பக்த துகாராம்
ஐம்பதுகளில் ஒரு நாள்.
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான்
முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன்.
அப்போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் நண்பர் “ நல்லாப் பார்த்துக்கோ! இந்த ‘மழ மழ’ முக முசிரி ஒரு காலத்தில் ஒரு ’கரு கரு’ மீசை வைத்திருந்தார், தெரியுமா? ” என்று சொன்னவுடன் நான் திடுக்கிட்டேன். ஏனென்றால், நான் சிறுவயதில் கேட்டு, ரசித்த எந்தச் சங்கீத வித்வானும் மீசை வைத்துக் கொண்டு இருந்ததாக நினைவில்லை.
அப்போது இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டேன்.
இப்போது ? அறுபதாண்டுகளுக்குப் பின்? அந்த நினைவு வரவே ‘மீசை வைத்த முசிரி’யைத் தேடினேன்.
1938-ஆம் ஆண்டு ’ஆனந்த விகடன்’ தீபாவளி மலரில்
“ பாண்டுரங்கா” என்ற தலைப்பில் மீசை வைத்த முசிரி சுப்பிரமண்ய ஐயரின் ஓர் அழகான முழுப் பக்கப் படத்தைப் பார்த்தேன். அதன் அடியில் கீழ்க்கண்ட வரிகள் :.
முசிரி
சங்கீத உலகிலிருந்து முசிரி சுப்பிரமண்ய ஐயர் தமிழ் டாக்கி உலகத்திற்குப் போனபோது, அதனால் என்ன லாப நஷ்டம் ஏற்படுமோ என்று சங்கீதாபிமானிகள் கவலை கொண்டிருந்தார்கள். முசிரி துகாராமைப் பார்த்த பிறகு, அந்தக் கவலை நிவர்த்தியாயிற்று. முசிரி டாக்கியில் நடிக்கப் போனதினால், டாக்கி உலகத்துக்கு லாபம். சங்கீத உலகத்துக்கு நஷ்டமில்லை என்று ஏற்பட்டது. முசிரிக்கோ லாபமுமில்லை, நஷ்டமும் கிடையாது. துகாராம் படத்துக்காகவே மீசையை வளர்த்து, படம் முடிந்தவுடன் மீசையையும் எடுத்து விட்டாரல்லவா! ஆனால், இனிமேல், முசிரி சுப்பிரமணிய ஐயர்வாள் சங்கீத மேடையில் அமர்ந்து, கன்றின் குரலைக் (1) கேட்டுக் கனிந்துருகும் பசுவைப் போல் குழைந்து உருகும் போது மட்டும் அவரை நாம் நம்ப மாட்டோம். ஸாவேரியில் அவர் ‘எத்தனை சொன்னாலும்’ (2) கேட்க மாட்டோம். காம்போதியில் ‘திருவடி சரணம்’ (3 )என்று கதறினாலும் மாட்டோம். ‘பாண்டுரங்கா!’ என்று பெருமூச்சு விட்டாலும் முடியாது. அவ்வளவும் ’நடிப்பு’ என்றுதான் சொல்வோம்.
[ கல்கி குறிப்பிட்டவை இவைதான் என்று நினைக்கிறேன் :
(1) ‘
என்றைக்குச் சிவ கிருபை’ என்ற நீலகண்ட சிவனின் முகாரி ராகக் கிருதியில் வரும் ‘
கன்றின் ‘ என்று தொடங்கும் அனுபல்லவி.
(2) ‘எத்தனை சொன்னாலும்’ என்பது சுப்பராம ஐயரின் பதம்.
(3) ‘திருவடி சரணம்’ கோபால கிருஷ்ண பாரதியின் கிருதி . ]
இப்படி எழுதியவர் ‘கல்கி’யாய்த்தான் இருக்கும் என்று எண்ணிய எனக்குக்
‘கர்நாடகத்தின்’ ‘துகாராம்’ திரைப்பட விமர்சனத்தைப் படிக்க ஆவல் பிறந்தது.
1938-இல் வெளிவந்த ‘ பக்த துகாராம்’ சங்கீத கலாநிதி முசிரி சுப்பிரமண்ய ஐயர் நடித்த ஒரே திரைப்படம் என்பது என் ஆவலுக்கு ஒரு காரணம். பொதுவாக, அந்த நாள் திரைப்படங்களைக் ‘கிழி கிழி’ என்று கிழிக்கும் கல்கி எப்படி/எதனால் துகாராமை விட்டு வைத்தார் என்றறிந்து கொள்வதும் இன்னொரு காரணம்.
‘கல்கி’ யின் நீண்ட விமர்சனத்தில் முசிரியைப் பற்றியும், சங்கீதத்தைப் பற்றியும் உள்ள சில பகுதிகள் ( மீசையைப் பற்றியும் தான்! ) இதோ:
முசிரி துகாராம்
கல்கி
முசிரி சுப்பிரமண்ய ஐயர் நம்மை மறுபடியும் ஏமாற்றி விட்டார்!
சென்ற சில காலமாகவே அவர் நம்மை ஏமாற்றுவது சகஜமாயிருந்து வருகிறது. உடம்பு சரியில்லையென்றும், தொண்டை சரியில்லையென்றும் சொல்லிக் கச்சேரிக்கு வராமல் ஏமாற்றி வருகிறார். சென்ற மாதக் கடைசியில் கூட மயிலாப்பூர் ரஸிக ரஞ்சனி சபைக்கு இம்மாதிரி ஒரு ஏமாற்றத்தை அளித்தார்.
''இந்த இலட்சணத்தில் டாக்கி என்ன வேண்டிக் கிடக்கிறது? அது மட்டும் வெளியாகட்டும். வெளுத்து வாங்கிவிடலாம்'' என்று நான் கர்வம் கட்டிக் கொண்டிருந்தேன். முசிரி டாக்கியில் சேர்ந்தார் என்று பிரஸ்தாபம் காதில் விழுந்தது முதலே, எனக்கே இம்மாதிரி ஆசை கொஞ்சம் இருந்தது. ''சங்கீத வித்வானாய் இலட்சணமாய்ப் பேசாமல் பாடிக் கொண்டிருக்க கூடாதா? டாக்கியிலும் கீக்கியிலும் சேர்ந்து ஏன் பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்!'' என்ற நினைவு ஒரு புறம் ''வெறுமனே இவரைப் பாராட்டிப் பாராட்டி சலித்து விட்டது. ஒரேயடியாய்த் தீர்த்துக் கட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வரட்டும்'' என்னும் ஆவல் ஒரு பக்கம்.
டாக்கி எடுக்க ஆரம்பித்த பின், அதற்கு நேரிட்டு வந்த இடையூறுகளைப் பற்றி வெளியாகி வந்த வதந்திகள் அந்த ஆசையை அதிகப்படுத்தி வந்தன. ''சரிதான், கடைசியில், சரியாக மாட்டிக் கொள்ளப் போகிறார்'' என்று எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் பலிப்பதற்கின்றி என்னை மனுஷ்யர் அடியோடு ஏமாற்றிவிட்டாரே! ஒரு நல்ல முதல் தர டாக்கியை எப்படியோ கொண்டு வந்து விட்டாரே!
இந்தப் படத்தை 'முசிரி துகாராம்' என்று சொல்வது முற்றிலும் பொருந்தும். ஆரம்பம் முதல் முடிவு வரையில் முசிரிதான் பிரதானமாக விளங்குகிறார். படத்தின் சிறப்புக்கெல்லாம் இவர்தான் காரணம் என்று சொல்லுவதே அநாவசியம். இந்த டாக்கிக்கு டைரக்டர் யார் என்னும் விவரம், முதலில் காட்டும் பெயர் அட்டவணையில் காணப்படவில்லை. (ஐந்தாறு டைரக்டர்களின் கைமாறியதாகக் கேள்விப்பட்டோம்.) ஆனால், முசிரியைப் பற்றிய வரையில் அவரே டைரக்டராகவும் இருந்திருக்கிறார் என்று ஊகிக்க இடமிருக்கிறது.
முதலில், வேஷப் பொருத்தத்தை சொல்லுங்கள்! முசிரி டாக்கிக்காக மீசை வளர்த்துக் கொள்கிறார் என்று கேள்விப்பட்டபோது நமக்கெல்லாம் பரிகாசமாயிருந்தது. மீசையுடன் சென்னையில் சபை முன்னால் வருவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டுதான் அப்போதெல்லாம் கச்சேரிகளுக்கு மட்டம் போட்டு விட்டார் என்றும் சொன்னார்கள். ஆனாலும் அதிலிருந்தே டாக்கி வெற்றி பெறுவதில் அவர் எவ்வளவு சிரத்தையுடன் இருக்கிறார் என்று ஒருவாறு தெரிந்தது. இப்போது, திரையில் பார்த்தால், ''ஆகா! என்ன பொருத்தம்! என்ன வேஷப் பொருத்தம்! என்ன மீசைப் பொருத்தம்!'' என்று ஆச்சரியப்பட வேண்டியவர்களாகிறோம். மீசை ஒன்று மட்டும் பொய் மீசையாயிருந்திருக்கும் பட்சத்தில், படமே ஒரு கேலிக் கூத்துப்போல் நமக்குத் தோன்றியிருக்கக்கூடும். முசிரி அதற்கு இடம் வைக்கவில்லை.
மீசைதான் இஷ்டப்பட்டால் வளர்த்துக் கொள்ளலாம், அது அவரவர்கள் கையில் உள்ள விஷயம். ஆனால், நடிப்புக் கலையை இஷ்டப்பட்டால் வளர்த்துக் கொண்டுவிட முடியும்? இந்த பாகவதர் - கச்சேரி வித்வான் - இவ்வளவு இயற்கையாகவும் அழகாகவும் நடிக்க எங்கே கற்றுக் கொண்டார்? எப்போது கற்றுக் கொண்டார்? ஆச்சரியமாகவல்லவா இருக்கிறது?
இறைவனுடைய பக்தி பரவசத்தில் சதா ஈடுபட்ட ஒரு பரம பக்தரிடம் நாம் எதிர்பார்க்கும் சாந்தம், கருணை, சகிப்புத் தன்மை முதலிய உயர் குணங்களெல்லாம் இவரிடம் பூரணமாய்ப் பொலிந்திருப்பதைக் காண்கிறோம். குடும்ப வாழ்க்கையில் தாமரை இலைத் தண்ணீரைப்போல் பட்டும் படாமலும் ஈடுபட்டிருப்பதை வெகு தெளிவாகத் தம் நடை உடை பாவனைகளினால் உணர்த்துகிறார். இதனால் எப்போதும் ஒரே நிதானமாய், நிர்விகல்ப சமாதியிலேயே இருந்து விடவில்லை. பரபரப்புக் காட்ட வேண்டிய இடங்களில், உணர்ச்சி பொங்கும்படி நடிக்க வேண்டிய இடங்களில், அவ்வாறே நடிக்கிறார். ஆனால் இதெல்லாம் நடிப்பு என்று நம்புவதுதான் நமக்குக் கஷ்டமாயிருக்கிறது. உண்மை சம்பவங்கள் என்றே தோன்றிவிடுகிறது. படத்தின் ஆரம்பத்தில், ''ஜீஜா! ஏன் குழந்தையை அடிக்கிறாய்?'' என்று அவர் கூறும் போதே, அந்தக் குரலின் கனிவு நம்மை உருக்கிக் கண்ணில் ஜலம் வருவித்துவிடுகிறது. இப்படி அநேக கட்டங்கள் இருக்கின்றன.
நடிப்புத் திறமை நாம் முசிரியிடம் எதிர்பாராதது, ஆனால் சங்கீத மேன்மையோ எதிர்பார்த்தது. அது எப்படியிருக்கிறது? எதிர்பார்த்ததற்கு அதிகமுமில்லை, குறைவுமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
முதன் முதலில் இந்த டாக்கியைப் பற்றிப் பிரஸ்தாபம் ஏற்பட்டபோது ஒருவர் வந்து,
''ஸ்ரீ தியாகராஜா வில் மதனி வேஷத்தில் வந்த
சீதா தான் துகாராமின் மனைவியாக வரப் போகிறாளாம். பாவம்! முசிரியை அழ வைத்துவிடுவாள்!'' என்று பரிதாபப்பட்டார். இதைக் கேட்ட இன்னொருவர், ''ரொம்ப நன்றாயிருக்கிறது! முசிரியை இன்னொருவர் அழப் பண்ணுவானேன்? அவரேதான் அழுதுவிடுவாரே!'' என்றார். மூன்றாவது மனுஷர் ஒருவர், ''ஏற்கெனவேயே அழுவார் என்றால், இப்போது கேட்க வேண்டியதில்லை. டாக்கியெல்லாம் கண்ணீராய்த்தானிருக்கும்!'' என்று முத்தாய்ப்பு வைத்தார்.
இது உண்மைதான், துகாராமில் முசிரி அசாத்தியமாகத்தான் அழுதிருக்கிறார். ஆனால், அந்த அழுகையெல்லாம் சுத்தமான கர்நாடக ராகங்களில் அழகாக அமைந்து, ஒரு தடவை இரண்டு தடவை மூன்று தடவை கேட்க வேண்டுமென்று தூண்டக் கூடியதாயிருக்கிறது.
வாழ்க்கையில் கஷ்டத்தை வெறுக்கும் மனிதர்கள் கலைகளில் மட்டும் சோக ரஸத்தை அநுபவிப்பதில் ஏன் இவ்வளவு இன்பமடைகிறார்கள் என்பது சிருஷ்டி ரகசியங்களில் ஒன்று. அதைப் பற்றி சர்ச்சை செய்ய இடம் இதுவல்ல. நவரஸங்களில் எல்லாவற்றையும் விட அதிகமாக ஜனங்கள் ரஸிப்பது சோக ரஸம் என்பதில் மட்டும் சந்தேகம் கிடையாது. சோக ரஸம் இல்லாத எந்த உயர்ந்த இதிகாசமாவது நாடகமாவது காவியமாவது உலகத்தில் உண்டா என்று சொல்லுங்கள்.சோக ரஸத்தைப் பரிபூரணமாய் அநுபவிப்பதற்கு சங்கீதத்தைப் போன்ற சிறந்த சாதனம் வேறில்லையென்பதும் நிச்சயம். சிற்சில ராகங்களை வெறுமனே பாடினாலே நம் உள்ளம் குழைகின்றது, ஊனும் உருகுகின்றது. சோக பாவமுள்ள சாஹித்யமும் சேர்ந்துவிட்டாலோ கேட்க வேண்டியதில்லை. அதுவும், ஒரு நல்ல கதையில் - நல்ல கட்டத்தில் - வருவதாயிருந்தால் சொல்ல வேண்டுமா?
பாபநாசம் சிவனின் சாஹித்யமும், முசிரியின் சங்கீதமும் சேர்ந்து இந்த டாக்கியை சிறந்த சங்கீத மேன்மையுடையதாகச் செய்திருக்கின்றன. மனோகரமான பிலஹரி ராகத்தில்
''ஜய விட்டல ஜய விட்டல'' என்று பாடி முசிரி டாக்கியை ஆரம்பித்து வைக்கிறார். இந்தப் பாட்டில் முசிரியின் சாரீரம் கொஞ்சம் 'இரைச்ச'லாக தொனிப்பதைக் கேட்கிறோம். ஆனால், அடுத்த பாட்டிலேயே இது சரியாகிவிடுகிறது. ஹம்ஸ நாதத்தில்,
''நீயே பராமுகமாயின்'' பாடும்போது, ஒரு தூக்குத் தூக்கி விடுகிறார். பின்னால், நாதநாமக்கிரியையில்,
''சர்வலோக சரண்ய'' பாடும்போது முசிரியின் சங்கீதமும் சாரீரமும் உச்ச நிலையை யடைகின்றன.
பாட்டுக்கள் கனராகத்திலும், அபூர்வ ராகத்திலும், பழைய கர்நாடக ராகத்திலும், நவீன கர்நாடக ராகத்திலும் மாறி மாறி அமைந்திருக்கின்றன.
''தேவகி ஸ்ரீ வசு
தேவ குமாரனே!''
என்னும் பாட்டைத் துகாராம் பாடி முடித்ததும், ''இந்த ஒரு பாட்டுப் போதுமே!'' என்று நான் வாய் விட்டு சொன்னேன். ஆனால், என் குரலின் சப்தம் இவ்வளவு பெரியதா என்று சந்தேகம் தோன்றியது. அப்புறம் விசாரித்தால், ஏக காலத்தில், என் அருகில் இருந்தவர்கள் ஐந்தாறு பேரும் அப்படியே சொன்னார்கள் என்று தெரிந்தது. வாய் விட்டு சொல்லாத இன்னும் இரண்டு மூன்று பேரும் ''நாங்களும் அப்படித்தான் நினைத்தோம்'' என்றார்கள்.
மேற்படி பாட்டு குந்தலவராளியில் அமைந்தது. சாதாரணமாய், இந்த ராகத்திலுள்ள பாட்டுக்கள் இங்கிலீஷ் நோட்டுக்கள் போல் தொனிக்கும். ஸ்வரங்களைத் தனித்தனியாகப் பிரித்து உதிர்த்து விடலாம் போல் இருக்கும். அத்தகைய ராகத்தில் இவ்வளவு கமகமும் குழைவும் கொடுத்து இவ்வளவு உருக்கத்தை ஊட்டிப் பாடியிருப்பது முசிரி ஒருவருக்குத் தான் சாத்தியம் என்று சொல்லலாம்.
பாட்டுக்கள் எல்லாம் நன்றாய்த்தானிருக்கின்றன. ஆனால் முசிரி ஏற்கெனவே பிளேட்டுகளில் கொடுத்துப் பிரபலமான மூன்று மெட்டுக்களை இதில் சேர்க்காமலிருந்தால் ஒன்றும் ழுழுகிப் போயிராது. அந்தப் பாட்டுக்களை அப்படியே புகுத்த முடியுமாயிருந்தாலும் பாதகமில்லை. அதே மெட்டுக்களில் அதே மனுஷர் வேறு ஸாஹித்யத்தைப் பாடுவது எனக்கு என்னமோ அவ்வளவு ரஸிக்கவில்லை. மற்றவர்களுக்குப் பிடித்திருந்தால் சரி.
முசிரியைப் பொறுத்த வரையில் நாம் எதிர்பார்த்தற்கெல்லாம் மேலாகவே நடித்துப் புகழ்பெற்றுவிட்டார்.
. . . // . . .
கடைசியாக, இந்தப் படத்திலுள்ள பின்னணி சங்கீதத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். நடிகர்களின் சங்கீதம் உயர்தரமாயிருப்பது போலவே பின்னணி சங்கீதமும் அமைந்திருக்கிறது. பெரும்பாலும் இனிய கோட்டுவாத்திய
சங்கீதத்தைக் கேட்கிறோம். சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல் ராகங்களை அமைத்திருப்பது மிகவும் அழகாயிருக்கிறது. துகாராம் தூங்கி எழுந்திருக்கும்போது பூபாளம். மும்பாஜியின் காதல் காட்சியின் போது காபி
ராகத்தில் சிருங்கார ரஸ ஜாவளி. கிருஷ்ணன் வரும்போதெல்லாம் புல்லாங்குழல் . பின்னணி சங்கீதத்தில் இவ்வளவு கவனம்
செலுத்தி அமைத்த தமிழ் டாக்கி மிகவும் அபூர்வம் என்றே சொல்லலாம்.
. . . // . . .
மொத்தத்தில், முசிரி துகாராம் தமிழ் டாக்கிகளுக்குள் ஒரு உன்னத பதவியை வகிக்கிறது என்றே நான் கருதுகிறேன். 'பக்த குசேல'ருக்கு அடுத்தபடியாக உயர்ந்த தமிழ் டாக்கி என்று இதைத்தான் சொல்ல வேண்டும். ஆகையினால்தான் இதற்கு
இரண்டு நட்சத்திரம் அளித்திருக்கிறேன்.
[ நன்றி : கல்கி களஞ்சியம், வானதி பதிப்பகம், தொகுப்பு: தி.ஸ்ரீ. ரங்கராஜன் ]
தொடர்புள்ள சில பதிவுகள் :
கல்கி’ கட்டுரைகள்
காளிதாஸ்
இராஜாம்பாள்: நூல் மதிப்புரை
கல்கி மறைவு: வாசன்
பக்த துகாராம்: ராண்டார் கை