சனி, 4 ஆகஸ்ட், 2018

1132. காந்தி -38

32. மாளவியா மத்தியஸ்தம்.
கல்கி

கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( தொகுதி 2) என்ற நூலில் வந்த 32-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===


காந்தி மகாத்மா இந்தியாவின் அரசியல் தலைமை ஏற்றதிலிருந்து மிதவாதிகளின் மனதில் நிம்மதி யில்லாமற் போய்விட்டது. பெஸண்ட் அம்மையாரும் மிதவாதிகளுடன் சேர்ந்துகொண்டார். மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் மிகப் பெரும் தவறான இயக்கம் என்று அவர்கள் கருதினார்கள்.

ஆரம்பத்தில் மிதவாதிகள் ஒத்துழையாமை இயக்கம் நாட்டில் செல்வாக்குப் பெறாமல் புசுபுசுத்துப் போய்விடும் என்று நினைத்தார்கள். மூன்று வகைப் பகிஷ்காரம் எதிர் பார்த்த அளவு வெற்றியடையாதது குறித்து ஓரளவு மகிழ்ச்சியுடன் அலட்சியமாய்ப் பேசினார்கள். ஆனால் 1921-ஆம் வருஷம் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அந்த இயக்கம் பொது ஜனங்களிடையில் அடைந்து வந்த செல்வாக்கு மிதவாதிகளைத் திகைப்படையச் செய்தது. நாளுக்கு நாள் ஒத்துழையாமை இயக்கம் பலம் பெற்று வருவதை எழுத்துக்களும் பாமர ஜனங்களின் மனதில் கிளர்ச்சி எழுப்பி வந்ததையும் அவர்கள் நல்லதென்று நினைக்கவில்லை. ஆயினும், இதனாலெல்லாம் என்ன நடந்து விடப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நவம்பர் கடைசியிலும் டிசம்பர் ஆரம்பத்திலும் நாட்டில் நிகழ்ந்த சம்பவங்கள் மிதவாதிகளைத் திக்கு முக்காடும் படி செய்துவிட்டன.

வேல்ஸ் இளவரசர் விஜயத்தைப் பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானித்தது மற்றொரு பெருந்தவறு என்று மிதவாதிகள் கருதினார்கள். அந்தப் பகிஷ்காரம் ஒருநாளும் காரியத்தில் நிறைவேறாது என்றும் சொல்லி வந்தார்கள். ஆனால் வேல்ஸ் இளவரசர்போன இடமெல்லாம் பொதுமக்கள் பூரண பகிஷ்காரத்தைக் கைக்கொண்டது மிதவாதிகளைக் கொஞ்சம் விழிப்படையச் செய்தது. "ஓகோ! ஜனங்களின் உணர்ச்சி இப்படி இருக்கிறதா? மகாத்மாவின் செல்வாக்கு இவ்வளவு பெருகியிருக்கிறதா!" என்று அதிசயித்தார்கள்.

பின்னர் அதிகார வர்க்கத்தார் கையாண்ட தீவிர அடக்குமுறைகள் மிதவாதிகளை வேறொரு வகைக் கலக்கத்துக்கு உள்ளாக்கின . அடக்குமுறைகளினால் மக்களின் எழுச்சியை அடக்க முடியாது என்று அவர்களுக்குத் தோன்றியது. மேலும் பண்டித மோதிலால் நேரு முதலிய பிரமுகர்கள் சிறைப்படுத்தப் படுவதைப் பார்த்துக்கொண்டு அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. பலர் உண்மையிலேயே வேதனை அடைந்தார்கள். வேறு சிலருக்கு "இப்போது நாம் இந்த அடக்கு முறைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா யிருந்துவிட்டோமானால் நாளைக்கு எப்படிப் பொதுமக்களின் முன்னால் நம்மடைய முகத்தைக் காட்டமுடியும்!" என்ற கவலை உண்டாயிற்று.

ஆகக்கூடி, மிதவாதிகள் தீவிரமாக யோசனை செய்ய ஆரம்பித்தார்கள். நாட்டில் அப்போது ஏற்பட்டிருந்த நிலைமையில் தாங்கள் தலையிட்டு ஏதேனும் செய்யவேண்டும் என்று கருதினார்கள். ஆகவே, "நாங்கள் ராஜி செய்து வைக்கிறோம்" என்று முன்வந்தார்கள். "இரண்டு தரப்பிலும் சிற்சில பிசகுகள் நடந்திருக்கின்றன. போனதெல்லாம் போகட்டும். அவற்றை மறந்துவிடுவோம். எல்லோருமாகச் சேர்ந்து உட்கார்ந்து வட்டமேஜை மகாநாடு யடத்துவோம் ஒரு சமரசமான முடிவுக்கு வருவோம்!" என்றார்கள்.

அதாவது தேசத்தில் காங்கிரஸ் தலைவர்களின் மகா தியாகங்களினால் ஏற்பட்டிருந்த நிலைமையில், தாங்கள் அடியோடு இழந்து விட்டிருந்த செல்வாக்கை மீண்டும் ஒருவாறு நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று பார்த்தார்கள். மிதவாதப் பத்திரிகைகள் முதலில் எழுதத் தொடங்கின:- "இரண்டு தரப்பிலும் விட்டுக்கொடுத்து சமரசமாகப் போக வேண்டும். இல்லாவிட்டால், தேசம் குட்டிச்சுவராகப் போய் விடும்" என்று.

பிறகு மிதவாதச் சங்கங்கள் அதே கருத்துடைய தீர்மானங்கள் செய்தன. இந்திய சட்டசபையில் அங்கத்தினராயிருந்த மிதவாதக் கட்சியினர் சிலர் "காங்கிரஸுக்கும் சர்க்காருக்கும் சமரசம் ஏற்படுவது மிக அவசியம்" என்று வற்புறுத்தி ஓர் அறிக்கை விட்டார்கள்.

ஆனால் இதெல்லாம் போதாது என்று மிதவாதிகள் கண்டார்கள். 'கழுவுக்கேற்ற கோமுட்டி' யாக யாராவது ஒருவரைப் பிடிக்கவேண்டும் என்று எண்ணினார்கள். அவ்விதம் பண்டித மதனமோகன மாளவியாவைப் பிடித்தார்கள். பண்டித மாளவியா அச்சமயத்தில் ஆற்றில் ஒருகாலும் சேற்றில் ஒரு காலுமாக இருந்தார். காந்திஜியிடத்தில் அவருக்கு அன்பும் மதிப்பும் உண்டு. அவருடைய தேச பக்தி தீவிரமானது. அவர் மிதவாதக் கட்சியில் சேர்ந்தவர் அல்ல; காங்கிரஸிலேயே ஒட்டிக்கொண்டிருந்தவர். ஆனால் மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. முக்கியமாக, கலாசாலைப் பகிஷ்காரத்தை அவர் ஆட்சேபித்தார். பல கோடி ரூபாய்கள் நன்கொடைகள் வசூல் செய்து பண்டித மாளவியா காசி சர்வகலாசாலையை ஏற்படுத்தியிருந்தார். மகாத்மாவே அந்தச் சர்வகலாசாலைக்குச் சர்க்காருடன் இருந்த தொடர்பை ரத்து செய்துவிட்டுப் பூரண தேசீய சர்வகலாசாலை ஆக்கிவிடவேண்டும் என்று சொன்னார். இதற்கப் பண்டித மாளவியா இணங்கவில்லை.

மற்ற மிதவாதத் தலைவர்களின் உள்ளங்களைக் காட்டிலும் மாளவியாவின் உள்ளம் சர்க்காரின் அடக்குமுறையினால் அதிகம் கலங்கிக் கொந்தளித்தது. ஆகையால் எப்படியாவது ஒரு சமரசம் ஏற்பட்டுவிட்டால் அவருக்கு அதில் ரொம்ப சந்தோஷம் உண்டாகும். இதை அறிந்த மிதவாதிகள் பண்டித மாளவியாவைத் தங்களுடைய கருவியாக்கிக்கொள்ளத் தீர்மானித்தார்கள்.

ஸ்ரீ ஜம்னாதாஸ் துவாரகாதாஸ் பம்பாய் நகரைச் சேர்ந்தவர். டாக்டர் பெஸண்ட் அம்மையின் சிஷ்யர். பண்டித ஹிருதயநாத் குன்ஸ்ரூ ஐக்ய மாகாணவாசி; அப்போதும் இப்போதும் மிதவாதி. (இன்றைக்கு அவர் ஸ்ரீ கோகலே ஆரம்பித்த இந்திய ஊழியர் சங்கத்தின் தலைவர்.) இவர்கள் இருவரும் பண்டித மாளவியாவைப் பார்த்துப் பேசினார்கள். மகாத்மாவுக்கும் சர்க்காருக்கும் சமரசம் உண்டு பண்ணிவைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

ஏற்கனவே இன்னொரு நண்பர் பண்டித மாளவியாவிடம் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார். (மாளவியா பிறகு விடுத்த அறிக்கையில் 'ஒருநண்பர்' என்று குறிப்பிட்டருக்கிறார். இவ்விதம் அவர் குறிப்பிட்டிருப்பது அச்சமயம் வைஸ்ராய் நிர்வாக சபையில் அங்கத்தினராயிருந்த ஸர் தேஜ்பகதூர் சப்ரூவாக இருக்கலாம் என்பது சிலருடைய ஊகம். நேரு, ஸப்ரூ, மாளவியா மூவரும் அலகாபாத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் என்பது ஞாபகம் இருக்கவேண்டும்.)

வேல்ஸ் இளவரசர் காசி ஹிந்து சர்வகலாசாலைக்கு டிசம்பர்- 14 விஜயம் செய்தார். அதே சமயத்தில் லார்ட் ரெடிங்கும் வந்திருந்தார். லார்ட் ரெடிங்குடன் மாளவியா பேட்டி கண்டு பேசினார். அதன்பேரில் அவருக்குச் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. சர்க்காருக்கும் காங்கிரஸுக்கும் ராஜி செய்து வைக்கத் தாம் ஒரு முயற்சி செய்யவேண்டியதுதான் என்று தீர்மானித்தார். உடனே அலகபாத்துக்க வந்து சில நண்பர்களிடம் கலந்து பேசிவிட்டு மகாத்மாவுக்கு ஒரு தந்தி கொடுத்தார். அந்தப் பிரசித்திபெற்ற தந்தியின் விவரம் வருமாறு:--

அலகாபாத்
16-12-21
வருகிற 21-யன்று வெஸ்ராயைப் பேட்டி கண்டு வட்டமேஜை மகா நாடு கூட்டும்படி வற்புறுத்தப் போகிறோம். ஏழு பேர் அடங்கிய பிரதிநிதிக் கூட்டமாக வைஸ்ராயைப் பார்ப்போம். இதை முன்னிட்டுக் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நிலைமையை நேரில் உங்களுக்கு விளக்கிச் சொல்வதற்காக ஜம்னாதாஸும் குன்ஸ்ரூவும் அங்கே வருகிறார்கள். சர்க்கார் வட்டமேஜை கூட்ட ஒப்புக்கொண்டு தலைவர்களையும் விடுதலை செய்ய இணங்கினால் வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரத்தை வாபஸ் வாங்கவும் சட்ட மறுப்பை நிறுத்தி வைக்கவும் உங்கள் சார்பில் நான் வாக்குறுதி கொடுப்பதற்கு அநுமதிவேண்டும். 21-வரையில் கல்கத்தா விலாசம் நெம்பர் 31, பர்தோலா தெரு.

மாளவியா.

இந்தத் தந்தி மகாத்மாவைத் தூக்கி வாரிப் போட்டது. தேசமெங்கும் சட்ட மறுப்பு இயக்கம் மகாத்மாவின் மனதுக்கு உகந்த முறையில் நடந்துகொண்டிருக்கும்போது இந்த ராஜிப் பேச்சு குறுக்கிடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. லார்ட் ரெடிங்கின் அந்தரங்க சுத்தியில் பல காரணங்களினால் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ராஜிப் பேச்சும் வட்டமேஜை மகா நாடும் அச்சமயத்தில் வெறும் ஏமாற்றமாக முடியும் என்று அவர் கருதினார். கல்கத்தாவுக்கு வேல்ஸ் இளவரசர் 24- வருவதாக இருந்தது. கல்கத்தா நகரம் ஒன்றிலாவது இளவரசர் பகிஷ்காரம் இல்லாமலிருந்தால் அதிகார வர்க்கத்துக்கு மிகவும் திருப்தியாயிருக்கும். அந்த விஜயம் சரிவர முடிந்த பிறகு லார்ட் ரெடிங் வட்டமேஜை மகாநாட்டில் "ஒன்றும் செய்ய முடியாது" என்று கையை விரித்துவிடக்கூடும் அல்லவா? அப்படித்தான் நடக்கும் என்று மகாத்மாவின் அந்தராத்மா அறிவுறுத்தியது. ஏனெனில், ரெடிங் சர்க்கார் உண்மையிலேயே மனம் மாறி சமரசத்துக்கு வரவேண்டிய அளவுக்குத் தேசத்தில் இயக்கம் இன்னும் பலம் பெறவில்லை என்று மகாத்மா கருதினார். அப்படிச் சர்க்கார் இறங்கி வருவதற்கு மேலும் தீவிர இயக்கம் நடத்தியாகவேண்டும். பொதுமக்கள் அதில் ஏராளமாகப் பங்கு எடுத்துக்கொள்ளவும் வேண்டும்.


ஆகவே அப்போதிருந்த நிலைமையில் சமரசப் பேச்சுத் தொடங்குவதற்கு மகாத்மா சிறிதும் இஷ்டப்படவில்லை. ஆயினும் பண்டித மாளவியாவின் தந்திக்கு உடனே பதில் அனுப்பாமல் ஜம்னாதாஸும் குன்ஸ்ரூவும் வரட்டும் என்று காத்திருந்தார்.

அவர்களும் வந்தார்கள். வந்து மகாத்மாவிடம் சமரஸ முயற்சியின் நோக்கம் என்னவென்பதைச் சொன்னார்கள். "நீங்கள் ஒரு பக்கம் பிடிவாதமாயிருக்கிறீர்கள்; சர்க்கார் இன்னொரு பக்கம் பிடிவாதமாயிருக்கிறார்கள். இரண்டு பக்கத்துப் பிடிவாதத்துக்குமிடையில் தேசம் குட்டிச்சுவராகப் போகிறது. அப்படி அடியோடு தேசம் குட்டிச்சுவராகாமல் தடுத்துக் காப்பாற்ற நாங்கள் இந்த ராஜி முயற்சி தொடங்கியிருக்கிறோம். அதற்காகக் கல்கத்தாவில் லார்ட் ரெடிங்கைப் பேட்டி காணப் போகிறோம். நீங்கள் உங்கள் பக்கத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுப்பதற்கு முன்வந்தால் லார்ட் ரெடிங்கும் விட்டுக்கொடுக்க முன்வரவேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துவோம்" என்று அவர்கள் சொன்னார்கள்.

"லார்டு ரெடிங் விட்டுக்கொடுக்க முன் வருவார் என்பதற்கு உங்களுக்கு ஏதாவது அறிகுறி தெரிகிறதா? அதற்கு ஆதாரம் ஏதாவது உண்டா?" என்று காந்திஜி கேட்டார். "ஆமாம்; இருக்கிறது. ஆனால் நீங்களும் விட்டுக்கொடுக்க வேண்டும்" என்றார்கள் சமரசத் தூதர்கள். "நான் எந்த விதத்திலே விட்டுக்கொடுக்கவேண்டும்?" என்று மகாத்மா காந்தி கேட்டார்.

"இப்போது தேசத்தில் நடக்கவேண்டும் சட்ட மறுப்பை நீங்கள் நிறுத்த வேண்டம். வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரத்தையும் நிறுத்தவேண்டும். இந்த இரண்டையும் நீங்கள் செய்தால் சர்க்காரை அடக்குமுறைச் சட்டங்களை வாபஸ் வாங்கச் செய்வோம். அதோடு அரசியல் பிரச்னையைத் தீர்த்து வைக்க வட்டமேஜை மகாநாட்டைக் கூட்டும்படியும் வற்புறுத்துவோம்" என்றார்கள்.

இதற்கு மகாத்மா சொன்னார்:-- "நீங்கள் சொல்லும் சமரச யோசனை அவ்வளவு நியாயமாகத் தோன்றவில்லையே? 'நீ அரிசி கொண்டுவா! நான் அவல் கொண்டு வருகிறேன். இரண்டு பேரும் ஊதி ஊதித் தின்போம்' என்பதுபோல அல்லவா இருக்கிறது? சர்க்காரின் அடக்குமறைச் சட்டங்களினாலேதான் இப்போது நடக்கும் தனி நபர் சட்ட மறுப்பு நடந்து வருகிறது. 'தொண்டர் படை சேர்க்கக்கூடாது' 'பொதுக் கூட்டம் நடத்தக்கூடாது' என்பது போன்ற சட்டங்களைச் சர்க்கார் பிரயோகிக்காவிட்டால், இப்போது நடக்கும் சட்ட மறுப்பும் நடைபெறாது. ஆகவே 'சட்ட மறுப்பை நிறுத்தினால் அடக்குமுறைச் சட்டங்களை வாபஸ் வாங்குகிறோம்' என்பதில் அர்த்தமில்லை. ஒத்துழையாமை இயக்கமும் நான் பர்தோலியில் ஆரம்பிக்கப்போகும் பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கமும் வேறு விஷயங்கள். பஞ்சாப்-கிலாபத் அநீதிகளை நிவர்த்தித்துச் சுயராஜ்யம் தரவும் அரசாங்கத்தார் ஒப்புக்கொண்ட பிறகுதான் அந்த இயக்கங்களை நிறுத்தமுடியும். இல்லாவிட்டால் நடத்தியே தீரவேண்டும். வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரத்தையும் நிறுத்த முடியாது. வேல்ஸ் இளவரசர் சொந்த முறையில் இங்கே வரவில்லை. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்துக்குப் பலம் கட்டுவதற்காகவே வருகிறார். ஆகவே தேசத்தின் கோரிக்கைகள் நிறைவேறினால் அன்றி வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரத்தை நிறுத்தமுடியாது!"

இவ்விதம் மகாத்மா சொன்னதைக் கேட்ட ஜம்னாதாஸூம் குன்ஸ்ரூவும் மேலும் தங்களுடைய வாத சக்தியையெல்லாம் உபயோகப்படுத்தினார்கள். கடைசியில் "நீங்கள் சமாதானப்பிரியர் என்று நினைத்தோமே? அதற்கு மாறாகப் பேசுகிறீர்களே? சமாதானப் பேச்சுப் பேசுவதினால் என்ன கெட்டுப் போய்விடும்?" என்றார்கள்.

"ஒன்றும் கெட்டுப்போகாது. நியாயமான சமாதானத்துக்கு நான் எப்போதும் தயார்" என்றார் மகாத்மா. "அப்படியானால் வட்டமேஜை மகாநாடு கூடுவதில் உங்களுக்கு ஆட்சேபம் என்ன?" என்று கேட்டார்கள். "ஒரு ஆட்சேபமும் இல்லை" என்று சொன்னார் மகாத்மா.

"கூடினால் நீங்களும் அதில் கலந்து கொள்வீர்கள் அல்லவா?"

"தனிப்பட்ட முறையில் பே ஷாகக் கலந்து கொள்வேன். ஒரு நிபந்தனையும் போடாமல் வட்டமேஜை மகாநாட்டுக்கு வர நான் தயார். அது போலவே என்னிடமும் நிபந்தனை எதுவும் கேட்கக் கூடாது" என்றார் மகாத்மா.

இந்தப் பதில் ஜம்னாதாஸூக்கும் குன்ஸ்ரூவுக்கும் மகிழ்ச்சி அளித்தது. "மகாத்மா வட்ட மேஜை மகாநாட்டுக்கு வரச் சம்மதித்து விட்டார். வேறு என்ன வேண்டும்?" என்ற மனத் திருப்தியுடன் அவர்கள் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் புறப்பட்டுச் சென்றவுடனே காந்தி மகாத்மா பண்டித மாளவியாவின் கல்கத்தா விலாசத்துக்கு ஒரு தந்தி அடித்தார். அது வருமாறு:-

சபர்மதி
19-12-21
ஜம்னாதாஸையும் குன்ஸ்ரூவையும் பார்த்துப் பேசினேன். தயவு செய்து அடக்கு முறையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அரசாங்கத்தார் உண்மையிலேயே மன மாறுதல் பெற்று பஞ்சாப், கிலாபத், சுயராஜ்ய பிரச்னைகளைத் தீர்த்து வைக்கக் கவலைகொண்டால் அல்லாமல் வட்டமேஜை மகாநாட்டினால் பயன் ஒன்றும் விளையாது.
காந்தி.
பண்டித மதன்மோகன் மாளவியாவிடம் மகாத்மாவுக்கு மிக்க மதிப்பு உண்டு; பக்தியும் உண்டு. மாளவியா தேச விடுதலைக்கு விரோதமாகப் பிரிட்டிஷாரோடு சேர்ந்து விடுவார் என்ற எண்ணம் மகாத்மாவுக்கு அணுவளவும் இல்லை. ஆனால் தேசமெங்கும் பெரிய பெரிய தலைவர்கள் - நேரு, தாஸ் போன்றவர்கள் - சிறை புகுந்ததினால் மாளவியாவின் மனம் கனிந்திருந்தது என்பது மகாத்மாவுக்குத் தெரிந்திருந்தது. "ஐயோ! இப்பேர்ப்பட்ட பிரமுகர்கள் எல்லாரும் சிறைக்குப் போகிறார்களே?" என்ற கவலையினால், மாளவியாஜி இந்த மத்தியஸ்த முயற்சியில் தலையிட்டிருக்கிறார் என்று காந்தி மகாத்மா நம்பினார்.

ஆனால் சத்தியாக்கிரஹ இயக்கத்தின் பெருமையே நேரு, தாஸ் போன்றவர்கள் சிறைக்குச் சென்றதுதான். அதனாலேயே சத்தியாக்கிரஹ இயக்கம் தேசத்தில் அளவிலாத பலம் பெற்று வந்தது. சிறைக்குச் சென்ற தலைவர்களும் தங்களுடைய தியாகத்தைக் குறித்து எல்லையற்ற பெருமிதத்தோடுதான் இருப்பார்கள். சிறைக் கஷ்டங்களைக் கண்டு அவர்கள் சலித்துவிட மாட்டார்கள். புடம்போட்ட தங்கத்தைப் போல் சிறைக் கஷ்டங்களினால் அவர்களுடைய ஆத்ம சக்தி மேலும் பிரகாசத்தை அடையும் - இத்தகைய கொள்கைகளில் நிலைபெற்ற காந்தி மகான் பண்டித மாளவியாவின் மனக்கவலையைத் தீர்க்கும் பொருட்டே "அடக்கு முறையைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்று தந்தி கொடுத்தார்.

மகாத்மா காந்தி மாளவியாவுக்குத் தந்தி அடித்த அதே 19-ஆம் தேதி கல்கத்தாவிலிருந்து மகாத்மாவுக்கு இன்னொரு தந்தி வந்தது. அது சிறைக்குள்ளிருந்த தேசபந்து தாஸ், மௌலானா ஆஸாத் இருவரும் கையொப்பமிட்டு வந்தது. அந்தத் தந்தியில் கண்ட விஷயம் மகாத்மாவின் மனதை உண்மையாகவே திடுக்கிடச் செய்து விட்டது. தாஸ்-ஆஸாத் தந்தியில் கண்ட விஷயம் என்ன வென்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: