சனி, 12 மார்ச், 2022

2046. லா.ச.ராமாமிருதம் -19: சிந்தா நதி - 18

23. வானவில்



இன்னும் அறியோமாம் ஆதியும், மூலமும், உயிர் பிறந்தது எப்படி? ஆனால் அதன் ஓயாத இயக்கத்தில் ஆதி மூலமே அதன் நிதரிசனமாக உதிர்ந்த சிதர்கள். உரு, பூதங்கள், பேதங்கள். உருப்பேதங்களின் உறமுறைகள் ஆக்கம், அழிவு, காலம்.....

உறமுறையின் ஒரு முறை தலைமுறையென உயிர் சக்தியின் ஏதோ வியாபகத்தின் எண்ணற்ற உருக்களில், ஒவ்வொரு உருவும் அது படும் கடையலில், அதன் ஈடுபாடும், மாறுபாடும், பாகுபாடும், இடம், ஏவல், காலம் கொண்டு தனிக்கதி, தனித்தனிக் கதி ஆன பின்.

இத்தனைக்கும் முன்னணி, பின்னணி இயக்க சக்தியின் நித்தியத்தை அதன் பெயர் சத்தியம் என்று அழைத்து, உருவின் தலைமுறை சிந்திக்க மனமெனும் கருவி உயிரின் இத்தனை பெரிய வியாபாகத்தைத் தன்னுள் அடக்கும் அதன் வல்லமைதான் என்ன!

மனமெனும் தேன் கூடு

தேன் கூட்டின் எண்ணற்ற வளைகள்

வளைகளின் கணிக்க ஒனா ஆழங்கள் இருள்கள்

மனமெனும் அரங்கம், அப்பவே

அந்தரங்கம்

இந்த வியப்பைச் சந்ததி தனக்குள் பங்கிட்டுக்கொள்ள, அதனாலேயே வியப்பு மேலும் மேலும் மேலிட எப்போது, தோன்றிற்று பாஷையெனும் தனி ப்ரகாசம். அதைச் சத்தத்திக்குச் சாசுவதமாக்க எழுத்து ?

சிந்தனையும் அதன் வெளியீடு பாஷையும் கூடியபின், கேள்வி இன்றியமையாத விளைவு.

எங்கிருந்து வந்தேன்? எங்கே போகிறேன்? உயிரே முதலில் நானே ஏன்?

கேள்வி இல்லாமல் முடியாது. வாழ்க்கை ஒடிக் கொண்டிருப்பதே- இல்லை- வாழ்க்கையே கேள்வியின் பின்னல் கோலம்தான்.

கேள்வி உயிரின் சிறப்பு. துடிப்புக்குப் பொருள் காண முயல்வது, கேள்வியெனும் தூண்டலில் மாட்டிக் கொண்டு அந்த துடிப்பின் வேதனையிலிருந்து விடுபட வழி தேடுவது சிந்தனையின் இயல்பு. இந்த வழிக்குப் பிடித்த வெளிச்சம். துணைதான் பாஷை,

கதையென்றும், கவிதை யென்றும், காவியமென்றும், தியானம், ஞானம், விஞ்ஞானம், கலையென்றும் அதன் பெயர்களில் விதங்கள் வழிகள் பல பல. கேள்வி தேடல் தவம் தவத்தின் முடிவில் பிறவியின் வயது பூரா வித விதமான வழிகளில் வயதில் முடிவில் இதோ கண் பஞ்சடைப்பில் நினைவு இற்றுப் போமுன் பிறவியின் கடைசித் தரிசனம்.

"நீ முடிந்தாய். நான் இருக்கிறேன்!" கேள்வி பதில் சொல்கிறது.

இத்தனை வியாபகம், விவரம் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய உயிரின் இயக்கத்துக்குக் காரணமும் அர்த்தமும் தேடுவதில் ஆயுசையே அர்ப்பணித்துக் கொண்டபின், கடைசியில் கண்ட தெளிவு: இந்த இயக்கத்துக்கு அர்த்தமேயில்லை. ஆகவே கேள்வியின் பயனில்லை, கேள்விக்குப் பதிலும் இல்லை என ஏற்பதன் இந்த வியர்த்தத்தைக் காட்டிலும் பெரும் துக்கம் உண்டெனில் எனக்குக் காட்டு.

உடனேயே சொல்கிறேன். 'ஆனால்'- ஆ! இது பாஷை தந்த அற்புதச் சொல். அதுவே மறுப்பு, அதுவே பதில், அதுவே அமைதி, அதுவே நம்பிக்கை. நாளையெனும் வானவில்லைச் சுட்டிக் காட்டும் ஒளிக்கதிர்.

"ஆனால்" என்பதே தனி மந்திரம். மாத்திரை. மாத்திரை நேரத்துக்குத் தனி உலகம்.

வாசுதேவன் சிறைப் பூட்டைக் கழற்றிய சக்தி.

அவர் தன் தலை மேல் கூடையுடன் கோகுலம் செல்ல யமுனா நதி நடுவே பிரிந்த பாதை.

இல்லை, உண்டு எனும் இரு சமுத்திரங்களையும் பிரிக்கும் வரப்பு.

ஆகவே, ஆனால் உயிருக்கே அர்த்தமில்லாததால், தேடலில் அர்த்தமில்லை என்று பதில் கிடைத்தால். குடி ஒன்றும் மூழ்கிப் போய்விடவில்லை. *இதுவும் தெளிவுதான்; பொருள் இல்லை எனத் தெரிந்தபோது இல்லாத பொருளைத் தேடாமல் இருக்கப் போகிறோமா? அதற்கு இன்றுவரை நீடித்து வரும் இவ்வுலகமே இன்று என்ன, இனிமேலும் எக்காலமும்..

சிறகுடன் பிறந்துவிட்டு, அதை அடிக்காமலேயே உயரப் பறக்காமலோ, ககனத்தில் நீந்தாமலோ இருக்க முடியாது.

உயர உயர இன்னும் உயர என்னால் எட்ட முடிந்த உயரத்தினின்று என்னைக் சுற்றியும், கீழும் பார்க்கின்றேனே, இந்தக் காட்சி ஒன்றிற்கே பிறவி தகும்.

காலம் பொய், காயம் பொய், ஆகையால் நாளையும் பொய், ஆனால் வானவில்லின் வர்ணங்களை நினைவினின்று அழிக்க முடியவில்லையே! அதுவும் பொய்யானாலும், மெய் போலும்மே மெய் போலும்மே.

இதுவே பதவி, இதுவே சித்தி,

சிந்தனா சக்தியை ஆய ஆய, அதன் எல்லைகள் அசாத்தியம்.

என் சொல்லின் உருவேற்றத்தால்தான் என் சக்தி.

உருவேற ஏற, நான் உயர உயர...

நான் மண்டல ஜித்

மேகநாதன்.

அதோ, இல்லை, இதோ மேகங்களின் நடுவே கிடக்கும் என் வானவில்லைக் கிட்டத் தரிசிக்கிறேன்.

என் ஆச்சரியம், என் பிறவியை வாட்டிய கேள்வியே தான் இப்படி வானவில்லாய்க் கிடக்கிறதோ?

உரு ஒருபோலவே தோன்றுகிறது! என் சொல் தந்த வில் அன்றோ! அதன்மேல் காதல், தொண்டை அடைக் கிறது. -

காமம் வெறி ஏறுகிறது. சொல்லுங்கள், வார்த்தைகளின் நகாசு, கபடுத் திரையை விலக்கிய பின், உண்மையில் காமத்துக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம்? இந்த வில்லும் பெண்ணின் உடல் வளைவுகளை ஒத்திருக்கிறது. ஆசையுடன் வருகிறேன். அணைத்துக்கொள்கிறேன்.

மேரா அவுரத்.

வளைக்கிறேன். ஒலிகள் உதிர்கின்றன. வில் நுனியில் சொல்லின் கண்டாமணி முழங்குகிறது.

சிவதனுஷ், விஷ்ணு வில், கோதண்டம், காண்டீபம் எல்லாமே இதற்குப் பின்தான்.

இங்கு சொன்ன தெல்லாம் உடல் உறவில் ஜன விருத்தி பற்றி அல்ல.

இதுவரை படித்ததெல்லாம் இங்கு காணும் இந்த வரிகள் கூட அல்ல.

வரிகளினிடையே படித்தால்-

உன் வானவில்லின் கண்டா மணியோசை உனக்குக் கேட்கவில்லை?

சிந்தா நதி மேல் வானவில்.
--------------------------

[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம், 
ஓவியம்: உமாபதி ] 

தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: