பெரிய
திருக்குன்றம் சுப்பராமையர்
உ.வே.சாமிநாதய்யர்
|
[ நன்றி: ஹிந்து ] |
தமிழ்நாட்டிலே
சென்ற நூற்றாண்டில் பிரசித்தி பெற்ற சங்கீத வித்துவான்களில் ஒரே பெயருடைய பலர்
இருந்தனர். ஒருவருக்கு மேற்பட்ட வைத்தியநாதையர்களும், கிருஷ்ணையர்களும், சுப்பராமையர்களும் சங்கீத தேவதையின் உபாசனை
புரிந்து வந்தனர். சுப்பராமையர்களுள் வைத்தீசுவரன் கோயிலில் இருந்த சுப்பராமையர்
ஒருவர்; பெரிய
திருக்குன்றம் சுப்பராமையர் மற்றொருவர்.
அவர்களுள்
காலத்தால் முந்தியவராகிய பெரிய திருக்குன்றம் சுப்பராமைய்யரென்பவர்
கனமார்க்கத்தைத் தமிழ்நாட்டில் முதன் முதலில் அனுபவத்திலே கொணர்ந்துகாட்டிப்
புகழ்பெற்ற * கனம் கிருஷ்ணருடைய தமையனார். அவர் சங்கீதத்திலும் ஒருவாறு
சாஹித்தியத்திலும் ஒருங்கே திறமையுடையவராக இருந்தார்.
-----
*இவரது சரித்திரம்
தனியே என்னால் எழுதப் பெற்று வெளிவந்திருக்கிறது.
பெரிய
திருக்குன்றமென்பது திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார் பாளையம் தாலுகாவில் உள்ள ஒரு
கிராமம். அங்கே பரம்பரையாகவே சங்கீத வித்தையில் மேம்பட்டுவந்த ஒரு குடும்பத்தில்
சுப்பராமையர் உதித்தார். அவர் அந்தணர்களுள் அஷ்டஸஹஸ்ரமென்னும் வகுப்பைச்
சார்ந்தவர்.
அவருடைய
தந்தையார் இராமசாமி ஐயரென்பவர். இராமசாமி ஐயருக்கு ஐந்து குமாரர்களும் ஒரு
பெண்ணும் உண்டு. அவர்களுள் மூத்தவரே சுப்பராமையர். அக்குடும்பத்தில் பரம்பரையாக
இருந்துவந்த இசைச் செல்வத்தால் பல சிற்றரசர்கள் வழங்கிய பொருட்செல்வமும் பூமியும்
கிடைத்தன. அதனால் சுப்பராமையருடைய தந்தையாருக்கு வறுமைப்பிணியின் துன்பம் இல்லை.
தம்முடைய நில வருமானங்களை வைத்துக்கொண்டு அவர் சங்கீதக் கலையையும் வளர்த்து
வாழ்ந்திருந்தார். அக்காலத்தில் கபிஸ்தலத்தில் இருந்த ஸ்ரீமான் முத்தைய
மூப்பனாருக்கும் இராமசாமி ஐயருக்கும் மிக்க நட்பு இருந்து வந்தது. அவ்விரண்டு
குடும்பத்தினரும் தொடர்ந்து பலகாலம் நண்பர்களாகவே வாழ்ந்து வந்தனர். இராமசாமி ஐயருக்கு
அவ்வப்போது மூப்பனாருடைய உதவி கிடைத்துவந்தது.
அங்ஙனம் வாழ்ந்து
வந்த இராமசாமி ஐயருக்குப் புத்திரராகத் தோன்றிய சுப்பராமையர் யாதொரு குறைவுமின்றி
வளர்த்துவந்தார். அவருடைய தந்தையார் அவருக்கு இன்றியமையாத தமிழ்க்கல்வியையும்
சங்கீதப்பயிற்சியையும் அளித்தார்.
நாளடைவில்
சுப்பராமையாருக்குப் பின் தோன்றிய சகோதரர்களுள், சுந்தரையர் கிருஷ்ணையர் என்னும் இருவரும்
சுப்பராமையரைப் போலவே சங்கீதத்தில் நாட்டமுடையவர்களாக இருந்தனர்.
அம்மூவருக்கும்
சிறந்த சங்கீதப் பயிற்சியை அளித்து, 'அவையகத்து முந்தியிருப்பச் செய்ய
வேண்டுமென்பது தந்தையாருடைய விருப்பம். அதற்குமுன் அடிப்படையாகத் தமிழறிவு
அவசியமென்பதை அவர் உணர்ந்தவராதலின், அரியிலூரில் அக்காலத்தில் வாழ்ந்திருந்த ஸ்ரீ சண்பக மன்னாரென்னும் ஸ்ரீவைஷ்ணவ
வித்துவானிடம் தமிழ் பயிலும்படி செய்தனர். சண்பகமன்னார் தமிழிலும் இசையிலும்
சிறந்த திறமை வாய்ந்தவர்; பல கீர்த்தனங்களை
இயற்றியவர்; சமரஸ ஞானி;
மிக்க அடக்கமான குணம்
வாய்ந்தவர்.
அவரிடம் தமிழ்
பயின்ற காலத்தில் மற்றவர்களைக்காட்டிலும் அதிகமாக அதில் ஈடுபட்டவர் சுப்பராமையரே.
மற்றவர்களுக்கும் ஓரளவு சிரத்தை இருந்தாலும் சுப்பராமையாருக்கு இருந்த ஊக்கம் அவர்களுக்கு
உண்டாகவில்லை. சண்பக மன்னாருடைய பழக்கத்தினால் விசேஷ நன்மையடைந்தவர் சுப்பராமையரே.
தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் வேதாந்த சாஸ்திரங்களையும் அப்பெரியாரிடம்
சுப்பராமையர் ஊன்றிப் பயின்று வந்தார். அப்பெரியாரைப் போல அடக்கமாக வாழ
வேண்டுமென்ற கருத்து அவருக்கு உண்டாயிற்று. இளமையிலேயே ஏற்பட்ட அக்கருத்து அவர்
நெஞ்சில் ஊறி அவருடைய வாழ்வில் அவருக்குப் பெருமையை அளித்தது. அவருடைய சகோதரர்கள்
தங்கள் சங்கீதப் பயிற்சியினாலும் உண்ண உடுக்கக் குறைவில்லாத குடும்ப நிலை
முதலியவற்றாலும் மிக்க திருப்தியோடு காலங்கழித்தனர்; அத்திருப்தி சில சமயங்களில் பிறருக்கும்
புலனாயிற்று. கனம் கிருஷ்ணையர் அந்தத் திருப்தியினால் சிறிது செருக்குடையவராகவும்
காணப் பட்டனர். ஆனால் சுப்பராமையரோ அடக்கத்திலே சிறந்தவராக விளங்கினார்.
இராமசாமி ஐயர்
தம்முடைய குமாரர்களுள் முன்னே கூறிய மூவருக்கும் பின்னும் உயர்ந்த
சங்கீதப்பயிற்சியை அளிக்க வேண்டுமென்று எண்ணினார். தஞ்சாவூர் ஸமஸ்தானத்தில் பச்சை
மிரியன் ஆதிப்பையரென்பவர் பெரும்புகழ் பெற்ற சங்கீத ஆசிரியராக அக்காலத்தில்
விளங்கினார். அவரிடம் தம் குமாரர் மூவரையும் இராமசாமி ஐயர் ஒப்பித்தார். மூவரும்
சங்கீத வித்தையிலே தேர்ச்சி பெற்று வந்தனர்.
சுப்பராமையர்
சங்கீதத்தோடு தமிழையும் இடைவிடாமல் பயின்று வந்தார். அவ்வப்போது சில
கீர்த்தனங்களையும் பாடல்களையும் இயற்றிப் பழகினார். அவருக்கு முருகக்கடவுளிடத்தில்
பக்தி அதிகம். அக்கடவுள் விஷயமாக அவ்வப்போது தாம் பாடிய கீர்த்தனங்களைத் தம்
குருமூர்த்தியாகிய ஆதிப்பையரிடம் காட்டுவார். அக்கீர்த்தனங்களைக் கேட்டு அம்
மகாவித்துவான் அளவற்ற மகிழ்ச்சியடைவார்; சங்கீதமும் சாஹித்தியமும் ஒன்றனோடு ஒன்று நன்றாக இயைந்து விளங்குவதைப்
பாராட்டுவார். அன்றியும் அக்கீர்த்தனங்களில் உள்ள பக்திச்சுவையை உணர்ந்து, "நீ சின்ன ஸ்ரீநிவாஸன்" என்று
மனங்குளிர்ந்து கூறி அவரை ஆசீர்வாதஞ்ச செய்வார்.
ஸ்ரீநிவாஸன்
என்பவர் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்திருந்த சங்கீத
வித்துவான்; தமிழிலும்
வடமொழியிலும் தெலுங்கிலும் பயிற்சியுள்ளவர்; அவர் பல அருமையான கீர்த்தனங்களை ஸ்ரீரங்கநாதர்
விஷயமாக இயற்றியிருக்கின்றார். அவர் பெரிய பக்தராதலால் அவருடைய கீர்த்தனங்களிலே
பக்திச்சுவை ததும்பி நிற்கும்; சங்கீத
அமைப்புகள் மிகவும் செவ்விய நிலையிலே பொருந்தி விளங்கும்.
அவற்றைப் பச்சை
மிரியன் ஆதிப்பையர் நன்கு உணர்ந்தவர். சங்கீதமும் சாஹித்தியமும் தெய்வத்துக்கு
அர்ப்பணம் செய்யப்பட்டாலன்றிச் சிறப்புடையனவல்ல வென்பது நம்முடைய பெரியோர் கொள்கை.
நம்நாட்டில் எத்தனையோ கலைஞர்களும் புலவர்களும் வாழ்ந்திருந்தாலும், காலவெள்ளத்தில் அவர்களுடைய சிற்பங்கள் இருந்த
இடம் தெரியாமல் போய்விடுகின்றன. தெய்வ பக்தியாகிய கனம் அவற்றில் இருந்தால் அவை
மாத்திரம் பலகாலம் காலவெள்ளத்தை எதிர்த்து நின்று விளங்குகின்றன. நூற்றுக்கணக்கான
வித்துவான்கள் தமிழ் நாட்டிலே வாழ்ந்து ஆயிரக்கணக்கான சாஹித்தியங்களை
இயற்றினார்கள். அவற்றிற் பெரும்பாலன அழிந்துபோயின. அதற்கு முக்கியமான காரணம்
வித்தையைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யாமல் ஜமீன்தார்களையும் பிரபுக்களையும்
பாடினமையே. ஸ்ரீ தியாகையர் முதலிய மகான்களோ தெய்வபக்தி மணம் கமழும் பாமலர்களை
இறைவன் திருவடிகளிலே அணிந்தனர். அதனால் அம்மலர்கள் வாடாமல் விளங்குகின்றன.
தம்
கீர்த்தனங்களிலே தெய்வபக்தி நிறைந்திருப்பதையறிந்து ஆதிப்பையர் பாராட்டியதனால்,
சுப்பராமையருக்கு மேலும்
மேலும் ஊக்கமுண்டாயிற்று. முருகக்கடவுள், அம்பிகை, பரமசிவன்,
திருமால் முதலியவர்கள்
விஷயமாக அவ்வப்போது அவர் செய்த கீர்த்தனங்கள் பல.
தஞ்சாவூர்
ஸமஸ்தானத்து வித்துவான்கள் வரிசையிலே சேரும் சிறப்பைச் சுப்பராமையரும், சுந்தரையரும், கனம் கிருஷ்ணையரும் பெற்றனர். சரபோஜி அரசர்
காலத்தில் சுப்பராமையர் தஞ்சாவூரிலே இருந்துவந்தார். அப்போது பிருஹதீசுவரர் மீது
அவர் ஒரு குறவஞ்சி நாடகம் இயற்றினார். இடையிடையே பெரிய திருக்குன்றம் சென்று சில
காலம் இருந்துவருவார். கபிஸ்தலம் சென்று தம்முடைய குடும்ப நண்பராகிய முத்தைய
மூப்பனாருடன் சம்பாஷணை செய்து வருவார். அம் மூப்பனாருடைய அன்பிலே ஈடுபட்டு
அக்காலத்தில் சுப்பராமையர் அவர்மீது ஒரு குறவஞ்சிப் பிரபந்தம் இயற்றினார்.
சுப்பராமையருடைய
தம்பியாராகிய கனம் கிருஷ்ணையர் திருவிடைமருதூரில் முதலில் இருந்து அப்பால்
உடையார்பாளையம் ஸமஸ்தான வித்துவானாக விளங்கலாயினர். அக்காலத்தில் சுப்பராமையரும்
சுந்தரையரும் தஞ்சையிலே இருந்தனர். அவ்விருவரையும் வித்துவான்கள் முறையே பெரிய
துரை, சின்னதுரை என்று அழைப்பது
வழக்கம்.
சரபோஜி
அரசருக்குப் பின்பு சிவாஜி அரசர் பட்டத்திற்கு வந்தார். சரபோஜி அரசரோடு பழகி
யதுபோல அவருடைய குமாரரோடு பழகுவதற்குச் சுப்பராமையருக்குச் சந்தர்ப்பம்
வாய்க்கவில்லை. ஆயினும் ஸமஸ்தானத்தின் பெருமையை எண்ணி அங்கே இருந்துவந்தார்.
சரபோஜி அரசர்மீது
கொட்டையூர் ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகர் ஒரு குறவஞ்சி நாடகம் இயற்றி யிருக்கிறார்.
அது யாவராலும் பாராட்டப் பெற்றது. சிவாஜி அரசர்மீதும் ஒரு குறவஞ்சி இயற்ற வேண்டு
மென்று சில நண்பர்கள் சுப்பராமையரிடம் வற் புறுத்திக் கூறினார்கள். அப்படியே அவர்
ஒரு குறவஞ்சி இயற்றினார். ஆயினும் அது பிரசித்தமாக வழங்கவில்லை. சில
கீர்த்தனங்களை மாத்திரம் நான் இளமையில் கேட்டிருக்கிறேன். பிறகு சில அதிகாரிகள்
விரும்பியபடியே சிவாஜி மன்னர்மீது ஐந்து ராகங்களில் பஞ்சரத்தினமாக ஐந்து கீர்த்தனங்களை இயற்றினார். அக்கீர்த்தனங்களைக் கேட்டவர்கள் அவற்றின் அமைப்பைப்
பாராட்டினர். சிவாஜி அரசரும் கேட்டு மகிழ்ந்தனர். அதற்குப் பரிசாக ஒரு கிராமம்
வழங்க வேண்டுமென்று அவர் எண்ணியிருந்தார்.
அதையுணர்ந்த சில
பொறாமைக்காரர் கள், "மகாராஜா அவர்கள்
தமிழ்ப் பாட்டைக் கேட்கக் கூடாது. கேட்டால் வம்சம் அழிந்து விடும்" என்று
பயமுறுத்தினார்கள். வரவரத் தம்முடைய சுதந்திர நிலையையும் சௌகரியங்களையும்
இழந்துவந்த சிவாஜியரசர் அவர்கள் வார்த்தையை நம்பினார். இயல்பாக அதிர்ஷ்டக்
குறைவுள்ள தமக்கு அந்தக் கீர்த்தனங்கள் ஏதேனும் தீமையை உண்டாக்கினால் என்ன
செய்வதென்று அஞ்சினார். அவருக்கு உண்மையிலேயே சங்கீதத்திலும், சங்கீத வித்துவான்களிடத்திலும் அன்பு இருந்தால்
அந்தப் பொறாமைக்காரர்களுடைய வார்த்தைகளைச் செவியில் வாங்கியிருக்கமாட்டார்.
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பதுபோல அவர் நிலை பலஹீனமாக
இருந்தமையால், அவருக்கு எதைக்
கண்டாலும் சந்தேகமும் அச்சமும் உண்டாயின. உண்மையில் வித்தையினிடத்தில் அன்பு
இருந்தமையால் எந்த இடையூற்றையும் கவனியாமல் அதை வெளியிட்ட பெரு வள்ளல்கள்
தமிழ்நாட்டில் விளங்கவில்லையா? 'புகழெனின்
உயிரும்' கொடுக்கும்
தமிழ்வள்ளல்கள் எத்தனை பேர்! தன் இன்னுயிர் போவதாக இருப்பினும், தமிழினிமையை நுகருவதற்கு இடையூறு இருத்தல்
கூடாதென்று நந்திக்கலம்பகத்தைக் கேட்டுத் தமிழின்பத்திலே உயிரை நீத்த பல்லவ
மன்னனுடைய வரலாறு கலையின்பத்தை மதிக்கும் அறிஞர்களின் இயல்பாய் நன்றாக
விளக்குகின்றதன்றோ?
சிவாஜி மன்னர்
தமக்கு மான்யம் அளிப்பாரென்ற விஷயம் பலர் வாயிலாகச் சுப்பராமையருக்கு எட்டியது.
பிறகு அந்த எண்ணம் மாறிப்போனதையும் உணர்ந்தார். 'நமக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தை இழந்தோமே'
என்று அவர் வருந்தவில்லை.
'இத்தகைய இடத்தில்
இருப்பதாலன்றோ நமக்கு இழிவு உண்டாவதோடு தெய்வத் தமிழுக்கும் இழுக்கு உண்டாயிற்று?
இனி இங்கே இருப்பது தகாது'
என்று கருதித் தம்
ஊருக்கு உடனே புறப்பட்டு விட்டார்.
அது முதல் அவர்
ஈசுவர பக்தி பண்ணிக் கொண்டு சங்கீத சாஹித்திய இன்பத்தை நுகர்ந்து வாழ்ந்து
வந்தார். அவர் தஞ்சை ஸமஸ்தானத்தின் தொடர்பை விட்டு விட்டாலும் சங்கீத உலகத்தில்
அவருக்கு இருந்த மதிப்பு ஒரு சிறிதும் குறையவில்லை. சங்கீத வித்துவான்கள் அவருடைய
கீர்த்தனங்களைப் பெரிய சபைகளிலெல்லாம் பாடி ஜனங்களை இன்புறுத்தி வந்தனர்.
ராகபாவங்களை நன்றாக வெளிப்படுத்தும் முறையில் அவருடைய கீர்த்தனங்கள்
அமைந்திருப்பதையறிந்து அவர்கள் மகிழ்ந்தனர். அவருடைய உருப்படிகள் பெரும்பாலும்
இலக்கணவழுவின்றி எளிய நடையில் நல்ல பொருளுடையனவாக இருத்தலை அறிந்த தமிழ்
வித்துவான்கள் பாராட்டினர்.
அவ்வப்போது
தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து இன்புறுவதும் அவ்வத்தல விஷயமாகக்
கீர்த்தனங்களை இயற்றிப் பாடுவதும் சுப்பராமையருக்கு உவப்பைத் தரும் செயல்களாக
அமைந்தன. அவருடைய கீர்த்தனங்கள் பெரியனவாகவே இருக்கும். அவற்றில் தலசம்பந்தமான
வரலாறுகளைக் காணலாம். 'திருவாரூர் ஸ்ரீ
முத்துசாமி தீக்ஷிதரவர்கள் வடமொழியில் இயற்றியுள்ள கீர்த்தனங்களைப்போல இவை தமிழில்
விளங்குகின்றன' என்று
அக்காலத்தில் வித்துவான்கள் பாராட்டினர்.
ஒரு சமயம்
சுப்பராமையர் கும்பகோணம் சென்றிருந்தார். அங்கே உபயஸமஸ்தான திவானாக விளங்கிய ஸ்ரீ
வாலீஸ் அப்புராயரென்பவர் வசித்து வந்தார்; அவர் வித்துவான்களிடத்தில் அன்புடையவராக விளங்கினார். அவருக்கும்
சுப்புராமையருக்கும் பழக்கம் உண்டு. சுப்புராமையர் அப்புராயர் வீட்டிற்குப்
போனார். சங்கராபரணத்தைச் சிலகாலம் அடகு வைத்தவராகிய *நரஸையரென்னும் வித்துவானும்
அங்கே ஆஸ்தான வித்துவானாக இருந்தார். அப்புராயர் வீடே ஓர் அரசருடைய மாளிகைபோல
விளங்கும். அடிக்கடி விருந்துகளும் சங்கீத வினிகைகளும் அங்கே நடைபெறுவதுண்டு.
அன்று நரஸையருடைய வினிகை நடைபெற்றது. அப்போது வாலீஸ் அப்புராயர் சுப்பராமையரைப்
பார்த்து, "சங்கராபரணத்தில்
இப்போது புதிதாக ஒரு கீர்த்தனம் பாடவேண்டும்" என்று கூறினார். அப்புராயர்
சுப்பராமையருடைய ஆற்றலை நன்கு உணர்ந்தவர். அதைப் பலரும் அறியும்படி செய்ய
வேண்டுமென்பது அவருடைய அவா. ராயருடைய விருப்பத்தின்படியே சுப்பராமையர் அங்கு
அப்போதே அந்த ராயர் விஷயமாகவே சங்கராபரண ராகத்தில் திரிகாலமும் அமைத்து ஒரு
கீர்த்தனம் பாடினார். 'மிஞ்சுதே விரகம்'
என்பது அதன் பல்லவி.
நரஸையரும் மற்றவர்களும் கேட்டு மகிழ்ந்தார்கள். சுப்பராமையர் ஆடம்பரமின்றி
அடங்கி யிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றார்கள்.
-----------------------
* இவர்
சங்கராபரணத்தை அடகு வைத்த வரலாறு தனியே எழுதி அச்சிடப்பெற்று வெளியிடப்பட்டுள்ளது.
சுப்பராமையர்
நெடுங்காலம் வாழ்ந்திருந்தார். தூய்மையான ஒழுக்கமுடையவராதலின் அவர் தேக வன்மையோடு
விளங்கினார். கனம் கிருஷ்ணையரும் வேறு சில சகோதரர்களும் அவருக்கு முன்பே
காலமாயினர்.
ஒருவர் பின்
ஒருவராக மூன்று மனைவியரை அவர் மணந்தனர். முதல் தாரத்திற்குச் சுப்பையரென்ற பிள்ளை
ஒருவர் பிறந்தார். அவருக்கும் சங்கீதப் பயிற்சி உண்டு. அவரையன்றி மூன்று பெண்களும்
பிறந்தனர்.
சுப்பராமையருக்குத்
தேங்காய்ப் பாலில் மிக்க விருப்பம் உண்டாம். தம் முதிய பிராயத்தில் அவருடைய
மூன்றாந் தாரத்தினிடம், 'தேங்காய்
இருக்கிறதா?' என்று
கேட்பாராம். அந்தப் பெண்மணி அவர் கருத்தை அறிந்து தேங்காய் இல்லாவிடினும்
வருவித்துத் துருவிப் பால்காய்ச்சிக் கற்கண்டு சேர்த்து அவருக்குத் தருவது
வழக்கமாம்.
சுப்பராமையருடைய
கீர்த்தனங்களை அவர் சகோதரராகிய சுந்தரையருடைய புதல்வியார் தம் எழுபதாவது
பிராயத்திலே பாட நான் கேட்டிருக்கிறேன். என் தந்தையாரும் சிறிய தந்தையாரும் வேறு
பலரும் அவற்றைப் பாடுவார்கள். சுப்பராமையர் என் தந்தையாருடைய தாயாருக்கு
அம்மானாவார். காலம் மாறிக் கொண்டே வருகின்றது. பழைய சிருஷ்டிகளை நாம் மறந்து
விடுகின்றோம். சுப்பராமையருடைய கீர்த்தனங்களை இப்போது பாடுவாரே இல்லை. ஆனாலும்,
அவருடைய கீர்த்தனங்கள்
முத்துசாமி தீக்ஷிதருடைய கீர்த்தனங்களை ஒப்ப அறிஞர்களால் மதிக்கப்பெற்ற காலம்
ஒன்று இருந்ததென்பதை இவ்வரலாறு ஞாபகப்படுத்துகின்றது.
[ “ நினைவு மஞ்சரி” நூலிலிருந்து ]