசனை செய்து, போலீஸ் புலியாகிய மணவாள நாயுடுவுக்குப் பலமாய் லஞ்சங் கொடுத்துத் திருட்டு நகையை எங்கள் வீட்டில் கொண்டு வந்து வைத்து, எனது தகப்பனாரைப் பிடித்த பிடியிலேயே போலீஸ் ஸ்டேஜனில் அடைத்து அவர் பயப்படும்படியான வகைகளெல்லாம் செய்து, கடைசியில் இராமண்ணாவையும் உள்ளேவிட்டு, நயத்திலும் பயத்திலும் என்னை நீலமேக சாஸ்திரிக்குக் கலியாணஞ் செய்து கொடுப்பதாக என் தகப்பனாரை வாக்களிக்கும்படி சொல்ல, அவர் தம் பிராணன் போனாலும் அப்படிச் செய்ய மாட்டேனென்று சொன்னதின் பேரில், தங்களைப் பிடித்து ஜெயிலில் அடைக்க உத்தேசித்திருப்பதாகவும், நீலமேக சாஸ்திரி இன்னும் மூன்று தினங்களில் அவர் ஹிம்சைப்படுத்தி அநியாயமாய் ஜெயிலுக்கு அனுப்பிய ஓர் கைதியினால் கொல்லப் படுவாரென்றும் இராமண்ணா பிரமாணமாய்ச் சொன்னதின் பேரில், என் தகப்பனார் நீலமேக சாஸ்திரிக்கு என்னைக் கலியாணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாதென்னும் எண்ணத்தைக் கொண்டு வாக்களித்ததாகவும் என்னிடம் சொன்னார்.''

இதைப் படித்தபோது, இப்படிப் பேசியது உயிரும், இரத்தமும், தசையும் உள்ள ஒரு பெண்ணா அல்லது 'ரோபோ' என்று மனிதனைப் போலவே பேசிக் காரியமும் செய்யும் புதிய இயந்திரம் கண்டுபிடித்திருப்பதாய்ச் சொல்லுகிறார்களே, அதுவா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதிலும் இந்த வாக்கியம் இராஜாம்பாள் கோபாலனிடம் சொன்னதாக கோபாலன் கோவிந்தனிடம் சொல்வதில் காணப்படுகிறது. எனவே, இந்த கோபாலன் என்பவன் உண்மை மனிதனா, 'ஹம்பக்' பேர்வழியா என்னும் சந்தேகம் உதயமாயிற்று. ஆனால் இவையெல்லாம் சில்லரை விஷயங்கள். முக்கியமான அம்சத்தில், அதாவது கதையின் சுவையைப் பொருத்தவரை அந்தக் காலத்தில் நான் கொண்ட அபிப்பிராயமே இப்போதும் ஊர்ஜிதமாயிற்று. அன்று போலவே இன்றும் ஒரே மூச்சில் புத்தகத்தைப் படித்து முடித்தேன். புத்தகத்தைக் கீழே வைத்ததும் அடுத்த முறை காஞ்சீபுரம் போனால் கோபாலனையும், இராஜாம்பாளையும், பேரன் பேத்திகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் சாமிநாத சாஸ்திரிகளையும் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று தோன்றியது. அவர்களை ''ஆனந்த விகடன்'' இலவச ஜாப்தாவில் சேர்த்துப் பத்திரிகை அனுப்பலாமேயென்றும் எண்ணினேன்.

''இராஜாம்பாள்'' ஒரு ஜீவசக்தி வாய்ந்த நாவல் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

-ஆனந்த விகடன், 17-12-1934
=================
[நன்றி:  http://www.appusami.com ]


தொடர்புள்ள பதிவுகள்;

கல்கி கட்டுரைகள்

கல்கியைப் பற்றி .

1)

இராஜாம்பாள் 1951-இல் திரைப்படமாக வெளிவந்தது. அதைப் பற்றி ராண்டார் கை ’ஹிந்து’வில் எழுதிய குறிப்புகளைக் கீழ்க்கண்ட கட்டுரையில் படிக்கலாம்.

இராஜாம்பாள் திரைப்படம்: 1951: ராண்டார் கையின் கட்டுரை

2)

ரங்கராஜுவின் ‘மோஹனசுந்தரம்’என்ற நாவலைப் பற்றிய ஒரு திறனாய்வைத் தமிழ் இணையப் பல்கலைக் கழகச் சுட்டியில் படிக்கலாம்.


மோஹனசுந்தரம்: கதைப் பாத்திரங்கள்


செவ்வாய், 11 அக்டோபர், 2011

’தேவன்’ : ஹிந்துவில் ஒரு கட்டுரை

Wodehousian or just William?

Madras miscellany

S. MUTHIAH 18 September, 2011, 'Hindu'


He has been described as the P.G. Wodehouse of Tamil fiction. Bombay-based columnist, V. Gangadhar, in fact, thought him more versatile that Wodehouse, his characters conveying more to readers than Jeeves and company. On the other hand, R.A. Padmanabhan who had worked with Devan (R. Mahadevan) at the Ananda Vikatan says his humorous ‘Rajamani' series started as Devan's original work but gradually derived much from Richmal Crompton's William series. The ‘Thuppariyum Sambu' series too owed much, it was said, to a foreign character, Agatha Christie's Hercule Poirot, Padmanabhan adds. But one in the audience the other day at the first Devan Memorial Lecture organised by the Madras Book Club and Devan Endowments felt that Sambu reminded him of a much later creation, Inspector Clouseau. Not having read Devan, I'm not passing any judgements except to say that from all reports he was extremely popular in the 1940s and 1950s for his humorous writing as well as for his insightful travelogues.

Devan was a product of Government Arts College, Kumbakonam, when that institution was known as the ‘Oxford of the East'. His first efforts in writing were in English and appeared in My Magazine of India which started before its rival, the better-remembered The Merry Magazine from the S.S. Vasan stable; My Magazine also lasted longer. It was published by P.K. Vinayakam and edited by P.R. Rama Iyengar. Devan's humorous sketches in My Magazine caught the eye of R. Krishnamurthy, the Editor of Ananda Vikatan, who thereupon poached him after learning that he wrote equally felicitously in Tamil. Devan proved a success at Ananda Vikatan, his first contributions being talked about in the same breath as Krishnamurthy's, T. Ashokamitran recalled on the occasion of the endowment lecture.

Ashokamitran went on to remember that Devan was subsequently not given his head at Ananda Vikatan and, frustrated, had decided to join All India Radio, helped by a glowing recommendation from Krishnamurthy that encouraged the move. But when Krishnamurthy and Vasan had a difference of opinion on Krishnamurthy's political activism in the Quit India movement and the Ananda Vikatan's famed Editor left in 1940 — only to re-enter the world of journalism with Kalki — Devan, who was awaiting his appointment orders from Government found himself being asked to edit Ananda Vikatan, whose fort he had many a time held while Krishnamurthy was on his travels. Devan was to edit Vikatan from 1940 till his death in 1957. This was the period when he came into his own and his several serials made Ananda Vikatan a runaway leader until Kumudam came onto the scene with its ‘new journalism'.

Sadly, his serials never got published as novels — because Vasan refused him permission — until his death at the early age of 44 when he was at the peak of his creativity. The only one of his novels published in translation was Justice Jagannathan (2004). I'm in the middle of it, right now, enjoying a story entirely set as a murder trial-in-progress in the Madras High Court. With the action only rarely moving out of the courtroom in its 370 pages, it must indeed have been a Tamil fiction first, if not an international one. If this is a good example of Devan's work, his other novels could well prove as successful in English as they were in Tamil.

From :
Wodehousian or just William? 

* Please also see Sri Muthiah's subsequent column:

Devan days

====

A related article about 'My Magazine'

More old journals


ஞாயிறு, 17 ஜூலை, 2011

’தேவன்' : தினமணிக் கட்டுரை

துப்பறியும் "தேவன்'!
பரிபூர்ணா


[ நன்றி: தினமணி, 26 Jun 2011 ]

உலகில் உள்ள அனைவரையும் அழவைப்பது என்பது எல்லோராலும் முடியும் என்பது மட்டுமல்ல, அது எல்லோருக்கும் கைவந்த கலையும்கூட. ஆனால், சிரிக்க வைப்பது சிலரால், அதுவும் மிகச் சிலரால் மட்டுமே முடியும். அந்த வகையில், தன்னுடைய படைப்புகளின் மூலம் வாசகர்களை வயிறு குலுங்கச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நகைச்சுவை எழுத்தாளர் "தேவன்' என்கிற ஆர்.மகாதேவன்.

"அழுபவனை சிரிக்க வைக்க வேண்டும்; சிரிப்பவனை சிந்திக்க வைக்க வேண்டும், அதுதான் என் வாழ்வின் லட்சியம்'' என்று எம்.ஜி.ஆர். ஒரு திரைப்படத்தில் வசனம் பேசியிருக்கிறார் (நான் ஏன் பிறந்தேன்?). இந்த வசனம் முழுக்க முழுக்க தேவனுக்குத்தான் பொருந்தும்.

துப்பறியும் சாம்புவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள், மறக்கவும் முடியாது. தேவனின் எழுத்தாளுமை அப்படிப்பட்டது. நகைச்சுவை உணர்வும், நுட்பமான நுண்ணறிவும், பன்முக ஆற்றலும் கைவரப்பெற்றவர்; நகைச்சுவை இலக்கியத்தை வளர்த்து வாழவைத்தவர்.

ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற எண்ணிக்கையை விட, அவர் வாழ்ந்த காலத்தில் என்னென்ன சாதனைகளைப் புரிந்தார் என்பதுதான் முக்கியம். அதைத்தான் வள்ளுவப்பெருந்தகை

"தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று'' (236)

என்றார். இந்தக் குறளுக்கு, உலகில் தோன்றுதல் (பிறத்தல்), நல்லோர் - சான்றோர் சூழ்ந்த அவையில் தோன்றுதல் - இப்படிப் பல விளக்கங்களைக் கூறலாம். எங்கே எப்படித் தோன்றினாலும் அதில் தலைமைத்துவத்துடன் திகழவேண்டும் என்பதுதான் இதன் பொருள். அவ்வாறு இல்லாதபோது உலகில் தோன்றுவதோ (பிறப்பதோ). சபையில் தோன்றுவதோ வீண் என்கிறார். எதற்கு இத்தனை பீடிகை என எண்ண வேண்டாம். மனிதப் பிறவி எடுத்த அனைவரும் பிறரைச் சிரிக்க வைக்க முடியவில்லை என்றாலும், அழவைக்காமலாவது இருக்க வேண்டும். அதுவே மிகச் சிறந்த நாகரிகமும் அறமுமாகும். இந்த நல்ல நாகரிகத்தை - அறத்தை நாம் நகைச்சுவை எழுத்தாளர் தேவனிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.

தேவன், இவ்வுலகில் வாழ்ந்த காலம் 43 ஆண்டுகள்தான். ஆனால், அதற்குள் எத்தனை எத்தனை படைப்புகள்; எத்தனை பேரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார். உலகில் பிறந்து, வெறுமனே வாழ்ந்துவிட்டுப்போக நாம் என்ன அஃறிணை படைப்பா? ஆறறிவு படைத்த உயர்திணை அல்லவா? அதற்காகத்தான் இத்தனை விளக்கங்களும்!

÷கயிலைக்கு இணையாகப் புராணங்களில் கூறப்படும் மத்தியார்ஜுனம் என்கிற திருவிடைமருதூரில் (குடந்தையை அடுத்துள்ள ஊர்) 1913-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்வாராம். மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பாராம். இதனால்தான் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியதாம்.

÷பின்னர், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். பிறகு பள்ளி ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். 21-வது வயதில் "ஆனந்த விகடன்' இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். ஆனந்த விகடனில், கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் நகைச்சுவை கட்டுரைகளையும் தொடர்களையும் எழுதினார்.

÷பத்திரிகைத் துறையில் இவர் கையாளாத உத்திகளே இல்லை என்று கூறலாம். நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் "தேவன்' என்ற புனைபெயரில் எழுதினார். இவருடைய துப்பறியும் சாம்பு, கோமதியின் காதலன், ராஜாமணி, ரங்கூன் பெரியப்பா, வரப்பிரஸாதி, மறக்கமுடியாது, விச்சுவுக்குக் கடிதங்கள் ஆகிய படைப்புகள் மிகவும் பிரபலமானவை.


÷துப்பறியும் சாம்பு தொலைக்காட்சியில் தொடராகவும், கோமதியின் காதலன் திரைப்படமாகவும் வெளிவந்தன. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், மிஸ் ஜானகி, மைதிலி, கல்யாணி, துப்பறியும் சாம்பு ஆகிய நாவல்கள் மேடை நாடகங்களாக நடத்தப்பட்டன. வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் ஆகிய இரு நாவல்களும் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டன. வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எழுதிய பயண நூல்தான், "ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள்'. இதைத்தவிர "நடந்தது நடந்தபடியே' என்ற பயண நூலையும் எழுதியுள்ளார்.

÷இவை தவிர, அப்பளக்கச்சேரி, பெயர்போன புளுகுகள், ராஜத்தின் மோதரம், கமலம் சொல்கிறாள், போடாத தபால், சரசுவதிக்குக் கடிதங்கள், அதிசயத் தம்பதிகள், கண்ணன் கட்டுரைகள், லட்சுமி கடாட்சம், சி.ஐ.டி. சந்துரு, ராஜியின் பிள்ளை, மல்லாரி ராவ் கதைகள், சின்னஞ்சிறு கதைகள், பிரபுவே உத்தரவு, சீனுப்பயல், மாலதி, போக்கிரி மாமா, மனித சுபாவம், ஏன் இந்த அசட்டுத்தனம், பார்வதியின் சங்கல்பம், சொன்னபடி கேளுங்கள், மோட்டார் அகராதி, ஜாங்கிரி சுந்தரம் - இப்படி புதினம், சிறுகதைகள், கட்டுரைகள், தொகுப்புகள், பயணக் கட்டுரைகள், கதைத் தொடர்கள் என பலவற்றை எழுதிக் குவித்திருக்கிறார்.



÷நீதித்துறை தவிர மற்ற அனைத்துத் துறைகளைப் பற்றி சிறுகதை, நாவல், நாடகம், முதலியவை அதிகம் வெளிவந்துள்ளன. ஆனால், நீதித்துறை பற்றிய விரிவான நாவலோ, நாடகமோ, சிறுகதையோ மிகவும் குறைவு. அந்த மிகப்பெரிய குறையை, "ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' நாவல் மூலம் தேவன் நிறைவு செய்துள்ளார்.

÷நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான நாவல்தான் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இந்நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜஸ்டிஸ் ஜகந்நாதனை அறிமுகப்படுத்தும்போது, தொல்காப்பியர் குறிப்பிடும் "வனப்பு' பற்றி கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

""மனிதனுக்கு யௌவனப் பருவத்திலே ஒரு வனப்பு உண்டு. இந்த வனப்பு கேவலம், இளமையினாலும் உடல் ஆரோக்கிய நிலையினாலும் ஏற்படுவதுதான். எத்தனையோ மகான்கள், பெரியவர்கள், அறிஞர்கள் இந்தப் பருவத்திலே மேலே குறிப்பிட்ட வனப்பை விசேஷமாகப் பெற்றவர்கள் இல்லை. ஆனால், அறுபது வயது ஆகிவிடும்போது, விவரிக்க முடியாத ஒரு கம்பீரமான வசீகரம் அவர்களை வந்து அடைந்து விடுகிறது.

அறிவின் மேன்மையுடன், பண்பட்ட இதயத்தின் சிறப்பும், மேதையின் முதிர்ச்சியும்தான் இந்த வசீகரத்தின் ரகசியம். பார்ப்பவர்களுக்கு, ஒரு முறைக்கு நூறுமுறை இந்த தேஜசைக் காணவேண்டும்; கண்டு, கண்கொட்டாமல் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். ஜஸ்டிஸ் ஜகந்நாதன் வதனத்திலும் இந்த மாதிரியான காந்தமொன்று இருப்பதை எத்தனையோ பேர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்'' - கனிந்த பழம்தான் இனிக்கும் - ருசிக்கும் என்பதை எத்தனை அழகாக, அருமையாக எழுத்தில் கொண்டுவந்துள்ளார் தேவன்.

÷""ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தமாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ, இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்தபோது அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் மட்டுமல்ல, வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன்' என்று கல்கி புகழாரம் சூட்டியுள்ளார்.

""தேவனின் கதைகளை ஒன்றுவிடாமல் படித்தவன் நான். அவர் ஒரு தலை சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். என்போன்ற எழுத்தாளர்களுக்கு அவர் முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார். தேவன் என்றைக்கும் இருப்பார். அவர் நிஜமாகவே தேவன்தான்'' என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.

÷சென்னை - தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருமுறை பதவி வகித்திருக்கிறார் தேவன். பள்ளி ஆசிரியர், பத்திரிகையாசிரியர், பத்திரிகை நிர்வாக ஆசிரியர், நகைச்சுவை எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்ட தேவன், 1957-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி காலமானார்.

÷தேவன் நினைவாக, ஆனந்தவிகடன் 5.5.57-இதழில், "விகடனின் மகத்தான நஷ்டம்' என்ற தலைப்பில், "கடந்த 23 ஆண்டுகளாக அவர் (தேவன்) எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண்முன் இருக்கின்றன, ஆனால், தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி எழுதிய பேனா மன்னர், அவர் திருவடிகளிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்' என்று நினைவஞ்சலி செய்துள்ளது.

தொடர்புள்ள சில பதிவுகள்:

தேவன் நினைவு நாள் , 2010

தேவன்: கல்கி என்னும் காந்த சக்தி

தேவன்: நினைவுகள் -2

வெள்ளி, 6 மே, 2011

கவிதை இயற்றிக் கலக்கு - 6

’ கவிதை இயற்றிக் கலக்கு!’ : சில மதிப்புரைகள்:




1) ‘அமுதசுரபி’ ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ஏப்ரல் 2011 ‘அமுதசுரபி’ இதழில் எழுதிய நூல் விமரிசனம்:



2)   கவிமாமணி இலந்தை சு. இராமசாமியின் அணிந்துரையிலிருந்து சில பகுதிகள் :

. . . பேராசிரியர் பசுபதி ”கவிதை இயற்றிக் கலக்கு” என்னும் தலைப்பில் பாடம் நடத்தி மாணவர்கள் தெளிவாய் அறிந்து கொண்டு கவிதைகள் எழுதி, பாடங்களின் செழுமையையும் பாடம் நடத்தியவரின் திறமையையும் நிரூபித்திருக்கிறார்கள். அவர் நடத்திய பாடங்கள், அதன் பின் பலத்த ஆராய்ச்சியின் விளைவாக அவர் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுதியாக இந்நூல் வெளிவருகிறது. நானறிந்த வரையில் இது ஆறாண்டு கால உழைப்பின் தொகுப்பு . . . . கவிதை இலக்கணம் பற்றி என்னென்ன நூல்களெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து தனது ஆய்வின் பயனாகக் காலப்போக்கில் நிகழ்ந்துள்ள மாறுபாடுகளுக்கேற்ப யாப்பிலக்கண ஆய்வு நூலாக இதை அளித்திருப்பதுதான் இதன் சிறப்பு. . . . . பசுபதி அவர்கள் பேராசிரியராக இருக்கிற காரணத்தால் இதைப் பயில்வோருக்கு என்னென்ன ஐயங்கள் வரலாம் என்பதை முன் கூட்டியே ஆராய்ந்து அவ்வையங்களைத் தானே எழுப்பி விளக்கம் அளித்துவிடுகிறார். . . . அசை விருத்தங்கள், சந்த விருத்தங்கள், வண்ணம் ஆகியவற்றின் வேறுபாடுகளை இவ்வளவு விளக்கமாக நான் வேறு எந்த நூலிலும் கண்டதில்லை. அவற்றைப் பற்றிய எல்லா நூல்களையும் அலசி ஆராய்ந்து அவற்றிற்கான சரியான எடுத்துக்காட்டுகளுடன் அவர் விளக்கியிருப்பது பாராட்டிற்குரியது. . . இந்நூல் தமிழ் பேசும் இடங்களில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், நூலகங்களிலும் இருக்க வேண்டிய ஒன்று.

3) பேராசிரியர் வே.ச. அனந்தநாராயணனின் நட்புரையிலிருந்து சில பகுதிகள்:

. . . அடிப்படைத் தமிழறிவுடன் முறையாகக் கவிதை எழுதுவதில் ஆர்வங் கொண்டவர்களோடு தோழமை கொண்டாடி அவர்கள் உள்ளப் பாங்கிற்கேற்பத் தற்கால அணுகு முறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்ட இந்நூல் இவ்வகையில் ஒரு திசை திருப்பம் என்று கூறலாம். . . ஒரு நூலுக்குப் பெருமை தருவது அதன் கருப்பொருள் மட்டுமன்றி அதற்கான உண்மையானதும் தெளிவானதுமான விளக்கத்தைக் கூறும் நூலாசிரியனின் திறனும் ஆகும். பல்கலைக் கழக ஆசிரியராகப் பணியாற்றிய தமது அனுபவத்தின் முழுப்பயனையும் இந்த நூலில் பசுபதி தர முயன்றிருக்கிறார். அதன் விளைவாக, நூலாசிரியரே மாணவனாக மாறிக் கற்போரின் உள்ளத்தை அறிந்து எழுதும் அரிய நிகழ்ச்சியை நாம் நூலின் எல்லாப் பகுதிகளிலும் தெளிவாகக் காண்கிறோம். . . . நூலின் பிற்பகுதியில் விரிவாகத் தரப்பட்டுள்ள சந்தப்பாக்கள், வண்ணப் பாக்கள் பற்றிய இலக்கண விளக்கம் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்த ஒன்று. இயற்றமிழை இசை, நாடகத் தமிழோடு இணைப்பது எழுத்துச் சேர்க்கைகளின் காலஅளவு ஆகும். குரு, லகு என்னும் கால அளவு கொண்ட குறிப்புகள் கொண்ட இப்பாவடிவங்கள் பற்றி எழுதப்பட்டுள்ள பண்டைய நூல்களைப் போல அன்றி, பசுபதி தமக்கே உரிய எளிய, ஆயின் கருத்துச் செறிந்த நடையில் தமது விளக்கங்களை அமைத்த விதம் மிகவும் அருமையானது. . . மற்ற யாப்பிலக்கண நூல்களில் காண இயலாத இந்தப் பயிற்சிப் பகுதியை இந்த நூலின் மிகச் சிறந்த தகுதிகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். தரப்பட்டுள்ள பயிற்சிகளின் பரப்பும் ஆழமும் அவற்றைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வின் தீவிரத்தைக் காட்டுகின்றன. . . . இறுதியாக, இலக்கண நூல்கள் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கின்றது பேராசிரியர் பசுபதியின் ‘கவிதை இயற்றிக் கலக்கு’. யாப்பிலக்கணத்தை எளிதில் படித்துத் தேர்ச்சியடைந்து தரமான கவிதைகள் படைக்க விரும்பும் யாவருக்கும் இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.


======
கவிதை இயற்றிக் கலக்கு 
பக்கங்கள்: 384 விலை: Rs.180.00


LKM Publication

10, Ramachandra Street,
T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241
கைபேசி : 99406 82929.

=====
 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

திங்கள், 21 மார்ச், 2011

கவிதை இயற்றிக் கலக்கு - 5

'கவிதை இயற்றிக் கலக்கு!’ நூல் வெளியீட்டு விழா : 





அன்றெடுக்கப் பட்ட சில படங்கள் :

படத் தொகுப்பு-1

படத் தொகுப்பு-2

விழாவுக்கு வந்தவர் ஒருவரின் விமரிசனம்
=============
                             



பொருளடக்கம்

பகுதி 1
========
1. அறிமுகம்
2. கவிதை உறுப்புகள்
3. எழுத்துகள்
குறில், நெடில், ஒற்று, மாத்திரை
4. நேரசை
5. நிரையசை
6. பாடலை அலகிடுதல்
7. சீர்கள்
ஓரசை, ஈரசை, மூவசை, நான்கசைச் சீர்கள்,
8. தளை, அடி, ஓசை
9. தொடை -1: மோனை
10. தொடை -2: எதுகை
வருக்க, இன, உயிர், நெடில், இரண்டடி எதுகைகள்;
இடையெட்டெதுகை, மூன்றாம் எழுத்தொன்றெதுகை,
வழியெதுகை, ஆசிடை இட்ட எதுகை, இயைபு.
11. குறள் வெண்பா : முதலடி
12. வெண்பாவின் ஈற்றடி
13. அலகிடுதல் : சில நுண்மைகள்
குற்றியலிகரம், அளபெடை, ஆய்தம். ஐகாரக் குறுக்கம்
ஒற்று நீக்கி அலகிடல்.
14. குறள் வெண்செந்துறை
15. ஆசிரியப்பா
நிலை மண்டில ஆசிரியப்பா, ( தனிச்சொல் பெற்றுவந்த ) நிலை மண்டில ஆசிரியம். நேரிசை ஆசிரியப்பா, (அடிக்குள் எதுகை பெற்று வரும் ) ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா , அடிமறி மண்டில ஆசிரியப்பா
16. வஞ்சித் துறை
வஞ்சித் தாழிசை
17. வஞ்சி விருத்தம்
18. கலிவிருத்தம்
19. தரவு கொச்சகக் கலிப்பா
20. ஆசிரியத் தாழிசை
21. கலித்தாழிசை
22. வெண்பா - 1 : குறள், சிந்தியல்
குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா (நேரிசை, இன்னிசை )
23. வெண்பா - 2: அளவியல்
நேரிசை, இன்னிசை, முடுகு, இருகுறள் நேரிசை,
ஆசிடை நேரிசை வெண்பாக்கள்.
24. வெண்பா – 3
பஃறொடை வெண்பா(நேரிசை, இன்னிசை), கலிவெண்பா (இன்னிசை, நேரிசை ), சவலை வெண்பா, மருட்பா, வெண்கலிப்பா.
25. கலித்துறை - 1
கலிமண்டிலத் துறை,
26. கலித்துறை - 2
வெளிவிருத்தம்,
27. கட்டளைக் கலித்துறை
விதிகள், நேரசைக் கட்டளைக் கலித்துறை,
நிரையசைக் கட்டளைக் கலித்துறை, கட்டளைக்
கலித்துறையில் வகையுளி
28. அறுசீர் விருத்தம்
வெண்டளை அறுசீர்
29. எழுசீர் விருத்தம்
30. எண்சீர் விருத்தம்
31. கட்டளைக் கலிப்பா
32. வஞ்சிப் பா
33. கலிப்பா -1
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.
34. கலிப்பா -2
தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா,
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக்
கலிப்பா.
35. கலிப்பா -3
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, வெண்கலிப்பா,
உறழ்கலிப்பா .
36. மற்ற சில பாவினங்கள்
பாக்கள், பாவகைகள், பாவினங்கள், குறள் தாழிசை (குறட்டாழிசை), வெண்டாழிசை, வெள்ளொத்தாழிசை,
வெண்டுறை, ஆசிரியத் துறை, மேல் வைப்பு,
குறும்பா

பகுதி 2
========

37. சந்தப் பாக்கள்: இலக்கணம்
38. சந்த வஞ்சித் துறை, சந்த வஞ்சி விருத்தம்
39. சந்தக் கலிவிருத்தங்கள் -1
40. சந்தக் கலிவிருத்தங்கள் -2
41. சந்தக் கலித்தாழிசை
42. சந்தக் கலித்துறை
43. சந்த அறுசீர் விருத்தம்
44. சந்த எழுசீர் விருத்தம்
45. சந்த எண்சீர் விருத்தம்
46. விருத்தங்களில் ஒன்பது, பத்து, பதினொரு சீர்கள்
47. பன்னிரு சீர், பதினான்கு சீர், பதினாறு சீர் விருத்தங்கள்
48. பரணித் தாழிசை
49. வண்ணப் பாடல்கள் – 1
சந்தங்கள், தொடர் சந்தங்கள், சந்தங்களும், தாள ஜாதிகளும்
50. வண்ணப் பாடல்கள் – 2
வண்ண வஞ்சித் துறை, வண்ண வஞ்சி விருத்தம், வண்ணக் கலி விருத்தம், வண்ணத் தரவு கொச்சகம், வண்ணக் கலிநிலைத் துறை, அறுசீர் வண்ண விருத்தம் .
51. வண்ணப் பாடல்கள் – 3
7 – 26 சீரடி வண்ண விருத்தங்கள்
52. சிந்துகள்- 1
53. கும்மி
இயற்கும்மி, ஒயிற்கும்மி, ஓரடிக் கும்மி .
54. சிந்துகள் -2
சமனிலைச் சிந்து, வியனிலைச் சிந்து.
55. கிளிக்கண்ணி
56. சிந்துகள் – 3
ஆனந்தக் களிப்பு, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, இலாவணி
57. இசைப்பாடல்
58. முடிவுரை

பின்னிணைப்பு :
பயிற்சிகளிலுள்ள சில வினாக்களுக்குரிய விடைகள்

==================

நூல் கிடைக்குமிடம்:

LKM Publication
10, Ramachandra Street,
T.Nagar , Chennai - 600017

தொலைபேசி: 044_2814 2241
கைபேசி : 99406 82929.
கவிதை இயற்றிக் கலக்கு 
பக்கங்கள்: 384 விலை: Rs.180.00



தொடர்புள்ள பதிவுகள்:

கவிதை இயற்றிக் கலக்கு!

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

அகாடமியில் மாலை ஆறு மணி

அகாடமியில் மாலை ஆறு மணி 
‘வாணி’ 

[ஓவியர்  ‘வாணி’ ]


ஓவியர்களிலேயே விகடனில் மிக அதிக காலம் (சுமார் 35 வருடங்கள்) பணியில் இருந்தவர் :வாணி’.  வெங்கடரமணி என்பது அவருடைய  இயற்பெயர். அதைச் சுருக்கி 'வாணி'யாக்கியவர் ’தேவன்’ . 1957 க்குப் பின் விகடனில் இவர் படங்கள் அதிகமாய் வரத் தொடங்கின. 

சென்னையில் சங்கீத ஸீசனில்  சங்கீத அகாடமியில் ஒரு நாள் மாலை :
’வாணி’ வரைந்த  அழகான நகைச்சுவைச் சித்திரம். ( விகடன் 24-12-2008 இதழுடன் இணைப்பு.) 





[ நன்றி: ஆனந்த விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: 

சிரிகமபதநி

சங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம் 

சங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி

மாமாங்க மாறுதல்கள் ! -1 ; ..மாலி-சில்பி

சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்