வியாழன், 27 ஆகஸ்ட், 2015

திரு. வி. க -1

அன்புருவான திரு.வி.க.
கி.வா.ஜகந்நாதன்

ஆகஸ்ட் 26.  ’தமிழ்த் தென்றல்’ திரு வி.கல்யாணசுந்தரனாரின் பிறந்தநாள்.

திரு.வி.க : 1883 -1953 

அவர் 1953-இல் மறைந்தபோது, அவரைப் பற்றி கி.வா.ஜகந்நாதன் ‘கலைமகளில் எழுதிய ஒரு கட்டுரையின் சில பகுதிகளை இங்கிடுகிறேன்.

=========


இணையாதவற்றை எல்லாம் இணைத்தவர் திரு.வி.க. அவர் சைவ வேளாள குலத்தில் உதித்தவர். தமிழ்ப்பயிற்சி மிக்கவர்.தமிழாசிரியராகச் சில காலம் பணியாற்றியவர். ஆனால் அவருடைய தொண்டிற்கு இந்தக் குலமும் சமயமும் தொழிலும் கரைபோட்டுத் தடுக்கவில்லை. ஆளைப் பார்த்தால் ஒல்லியாய் உச்சிக் குடுமியும் கதராடையும் துலங்க நெற்றியில் திருநீறு நிலவ ஒரு வைதிகப் பிச்சுப் போல இருப்பார். ஆனால் அவர் பேசும் பேச்சிலும் எழுதும் எழுத்திலும் வைரம் பாய்ந்திருந்தது . அவர் உள்ளம் சீர்திருத்தத்தை விரும்பியது. சமய சமரசத்தை அவர் தம்முடைய வாழ்க்கையில் மேற்கொண்டு ஒழுகினார்.

கடவுள் இல்லையென்று கூறும் கம்மூன்னிஸ நூல்களை நிறையப் படித்தார்; ஆராய்ச்சி செய்தார்; ஆழ்ந்தார். மார்க்ஸீயத்தில் அவருக்கு நல்ல பற்று உண்டு. ஆனால் அவர் நாஸ்திகர் அல்ல. கடவுள் உணர்ச்சியைக் கணந்தோறும் வற்புறுத்திய காந்தீய நெறியில் நின்றவர் அவர். ”மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும் “ என்ற அவருடைய நூல் காந்தீயத்தில் அவருக்கு இருந்த ஆழமான பற்றைக் காட்டும். மார்க்ஸீயமும் காந்தீயமும் கலந்து இணைந்தால் இந்த இந்தியா முன்னேற அந்த இணைப்பு மிகுதியாக உதவும் என்று அடிக்கடி அவர் சொல்வதுண்டு.

அவருடைய உள்ளம் கலைஞனது உள்ளம்; கவிஞனது உள்ளம். எந்தப் பொருளையும் அழகுபட அவர் சொல்லும்போது  அதில் ஒரு தனிச்சுவை இருக்கும். அவருடைய பேச்சில் அதிகமாகக் கவிஞர்களின் கருத்தைத் தான் கேட்கலாம். அந்தக் கவிகளையே மிகுதியாக எடுத்துச் சொல்வதில்லை. ஆயினும் அவர் பேச்சு முழுவதுமே கவிதையைப் போல இருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வைப்பற்றி அவர் பேசும் சமயங்களில் அவர் வெறும் சொற்பொழிவாளராகவா இருப்பார்? அவருடைய பேச்சு முழுவதும் கவிதையே ஆகிவிடும். காதல் வாழ்வைப் பற்றிப் பேசும் போதும்,  இறைவன் பெருமையை எடுத்துரைக்கும் போதும் கேட்பவர்கள் தம்மை மறந்து வேறு ஏதோ அமுதமயமான உலகத்தில் இருப்பவர்கள் போல் ஆகி விடுவார்கள். படிப்படியாக எடுத்துக்கொண்ட பொருளை விளக்கும்போது, கேட்பவர் மனம் அந்தப் பேச்சின் வழியே நழுவி நழுவி உள் ஆழ்ந்துபோகும்.

பிறரைக் காரசாரமாகக் கண்டித்துக் கைதட்டச் செய்வதும், கிண்டலும் கேலியுமாகப் பேசி மக்களை ஆரவாரம் செய்யச் செய்வதும், நகைச்சுவையை நீட்டி எல்லோரையும் நகைப்புக்கு ஆளாக்குவதும் அவர் அறியாதவை; அறிந்தும் வேண்டாம் என்று ஒதுக்கியவை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

சிலருடைய பேச்சில் உணர்ச்சி இருக்கும்; எழுத்தில் அது செத்துப் போய்விடும். சிலர் அற்புதமாக எழுதுவார்கள்; ஆனால் அவர்கள் பேச்சுச் சுவையாக இருக்காது. சிலர் பேசுவதும் நன்றாக இருக்கும்; எழுதுவதும் நன்றாக இருக்கும். ஆனால் பேச்சு நடை தனியாகவும் எழுதும் நடை வேறாகவும் இருக்கும். திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரிடம் அந்த இரண்டும், ஒரே மாதிரி அழகுடையனவாக இருக்கும். எழுத்தில் மாத்திரம் எழுதலாம் என்று நினைத்திருந்த பல தொடர்கள் அவர் பேச்சில் இயற்கையாக இழைந்து வந்தன.  “ யாண்டும், என்னை, சிந்திக்கற்பாலது, காழ்ப்பு, யான், கழிபேருவகை, சான்று” என்பன போன்றவற்றைத் திரிசொற்களாக எண்ணி அவற்றை எழுதக் கூட அஞ்சுகிறவர்கள் உண்டு. ஆனால் இத்தகைய பல சொற்களையும் தொடர்களையும் தம்முடைய பேச்சினிடையிலே விரவவைத்து, சிறிதும் இடர்ப்பாடின்றி, கேட்பவர்கள் தெளியும்படி செய்த பெருமை திரு.வி.க. வுக்கே உரியது.

அவருடைய எழுத்து நடையும் பேச்சு நடையும் ஒத்தே இருக்கும். பேசும்போது இடது கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் கையை அசைத்துப் பேசுவார். எடுத்துக் கொண்ட பொருளைத் தெளிவாகச் சொல்லிவிட்டு, அதை முடிக்கும்போது உணர்ச்சி விஞ்ச வேகமாகப் பேசுவார். கடைசியில் முத்தாய்ப்பாக ஒரு தொடரை மூன்று முறை சொல்லி முடிப்பார். “ சிந்திக்கற்பாற்று, சிந்திக்கற்பாற்று, சிந்திக்கற்பாற்று” என்றோ, “பெண்ணுரிமை பேணுக, பேணுக, பேணுக” என்றோ முடிப்பது அவர் வழக்கம்.

சொற்பொழிவின் முடிவிலே தாம் பேசிய அனைத்தையும் சுருக்கி மாலை தொடுப்பது போல வைத்து முடிப்புரை கூறும் அருமை கேட்டவர்களுக்குத் தெரியும். அவர் பேச்சை அப்படியே எழுதிப் படிக்கலாம். அழகும் உணர்ச்சியும் கெடாமல் இருக்கும்.

( தொடரும் )

[ நன்றி : கலைமகள் ]

தொடர்புள்ள பதிவு:

திரு.வி.க. 10

கி.வா.ஜகந்நாதன் 

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

கொத்தமங்கலம் சுப்பு -11

சந்திரனே சந்திரனே சௌக்கியமா?
கொத்தமங்கலம் சுப்பு 


[ ஓவியம்: கோபுலு ] 


1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில் லைகா என்ற நாயை அனுப்பியது ; இது யாவரும் அறிந்த விஷயம். ஆனால், அதை எப்படி ‘ஆனந்த விகடன்’ வரவேற்றது என்பதைத் தற்கால இளைஞர் பலரும் படித்திருக்க மாட்டார்கள் ! ’அக்கால’ இளைஞர்களும் மறந்திருப்பார்கள்! இதோ நினைவு படுத்துகிறேன்!

முதலில் , “இந்த வாரம் “ என்ற பகுதியில் “மனிதனின் உயர்வு” என்ற தலைப்புடன் வந்த ஒரு பத்தியில் ,

“ முதல் செயற்கைச் சந்திரனை விடப் பன் மடங்கு பெரிதான  மற்றொரு சந்திரனை விண்ணில் பறக்கவிட்டு ருஷ்ய விஞ்ஞானிகள் உலகத்தையே பிரமிக்க வைத்திருக்கிறார்கள். “

என்று பாராட்டி எழுதியது ‘விகடன்’. அதன் கீழேயே , “மனிதனின் தாழ்வு” என்ற தலைப்பில் உள்ள இன்னொரு பத்தியில்,

“வியக்கத் தக்க செயற்கைச் சந்திரனை பறக்க விட்டு விஞ்ஞான உலகையே பிரமிக்க வைத்த ருஷ்யாவில் மார்ஷல் ஜுக்கோவ் விலக்கப்பட்ட அரசியல் நிலையைப் பார்க்கலாம். சர்வாதிகாரம் என்ற மனித வெறிக்காக உலகப் பிரசித்தி பெற்ற போர் வீரர் பலியிடப் பட்டார்” என்றும், மற்ற உலக நிகழ்வுகளையும் சுட்டிக் காட்டியும், உலக அரசியல் எப்படி மனிதனைக் கீழே இழுத்துக் கொண்டிருக்கிறது என்றும் கவலையைத் தெரிவிக்கிறது ‘விகடன்’.

இரண்டாவதாகவே, கோபுலுவின் கார்ட்டூனும், கேலிச் சித்திரங்களும் விகடனை அலங்கரித்தன!


மூன்றாவதாக வந்தது ஓர் அற்புதக் கவிதை! ஆம், கொத்தமங்கலம் சுப்புவின் நீண்ட கவிதைதான்!








அதற்குக் ‘கோபுலு’ வரைந்த படத்தை மேலே பார்த்தீர்கள் அல்லவா?

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கொத்தமங்கலம் சுப்பு: மற்ற பதிவுகள்

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

கல்கி -8

கல்கியின் நகைச்சுவை -1 


பலவருஷங்களுக்கு முன் ‘கல்கி’ இதழ் ‘கல்கியின் நகைச்சுவை’ என்ற பெயரில் ஒரு சிறு இணைப்பை இதழுடன் வெளியிட்டது.  நண்பர் ஸ்ரீநிவாசன் தன் தந்தை திரு ராமமூர்த்தி  பத்திரமாய்ப் பாதுகாத்து வைத்திருந்த அந்த இணைப்பை எனக்கு அனுப்பியிருக்கிறார். அவருக்கு என் நன்றி.

அந்தச் சிறு நூலிலிருந்து முதல் பகுதி இதோ!






[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

( தொடரும் )

[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள் :

'கல்கி’ கட்டுரைகள்

கல்கியைப் பற்றி . . .

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

நேற்று, இன்று, நாளை : கவிதை

நேற்று, இன்று, நாளை



நேற்று

பனிசூழ் கனடாப் பகுதியிலே 
. . பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன்.

தனிமைத் துயரத் தழலதனைத் 
. . தாங்கச் சற்றுஞ் சக்தியிலை.

இனிமை எட்டும் வழியொன்றை 
. . ஈசன் எனக்குக் காட்டிவிட்டான்.

'மனித வருத்தம் மகிழ்வெல்லாம் 
. . மனத்தின் மாயம் ' எனவுணர்ந்தேன்.

இன்று:

கையிற் கணினி விசையுண்டு; 
. . கருத்திற் கன்னித் தமிழுண்டு ;

பையிற் பண்டை யாப்புண்டு; 
. . பாட்டுக் கோர்வா னொலியுண்டு;

வைய வலையில் நட்புண்டு; 
. . மலரும் மரபுக் கவியுண்டு;

ஐயன் முருகன் அருள்கிட்டின் 
. . அண்டர் உலகம் வேறுண்டோ ?

நாளை :

அச்சம் வருதல் இயற்கைதான்;
. . அதுவும் இரவு நெருங்குகையில் .

இச்சை மிகுந்தால் இன்னல்தான்;
. . இனிமேல் தமிழே வழிகாட்டும்.

உச்சம்  அடைதல் அவள்கையில்;
. . உயிரின் பயனை உணர்த்திடுவாள்.

மிச்சக் கிணறு தாண்டிடுவேன்;
. . மீதிக் கனவும் நனவாகும்.



பசுபதி

தொடர்புள்ள பதிவுகள்: